ரேஷன் தண்ணி – நாகேந்திர பாரதி

சென்னைக்கு வந்த சோதனை! | சென்னைக்கு வந்த சோதனை! - hindutamil.in

பக்கெட் நிரம்பி தண்ணீர் வழிந்து தூம்பு வழி போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் காத்தாயி. ,பாத்ரூமில் சத்தம் கேட்டு போய்ப் பார்த்த காத்தாயிக்கு அழுகையே வந்துவிட்டது. குழாயை திறந்து விட்டால் தண்ணீர் நிரம்பியதைப் பார்த்து மூடுவதில்லை .’ஆமா யாரும்மா குழாயை திறந்து விட்டது. எம்புட்டு தண்ணி வேஸ்டா போயிட்டு இருக்கு’ என்று கத்தியபடி பைப்பை இறுக்கி மூடினாள். உள்ளே தலை வாரிக்கொண்டு இருந்த அம்புஜம் அலட்சியமாகப் பதில் சொன்னாள் . ‘தண்ணி தான் நாள் முழுக்க வருதே . ஏதோ ஞாபகத்தில் அப்படியே விட்டுட்டேன் அதுக்கு ஏன் இப்படி கத்துற’ என்று வாயை அடக்கியவளிடம் ஒன்றும் சொல்ல முடியா விட்டாலும் ‘ தண்ணின்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட காத்தாயி தன் கிராமத்தை நினைத்துப்பார்த்தாள் .

கந்தனுக்கு வாக்கப்பட்டு மதுரை வருவதற்கு முன்னாடி பதினெட்டு வருஷம் இருந்த பரசுப்பட்டி கிராமத்தில் நாலு மைல் நடந்து போய் அங்கு இருந்த அந்த ஊற்றுக் கிணற்றில் வாளியைப் போட்டு மணிக்கணக்காக உட்கார்ந்து இருந்து தண்ணி ஊற ஊறக் காத்திருந்து இரண்டு குடம் பிடித்து வர எத்தனை சண்டை .அதையெல்லாம் அம்புஜம் கிட்ட சொல்லி இருந்தாலும் ஒரு அலட்சியம்.

‘வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து தண்ணியை மேல ஏத்துறமே . மத்த வீடுங்க மாதிரி , வீட்டைத் தினசரி தேச்சு விடவா சொல்றேன். மூன்று நாளைக்கு ஒருமுறை தான் உன்ன கழுவச் சொல்கிறேன். பெரிய பக்கெட் மூணிலேதான் தண்ணீரை பிடித்து வைக்கிறேன். இப்படிப் போற தண்ணி போகட்டுமே .ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் இல்லை’ என்று கேட்டபடி வந்த அம்புஜத்தைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக வந்தது காத்தாயிக்கு.

‘உன்னோட நம்மளால பேச முடியாது தாயி .ஏதோ மனசிலே தோணிச்சு . சொன்னேன். கோச்சுக்காதே’ என்றபடி பரபரவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது காயப்போடுவது , வீடு துடைப்பது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நெற்றி வேர்வையை முந்தானையால் துடைத்தபடி ‘போயிட்டு வர்றேன்’ என்றபடி வீட்டுக்கு விரைந்தாள் காத்தாயி . ஆச்சு. அஞ்சு வீடும் முடிஞ்சாச்சு. காலையில் முழுக்க சொந்த வீட்டு வேலை. மத்தியானத்தில் இருந்து சாயங்காலம் வரை அஞ்சு வீட்டு வேலை . மாசம் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய்.

அவ புருஷன், ஆபிசர் கணக்கா கரெக்டா ஆறு மணிக்கு . வீட்டுக்கு வந்துடுவான். பாவம் வெயில்ல தண்ணி வண்டியிலே தெருவெல்லாம் சுத்திட்டு, வந்தவுடனே வீட்டுல காத்தாயி இருந்து கருப்பட்டி காபி போட்டு கொடுத்தா மனசெல்லாம் நிறைந்து முகமெல்லாம் பல்லாயிடும் அவனுக்கு.

கருப்பா இருந்தாலும் முக லட்சணம் அவனுக்கு. தனக்கு வெளுத்த தோல் இருந்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்து போனது அந்த சிரித்த முகத்துக்காகத்தான் . தூரத்து சொந்தம்தான். நினைப்பு வேகத்தில் வீடு வந்து பூட்டு திறந்து, பாலை அடுப்பில வச்சு, ஓரம் சுட்டு சுயநினைவு வந்தது. ‘எப்படி வந்தேன் இம்புட்டு வெரசா அவனை நினைச்சுகிட்டே ‘ என்று வெட்கம் வந்தது அவளுக்கு.

‘ ஏ புள்ள’ என்ற குரலுக்கு ஓடிப் போய்க் கதவை திறந்த காத்தாயி ஆடிப்போனாள். காலில் பேண்டேஜ் கட்டோடு நொண்டி நொண்டி உள்ளே வரும் அவனைப் பார்த்து ‘அடி ஆத்தே என்ன ஆச்சு எப்படி ஆச்சு’ என்று பதறினாள் . ‘ஒண்ணும் இல்ல, நம்ம தண்ணி வண்டி முக்குத் தெருவுல திரும்பறப்போ அப்போ பிடி நழுவிடுச்சு. உடனே ஆஸ்பத்திரி போயி ஊசி போட்டு ,மீதித் தெருவெல்லாம் போயி தண்ணி ஊத்திட்டு, திரும்பி வர்றேன். எல்லாம் உன் நினைப்பு வந்து தான் கை நழுவிடுச்சு’ என்று சிரித்தான்.

அவன் காலைத் தடவி விட்டபடி காத்தாயி ‘ உடனே வர வேண்டியதுதானே அத்தோடு ஏன் சுத்தினே ‘ என்று கரிசனமாகக் கேட்க அவள் முகத்தையே உற்றுப்பார்த்த கந்தன், ‘என்ன இது இப்படிக் கலங்கி போச்சுகண்ணு. லேசான காயம்தான். விட்டுத்தள்ளு .நம்மள நம்பி எவ்வளவு குடும்பம் தண்ணிக்காக குடத்தோட காத்துக் கிடக்கு. நம்ம போகலைன்னா வேற ஆளை ஏற்பாடு பண்ணனும் .நேரத்திற்குப் போக முடியாது. அதுவும் அந்த புது ஆளுக்கு அந்தக் கூட்டத்தை மேய்க்கத் தெரியணும். நான் போய் நின்ற உடனே வந்து விடுவாங்க பாரு. அதுல ஒரு ஆளுக்கு ரெண்டு குடம் பார்த்து பார்த்து ஊத்தணும். நைசா நாலஞ்சு கொண்டு வந்துடுவாங்க. எவ்வளவு பொறுப்பான வேலை தெரியுமா ‘ என்று முகமெல்லாம் பெருமையாக பேசும் கணவனிடம் குறும்பாகக் கேட்டாள் . ‘பெரிய கலெக்டரு, ரொம்பத்தான் பொறுப்பு’ என்று கிண்டலடித்தாள்.

‘அப்படிச் சொல்லாத புள்ள. இன்னைக்கு தேதியிலே , இம்புட்டுத் தண்ணிக் கஷ்டத்துல நாங்கதான் சாமி மாதிரி பல பேருக்கு’ என்று பெருமையாகச் சொன்னான் . ‘தண்ணீர்க் கஷ்டம்’ என்றதும் வீணாகப் போய் கொண்டு இருந்த அந்த அம்புஜம் வீட்டுத் தண்ணி தான் ஞாபகம் வந்தது அவளுக்கு. உடனே புருஷனிடம் அதை விலாவாரியாக சொல்லிவிட்டாள் .

‘அந்த அம்புஜம் புருஷன் எங்க பெரிய ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாரு . எனக்கு சம்பளம் வாங்க போறப்போ பாப்பேன். மனுஷன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் . ஊழலோ ஊழல். ஒரு கையெழுத்துக்கு ஆயிரம் ரூபா. அவர் பொஞ்சாதி எப்படி இருக்கும். அந்த மாதிரி வீட்டுக்கு எல்லாம் நீ வேலைக்கு போகாதே என்று நான் பலமுறை சொல்லியாச்சு. நீ விடமாட்டேங்கிறே’ என்றான். ‘என்னய்யா பண்றது மாசம் ஆயிரம் ரூபாயை விட மனசில்லை . அதுவும் இப்ப புள்ளை ஒண்ணை வயித்திலே ஏத்தி விட்டுட்டே. சேர்க்க வேண்டாமா அவனுக்கு ‘ என்றவளிடம் ‘ ஏய் , உனக்கு ஒண்ணுமே தெரியாது. நான் தான் ஏத்தி விட்டுட் டேனா ‘ என்று நெருங்கியவனைத் தள்ளிவிட்டாள் . ‘கால்லே பேண்டேஜ் வலி, இது வேறையா தள்ளிப்போய்யா ‘ என்று வெட்கத்துடன் சிரித்தாள் .

ஓரத்தில் பிடித்து வைத்திருந்த அந்த இரண்டு குடத் தண்ணி அவர்களுக்கு ஒரு நாளைக்குக் குடிக்க ,சமைக்க போதுமானது தான். குளிக்க, துவைக்கத் தான், பொது இடத்திலே ,உப்புத்தண்ணீ வர்ற , கக்கூஸ், பாத்ரூம் இருக்கே. பச்சையும் மஞ்சளுமாகப் பார்த்து வாங்கி வந்த குடங்களைத் தூக்கிக் கொண்டு காலையில் முதல் தெரு முடிந்து இவர்களின் இரண்டாம் தெருவுக்கு அவன் வரும்போது , கூட்டத்தோடு கூட்டமாகக் காத்திருந்து பிடித்து வைத்த இரண்டு குடங்கள்.

‘ என் புருஷன் வேலையிலே ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ பெருமை அவளுக்கு. ‘உன் புருஷன் தானே, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு கூட கேட்கலாமே’ என்று கேட்ட பக்கத்து வீட்டு சரசுவை வாயாலேயே ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கி விட்டாள் . அன்னையிலிருந்து அவளோட பேச்சு வார்த்தையே கிடையாது. ‘என் புருஷன் வேலையிலே சுத்தம் ‘ என்று ரொம்ப பெருமை காத்தாயிக்கு. ‘என்ன கேள்வி கேட்டுப் புட்டா ‘ என்று மாய்ந்து போன அவள் , அன்னைக்கு ராத்திரி கந்தன் கிட்ட சொல்லிச் சொல்லி புலம்பினாள் . அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் ‘போதும் போதும்’ என்று ஆகிவிட்டது அவனுக்கு. உள்ளூர அவனுக்கும் பெருமைதான். அவனை முழுசா புரிஞ்சுக்கிட்ட பொண்டாட்டி கிடைச்சிருக்காளே .

மறுநாள் அம்புஜம் வீட்டுக்கு போனபோது அம்புஜம் புருஷனிடம் பொரிந்து கொண்டிருந்தாள். ‘என்ன பெரிய ஆபிஸர் நீங்க .இன்னையிலே இருந்து தினமும் ஒரு மணிநேரம் தான் தண்ணி விடுவாங்களாம் . செக்ரெட்டரி கிட்ட கேட்டீங்களா.’

‘தண்ணீர் கஷ்டம் அதனால லாரிக்காரன் முதலில் கொடுத்ததிலே கால்வாசிதான் ஊத்த முடியும்னுட்டான் . வேற எவனும் கிடைக்கல. என்ன பண்றது. ரேஷன் தண்ணிதான். எத்தனை பேர் நிற்கிறார்கள் ரோட்டுல பார்த்தியா. நமக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு மணி நேரமாவது வருவதை நினைச்சு சந்தோஷப்படு ‘என்று சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தான் .

உள்ளே நுழைந்த காத்தாயியைப் பார்த்ததும் படக்கென்று வாயை மூடிக் கொண்டாள் அம்புஜம், வந்து சொன்னாள் . ‘அடியே , தண்ணி இனிமே ஒரு மணி நேரம்தான்.பார்த்து செலவு பண்ணுடி. படபடன்னு தண்ணி சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் அரை மணி நேரத்துல முடிச்சுட்டு மூன்று பக்கெட்டுகளிலும் புடிச்சு வச்சுடு.’

அவள் பாதி வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்து ‘என்னடி பக்கெட்டிலே புடிச்சு வச்சுட்டியா . துவைச்ச தண்ணியை , தொட்டிச் செடிக்கு ஊத்தி விட்டுட்டு. மீதி இருந்தா கக்கூசுக்கு ஊத்தி விடு ” என்றாள் . ராத்திரி புருஷனிடம் இதைச் சொல்லும்போதே காத்தாயி வயிற்றுக்குள் பையன் உதைக்க ‘அவனுக்கும் சிரிப்பு வந்துடுத்து போலிருக்கு . கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்’ என்றபடி எழுந்து சென்றாள் காத்தாயி . காத்திருந்தான் கந்தன்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.