“காற்று வெளியே புது கானம் பிறந்ததா
பங்குனியும் முடிந்தது இன்று சித்திரையும் மலர்ந்ததா
இன்று சித்திரையும் பிறந்தது தைய்ய தைய்யா
மனம் துள்ளிக்கொண்டு திரியுது தைய்ய தைய்யா”
ஆம், சித்திரையின் முதல் நாள் கோலாகலமாக தமிழ் நாட்டில் புது வருஷம் என்றும், கேரளாவில் விஷு என்றும், வடபிரதேசத்தில் வைஷாக்கி அல்லது பைசாக்கி என்றும், மேலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் என்று எல்லா இடத்திலேயும் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை உடுத்தி, ஆறு சுவையும் உள்ள ஒரு பச்சடி சாப்பிட்டு கோவிலுக்குச் செல்வது வழக்கம். கேரளாவில் இது ஒரு பெரிய பண்டிகை. அந்த சமயத்தில் கிடைக்கும் கனி கொன்னப் பூவால் ரங்கோலி (கோலம்)யை அலங்கரித்து, கண்ணாடிக்கு அலங்காரம் செய்து, அதன் முன்னால் எல்லா தானியம், பழம், காசு வைத்து மாசம் பிறக்கும் சமயம் முதன் முதலில் கண் திறந்து அவைகளைப் பார்ப்பது வழக்கம். மற்றும் சில இடங்களிலேயும் இந்த மாதிரி செய்வார்கள். அன்று எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு கோலாட்டம் ஆடுவார்கள். தஞ்சாவூரிலிருந்து பாலக்காட்டிற்கு வாழ்க்கைப்பட்ட புதுப் பெண் ஒருத்தி கனி காண எழுந்தவுடன் குளித்து வேலை செய்ய ஆரம்பிக்கணும் என்று மூன்று மணிக்கே குளிக்கச் சென்றது வேறு கதை. ஆனால் நான் இப்போது சொல்லப் போவது கன்னடக்காரர்களைப் பற்றி. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.
நாங்கள் இப்போது இருக்கும் விமான சேவையின் குடியிருப்பில் எல்லோரும் பெரிய பதவியில் இருப்பதாலும், இது விஸ்தாரணமான இடமாக இருப்பதாலும் சப்தம் எதுவும் வெளியில் கேட்காது. ஆனால் இந்த வருஷப் பிறப்பு அன்று நான் துளசியைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் ஆபீசரின் மகன் அழுது கொண்டே வெளியில் வந்தான். நான் அவன் அம்மாவிடம் (ஆபீசரின் மனைவிடம்) கவலையுடன் விசாரித்த போது சிரிப்பு தான் வந்தது. என்ன புரியவில்லையா! அதுதானே இங்கே சொல்லப் போவது!
கன்னடக்காரர்கள் இந்த வருஷப் பிறப்பை இரண்டு நாட்களாகக் கொண்டாடுகிறார்கள். முதல் நாள் நமது தண்ணீர் தீபாவளி மாதிரி தண்ணீர் வருஷப்பிறப்பு. தண்ணீரை நிரப்பி வைக்கிறார்கள். வெயில் காலத்தில் எண்ணை தேகத்தில் ஒரு வித பிசுபிசுப்புத் தன்மையைக் கொடுக்கும் என்று வருஷப் பிறப்பன்று எடுக்கும் எண்ணைக் குளியலுக்குப் பிறகு (அப்யஞ்சனம்) கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எண்ணைத் தேய்த்து குளிப்பார்கள். இது எல்லாவற்றையும் நான் எப்போதும் சொல்வது மாதிரி நமது முன்னோர்கள் யோசித்து, ஆராய்ந்து வகுத்து வைத்துள்ளார்கள். இந்தப் பண்டிகைக்காக வீடு சுத்தம் செய்வது அவசியம். சேமியாவில் ஏதாவது ஒரு இனிப்பு செய்யப்படும்.
மறு நாள் ‘யுகாதி’ என்று சொல்லப்படும் நாளில் காலையில் குளித்து பூஜை செய்து, புதிது உடுத்தி கொண்டாடுவார்கள். போளி அவசியம் உண்டு. பையன், பெண்ணுக்கு ஆரத்தி எடுப்பார்கள். இதெல்லாம் சரி. அந்தப் பையனை அழ வைத்து வந்து விட்டோமே என்று யோசிக்கிறீர்களா! அது தான் எனக்கு ஆச்சரியத்தையேத் தந்தது. வேப்பம்பூ, கொப்பரை, பொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடித்து ஐந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதற்கு பயந்துதான் அந்தப் பையன் அழுது கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி மெதுவே ‘உண்மையாக எனக்கும் சின்ன வயதில் இது பிடிக்காது. பாட்டி கொடுத்தால் சாப்பிடுவது மாதிரி பாவனை செய்து வெளியில் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதன் பயனை உணர்ந்த நான் இப்போது இவனுக்கு சொல்லித்தருகிறேன்’ என்றாள். முன்னோர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது! ஆறு சுவையும் வருட முதல் நாள் எடுத்துக் கொண்டால் வருடம் முழுவதும் நாம் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்வோம், நமது தேகமும் சுத்தமாகும், குளிர்ச்சியாகும், வரும் கோடையை எதிர் கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றெல்லாம் யோசித்து இந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை, முறைகளை கண்டுபிடித்து நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளனர். இவற்றைக் கடைப்பிடித்தால் நமக்கு அநேகம் நன்மைகளைக் கொடுத்துள்ள இயற்கைக்கும், அந்த இயற்கையோடு இணைந்து இந்த முறைகளை வகுத்துக் கொடுத்த நம் முன்னோர்களுக்கும் நாம் மரியாதை செய்தவர்களாவோம்!
தான் கேட்காமலேயே வந்த வரம் தானே தாவரம்!