“ஏண்டா.. அடுத்த வருடம் நீட் எழுதி ரேங்க வாங்கி மெடிக்கல் சேரவேண்டியதுதானே? வெளிநாட்டில்தான் படிப்பேன்னு என்ன பிடிவாதம்?” என்று அப்பா கேட்டுவிட்டு ஆபீஸ் போய்விட்டார். அதே கேள்வியை, அம்மா கமலம் சமையல் வேலையை முடித்தபிறகு, சாவகாசமாக முந்தானையில் கையைத் துடைத்தபடி அவன் அருகில் வந்து கேட்டாள்.
கம்ப்யூட்டரில் ஏதோ பார்த்துக்கொண்டே, “ஒரு வருடம் வேஸ்டா போகுதே அம்மா” என்றான்.
டாக்டருக்கு படிக்க வெளிநாட்டிற்கு போவதென்று அவன் முடிவு செய்துவிட்டான்… நண்பர்களும் சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு.. அதுதான் முடிவும் கூட. ஒன்றும் செய்யமுடியாது.
“என்ன நான் சொல்றது சரிதானே?” – அவனது யமாஹா கீபோர்டின் மேல் நின்று கொண்டிருந்த வளர்ப்புக்கிளியைப் பார்த்து கேட்டான். அவன் கேட்ட மாத்திரத்தில், கீபோர்டு மேல் ஸ்வரங்களை எழுப்பியபடி தத்தித் தத்தி நடந்து வந்து “என்ன” என்று முதல் வார்த்தையை மட்டும் எழுப்பியது.
ஒற்றையாகவே வளர்ந்தவன். அம்மாவைக் கொஞ்சி, அவள் சிபாரிசு செய்து , அப்பா அவனது பிறந்த நாளைக்கு பரிசாக அளித்தார் கிளியை. என்றைக்கும் அவன் கேட்டதை இல்லையென்று சொன்னதில்லை. அது வீட்டிற்கு வந்த நாளிலிருந்து, அவன் காட்டும் கரிசனத்தைப் பார்க்கவேண்டுமே.. கிளியைக் கூண்டில் அடைக்க ஒத்துக்கொள்ளவில்லை. அவனது அறையிலிருந்து சீலிங் பேனைக்கூடக் கழற்றிவிட்டு வேர்த்தாலும் பரவாயில்லை என்றான்.
அவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இருந்திருந்தால் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்திருப்பானோ என்று கமலாவிற்கு சில சமயம் தோன்றும்.
சில வாரங்களில், அவனே செல்லவேண்டிய நாட்டையும், படிக்கப் போகிற கல்லூரியையும் தேர்ந்தெடுத்து அட்மிஷன் வாங்கினான்.
அப்பா, அம்மாவைக் கட்டியணைத்து கண்கலங்க விடைபெற்றுப் போனான். கமலா கதறி அழுதாள். அப்பா அவளைத் தோளில் அணைத்து சமாதானப்படுத்தினார். அவர் மனம் கலங்குவது வெளியில் எப்படியும் தெரியாது.
விமானத்தில் ஏறியதும் குறுஞ்செய்தி அனுப்பினான். “கிளியை விட்டுச் செல்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது. அதை நன்றாகப் பழக்கியிருக்கிறேன்.பத்திரமாகப் பார்த்து கொள்ளவும். அதன் முடிவில், கண்ணீர் சிந்தும் ஒரு எமோட்டிகான்.
நாள் முழுக்க, கிளியைப் பார்த்துக் கொள்வது கமலாவின் பணியாக மாறியது. அவ்வப்போது , அதன் நகங்களை சீராக்குவதும், உணவு கொடுப்பதும், அவ்வப்போது சிறகுகளைச் சற்றே கத்தரித்துவிட ஆட்களை வரவழைப்பதுமாக, மாதங்கள் நாட்கணக்கில் ஓடின. அவனில்லாமல் பேசுவதில்லை என்று உறுதி எடுத்தது போல, கிளி பேசுவதையே நிறுத்தியிருந்தது. போனில் அவன் குரல் கேட்டால் சிறகை அடித்துக் கொள்ளும் ; அவ்வளவுதான்.
ஒரு நாள், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கப்போகிறது என்கிற செய்தியை டிவியில் பார்த்ததும் கமலா பயந்தே போனாள். அவன் படிக்கும் கார்கிவ் நகரில்தான் குண்டு வீச்சும் தொடங்கியது.. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“கிளம்பி வாடா..” என்று போனில் அழைத்து கத்தினாள்.
“இல்லம்மா.. இங்க ஒரு நாயை வளர்த்துக்கிட்டு இருக்கேன்.. அதையும் ஊருக்கு கூட்டிட்டு வரவிட்டா நான் உடனே வந்துருவேன்.” என்றான்.
“ ஏண்டா.. நாயா முக்கியம்.. நீ கிளியை எங்கிட்ட விட்டுட்டு போனமாதிரி, அந்த நாயையும் யார்கிட்டயாவது குடுத்திட்டு வரவேண்டியதுதானே..” என்றாள்.
“யார்கிட்ட குடுக்கறது.. எல்லாரும் ஊரைவிட்டு ஒடிக்கிட்டு இருக்காங்க.. “
“சொந்த நாட்டுக்காரனே ஓடறான்.. நீ அந்த ஊர்ல ஒரு அன்னியன். உனக்கென்ன அப்படி?” என்றாள் கமலா. தொடர்ந்து, “உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்காடா?” எனும்போதே அவளது குரல் கம்மியது.
“அம்மா .. நோ எமோஷனல் ப்ளாக்மெயில்..” என்றபடி போனை கட் செய்தான்.
அன்றிரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை. டிவியை ஆன் செய்தால், குண்டு வீசும் காட்சிகளே அனைத்து செய்தி சானல்களிலும் காண்பித்தபடி இருந்தார்கள்.
“வருவானா.. வரமாட்டானா இந்தப் புள்ளை..? “ என்று எண்ணங்கள் அலையாய் மனதிற்குள் மோதி கண்களில் நீரைப் பெருக்கியது.
சட்டென்று, “அம்மா.. அம்மா” என்று குரல் எழுந்தது.
“யாரது.. என் பிள்ளையா.. அவனா கூப்பிடுகிறான்…? இல்லை பிரமையா….” என்றபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினாள்.
கூப்பிட்டது அவனது கிளிதான். ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தது.
அவளைப் பார்த்ததும், “அம்மா..அம்மா” என்றது மறுபடியும்.
“நீயா..இத்தனை நாள் பேசாமலிருந்திட்டு இன்னிக்கு மட்டுமென்ன? “ என்றாள்.
அதே சமயம் அவளது மொபைல் போனில் அழைப்பொலி எழுந்தது.
“இது ஏன் அம்மான்னு சொல்லுது.. போன் வேற அடிக்குது.. என்னாச்சோ என் பையனுக்கு..” என்று மனது கதறியபடி தவிக்க, விரைந்து போனை எடுத்தாள்.
“கமலம்.. டைம்ஸ் சேனலை உடனே பாரு” என்று அவளது அக்கா தகவலைத் தெரிவித்தாள்.
கை நடுங்க, டிவியை ஆன் செய்தாள்.
அவளது மகன் ஐரோப்பியன் ஷெப்பர்டு நாயைக் கையில் தூக்கியபடி இந்திய போர்விமானத்தில் ஏறிக்கொண்டிருந்ததை காண்பித்து கொண்டிருந்தார்கள். அவனது பிடிவாதத்தையும், நாயின் மேல் கொண்டிருந்த பிரியத்தையும் மதித்து , அவனை நாயுடன் செல்ல அனுமதித்தார்கள் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நிருபர் மைக்கை அவன் முன்னால் நீட்டி, “என்ன சொல்ல நினைக்கிறீங்க ?” என்றார்.
“அம்மா ஐ லவ் யூ.. நான் வரதுக்கு முன்னால் , கிளிக்கு ஒரு கூண்டு வாங்கி வெச்சுருங்க..” என்று சொல்லி கண்ணடித்துவிட்டு, உதட்டில் விரலைப் பதித்து அம்மாவிற்கு பிரியம் சொன்னான்.
“எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற இடம்” என்று அவள் டிவியைத் திட்டிக் கொண்டே ஆப் செய்துவிட்டு, கிளியைப் பார்த்து , “உனக்கு போட்டிக்கு ஆள் வருது..” என்றாள்.
# # #
ஒரு சம்பவம் அதன் நீட்சியாக ஒரு கதை.
திருப்பங்கள் எதிர்பார்த்த முடிவுடன் தர்மர் காதை. ஒரு யட்சன் கூட இல்லை.
என் ப்ளாஷ் ஃபினிஷ்: உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்
அவளுக்கு கிளி பிடிக்குமா?
ம்ஹும்! பூனையாம்!
#
சிறகு இரவி
LikeLike