வ வே சு
- வசந்தா திருப்பூர் பிள்ளையார் – முருகன் ( கார்த்திகேயன்) இருவரும் தெற்கில் ஒருமாதிரி வடக்கே ஒரு மாதிரி இருக்கிறார்களே ! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? –
தெற்கில் கணபதி பிரும்மச்சாரி; முருகன் சம்சாரி. வடக்கில் கணபதி சம்சாரி; கார்த்திகேயன் பிரும்மச்சாரி. வள்ளி கதை அங்கு கிடையாது. கண்ணனுக்கு அங்கே மீரா; இங்குள்ள கோதை அங்கே கிடையாது. இங்கே சிவன் , அங்கே உருத்திரன். இந்தப் பின்னணி பற்றியெல்லாம் அறிஞர் அ.ச.ஞா எழுதியுள்ளார். அவரும் கூட இதன் காரணம் என்னவென்று எழுதவில்லை. நமது மதத்தின் பெருமையே அதுதான். தெய்வ உருவங்கள் மட்டுமன்றி அவை சார்ந்த புராணங்களும் மாறுபடும். வேற்றுமைகளுள் ஒருமை காண்பது நமது மதம். சின்னச் சின்ன மாறுதல்களுடன் நமது நாட்டில் மட்டும் 300 வகையான இராமாயணங்கள் உள்ளன.
நான் சொல்லும் காரணம் இது: அக்காலத்தில் எல்லாமே “கர்ண பரம்பரைதான்” பக்தி இலக்கியங்கள் காதால் கேட்கப்பட்டுப் பரவியவை. இமய முதல் குமரிவரை பல மொழிகள் பேசும் மக்களிடை ஒரு செய்தி வாய்வழி பரவுமென்றால் அதில் மாற்றங்கள் இல்லாமலிருந்தால்தான் அதிசயம்.
2. ராய செல்லப்பா – கம்பனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்குமா?
நிச்சயம் தெரியும். அகச் சான்றுகள் பல உள்ளன. பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கம்பனுக்கு மூலத்தின் மொழி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. கம்பனுக்கு இரண்டு முக்கியப் பெருமைகள் உண்டு. ஒன்று வால்மீகியை அடியொற்றி எழுதினான்; இரண்டு வால்மீகியிலிருந்து மாற்றியும் எழுதினான்.
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ.
என்ற கம்பன் பாடலில் தேவபாடையான சம்ஸ்கிருதத்தில் இராமாயணம் பாடிய மூவர்களில் மூத்தவரான வால்மீகியின் சொல்வழியே நான் தமிழ்ப் பாக்கள் வடித்திருக்கிறேன் என்கிறான். மற்ற இருவர் வசிட்டர், போதாயனர் ஆவர்.
மேலும் தமிழகத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்ப்பண்டிதர்கள் (உ.வே.சா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை , தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், போன்ற பலர்) தமிழ் , சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளும் அறிந்தவர்களாகவே இருந்துள்ளனர். மொழிவெறுப்பு வளராத காலம் அது.
- ராம் – usa சமீபத்தில் படித்த நாவல்களில் நீங்கள் பெரிதும் ரசித்த நாவல்?
இரா. முருகன் எழுதிய ராமோஜியம் ( கிழக்குப் பதிப்பகம்)
- சுந்தரராஜன் USA சங்க காலத்தில் உரைநடை எப்படி இருந்திருக்கும் ? –
எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூலமே நாம் சங்கத்தை அறிவோம்..அவை அனைத்தும் செய்யுள் நடையிலேதான் உள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர் சேனாவரையர், கல்லாடனார், நச்சினார்க்கினியார் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் போன்றோர் உரைநடை செய்யுள் நடையை விடக் கடுமையானது.
பேச்சு நடை எப்படி இருந்திருக்கும்..ஒருவேளை
அந்தக் கால ராஜாராணி திரைப்பட வசனங்கள் போல இருந்திருக்கக் கூடும்
- துரை தனபாலன் : நத்தம் போலக் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது என்ற குறளின் பொருளை சற்று விளக்கமாகக் கூறுங்கள். (மு.வ., இளங்குமரனார் போன்றோரின் விளக்கங்கள் கூட நிறைவாகத் தோன்றவில்லை)-
புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் தரும் அற்புதமான குறள் இது. இங்கே புகழ் என்பது இல்லறத்தான் ஈகையினாலே பெறுகின்ற கீர்த்தி .பூதவுடலை வருத்தி வளர்வதன்றோ புகழுடம்பு . வாழும் போது உள்ளது பூதவுடல் ; அது வீழ்ந்த பின்னே நிலைப்பது புகழுடல் . அழியப் போகின்ற உடலைப் பயன்படுத்தி அழியாப் புகழைப் பெறுவது வித்தகர்களுக்கே உரியது ;பிறர்க்கு அரிது.
நத்தம் ஆகும் கேடும் , உளது ஆகும் சாக்காடும் என்று “ஆகும்” என்பதைக் கொண்டு சேர்த்து போட்டுப் பாருங்கள் ,புரிந்துபோய்விடும்
ஆக நிலையாமையைப் பயன்படுத்தி நிலைத்த புகழைப் பெ றுவது வித்தகர்களான அறிவாளிகளுக்கே கூடும் என்பது குறள் சொல்லும் பொருள் .
- நாகேந்திர பாரதி ‘சித்தர் பாடல்களின் சிறப்பு ’ பற்றி ஓர் ‘அறிமுக முன்னோட்டம்’ தர இயலுமா? –
கேள்வி பதில் பகுதியைக் கட்டுரை எழுதப் பயன்படுத்திக் கொண்டால் அது தவறல்லவா! எனவே சுருக்கமாகச் சொல்கிறேன் .
நமது சித்தர் பரம்பரை தொடங்குமிடம் பொதிகை !ஆம் ! அகத்தியர்தான் சித்தர் குழாத்தின் தலைமகனாகக் கருதப்படுபவர் . அங்குதான் தமிழும் பிறந்தது. எனவே சித்தர் பாடல்களின் முதல் சிறப்பு அவை முதலில் பிறந்தவை என்பதே.
பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டு வணங்கப்படுவது திருமூலர் எழுதிய திருமந்திரம் . உதாரணத்திற்கு திருமூலர் எனும் சித்தரின் பாடல் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறேன்,
சிவாகமப் பேரறிவைக் கொண்ட ஆதி நூல் திருமந்திரம்தான். எளிய சிறு கலிவிருத்தங்களால் அமைந்த இதன் மூவாயிரம் பாடல்களும் ஒரே யாப்பில் சமைந்தது என்றாலும் வாசகர்களுக்கு அலுப்போ சலிப்போ தோன்றுவதில்லை.
அந்த யாப்பைக் கையாளுவதில் திருமூலர் அபார வெற்றி அடைந்திருக்கிறார் ஆழ்ந்த சிந்தனைகள் , உள்ளுணர்வுகள் . அவற்றுள் புதைபொருட்கள் ஆகியவை இவற்றில் உண்டு. கடினமான உருவகங்களைக் கொண்டதேனும் ,பழகு தமிழில் மிக எளிய நடையில் குறியீடுகள் மூலம் பாடல்கள் அமைந்திருப்பது திருமூலரின் மேதாவிலாசத்திற்குச் சான்று
பொருத்தமான எளிய சிறு சொற்கள் இவர் பாடலிலே சிறகடித்துப் பறக்கின்றன சிந்தனையைக் கிளறுகின்றன .ஓசையும் பொருளும் இசையுமாறு உருவகக் கவிதைகளை இயற்றியுள்ளது பெரிய சாதனையாகும். உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் .
யோகப்பயிற்சியால் வைராக்யம் தோன்றும். அதனைக் கொண்டு தத்துவ ஆராய்சசி செய்ய ,சிவம் வெளிப்படும். சிவம் வெளிப்பட சித்த விருத்திகள் அடங்கும்.சிவாநுபூதி கிடைக்கும். இதனைச் சொல்லும் எளிய பாடல். எளிய சொற்களுக்குள் குறியீடாக தத்துவம் அடங்கியிருக்கும் .
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே .
( வழுதலை வித்து = யோகப்பயிற்சி ; பாகல் =வைராக்கியம் ; புழுதி =தத்துவம்; பூசணி =சிவம் ; தோட்டக்குடிகள் =இந்திரியங்கள்; வாழைக்கனி =சிவாநுபூதி )
இது போலவே அனைத்து சித்தர் பாடல்களும் எளிய வழக்குச் சொற்கள் கொண்டு மரபு சார்ந்த யாப்புகளில் புனைய பட்டவை. ஆனால் இக் குறியீடுகளை விளங்கிக் கொள்வது அத்தனை சுலபமல்ல.
7.ஜி.பி.சதுர்புஜன். தந்தை, மகன் ( தந்தை மகற்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி) என்பதைப் பற்றியெல்லாம் எழுதிய திருவள்ளுவர், ஆசிரியர், மாணவன் ஆகியவர்களைப் பற்றி எழுதாதது ஏனோ? –
எழுதவில்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்து விட்டால் எப்படி? நிச்சயம் எழுதியுள்ளார் . ஆனால் மாணவர் ஆசிரியர் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளார். ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம் .
செல்வம் உள்ள ஒருவனிடம் வறுமையான ஓர் ஏழை எவ்விதம் நாணத்தை விட்டு உடல் வளைந்து பணிந்து நிற்பானோ அவ்விதம் ஆசிரியர் முன் நின்று கற்றுக்கொள்பவனே தலை சிறந்த மாணவன் .பிறர் எல்லாம் கடையர் என்கிறார் வள்ளுவர் .
“உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர் ( குறள் 235 }
சரி! ஆசிரியரைப் பற்றி எங்கே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?
கேட்பவரைத் தன் பேச்சாலே முற்றும் கவர வேண்டும் அதாவது பிணிக்க வேண்டும் . கேளாதவர்கள் விரும்பிக் கேட்க வரவேண்டும் .
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார். மாணவரின் கவனம் சிதையாமல் தன் சொல்வன்மையால் அவர்களைக் கட்டிப் போட வேண்டும். அந்த சார் கிளாசா “போர்” என்று சொல்லாமல் அவரைக் கேளாத மாணவரும் “விரும்பி “ அவர் வகுப்புக்கு ஒடி வரவேண்டும் . அதுதானே சிறந்த ஆசிரியரின் இலக்கணம் .
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் “ என்ற குறள் நல்லாசிரியருக்குப் பொருந்தாதா? இவை போல இன்னும் பல உள்ளன .
நல்ல மாணவராகத் திருக்குறளில் தேடிப்பாருங்கள் .வள்ளுவனார் நல்ல ஆசிரியராகத் தென்படுவார் .
- கவிஞர் செம்பருத்தி : திருக்குறள் அதிகாரத் தலைப்புகளைக் கொடுத்தது வள்ளுவரா அல்லது தொகுப்பாசிரியர்களா ?
நிச்சயமாகத் தொகுப்பாசிரியர்கள்தான் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் என்ற மாபெரும் புலவர், அட்டவணை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பாடல்கள் என்று திட்டம் போட்டுக்கொண்டு சரியாக 133 அதிகாரங்களை எழுதியிருப்பார் என்று எண்ணுவது குறளாசானின் மேதைமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும்
திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான குறள் பாக்களை எழுதியிருப்பார் .கிடைத்ததைத் தொகுத்தவர்கள் வகைப்படுத்தியதே இந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது எண்ணிக்கை.
இதெல்லாம் என் சொந்த சரக்கல்ல .பல ஆண்டுகளுக்கு முன் இதே கேள்வியைக் கேட்ட போது பேராசிரியர் நாகநந்தி சொன்ன பதில் இது .
- சங்கரநாராயணன் , சென்னை : இலக்கணம் என்றாலே கசப்பாக இருக்கிறதே என்?
கட்டுப்பாடு என்றால் யாருக்கும் பிடிப்பதில்லை. இலக்கணம் என்பது மொழிக்கட்டுப்பாடு . ஆனால் அது இல்லையென்றால் மொழி அழிந்துவிடும் முதலில் கசந்தாலும் இலக்கணம் புரியத் தொடங்கிய பின் இனிக்கும். இது என் சொந்த அனுபவம் .
- ஆதிகேசவன் : சென்னை :பக்திக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டா ?
பக்தி நெஞ்சம் சம்பந்தப்பட்டது ; அறிவியல் மூளை சம்பந்தப்பட்டது . நெஞ்சுக்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
வவேசு அவர்களின் பதில்கள் நிறைவைத்தருகின்றன.
LikeLike