சீதாராமன், 35 வயது, ஜானகி, 29 வயது, தம்பதிக்கு ஒரு மகன், பெயர் ரகு, ஒரு வயது சென்னை குரோம்பேட்டையில் நியூ காலனியில் சொந்தமாக வீடு கட்டி அங்கயே குடியிருந்தார்கள்.
வீடு கீழேயும் மாடியுமாக இரண்டு வீடு கட்டினான். கீழே உள்ள வீடு தனக்கும் மாடியை வாடகைக்கும் விட்டு விட்டான்.
தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கிறான்.
“ஏன்பா இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன்? இளம் மஞ்சள் எனக்கு நிறையப் பிடிக்கும்.”
“எது நான் நேத்திக்கு வாங்கி வந்ததா?”
ஆமாம் என்று தலையை ஆட்டினாள்
“உனக்கென்ன நீ ராஜாத்தி மாதிரி இருக்கே புடவை இல்லாமலும்……” என்று சொல்ல ஆரம்பிக்கும் முன் அவள் அடிக்கிற மாதிரி கையை ஓங்கி வந்தாள்.
“உங்களுக்கு ரொம்ப வாய்க்கொழுப்பு”
“நைட்டி, சுடியிலும் நல்லா இருக்கே என்று சொல்ல வந்தேன், அதுக்குள்ள உன் எண்ணம் எங்கேயோ போயடுத்தே?”
“எப்பப் பாரு அதே நினைப்புதான் உனக்கு”
“அங்கு மட்டும் என்ன வாழுதாம்?”
பேச்சில் நக்கலும் நையாண்டியும் அதிகமிருக்கும்
இந்த வீட்டுக்குக் குடி வந்த பிறகுதான் ஜானகி கர்ப்பம் தரித்தாள்,
“ஏம்பா உங்க பையன் என்னை உதைக்கிறான், ஆ…” ஆனந்த கூச்சல் மெதுவாக வயிற்றைப் பிடித்துக் கொண்டு
“பையன்னு எப்படி முடிவு பண்ணின? பெண்ணாகக் கூட இருக்கலாமே?”
“ஆத்து ஜோசியர் தலைச்சான் பிள்ளை தான் அப்படினு சொன்னாரே, அதுவும் இல்லாம எனக்கு எதோ நம்பிக்கை”
அழகான ஆண் குழந்தையைப் பெற்று விட்டு, ரகுநாதன் என்ற பெயர் வைத்துச் சீராட்டி மகிழ்ச்சியாக வளர்த்தார்கள்.
சீதாராமனுக்கு ஜானகி மேலே அலாதி காதல்.
குழந்தையைக் கொஞ்சுவதைவிட மனைவியைக் கொஞ்சுவதுதான் அதிகம்.
ஜானகிக்கே அவன் குழந்தையைச் சீண்டாதது பெரிய வருத்தமா இருந்தது .
“ஏன்பா நம்ம குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சு” என்று கொண்டு வந்து கொடுத்தாள்.
“இல்லை எனக்குச் சின்னக் குழந்தையைத் தூக்கி பழக்கமில்லை, கொஞ்சம் பயமா இருக்கு”
“குழந்தை பக்கத்தில் உக்காந்து கொஞ்சம் நேரமாவது பாரப்பா”
“கொஞ்சம் வளரட்டும், அப்புறம் பாரு ஐயாவை” முகத்தில் ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல் சொன்னான்.
எனோ ஜானகிக்குச் சந்தேகமாக இருந்தது. அவனை விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டு விட்டாள்
அவள் கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்து மகிழ்ந்தான்.
ஒரு நாள் அவன் அம்மா மதுரையிலிருந்து வந்து இருங்கினார்கள்.
ராமுவிடம் அவன் அம்மா “கல்யாணத்துக்குப் பிறகு நீ எங்களையெல்லாம் மறந்தே போயிட்டயே”
ராமு என்கிற சீதாராமன் கொஞ்சம் நெளிந்தான், அவ்வளவே.
“மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள், ஒரு வருஷத்துக்குப் பின்னும், இன்னும் உனக்கு இரண்டும் தீரலையே.”
ஒரு நாள் மாலை தீடிரென அவன் அலுவலகத்துக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு அவனுக்கு வந்தது. ஹெட் கிளெர்க் லாரன்ஸ் தான் கூப்பிட்டுச் சொன்னார்.
தொலைப்பேசி மறுமுனையில் அவன் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர், கிருஷ்ணன் பதட்டத்துடன்
“உன் மனைவிக்கு உடல் நலம் சரியிலில்லை, சீக்கிரம் வா”
“என்ன? காலையில் கிளம்பும் போது நல்லாத்தானே இருந்தா…..” என்றான்
“இப்ப அவசரம் உடனே வா” என்று பதிலுக்குக் காத்திருக்காமல் இணைப்பைத் துண்டித்தார்.
வீட்டில் அந்த தெருவில் உள்ள பலர் நின்று கொண்டிருந்தார்கள்.
இவன் வரும் வேகத்தைப் பார்த்து வழி விட்டார்கள்
“என்ன ஜானு, என்ன செய்யறது?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.
“நெஞ்செல்லாம் ஒரே வலி, இடது தோள் பட்டையும் வலிக்குதாம்” அம்மா சொன்னாள்
“ஜானு பேசவே சிரமப்படுகிறா”
“ஏன்பா மூச்சு விட ரொம்ப …” என்று இழுத்தாள். அந்த நிமிடமே மூச்சு விடக் கஷ்டம் அதிகமாயிற்று.
கணவர் வெந்நீர் வைத்துக் கொடுத்தார். அதன் தாக்கம் குறைய வில்லை.
ராமுவின் நண்பர், அருகிலிருந்த தெரிந்த ஒரு மருத்துவரை அழைத்து வந்தார். அவரும் மருத்துவம் பார்த்தார்.
முதலுதவியாக ஒரு ஊசி போட்டு, நாக்கு அடியில் வைத்துக் கொள்ள ஒரு மாத்திரை ஒன்றும் கொடுத்து அடக்கிக்கச் சொன்னார். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி, “இது ரொம்ப அவசரம்” என்று கூறிவிட்டுப் போனார். .
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, நோயின் தன்மையை ஆராய்ந்து விட்டு ஒரு பணிப் பெண் வந்து ராமுவை கூட்டிக் கொண்டு மருத்துவரிடம் சென்றாள்.
பதைபதைக்கும் நெஞ்சோடு போய் நின்றான்.
“இருதய அடைப்பு ஏற்பட்டிருக்கு, உடனடியாக ஆஞ்சியோ எடுத்து பிறகு சிகிச்சைக்குப் போகலாம்.”
“அப்ப இது சிகிச்சை இல்லையா “
“அடைப்பின் தன்மையைத் தெரிந்து கொண்ட பிறகு தான் ஸ்டண்டு வைக்க மறுபடி ஆன்ஜியோவா இல்லை பைபாஸ் செய்யவேண்டுமா? என்று முடிவு எடுக்கணும்”
அதற்குள் ராமு கூட வந்த ரத்தினம், அதே தெருக்காரர், “ஆஞ்சியோ பண்ணும் போதே முடிந்தால் ஸ்டண்ட் வைத்து விடலாமே?”
“சரி இரண்டு தடவைக்குப் பதில் முதல் முறையேவும் செய்யலாம், முடியலைன்னா பைபாஸ் தான் பண்ணனும்” என்கிறார் மருத்துவர்.
இந்த சிகிச்சைக்கு, மருத்துவ மனையில் தங்க எவ்வளவு பணம் என்று ஒரு தாள் எடுத்து மருத்துவர் எழுதிக் கொடுத்தார். “இதில் 90 சதவீதம் இப்ப கட்டிடுங்க மீதியை நான் சொல்லும் போது கட்டலாம். இல்லை காப்பீடு ஏதாவது இருந்தா அதிலயும் பண்ணலாம்” மருத்துவர் கூற ராமுவுக்கு முகத்தில் பேயரஞ்ச களை வந்தது.
சரி தன் மனைவி எழுந்து நடந்தால் போதும் என்ற நினைப்பில் சரி என்று தலையாட்டி பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யத் தயாரானான்.
“நான் என் மனைவியை இப்ப போய் பாக்கலாமா?”
மருத்துவர் ஜாடை காட்டச் செவிலியர் அவனை அழைத்துச் சென்றாள்.
“அங்க போய் உங்க மனைவியிடம் நீங்க அழக்கூடாது, நீங்க அழுதா அவங்களும் அழுவார்கள், அதனால் ஆறுதலா பேசிட்டு வாங்க” மருத்துவர்.
கண் மூடி அவன் மனைவி படுத்திருந்தாள், உடலெங்கும் பல வித மருத்துவ உபகரணங்கள் செலுத்தப் பட்டியிருந்தது.
“அவங்க தூங்கறாங்களா” ராமு மெதுவாகக் கேட்டான்.
எதோ எழுதிக் கொண்டிருந்த ஒரு செவிலியர் இல்லை என்று தலை அசைத்தாள்.
அதற்குள் மனைவி விழித்துக் கொண்டு இவனைப் பார்த்தாள். லேசாக கேவினாள் .
“நம்ம பையன் எங்கே? நான் முழிச்சுட்டு இருக்கும் போதே பாக்கணும்.
“இதோ நான் அழைச்சுட்டு வர ஏற்பாடு செய்யறேன்”
“என்ன ஆச்சு கண்ணு?”
“நம்ம பையனை நல்லா பாத்துக்கங்க, எனக்கப்புறம் அவனுக்கு உங்களை விட்ட யார் இருக்கா?”
“நீ நல்லாயிடுவ, நாம் இரண்டு பேரும் அவனை பாத்துக்கலாம்” என்றான்.
#
ஜானகி குணமாகி வீட்டிற்கு வந்தாள். அவள் மாமியார், அம்மா உடன் சில சொந்தங்கள் ஆரத்தி கரைத்து தடபுடலாக வரவேற்றார்கள்.
குழந்தை ரகு தாயைக் கண்டதும் கை தட்டிச் சிரித்தான்.
படுக்கை அறையில் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்தாள்.
ராமுவிடம் மாற்றத்தைக் கண்டாள் எப்போதும் ரகுவை தூக்கிக் கொண்டே, கொஞ்சியபடி வலம் வருகிறான். தூளியில் இட்டு பாட்டுப் பாடி தூங்க வைக்கிறான்.
இது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்