எல்லாம் நன்மைக்கே…
எல்லாம் நன்மைக்கே என்றால் ? நாம் செய்யும் செயல்களா?இல்லை அடுத்தவர்கள் நமக்கு செய்யும் செயல்களா?அச் செயல்களுக்கான விளைவுகளா?
விளைவுகளால் நாம் உணரும் வெற்றி/ தோல்விகளா?இல்லை அந்த செயல்களால் கிடைத்த பலன்களா! பயன்களா!
இவ்வெல்லாவற்றையும் தாண்டி விளைவுகளை சரியான கோணத்தில் அணுகும் நம் மனோபாவமா?அதனால் நம் உள்ளத்தில் நாம் உணரும் பாவங்களா…!
எல்லாம் நன்மைக்கே என்றால் இவற்றில் எது?
ஒருவருக்கு நன்மை எனில், மற்றவருக்கு அதன் பலன் என்ன?
அப்படி சம நிலையில் எடுத்துக் கொண்டாலும், அந் நினைவு, அந் நிலை நம்மை இட்டுச் செல்லும் பாதை எதுவாக இருக்கும்?இருக்கவேண்டும்?
“எதுவும் செய்யாமல் கிடைப்பதை வைத்து திருப்தி ஆகவேண்டும் என்று அர்த்தமா..? “
“அடுத்தது என்ன என்று சிந்தித்து செயல் படவேண்டுமா?”
“எச்செயலையும் செய்யாமல் நமக்கு விதிக்கப் பட்டது இதுதான்என்று இருக்க வேண்டுமா!!!”
இச்சிந்தனைகள், இவ்வெண்ணங்கள் எனக்குள் ஏற்படுத்திய விளைவுதான் இக்கட்டுரை.
செய்யும் செயல்களையும், அதற்கான பல்வேறு வழிகளையும் தீர்மானிக்கும் உரிமை நம் கையில். ஆனால் அதன் விளைவுகள், முடிவுகள், எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியுமா?
நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகள், பலன்கள் நம் கையில் இல்லாத பொழுது நாம் அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்வது?என்று முடிவெடுக்கும் பொழுது என் மனம், என்னை அழைத்து செல்லும் இடமாகநான் பார்ப்பது,நேர்மறைச் சிந்தனைகளின் வடிவத்திற்குத்தான்
நேர்மறை சிந்தனைகளின் அனைத்து வடிவங்களையும் ஒரு புள்ளியில் குவித்தோமானால் அதற்கு வைக்கப்படும் பெயர் என்னைப் பொருத்தவரை “எல்லாம் நன்மைக்கே…”
இது நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை வெற்றி தோல்வியின்றி சம நிலையில் வைத்துப் பார்க்கும் எடுத்துக் கொள்ளும் ஒரு மனோ பாவத்தின் வெளிப்பாடு.
இவ்வாறு எடுத்துக் கொள்வது அனைவருக்கும் சாத்தியமா..?
சாத்தியமா?.. என்பதே எதிர்மறைக் கேள்வியின் வெளிப்பாடு.
சாத்தியமே..என்பதுதான் நேர்மறைச் சிந்தனையின் பதில்.
மனிதன் தன் வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செயலை செய்து அதற்குரிய பலனை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
அச் செயல்கள் அவர்களின் கல்வி,வேலை வாய்ப்பு, செல்வம்,ஆரோக்கியம்,புகழ் இவற்றில் எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதென்னவோ உண்மை.
அச் செயல்களின் விளைவுகள் கீழ்க் கண்டவாறு அமைவதற்கு அனைத்து வகையான வாய்ப்புகளும் உள்ளன.
விளைவுகள் –
இந்த நான்கு வகையான முடிவுகளையும் சமமான நிலையில், சீரான எண்ண ஓட்டத்தில் எடுத்துக் கொள்ளும் மனோபாவமே எல்லாம் நன்மைக்கே.
இந்த நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம் நினைத்த காரியம் யாவும் கைகூடி வரும்.
எப்படி என்றால்?
மனிதன் எண்ணங்களால் வாழ்பவன்.தன்னைச் சுற்றி அவன் போட்டுக் கொள்ளும் நற்சிந்தனைகள் நிரம்பிய கவசம் அவனை,அவன் எண்ணும் இடத்திற்கு அவனை இட்டு செல்லும். அவன் நம்பிக்கை அவனை வழி நடத்தும்.விரும்பிய பலன்களை அடைய வைக்கும்.அதுமட்டுமல்லாமல் எல்லாம் நன்மைக்கே என்கிற மனோபாவத்தை நாம் நடைமுறை படுத்திக் கொண்டால் நமக்கு கிடைத்த எதிர்மறை விளைவுகளை சீர்படுத்த, நேற்றைய நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்த பாடத்தை மனதில் வைத்து,நாளைய நிகழ்விற்காக சிறப்பாகத் திட்டமிடலாம். அதுவே நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டு செல்லும்.
எப்பொழுதும் நிகழ் காலத்தில் நடக்கும் நிகழ்வை வைத்துத்தான் நாம் யார் என்று கணிக்கப் படுகிறோம்.அல்லாமல் அவற்றைக் குறித்த கவலைகளாலும். துவளும் மனங்களாலும் இல்லை. அந் நிலை நம் நிகழ் காலத்தையும்,வரும்காலத்தையும் வீணடித்துவிடும்என்பது கண் கூடு.
வாழ்க்கை ஒரு போர்க்களம். இங்கு போர்க்களம் மாறலாம் போர்களும், போராட்டங்களும் மாறுவதில்லை. நாம் நடக்கும் பாதையில் முட்களுடன் கூடிய ரோஜா இதழ்களுடன் தான் நமக்குப் பாதை. இவற்றில் முட்கள் நம்மை பதம் பார்க்காமல் நடப்பது நம் கையில்.
காரணம் இல்லாமல் காரியமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.நம்முடைய இன்றைய செயல்களின் பலன்கள் வேண்டுமானால் நம்விருப்பதிற்கு இல்லாமல் போகலாம்.ஆனால் அதற்கு வருத்தப் படுவதால் எந்த பலனும் விளையப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டு இன்று ஒரு வெற்றி நம் கைவசம் ஆகாமல் போகலாம். ஆதலால், அது என்றுமே நம் கைவசம் ஆகாது என்று அர்த்தமில்லை. பொழிகின்ற காலங்கள் தவறிப் போகலாம், தள்ளிப் போகலாம். ஆனால் மழை என்றுமே பொய்ப்பதில்லை என்பதை உணர்ந்து எல்லா பலன்களும், வெற்றிகளும் முதல் முயற்சியிலேயே கை கூடிவிடுவதில்லை. விடா முயற்சி,தன்னம்பிக்கை,நெஞ்சுரம், வேட்கை போன்ற சில விஷயங்களை கைவிடாமல் தொடர்ந்து முயற்சித்தால் நம் நோக்கம் நிறைவேறிவிடும் என்கிற நிலைக்கு எல்லாம் நன்மைக்கே என்கிற மனோபாவம் இருந்தால் எளிதில் வெற்றி நம் கைவசமாகிவிடும்.
இந்த மனப் பக்குவம் நமக்கு எப்பொழுது கிடைக்கும் இதுதான் அடுத்த கேள்வி?
சில அடிப்படை உண்மைகளை நாம் புரிந்து கொள்ளத் துவங்கும் பொழுது, இந்நிலை நம் கைவசமாகும்.
முதலில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவு, நம் தேவை, திறமை, தகுதி ஆகியவற்றுடன் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தையும் எவ்வாறு? எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறோமோ? அதைப் பொறுத்துத் தான் நம் மனப் பக்குவம் அமைகிறது. சூழ்நிலைக் கேற்ப மனிதனின் எதிர்கொள்ளும் திறனும்,அணுகு முறையும் மாறுபடுகின்றது.
இந்த எல்லாம் நன்மைக்கே என்கிற மன நிலை மட்டுமே நம்மை நாம் நினைக்கும் உயரத்திற்கு நம்மை கொண்டு சேர்த்துவிடுமா?
இல்லை…!!!!!!
அதைத் தொடர்ந்து கிடைத்தவிளைவுகளுக்கு ஏற்ப நம் எண்ணங்களையும், செயல்களையும் நேர்மறை சிந்தனைகளோடு முறைபடுத்தவேண்டும்.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்கவிருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்”
பகவத்கீதை
“வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”
குறள்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்”
” சுவாமி விவேகானந்தர்…
மேற் கூறிய மூன்று வாழ்வியல் கோட்பாடுகளும்,வெவ்வேறு கால கட்டங்களில் (சொல்லப் போனால் யுகங்களுக்கு அப்பாலும் சொல்லப்பட்டவை) மனிதர்களின் மனக் குழப்பத்தை நீக்கி, எண்ணங்களை மேம்படுத்தி, அவ்வெண்ணங்களின் எழுச்சியால்,ஊக்கத்தால் வாழ்வியலில் வெற்றி பெறுவதற்கு சொல்லப்பட்டவை.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலகின் நிகழ்வுகள் அதன் பாதைபடி நடந்துகொண்டுதான் இருக்கும். அப்படித்தான் இருக்கின்றது என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அந்த நிகழ்வுகளில் நாம் இருக்கிறோமா? என்பதுதான் கேள்வி.
நாம் தளர்ந்துவிடாமல் நிமிர்ந்து நடந்தால்தான் நாம் நடக்கும் பாதையின் வழி புலப்படும். அந்த நிமிர்வை நமக்கு கொடுப்பது எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணம்.
ஓடுகின்ற நீரோட்டத்தில் உருண்டு செல்லும் கூலாங் கல்லாக இருந்தால்..வேண்டிய இடத்தில கரை ஒதுங்கலாம்.செயலற்று முடங்கிவிட்டாலோ, நாளடைவில் எதிர்த்து நின்று தேய்ந்து போன பாறை, மணல் துகள்களாக மாறுவதுபோல இருந்த இடம் காணாமல் கரைந்துபோய்விடுவோம்.
இந்த சுழற்சியில் நாம் எந்த இடத்தில் தடம்மாறினாலும் நாம் வாழ்விலொரு சிறந்த அனுபவத்திற்கும் அதிலிருந்துஒரு பாடத்தை கற்றுக் கொள்வதற்கும் தயாராகிவிடுகிறோம் என்பதை மறுக்கமுடியாது.
ஆதலால், மேற் கூறிய சுழற்சியில் ஆழமான நம்பிக்கை கொண்டு அதன் படி நடந்தால்,நம் வாழ்வு வளம் பெரும்.ஏனென்றால் வாழ்வே நம்பிக்கைதான்.நம்பிக்கைதான் வாழ்வு.
எல்லாம் நன்மைக்கே…