ட்ரெயின் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. பொதிகை எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து 6 மணி 15 நிமிடங்களுக்கு புறப்படும் என்ற அறிவிப்பாளர் மாறி மாறி தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவித்துக் கொண்டிருந்தார்.
பார்வதியும் நிதானமாக தன் பெட்டியை எடுத்துக்கொண்டு அந்த எஸ் 2 கம்பார்ட்மெண்டில் ஏறி தன் பெர்த் நம்பரைத் தேடினாள். ஏழாம் நம்பர் என்று டிக்கெட்டைப் பார்த்து கன்ஃபர்ம் செய்து கொண்டு தன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். எதிர் சீட்டில் ஏற்கனவே ஒரு பெண் அமர்ந்திருந்தார். ஏறக்குறைய இவள் வயதுதானிருக்கும். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அதற்குள் சைட் ஸீட்டிற்கும் ஒரு பெண் வேகமாக வந்து அமர்ந்தாள். ஒரு 40 வயது இருக்கும். பார்வதிக்கு தனியாக டிராவல் பண்ணும்போது தன்னை விட வயதில் சிறிய பெண்ணின் துணை கிடைத்ததை நினைத்து உள்ளூர நிம்மதி அடைந்தாள். அதற்குள் எதிர் சீட்டில் இருந்த பெண்மணி இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக, “நீங்க பார்வதி தானே?” என்று கேட்டார். அவளுக்கு ஒரே ஆச்சரியம். “அட, ஆமாம் நான் கூட உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு இந்த முகம் எனக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு….. எங்க பாத்தேன் ? அதான் நான் யோசிக்கிறேன்” என்றாள் பார்வதி.
“என்னத் தெரியல ? நான் தான் உன்னோட பிளஸ் டூவில் படிச்ச கயல்விழி” என்றாள். பார்வதிக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. “அட ஆமாம்….. எல்லோரும் அவளை கிண்டல் செய்வார்கள்.
ஏன் பேர்தான் கயல்விழி…. ஆனா ரொம்ப சின்னக் கண்ணு என்று சொல்லி சிரித்தாள் பார்வதி. “அதை மறக்காம ஞாபகம் வச்சிருக்கியா பார்வதி” என்றாள் கயல்விழி.
நாங்க எல்லோரும் ரொம்ப கிண்டல் அடிப்போம். நீயும் கோவிச்சுக்காம எங்களோடு சேர்ந்து சிரிச்சுக்கிட்டு ஜாலியா இருப்ப…”இப்ப எப்படி இருக்க கயல்? எத்தன வருஷம் ஆச்சு உன்னப் பாத்து ?” ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா இப்படி ஒரு ரயில் பயணத்தில் உன்ன சந்திச்சதுல….” என்றாள் பார்வதி. நான் நல்லாத்தான் இருக்கேன் பார்வதி. நாம சந்திச்சு 33 வருடங்கள் இருக்கும் என்றாள் கயல். “ஆமா…. 17 வயசுல ப்ளஸ்டூக்கப்பறம் பிரிஞ்சு போய்விட்டோம். இப்ப நாம ரெண்டு பேருக்குமே ஐம்பது வயசாயிடுச்சி…. ஆனாலும் நீ என்ன மறக்கல…. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா என்றாள் பார்வதி. இவர்கள் இருவரும் உற்சாகத்துடன் பேசியவாறு ஃபோன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். “நான் திருநெல்வேலியில் இருக்கேன். இந்தா என் அட்ரஸ்…. கண்டிப்பா வீட்டுக்கு வா” என்றாள் பார்வதி. “நான் சென்னையில் இருக்கேன் பார்வதி…. ஆனா அடிக்கடி இப்படி ட்ராவல் பண்ணிட்டே இருப்பேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் என்றாள் கயல். கயல் கேட்காமலேயே பார்வதி தன்னை பற்றி முழு விவரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.
வண்டி புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. டிடிஆர் வந்து டிக்கெட் செக்கிங் முடித்து சென்றுவிட்டார். நேரம் கடக்க ஆரம்பித்தது. கயலும் பார்வதியிடம் சொல்லி விட்டு பாத்ரூம் சென்றுவிட்டு வந்தாள். சாயந்திரம் வண்டியில் ஏறுவதற்கு முன்பே பார்வதிக்கு வயிறு சரியில்லை ஆதலால் நைட் டின்னர் அவள் எடுத்து வரவில்லை. கயல் தன் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். “பார்வதி டிபன் கொண்டு வரலையா? என்னோடு ஷேர் பண்ணி சாப்பிடேன்” என்று கெஞ்சினாள். “இல்ல கயல் உன் கிட்ட வாங்கி சாப்பிட எனக்கு என்ன கூச்சம்? எனக்கு வயிறு சரியில்ல அதான் ஒன்னும் சாப்பிடாம இருந்தா சரியாயிடும்…… நீ சாப்பிடு… நான் பிளாஸ்க்ல சுடு தண்ணி வச்சிருக்கேன் அதைக் குடிச்சா காலையில சரியாயிடும் ,ஊருக்குப் போனா ரெஸ்ட்தான்” என்றாள் பார்வதி.
கயலும் வற்புறுத்தவில்லை 9 மணிக்கு பெர்த்தைப் போட்டுவிட்டு எல்லோரும் படுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த நாள் நாலரை மணிக்கே வண்டி திருநெல்வேலி போய் சேர்ந்து விடும் என்பதால் மற்ற பயணிகளும் அவரவர் பெர்த்தில் படுக்க சென்றனர். அப்போது பார்வதி தன் பெட்டியைத் சங்கிலி போட்டு லாக் செய்யலாமா என யோசித்தாள். அதற்குள் தன் பக்கத்தில்தான் தோழி இருக்கிறாளே என்ன பயம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஹான்ட் பேக்கை மட்டும் தலையணை போல் வைத்துக் கொண்டு ஒரு போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள். பார்வதி.
கயலும் கீழ் பெர்த்தில் படுத்து விட்டாள். பார்வதிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தாள். அந்த சைட் பெர்த்தின் மேலே ஒரு 17வயது காலேஜ் ஸ்டூடண்ட் தன் லேப்-டாப்பில் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அப்பர் பர்த்தில் ஒரு நடுத்தர வயது ஆண் சத்தமாக ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு மிடில் பெர்த் காலியாக இருந்தது. இன்னொரு பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. பார்வதிக்கு அந்த ரயிலில் வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் உட்கார்ந்த தோரணையே ரொம்ப மிடுக்காக இருந்தது. ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். தான் ஒரு பெரிய கலெக்டர்னு நினைப்பு போல என்று பார்வதி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். “உட்கார்ந்த தோரணையிலேயே ரொம்ப கர்வம் பிடிச்சவ போல” என்று நினைத்தாள் பார்வதி.
திரும்பி தன் அருகில் உள்ள கீழ் பெர்த்தைப் பார்த்தாள். கயலுடன் பேசலாமா என நினைத்த போது அவள் ஏற்கனவே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள். இவளுக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் எப்படித்தான் வருகிறதோ என்று நினைத்துக் கொண்டு லைட் ஆஃப் செய்து விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள் பார்வதி. தன்னையும் அறியாமல் தூங்கி விட்டாள்.
நடுநிசி இருக்கும். திடீரென்று சத்தம். சைட் பெர்த்தில் படுத்திருந்த அந்தப் பெண் கீழ் பெர்த்தில் படுத்திருந்த கயல்விழியை எழுப்பி அவளை மற்றுமொரு பெண் போலீஸ் உதவியுடன் அந்த ஸ்டேஷனிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி அவளை தன்னுடன் கூட்டிச் சென்றனர். இந்தக் காட்சியைப் பார்த்து பார்வதி அப்படியே விக்கித்துப் போய் விட்டாள்.
“ஐயோ ! என்ன ஆச்சு ? கயல்விழி என் ஃப்ரெண்ட் ஆச்சே…. அவளை ஏன் இப்படி போலீஸ் கூட்டிட்டு போறாங்க?”
“அம்மா… உங்களுக்கு விஷயமே தெரியாதா ? அவங்க நல்ல படிச்சவங்கதானாம்….. ஆனா செய்யறது என்னவோ திருட்டுத் தொழில். இந்த மாதிரி அடிக்கடி ட்ரெயின்ல பிரயாணம் பண்ணி செயின் பறிக்கிறது, பர்ஸ் அடிக்கிறது இதே தான் வேலையாம். இன்னிக்குத்தான் கையும் களவுமாக பிடிபட்டாங்களாம்…. சக பிரயாணி ஒருவர் கூறினார். மற்றொருவர் பார்வதியைப் பார்த்து “நாங்க எல்லாரும் எங்க சாமான் எல்லாத்தையும் செக் பண்ணிட்டோம்…. நீங்களும் பாருங்கம்மா… உங்க சாமானோ, பர்ஸோ ஏதாவது திருடு போயிருக்கான்னு…” என்று கூறினார்.
அப்போதுதான் பார்வதி தன்னை சுதாரித்துக் கொண்டு தன் பெட்டி இருந்த இடத்தை பார்த்தாள். அது நல்ல வேளையாக வைத்த இடத்திலேயே இருந்தது.
ஆனால்….. ஐயோ இது என்ன ! என் ஹாண்ட் பேக் கிழிந்திருக்கிறதே….. என்று பதைபதைப்புடன் அவசரம் அவசரமாக உள்ளே வைத்திருந்த சிறிய பர்ஸைத் தேடினாள். அது இல்லை. அதில் தான் அவள் அவசரத் தேவைக்கு எக்ஸ்ட்ராவாக 3000 ரூபாய் வைத்திருந்தாள். அதை லாவகமாக கயல்விழி அடித்துக் கொண்டு போய்விட்டாள். அதை எப்போது, எப்படித்தான் எடுத்தாளோ !! பார்வதிக்கு தலை சுற்றியது. போன தூக்கம் போனதுதான்.