விவேக சிந்தாமணி – சில பாத்துளிகள்!
(கவனம், இது விவேக சூடாமணி அல்ல)
தமிழில் நீதி நூல்களுக்குப் பஞ்சமே இல்லை – ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி, ஞானக்குறள் போன்றவைகளும், உலகநாதனார் எழுதிய ‘உலக நீதி’, பாண்டி நாட்டு சிற்றரசர் அதிவீரராம பாண்டியன் எழுதிய ‘வெற்றி வேற்கை’ (‘நறுந்தொகை’ என்ற வேறு பெயரும் உண்டு), துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் எழுதிய ‘நன்னெறி’, ‘நீதி வெண்பா’ (எழுதியவர் தெரியவில்லை) – மனிதர்கள் அறிந்து, உணர்ந்து, கடைபிடிக்க வேண்டிய பல நல்ல வாழ்கை முறைகளை மிகஎளிய தமிழில், சிறந்த உபமான, உபமேயங்களுடன் சொல்கின்றன இந்த நூல்கள். தினம் ஒரு செய்யுள் வாசித்து, பொருள் உணர்ந்துகொண்டாலே அறவாழ்க்கைக்குப் போதுமானது!
சந்தியா பதிப்பகத்தில் ஒரு நாள் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த போது, ‘விவேக சிந்தாமணி’ நூல் கண்ணில் பட்டது. அவசரத்தில், விவேக சூடாமணி என நினைத்து, அந்த ஞானப் பொக்கிஷத்தை வாசிக்கும் பக்குவம் இன்னும் வரவில்லை என தாண்டிப் போக, விவேக சிந்தாமணி என்னைச் சுண்டி இழுத்தது – சிறிய அளவும், செய்யுட்களுக்கு எளிய உரையும், வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளையும் கொண்டிருந்ததால், வாங்கினேன், வாசித்தேன்.
இது ஒரு பழமையான நூலாகும். இதன் ஆசிரியரும், எழுதப்பட்ட காலமும் தெரியவில்லை. செவி வழிச் செய்திகள், நாயக்கர் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்டதாக சொல்கின்றன என்ற தகவலை, மா.கோமகன் (மா.ராஜகுமார்) தன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். 1914ம் ஆண்டு, அமரம் பேடு கிருஷ்ணசாமி முதலியார் மூலநூலுக்கு உரை எழுதி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். எது எப்படியானாலும், வாசிக்க சுவாரஸ்யமான செய்யுட்கள். காலப்போக்கில் மனித மனங்களிலும், உறவுகளிலும், கலாச்சாரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்துகொள்ள இது நிச்சயமாக உதவுகிறது என்பது என் எண்ணம்.
இனி ஓரிரண்டு செய்யுட்களைப் பார்க்கலாம்:
பயனில்லா ஏழு!
பெற்றோருக்கு ஓர் ஆபத்தில் உதவி செய்யாத பிள்ளையால் பயனில்லை – இன்றும் இது தொடர்கிறது. வெளிநாட்டில் இருந்துகொண்டு, இங்கு முதியோரில்லத்திலிருக்கும் பெற்றோருக்கு ஓர் ஆபத்தென்றால் பிள்ளைகளால் உதவி செய்ய முடிவதில்லை!
பசியால் தவிக்கும்போது, உதவாத உணவால் ஒரு பயனுமில்லை – பசிக்காத போது, அறுசுவை உணவு கிடைத்தாலும் பயனில்லை; பசிக்கும்போது கிடைக்கும் உணவை உண்ண முடியாமல் செய்தால், அவ்வுணவினாலும் பயனில்லை!
தாகமுற்று இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீரால் என்ன பயன்? கடல் நீர், தாகத்தைத் தணிக்குமா?
வறுமையை அறியாத, அறிந்தும் அதற்கேற்றபடி நடக்காத பெண்களால் (இது ஆண்களுக்கும் பொருந்தும்!) பயனில்லை.
கோபத்தை அடக்காத மன்னனாலும் பயனில்லை. இன்றைய அரசியல் தலைவர்கள், மந்திரிகள் அனைவருக்கும் முற்றாகப் பொருந்திப்போகின்ற வரிகள்!
ஆசிரியரின் சொல்லைக் கேட்காத மாணாக்கனாலும் பயனில்லை. இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஆசிரியர், மாணாக்கர் உறவு நிலை மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.
தன்னுள் மூழ்குபவரது பாவத்தைப் போக்காத தீர்த்தத்தினாலும் பயனில்லை. ஒரு காலத்தில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, ஊருக்கு உதவியாக, தண்ணீர்ப் பற்றாக்குறை வராமல் தடுக்கப் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் புனிதமாகக் கருதப்பட்ட காலம். இன்று குடிநீருக்காக சேமித்து வைக்கும் நீர்நிலைகளின் நிலைமை பரிதாபத்திற்குரியது. ஏன், எதற்கு என்று அறியாமல், இன்று பல புண்ணிய தீர்த்தங்கள் பழிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பில் அழிகின்றன.
இப்படிப் பயனில்லாத ஏழினைச் சொல்லும் செய்யுள் :
“ஆபத்துக் குதவா பிள்ளை
அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியா பெண்டீர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாவத்தைப் போக்கா தீர்த்தம்
பயனிலை ஏழும் தானே”.
(அறுசீரடி ஆசிரியவிருத்தம் – ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்று. ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு இரண்டாக மடக்கி எழுதப்படும். எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனக்கூறுவர் – உதவி: விக்கிபீடியா).
புத்திமானே பலவான்!
நம் எல்லோருக்கும் தெரிந்த கதை, காட்டு ராஜாவான சிங்கத்தின் உருவைக் கிணற்றில் காட்டிக் கொன்ற சிறு முயலின் கதை! புத்திசாலியே பலவான் ஆவான். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், புத்தியில்லாதவனுக்கு அவன் வீரத்தினாலும், பலத்தினாலும் கெடுதலே வந்தடையும். இதைத்தான் பழைய திரைப்படப் பாடல் ஒன்று, “கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு” என்று தொடங்குகிறது!
“புத்திமான் பலவான் ஆவான்
பலமுலான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தி நாலும்
இடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கம் தன்னை
குறுமுயல் கூட்டிச் சென்றே
உற்றாதோர் கிணற்றில் சாயல்
காட்டிய உவமை போலாம்”.
இக்காலத்திற்கல்ல!
தன் கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறான். பிரிவின் துயரில் தலைவி. அப்போது அவளை அலங்கரிக்க வரும் தோழியிடம் சொல்வது போன்ற செய்யுள் ஒன்று.
“உண்ணல்பூச் சூடநெஞ் சுவத்த லொப்பன
பண்ணலெல் லாமவர் பார்க்க வேயன்றே
யண்ணல்தன் பிரிவினை யறிந்துந் தோழிநீ
மண்ணவந் தனையிது மடமை யாகுமால்”
(இந்தப் பாடல் ‘கலிவிருத்தம்’ – அடிகள் நான்கு சீர் கொண்டமையும். அவற்றில் எதுகை அமைந்திருக்கும். நான்கு அடிகளிலும் சந்த ஒழுங்கு இட பெற்றிருக்கும். தமிழ்க் காப்பியங்களில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது – உதவி: விக்கிபீடியா)
சுவையான ஆகாரங்கள் உண்ணுதல், மலர்களைச் சூடிக்கொள்ளுதல், மனமகிழ்ச்சி, முகமகிழ்ச்சியோடிருத்தல், வித விதமான ஆடைகளை அணிதல் போன்றவை தம்தம் கணவர்கள் கண்டு களிப்பதற்காகவே – அவரில்லாதபோது எனக்கு அலங்காரம் செய்ய வந்தது உன்னுடைய அறியாமை என்று தலைவி சொல்வதாகச் செய்யுள்! வெளியே சென்றிருக்கும் தலைவனை நினைந்து, பூச்சூடி, அலங்கரித்து, அவனை நெஞ்சிலிருத்தி மனதில் மகிழும் பெண்டிரை சங்கப் பாடல்களில் காணலாம். இன்றைய சூழலில், இந்தப் பாடல் முற்றும் பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றது. வீடு, அலுவலகம், குழந்தை வளர்ப்பு, சமூக சேவை என எல்லாத் தளங்களிலும் தங்கள் பங்கை ஆற்றிவரும் இன்றைய மகளிருக்கு, இந்தப் பாடல் பொருந்தாது என்றே தோன்றுகின்றது.
அனுபவிக்க மூன்று காரியங்கள்!
இப்பிறவியில் அனுபவிக்கத் தக்க மூன்று காரியங்கள் எவை என்ற செய்யுள் கூறுவதைப் பார்க்கலாம்.
“நற்குண உடைய வேந்தை
நயந்து சேவித்த லொன்று
பொற்புடை மகளி ரோடு
பொருந்தியே வாழ்த லொன்று
பற்பல ரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்த லொன்று
சொற்பெறு மிவைகண் மூன்று
மிம்மையிற் சொர்க்கந் தானே”.
(சந்தக்கழிநெடில் விருத்தம் – ஐந்து சீர்களுக்கு மேல் ஆறு, ஏழு, எட்டு என வரும் அடிகள் ‘கழி (கழி – மிகுதி) நெடிலடி’ எனப்படும். அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே ‘விருத்தம்’. நன்றி: விக்கிபீடியா, imayavaramban.com)
நல்ல குணமுடைய அரசர்களை விரும்பி தரிசித்தலும், அழகும் அறிவும் கனிவும் நிறைந்த பொற்புடை மகளிரோடு கூடி வாழ்வதும், பற்பல கல்விமான்களோடு நல்ல நூல்களைப் பயின்று கற்றுக்கொள்ளுதலும் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டிய நற்காரியங்களாகும்! ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றுமோ அமையப் பெற்றவர்கள் இங்கிருந்தே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்!
எப்படியாவது புதப்புது தலைப்புகளைக் கண்டுபிடித்து கடைசி பக்கத்தில் பிடித்துப் போட்டுவிடுகிறார் பாஸ்கரன்
சார்! எனக்கு நான்கு வயதானபோதே என் தாத்தா “ஆபத்துக்கு உதவாப் பிள்ளை..” செய்யுளை எனக்குக் கற்றுத் தந்தார். அந்த நினைவுகள் மீண்டும் எழுந்தன.
LikeLike