கொரோனா  – அழகர்சாமி ரங்கராஜன்

கொரோனா வைரஸால் யாருக்கு பாதிப்பு? பிபிசி கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தும்  முக்கிய தகவல்கள் - BBC News தமிழ்

          
 என் சட்டை பையை தடவி பார்த்துக் கொண்டேன். இந்த மாதத்தின் கடைசி நூறு ரூபாயும் TVS -50 க்கு பெட்ரோல் போடுவதில் தீர்ந்துவிட்டது. அடுத்து வரும் செலவுகளை எப்படி சாமளிப்பது என்ற கவலையோடு வீட்டிற்குள்  நுழைந்தேன்..
                              என்னை  பார்த்த அகல்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது அதை பார்த்த எனக்கு ஆத்திரமும் கோபமுமாய் வந்தது .
 
“இப்போ எதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்யுர, நிலம புரியாம “
 
கோபத்தில் சடாரென்று கதவை எத்தினேன் கதவு பின் சுவத்தில் போய் மடாரென்று முட்டி நின்றது. வேகமாக உள்ளே சென்று நாற்காளியில் தொப்பென்று உட்கார்ந்தேன் ஏற்கனவே ஒரே ஒரு போல்டில்  நின்றுந்த அதுவும் புடுங்கிட்டு்  சரிந்தது. சுதாரித்து எழுந்து நின்றேன்.  நாற்காலி  நிலையை பார்த்ததும் ஓங்கி மிதித்து நசுக்கி விடலாமா என்றிந்தது.

சத்தமான  டெலிவிஷன் மெளனத்தில் நிஜங்களை மறந்து ஒன்றியிருந்த ராசுவும் சுந்தரும் சத்தம் கேட்டு மிரண்டு போய் சுவரோரம் பல்லிகளைப் போல் ஒட்டிக் கொண்டு மிரட்சியாகப் பார்த்தனர்.
 
 “எதுக்கு இப்ப  கோபப்படுறீங்க அரிசி தீர்ந்து இரண்டு நாளாச்சு ரேசன் அரிசிச் சோறு பிள்ளைக ரெண்டுக்கும் தொண்டையில ஏரங்கமாட்டேங்கிறது, பக்கத்து வீட்டில் கடன் கேக்கலாமுனா  அவுகளும் ஒரு வாரமா ரேசன் அரிசியை வைத்து தா சமாளிக்கிறோமுன்னு அலமு அக்கா சென்னாங்க, நாம அவங்கக்கிட்ட வாங்கின பழைய கடனே பாக்கியிருக்குது” என்று படபடத்தபடி தடுப்பனை உடைந்து ஆற்று வெள்ளம் பெறுக்கெடுத்து  ஓடுவது போல அகல்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியது.
 
                    அயர்சியுடன் , மிரண்டு போய் சுவரோரம் நின்ற பிள்ளைகள் இருவரையும் இழுத்து அணைத்தபடி தரையில் உட்கார்ந்தேன். வந்த ஆத்திரத்தையும், அழுகையையும் அடக்கிக் கொண்டேன்.
 
         இந்த மெட்ரிக்  பள்ளியில் வேலைக்கு சேர்ந்து 20  வருடங்கள் ஆகி விட்டது. சின்னஞ் சிறு தீவு போல ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டுக்கட்டிடத்தில்   மிக சொற்ப மாணவர்களோடு இயங்கிய காலத்திலிருந்து வேலை செய்கிறேன். குறைந்த சம்பளம் தான், அதுவும் கொரோனா  காலத்தில் வாங்கிக் கொன்டிருந்தஊதியத்தில் நாற்பது சதவீதம் என்ற சொற்ப  ஊதியத்தில் கடன உடன வாங்கி காலம் தள்ளியாச்சு. இன்னும் விடிவு காலம் வரவில்லை.  
 
        கரஸ்பாண்டன்ட் ராக்கப்பன்   கிணற்றுத் தவளை போல தன்னை மிகப் பெரிய  அறிவாளியாய் நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால் நல்ல வியாபாரி, பெற்றோர்களின் வீட்டுக்கே சென்று  அவர்கள் காலில், கையில் விழுந்தாவது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விடுவான். மற்றவர்களிடமும், தன்னிடம் வேலை செய்யும் ஆசிரியர்களிடமும் பேசும் போது  அல்டாப்பு தான். ஞானி போல் பேசி வேசம் போடுவதில் கில்லாடி. பச்சோந்தியைப் போல உலகத்தின் தடுமாற்றங்களை நன்கு உணர்ந்தவன். கொரோனா காலம் முடிந்து, பள்ளிகள் திறந்து மாதங்கள் ஆகிவிட்டது  இன்னும்  முழு சம்பளம் தராமல் கதை சொல்லிக் கொண்டு ஏமாற்றுகிறான். 40% திலிருந்து 60% தருவதற்கே ஏக கெடுபுடி.. இது போன்ற பள்ளிகள் நாடு முழுவதும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்.  கல்வியை கடைச்சரக்காக்கியதில் இது போன்ற பள்ளிகளின் வளர்ச்சியே காரணம் என்று நாம் எங்கும் பொது வெளியில் பேச முடியாது. எல்லா மட்டத்திலும் நல்ல ஆசியுடன் நாடு ழுழுவதும் நடந்து  கொண்டிருப்பவை.
 
“ஏங்க பிள்ளைக ரெண்டும் உங்க மடியிலே தூங்கிருச்சுங்க, எழுப்புங்க சாப்பாடு குடுக்கனும், காலையில் வாங்கின மாவு கொஞ்சம் இருக்கு தோசையை ஊத்தி அதுகளுக்கு குடுத்துருவோம் நமக்கு பழையது இருக்கு”   நினைவலைகளிலிருந்து விடுபட்டேன்.
ரெண்டு பேரையும் எழுப்பி ”   தோசை சாப்பிட்டு விட்டு படுங்கள் ” என்றேன்
” ம் சட்னி வேனா ஜாம் போட்டுக் குடு இல்லைனா சாஸ் போட்டுக் குடு ” என்றான் பெரியவன்.
 
“எனக்கும் ஜாம்தான் ” என்றது சிருசு
 
” ரெண்டுமில்ல தோசப் பொடிதான் சாப்பிட்டு  படுங்க” என்றாள் அகல்யா
 
வாங்கித்தர ஆசையிருந்தும் காசு இல்லை. இருவரும் பழையதை சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  தூக்கம் லேசில்  வரவில்லை புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் பாச்சையின் சத்தம் வேறு காதுகளை துன்புருந்தியது. சன்னல் கம்பிகளூடே பார்க்கையில் தெருவிளக்கொளியில் கருமையாக தெரிந்த மரத்தின் உலர்ந்தும் உலராததுமான இலைகளும் அப்போதைய இறுக்கமான உணர்வுகளை மேலும் இறுக்குவது போலிருந்தது. 
           அவனோடு வேலை செய்பவர்கள் அனேகம் நடுத்தர வர்க்கப் பெண்கள், அவர்கள் பெரும்பாலும் ஏதோ பொழுது போக்கிற்காக வேலைக்கு வருபவர்களாக இருப்பார்கள்.  இது போன்ற பள்ளிகளுக்கு இதுதான் மூல ஆதாரம்.  பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி மனப்பாடம் செய்ய வைத்து நிறைய மார்குகளை போட்டு பெற்றோரையும் நிர்வாகத்தினரையும் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்.
அவர்களுக்கு வருமானம் பெரிய பொருட்டு இல்லை. சொற்ப சம்பளத்தில் வேலை செய்ய முடியும்.  இந்த வருமானத்தை நம்பி பொழப்பு  நடத்துவோர் மிக குறைவு தான்.  அதிலும் என் போன்ற ஆண் ஆசிரியர்களிடம் கூடுதலாக சில வேலைகள் வாங்கிக் கொண்டு அதற்கு தனியாக மாதம் ஏதாவது காசு தருவார்கள். உதாரணத்திற்கு  நைட் ஸ்டடி, தேர்வு காலங்களில் இரவு முழுவதும்  மாணவர்களோடு தங்கி அவர்களை படிக்க வைப்பது போன்ற வேலைகளைத்  தருவார்கள்.  இந்தப் பெருந்தொற்று காலத்தில்  அதுவும் இல்லை வெறும் 60% சம்பளத்தில் குடும்பத்தை ஒட்டுவது என்பது கயிறு மேல் நடப்பதைக் காட்டிலும் பெரிய வித்தை. யானைப் பசிக்கு தீனி போட்டால் போலத்தான்.
ஏதோ சூடுதட்டியது, அருகே படுத்திருந்த சின்னவன் உச்சா போய் விட்டான். துணியை மாற்றி விட்டு ஈரம் இருக்கும் இடத்தில் துண்டை விரித்து மீண்டும் படுக்க வைத்தேன்.
என்னுடன் வேலை செய்யும் பஸ் டிரைவர்  முருகேசன் நினைவுக்கு வந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். இங்கு வந்து வேலை செய்கிறார் அவருக்கு ரெண்டு பெண்கள் அவர்களை படிக்க வைத்து, ஒரு மகளை அவர் சொந்த அக்கா மகனுக்கு கட்டிக் கொடுத்துவிட்டர்,  இளையவள் படித்து கொன்டிருக்கிறாள். அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அவருடைய ஓய்வுப் பணம் வரவில்லை வந்தால் அதை பயன்படுத்தலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்.  இது போல அவருடன் வேலை பார்த்தவர்கள், நிறைய உண்டு.
 ” ஓய்வுப் பலன் கிடைக்காமலே பல பேர் செத்தும் போய்டாங்க ” என்று அடிக்கடி குறைபட்டுக்கொள்வார். என்னுடன் வாஞ்சையுடன் பேசுவார்.
நேற்று அவரப் பார்த்த போது “நம் பெரிய சாலை கடைசியில மேற்கால ஒரு பஞ்சாலை இருக்குதுள்ள அதில நைட் வாட்மென் வேலைக்கு ஆள் வேனுமாம் ஏஜெண்டு ஒருத்தன் சொன்னான்” எதுக்கு தான் எஜெண்டு இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.
“ஏஜெண்டு கமிசன் போக 6000 ரூபாய் தருவாங்க யாராவது இருந்தா சொல்லுங்க ” என்றார்.
பளிச் என்று ஒரு யோசனை தோன்றியது பேசாமல் நாமே அந்த வேலையை செய்யலாம் என்று :   நான் இப்ப வாங்கும் சம்பளத்தில் பாதி. அரையும் அரையும் ஒன்று என்று கணக்கு போட்டுக் கொண்டேன்,  எப்படியோ சாமாளிக்களாம் என்று தோன்றியது. நாளைக்கு அகல்யாவிடமும் பேசிவிட்டு முடிவு செய்யலாம். ஸ்கூல் நிற்வாகத்தினரோடு நெருக்கமான நம்பத்தகுந்த விசுவாசிகளிடம் விசாரித்த போது, இப்போதைக்கு முழு சம்பளம் தர முடியாது என்று கூறியதாக சொன்னார்கள். வழக்கம் போல் பள்ளிக் கட்டணம் முழுமையாக கிடைக்கல இப்போதும் கடன் மூலமாகத்தான் சம்பளம் போடுரோம் என்று பழைய பாட்டையே பாடுவாங்க.
       பிழைப்பிற்காக  தன்னை சார்ந்தவர்கள் மீது செலுத்தும் ஒரு சுரண்டல் தான் என்று அனைவரும் அறிந்தது தான். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை காலையில் பக்கத்து வீட்டு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். அந்த நாய் பால் போட வரும் பையனைப் பார்த்து எப்போதும் குரைக்கும். கேட்டில் பையிலிருந்த பாலை எடுத்து உள்ளே வைத்து விட்டு பெரிய சாலையில் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வந்தேன். அகல்யாவும் எழுந்து விட்டாள். டீ போட்டு அகல்யாவிடமும் கொடுத்து விட்டு பேச்சை ஆரம்பித்தேன்.
 
” டிரைவர் முருகேசன் பக்கத்தில் உள்ள பஞ்சாலையில் நைட் வாட்சுமென் வேலையிருக்குன்னு சொன்னர், அந்த வேலைக்கு நான் போகலாம் என்று தோன்றுகிறது ” என்றேன்
சொன்னதும் என்னை மேலும் கீழும் பார்த்தாள். உண்மையில் சொல்லுறேனா  இல்லை ஏதோ விஷமத்திற்கு சொல்கிறேனா என்று.
 
“நெசமாலுந்தான், போனா கொஞ்சம் காசு கிடைக்கும் “
 
மெளனம், சிறிது நேரத்திற்கு பின்
 
“ஏங்க, போய்த்தான் ஆகணுமா? ஏதோ குழப்பத்தில் கேட்டாள்.

அக்கேள்வி என்னமோ தேவையில்லாத கேள்வி போல் என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. பற்றாகுறையை எப்படி சாமாளிப்பது என்ற கேள்வியுடன், உணர்ச்சிக் குவியலில் ஏதோ ஒரு ஒன்று அழுத்தியது போன்ற உணர்வில் ஆளமாக அவளை பார்த்தேன்.
 
“என்ன தான் பிரச்சனையினாலும் கெளரவமா வேலை செஞ்சுட்டு இப்படி ஒரு வேலைக்கு போனா நல்லாவா இருக்கும் “
 
“கெளரவம் பாத்தா பிள்ளைகளை வளக்க முடியுமா?” வேற வழி தெரியல, டீயூசனுக்கு வந்த பயகளும் இப்ப வரல அரைச். சம்பளத்தவச்சு எப்படி…”
 
கொடிய முதலை எங்கள் மகிழ்ச்சியை அப்படியே முழுங்குவது போல் ,நிசப்தம்.
 
காலை 10 மணிக்கு மேல் டிரைவர் முருகேசனுக்கு போன் செய்தேன்,
 
“ஹலோ முருகேசன் அண்ணே நா ரவி பேசுறேன்”
 
“சொல்லுங்க தம்பி என்ன விசயம் “
“ஒண்ணுமில்ல நேத்து நீங்க சொன்ன வேலைக்கி நானே போகலாமான்னு தோனுது என்ன சொல்றிங்க “
 
“என்ன தம்பி நீங்க போய் இந்த வேலைக்கி. அதெல்லாஞ் சரியா வராது தம்பி”
 
“இல்லண்ணே எனக்கு இப்போதைக்கு வேறு வழி தெரியல, சமாளிக்க முடியல, ஏதுக்கும் நீங்க அந்த ஏஜெண்டு நம்பர் குடுங்க நா பேசிப் பார்க்கிறேன்”
 
“என்ன தம்பி நீங்க… அதெல்லாம் ரொம்ப சிரமமான வேல, சரி நம்பர் தாரேன் பேசிப் பாருங்க”
 
அவர் தந்த நம்பருக்கு போன் செய்து விசயத்தை சென்னேன், அவர் என்னைப்  பற்றி விவரங்களை கேட்டுக் கொண்டு மாலை 6 மணிக்கு முதலாளி வீட்டுக்கு வரச் சொன்னார். நான் ஆசிரியர் என்ற விபரத்தை மட்டும் மறைத்துவிட்டேன். இதை சொல்லி மறுத்துவிடக் கூடாதே என்று. மாலை சரியா 6 மணிக்கு அங்கே போனேன். கேட் வாசலில் நின்றுந்த காவலாளியிடம் விசயத்தை சொல்லி உள்ளே சென்றேன், நாய்கள் வரவேற்றது.  சாவகாசமாக உயர் ரக பிஸ்கெட்டுகளை கொறித்துக் கொண்டிருந்த அந்த டாபர்ரும், அல்சேஷனும் திடீரென முளைத்த புது விருந்தாளியைக் கண்டு ஆத்திரத்துடனும், ஆக்ரோஷத்துடனும் பாய்ந்தது, பயத்தில் சற்று நின்றேன், இதுகளுக்கே மாதம் 10 ஆயிரம் செலவு செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன். என்பள்ளி கரஸ்பாண்டன்ட் வீட்டிலும் இது போல இரண்டு நாய்கள் உள்ளது நினைவுக்கு வந்தது. ஒரு நெட்ட ஆசாமி வெளியே வந்தார்.
 
“தம்பி நீதா காலையில போன் பண்ணுன முருகேசன் சொன்ன ஆளா? ” என்றார்.
 
“ஆமாண்ணே “
 
“எல்லாஞ் சொல்லிருக்கேன் ஐயா வருவாக நில்லுங்க ” என்றார்
 
உள்ளேயிருந்து ஆள் நடந்து வரும் ஓசை கேட்டது. நெஞ்சு படக், படக் கென்று அடித்துக் கொண்டது.வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டியில் வந்த நபரின் பின்னால் இரண்டு மூன்று நபர்கள் மிகவும் பெளவியமாக நடந்து வந்தனர். வாசலில் எங்களைப் பார்த்த வெள்ளை வேஷ்டி நபர்  என்ன என்பது போல் பார்த்தார். புரோக்கர் தான் பேசினார்.
 
” ஐயா தம்பி தான் வாட்மென் வேலைக்கு வந்துருக்கு எல்லாஞ் சொல்லிட்டேன் நீங்க பாத்து ஒகே சொல்லிட்டா போதும் ” என்றார்
 
அப்போது வெளியிலிருந்து கிரிகெட் மட்டையுடன் ஓடி வந்த பையன் என்னைப் பார்த்து ” குட்ஈவினிங் சார் ” என்றான் என் பள்ளியில் படிக்கும் மாணவன் போல பள்ளியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள் எந்த வகுப்பு என்று தெரியவில்லை.
 
எல்லோரும் என்னைப் பார்த்தனர். என் மனம் புழுவைப் போல் நெளிந்தது.
 
வெள்ளை சட்டைக்காரர் என்னப்பார்த்து கேட்டார்.
 
” தம்பி நீங்க வாத்தியார வேலை செய்யுரிங்களா?” என்றார்.
 
நான் மெளனமாக தலை ஆட்டினேன்
 
“அட நீங்களெல்லாம் இந்த வேலைக்கு வரலாமா? வேண்டாந் தம்பி கம்பெனி நல்லா ஒட ஆரபிச்சதும் என்ன வந்து பாருங்க வேற வேல போட்டுத்தாரேன்” என்று சொல் விட்டு ஏஜென்டைப் பார்த்து ” ஏய்யா வாட்சுமென் வேலைக்கு ஆள் கொண்டான்னு சொன்னா வாத்தியார் வேலை பாத்துக்கிட்டு இருக்கிறவர கொண்டாந்து விடுர ” என்றார். பின் என்னப்பார்த்து
 
” நீங்க போய்டு பிறகு வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு போர்டிக் கோவில் தயாராய் நின்ற காரில் ஏரி சென்று விட்டார்.
 
நெட்டை ஆள் என்னை பார்த்து முறைத்தபடி…
 
“இதெல்லாம் நீங்க செல்லலையே தம்பி ” என்றபடி கிளம்பி விட்டார்.
 
நான் செய்வதறியாமல் தவித்த படி நின்றேன். அடுத்து என்ன செய்வது என்று யேசித்தபடி வெளியே வந்தேன்.. வேலை செய்வதற்கும் சமூக அங்கீகாரம் தேவை போல என்று நினைத்துக் கொண்டே வண்டியில் ஏறினேன். இரண்டு நாட்களுக்கு முன் என்னுடன் வேலை பார்க்கும் ராமு சொன்னது போல் காய்கறி வாங்கி வண்டி வாடகைக்கு பிடித்துக் கொண்டு டோர் டெலிவரி செய்யலாமா என்று தோன்றியது, அதுக்கும்  முன்பணம் வேண்டுமே. .அடுத்து மூன்றாவது அலை வேற வருதாமே..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.