சங்கீதமு லேது  – நாகேந்திர பாரதி

சங்கீதமு லேது  

கீர்த்தனைகளுக்கு இறையருள் கொடுத்த தியாக பிரம்மம் தியாகையர்!

எனக்கு சின்ன வயசிலே இருந்தே இந்த சங்கீதம்னா ரெம்ப ஆசைங்க. எங்க தாத்தா கோயில் பேஷ்காரா  இருந்தாரா, அடிக்கடி கோயிலுக்குப் போயி இந்த நாதஸ்வர ஓசை கேட்டுக் கேட்டு சங்கீத ஆசை வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் கோயில் திருவிழா நேரங்கள்லே, சுவாமி எங்க  தெருப்பக்கம், திரு உலா வர்றப்போ எல்லாம், நாதஸ்வர ஓசைக்கு தலையாட்டிக்கிட்டு எங்க தாத்தா முன்னாலே நடந்து வருவாரு. அவருக்குத் தெரியாம  வீட்டுத்  திண்ணை ஓரம்   போர்வையை இழுத்துப் போர்த்துக்கிட்டுத் தூங்கப் பார்த்தாலும் , அந்த நாதஸ்வர ஓசையும்  தவுலுச்  சத்தமும், நம்ம தலையையும் போர்வைக்குள்ளேயே ஆட  வச்சிடும். அப்ப பள்ளிக்கூடத்திலே பாட்டு வகுப்பு எல்லாம் இருந்தாலும், பாட்டு சொல்லிக்கொடுத்த ஜெயலட்சுமி டீச்சரோட சந்தன முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க தோணுச்சே தவிர, சங்கீதம் உள்ளே  ஏறவே  இல்லை.

அப்புறம், கல்லூரி எல்லாம் முடிச்சு , வேலைக்குச் சேர்ந்தப்பறம் , இந்த ‘சங்கராபரணம் ‘ படம் வந்து சங்கீத ஆசையை மறுபடி கிளப்பி விட்டுடுச்சு. ‘மானஸ சஞ்சர ரே’ ன்னு மானாவாரியா பாடிக்கிட்டுத் திரிஞ்ச காலம் அது.  ‘சங்கரா ‘ ன்னு கத்திக் கூப்பிட்ட குரலுக்கு அந்த ஊரிலே இருக்கிற எல்லா சங்கரன்களும் திரும்பிப் பார்த்தாங்க. ஆனா சங்கீதம் நம்ம பக்கம் திரும்பிப் பார்க்கலைங்க.

அப்புறம் குடும்பத்தைக் காப்பாத்த உருப்படியா வேலையிலே கவனம் செலுத்தி இருந்திட்டு, இப்ப வேலை ஓய்வு  பெற்ற பிறகு, நம்ம  விருட்சம், குவிகம் குழுமங்கள்லே , நடத்துற மீட்டிங்கள்லே சில பேரு பாடுறதைப் பார்த்ததும்  நம்மளும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு , சில சங்கீத குருமார்கள் கிட்டே போய் எனக்கு சங்கீதம் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன். அதிலே பெரும்பாலான பேரு பெண் சிஷ்யை களுக்குத்தான்  சொல்லிக் கொடுக்க ஆர்வம் காட்டுறதாய்ச் தெரிஞ்சது. அவங்களுக்குத் தானே, வளைவு , நெளிவு, அதாவது குரல்லே , வளைவு நெளிவு சரியா வர்றது. அந்த காரணத்தினாலே இருக்கலாம்.

கடைசியா ஒரு அம்மா , எனக்கு சொல்லிக் கொடுக்க சரின்னு சொல்லிட்டு, அவங்க பல் செட்டை எடுத்துச் சரி செஞ்சிட்டு  ‘ச ரி ‘ ன்னு ஆரம்பிச்சாங்க. நான் ‘ சாரி ‘ ன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்ததில்  ஒரு விஷயம் தெரிஞ்சது. இப்பத்தான் எல்லாமே யூடியூபில் சொல்லிக் கொடுக்கிறாங்களே , கத்தரிக்காய் சாம்பாரில் இருந்து, கராத்தே கத்துக்கிறது வரை  இருக்கே. அப்படின்னு தேடித் பார்த்தா, எக்கச் சக்கமா கிடைச்சுச்சுங்க.  இந்த ‘சாம்பார் ராகத்தை ‘ பத்தி, சாரி, சாமா ராகத்தைப் பத்தி எல்லோரும் பிரமாதமா சொல்றாங்களே, சில எழுத்தாளர்கள், அதை வச்சு கதை எல்லாம் எழுதி இருக்காங்களே, அதை முயற்சி செய்யலாமேன்னு , அந்த ராகத்தில் , ‘சாந்தமு லேக ‘ பாடலை ப்ராக்டிஸ் பண்ணலாமுன்னு  யூடியூப்பிலே தேடிப் பார்த்தேன்.

சில வித்துவான்கள், சாந்தமு லேக வை, சாந்தமே இல்லாமல் சத்தமா பாடி இருக்காங்க. சில பேரு , அந்த ஸாமா  சாஸ்திரிகளை விடாம, அதாவது , ஸாமா  ராகத்தை விடாம ஆலாபனை பண்ணிக்கிட்டு இருக்காங்களே தவிர, சாந்தமு லேக வுக்கு வரவே மாட்டேங்கிறாங்க. நம்மளாலே அந்த அளவு ஆலாபனை எல்லாம்  பண்ண முடியாதே, நேரடியா பாட்டுக்கு வந்து முயற்சி பண்ணத்தானே ஆசை. கடைசியிலே ஒரு வழியா  நமக்கு ஏத்த மாதிரி, ஒருத்தர் பாடியிருந்தார். அருமையா , சாந்தமா, சிரிச்ச முகத்தோட, இது ரெம்ப ஈஸி தம்பி ‘ங்கிற மாதிரி பாடியிருந்தார்.

அவரோட சேர்ந்து பாடி சாதகம் பண்ண ஆரம்பிச்சேன். என்ன பாதகம் பண்ணினேன்னு தெரியலே . திடீர்னு, வீட்டுக் கதவை யாரோ படபடன்னு தட்டுறாங்க. . ஓடிப் போய்த் திறந்தா, பக்கத்து வீட்டுக்காரர், ‘ சார் , நீங்க சாந்தமு லேக பாடுறதைக் கேட்டு எங்க வீட்டிலே சாந்தமே போயிடுது. கொஞ்சம் மெதுவாப் பாடுங்க. எங்களுக்கு இந்தப் பாட்டு வேணாம் ‘ ன்னு ,சொன்னவுடனே  சரின்னு சத்தத்தைத் குறைச்சு  வீட்டுக்குள்ளே மட்டும் கேட்கிற மாதிரி பாடினேன். ஆரம்பத்திலே வீட்டம்மா ஒண்ணும் சொல்லலே. ஆனா நான்  அந்த ‘ சாந்தமு லேக ‘ வைப் பத்துத் தடவை திருப்பித் திருப்பிப் பாடுனதும்  அவங்களாலேயும் பொறுக்க முடியலே.

ஏங்க , இதுக்காக , நான் ரோட்டிலே போயிப் பாட முடியுமா. தெருவிலே எல்லோரோட சாந்தமும்  போறது ஒரு பக்கம், நம்மளைப் பிச்சைக்காரன்னு நினைச்சு அவங்கவங்க வீட்டிலே இருக்கிற, பழைய சாதத்தையும் , ஊசிப் போன பதார்த்தங்களையும் , இரக்க உணர்வோடு நமக்கு போட வந்துட்டா , பெரிய பிரச்னையாயிடுமே . பார்க் பக்கம் போயி பாடலாம்னா , வாக்கிங் போறதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு  நியூசென்ஸ் கேசில் போலீசில் பிடிச்சுக் கொடுக்க சான்ஸ் இருக்கு.

வேற வழியில்லாம ரூமுக்குள்ளே போயி கதவைச் சாத்திக்கிட்டு பாட ஆரம்பிச்சேன்.  ‘சாந்தமு லேக .. ” ,அந்த வித்துவான் செய்யற மாதிரி தோள் உயர்த்தி சிரிப்போடு பாட வர்றது. ஆனா சுருதி தான் சேராமே, வடக்கேயும் தெற்கேயும் போயிட்டு போயிட்டு  வர்றது., இதிலே , அவரு , அந்த ‘ க’ வை மட்டும் இழுத்துப் பாடுறதை முயற்சி  பண்ணினா, அது ‘ கா, கா’ ன்னு வர்றது. சன்னல் பக்கம் பார்த்தா, ரெண்டு மூணு காக்கை வந்து  உட்கார்ந்து என்னையே ‘உர்’ ருன்னு  பார்க்குது. ரசிக்குதா, இல்லே கோபப்படுதான்னு ஒண்ணுமே புரியலே. எதுக்கு வம்புன்னு, ஜன்னலையும் சாத்திட்டு , பேனையும் அமத்திட்டு வேர்க்க விறுவிறுக்க சாதகம்.  பேன் போட்டா, அந்த சத்தம் வேற ‘துர்துர்ன்னு’ தொந்தரவு. ஒருவழியா, சுருதி சேர்ந்து, ‘சாந்தமு லேக, சௌக்யமு லேது ‘ வர்ற நேரத்திலே, ரூம் கதவு தட்டுற சத்தம்.

‘தாத்தா. ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வந்துருக்கேன். வேணுமா’ .  பேத்தியின் குரல். ஐஸ் க்ரீம் சாப்பிட்டா , குரல் போயிடும்னு சொல்றாங்களே, ன்னு ஒரு சந்தேகம். ‘ஐஸ் க்ரீமா, சங்கீதமா, ஐஸ் க்ரீமா, சங்கீதமா’ , மனசுக்குள் ஒரு போராட்டம். அப்புறம்  முடிவு, ‘இப்ப என்ன பெரிய குரல் இருக்கு, போறதுக்கு  ‘ என்று முடிவு செய்து கதவைத் , திறந்து  ஐஸ் க்ரீம் வாங்கி சப்பிச் சப்பிச் சாப்பிட்ட பிறகு மறுபடி கதவைச் சாத்தி படு பயங்கர சாதகம்.  என்ன ஆச்சர்யம். அந்த ஐஸ்க்ரீம், குரலை , வளுவளுப்பாக ஆக்கி சுருதி பிசகாமல் ஒரு வரி பாடியாச்சு .

தூங்கி எழுந்து, மறுநாள் காலை ஆரம்பித்தால் , அய்யய்யோ, தொண்டை கட்டிக்கிட்டு, ‘சார்ந்தமு லீக்க , சயர்க்க்கமு லோத்து ‘ என்னென்னமோ சத்தம், தொண்டையில் இருந்து. விடுவோமா நாம. யாரு. பிரிட்ஜில் இருந்த  மீதி ஐஸ் க்ரீமை எடுத்து சாப்பிட்டு , தொண்டையை மறுபடி வளுவளுப்பாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து  சாதகம் செய்து ,ஒரு வழியா ,  ஒரு வலியா , ‘சாந்தமு லேக . சௌக்கியமு லேது , ஸாரஸ தள  நயனா, ஆஆஆ ‘ ன்னு பாடி ரெகார்ட் பண்ணியாச்சு. பல்லவி பாடியே, பல்வலி  வந்தாச்சு, அனுபல்லவி, சரணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்  ‘ ன்னு ரெகார்ட் பண்ணினதை குவிகம் சுந்தரராஜனுக்கு அனுப்பியாச்சு , குவிகம் ஒலிச்சித்திரத்திற்கு.

அவரும் கேட்டுட்டு , வழக்கம் போல் ‘ பிரமாதம் பாரதி ‘ ன்னு சொல்லிட்டு  குவிகம் ஒலிச் சித்திரத்திலே சேர்த்திட்டாரு. கேட்கிறவங்க, என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலே. 

ஆனா, முன்னாலேயே  கேட்டுட்ட குவிகம் கிருபானந்தன் மட்டும் கையாலே, ரெண்டு முறை , ரெண்டா , மூணான்னு சரியா தெரியலே, தலையிலே  அடிச்சுக்கிட்டார்னு கேள்வி.

 

3 responses to “சங்கீதமு லேது  – நாகேந்திர பாரதி

  1. இடையிடையே நகைச்சுவை துக்கடாக்கள் அருமை! வளைவு நெளிவு செமை சிலே(இ) டை! இதை கதையாக மூன்றாம் மனிதராக எழுதி இருந்தார் கிரேசி ரேஞ்சுக்கு போயிருக்கும்! 👏

    Like

  2. சங்கீதத்தை வைத்துக் கிண்டல்செய்து கட்டுரை எழுதுவது ஆதிகால வழக்கம் நண்பரே! நான் கூட ஒருகாலத்தில் ’40 வயதுக்கு எம்ற்பட்டவர்கள் கர்நாடக சங்கீதம் பாடுவதை சட்டத்தின்மூலம் தடுக்கவேண்டும்’ என்ற கருத்தில் உடன்பாடு கொண்டிருந்தேன். ஆனால் ஐம்பது வயதுக்குப் பிறகுதான் சங்கீதம் என்றால் என்னவென்று புரிய ஆரம்பிக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே யாருடைய சங்கீத முயற்சிகளையும் நான் எதிர்ப்பதில்லை.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.