மாடர்ன் டைம்ஸ் : காலத்தைக் கடந்தும் பேசும் மௌனப் படம்
ஓட்டலுக்குள் நுழைகிறார் ஒருவர். ‘சார் என்ன வேண்டும்?’ என்ற குரல் கேட்கிறது. ‘என்ன இருக்கிறது?’ அவ்வளவு தான் கடல் மடை திறந்தது போல் கடையில் உள்ள பலகாரங்கள் பெயர்கள் செவிகளைத் தொளைக்கின்றன. ‘சரி சரி, ஒரு பிளேட் பூரி கிழங்கு’ இது அவர் சொன்ன பட்டியலில் இல்லாதது. ஆனாலும் சலனமின்றி உள்ளே போகிறார். அதைக் கொண்டு வருவதற்குள் வேறு வேறு மேசைகளில் இருந்தும் வேறு வேறு ஆர்டர் – ஐஸ் வாட்டர், ஜாங்கிரி, இதனிடையே ஒரு மேசையில் சாப்பிட்டு முடித்தவர் பில் கேட்கிறார், சட்டென்று பில் புத்தகத்தில் எழுதிக் கிழித்து மேசையில் சிந்தி இருக்கும் காபித் துளியில் ஒட்டிவிட்டு, அடுத்த ஆர்டர்…’என்ன இருக்கிறது?’, யாரோ கேட்கிறார், மீண்டும் பட்டியல் ஒப்புவிக்கிறார் அவர்.
இவர் என்ன மனிதனா, எந்திரமா…என்று ஓட்டலில் நுழைந்தவர் யோசிக்கும்போது, ‘சார் உங்க கைக்குட்டை கீழே விழுந்திருக்கு’ எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்கிறார், நிச்சயமாக எந்திரமில்லை, மனிதன் தான். மீண்டும் ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீம், எந்திரமாகி விடுகிறார் அவர்!
‘இது மிஷின் யுகம்’ என்ற புதுமைப்பித்தன் சிறுகதையில் வருவது தான் மேலே நீங்கள் வாசித்தது (மணிக்கொடி: ஜூலை 29, 1934). முதலில் மனித எந்திரன் என்று தான் தலைப்பிட்டு இருந்திருக்கிறார் புதுமைப்பித்தன், கதையை சார்லி சாப்ளின் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் மிஷின் யுகத்தின் மனித எந்திரனின் – எந்திரத்திலிருந்து விலகி விலகிப் போய்த் தன்னை மனிதனாக நிறுவிக் கொள்ளத் துடிக்கும் ஒரு தொழிலாளியின் துயரம் மிகுந்த கதை, ஆனால் தமது கதை சொல்லலில் யாரையும் அவர் அழ அனுமதிப்பதில்லை.
மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் அல்ல, மனித சமூக வாழ்க்கையில் மூலதனத்தின் கைவரிசை என்ன என்பதன் நுட்பமான காட்சிப்படுத்தல் அது. தொழிற்சாலை முழுக்க நிறைந்திருக்கும் எளிய மனிதர்கள் வேலை பார்க்கின்றனர், முதலாளியோ அவர்களை வேவு பார்க்கிறார். தொழில் நுட்பம் அவரை அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து தொழிலாளிகளை விரட்டிக் கொண்டே இருக்கச் செய்கிறது. வேவு பார்ப்பவர் கங்காணியா, மேலாளரா, முதலாளியே தானா, யாராயினும் அது மூலதனத்தின் முகம்.
எந்திரங்களின் வேகக் கட்டுப்பாட்டு அறைச் சுவரில் முதலாளி திடீர் என்று தோன்றி, வேகத்தைக் கூட்டு என்கிறார், அதற்கான ஆள் லீவர்களை இழுக்க, ஏற்கெனவே ஒருவரோடொருவர் மோதி மோதி ஸ்க்ரூ டைட் செய்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் இப்போது கூடுதல் வேகத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட் மீது நகர்ந்து வரும் அடுத்தடுத்த பொருள்களின் ஸ்க்ரூ டைட் செய்ய தங்களுக்குள் இன்னும் மோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் கவனம், விசுவாசம் எல்லாம் வேலைகளை முடிப்பதில் தான். சண்டைகளைக் கூட அவர்கள் வேகமாகக் கைவிட்டு எந்திரங்களின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாப்பாட்டுக்கு மணியடித்தால் போட்டது போட்டபடி ஓடவும் அவர்கள் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
முதலாளியிடம் ஓர் அதி நவீன எந்திர விற்பனையாளன் வந்து தொலைக்கிறான், தொழிலாளி சாப்பிடக் கூட இடத்தை விட்டு நகரவேண்டாம், அவன் இருக்குமிடத்திலேயே அவனுக்கு சாப்பாடு எடுத்து வாயில் ஊட்டி, கன்னத்தில் ஒட்டி இருந்தால் வேகமாகத் துடைத்து விட்டு, திரும்பவும் ஊட்டிவிட்டு… என்று வட்டமாகச் சுழலும் மேடையின் மீது உணவுத்தட்டுகளும், ஆள் அசையாமல் கழுத்தில் கிடுக்கிப் பிடிபோட்டு நிறுத்தும் கருவிகளுமாக அசுர சாதக எந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறான்.
ஏற்கெனவே எந்திரத்திற்கு சவால் விடுமளவு எந்திரமாக மாறியிருக்கும் சார்லி சாப்ளினை வைத்தே இந்த உணவு எந்திரத்தை பரிசோதிக்க கேட்டுக் கொள்கிறான் முதலாளி. அரைகுறை தொழில்நுட்பமும், அவசரத் திருகலும் ஏற்படுத்தும் குழப்பத்தில் சாப்ளினுக்கு நல்ல சாத்துபடி நடக்கிறது, அடித்து நிமிர்த்துகிறது எந்திரம், முதலாளியே பெரிய மனது பண்ணி எந்திரம் தோல்வி என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான், எந்திரக்காரர்களும் இடத்தை காலி செய்துவிட்டுப் போகின்றனர். சாப்ளின் என்ன ஆகிறார் என்று நின்று பார்க்க அவர்களுக்கு நேரமோ அக்கறையோ முன்னுரிமையோ இருப்பதில்லை, அது மூலதனத்தின் அடுத்த முகம்.
தொழிலாளி தேவையற்று ஒற்றை நொடி நேரம் கழிப்பறையிலோ, முகம் கழுவிக் கொள்ளும் நீர்த் தொட்டி முன்போ நிற்பதையும் சுவரில் தோன்றும் முதலாளி பார்த்துக் கண்டித்து உள்ளே போ என்கிறார். தொண்ணூறுகளில், தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டையில், ஆயிரம் பெண்கள் வேலை பார்த்த ஒரு துணி நிறுவனத்தில் ஐம்பது பேருக்கு ஒரு டோக்கன் கொடுத்து, சுழற்சி முறையில் கழிப்பறை பயன்படுத்தச் சொல்வார்கள், யாரேனும் கொஞ்சம் கூடுதல் நேரமெடுத்துக் கழிப்பறை விட்டு வெளியே வரவில்லை எனில் கங்காணி பெரிய கட்டையால் கதவில் ஓங்கித் தட்டி, படு ஆபாசமான வசவுகளை இரைந்து சொல்லி வெளியே வரச் செய்த கொடுமை எல்லாம் நினைவுக்கு வந்தது.
சாப்ளின் தொழிற்சாலையில் எந்திரத்தை விட வேகமான எந்திரமாக அடுத்தடுத்து ஈடுபடும் அபத்தச் செயல்பாடுகள் பார்வையாளரை அதிர வைக்கும் சிரிப்பில் ஆழ்த்தினாலும், அதனூடே அவர் சொல்லிக் கொண்டே போகும் தத்துவங்கள் அடர்த்தி மிக்கவை. ஒரு பெரிய எந்திரத்தினுள் போய்ச் சிக்கிக் கொண்டிருக்கும் மேலதிகாரியை அவர் விடுவிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில், உணவு இடைவேளைக்கு மணியடித்ததும், எந்திரமாகத் தனது தட்டை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பிப்பதும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் மனிதரும் வெளியே எடு என்று குரலெழுப்பாமல் அப்படியே எனக்கும் சாப்பாடு கொடு என்று கேட்பதும் தொழிலகத்தின் நேரம் சார்ந்த கெடுபிடிகள் மீதான சாட்டையடி காட்சிகள்.
சாப்ளின் வெளியேற்றப்படுகிறார். வேறெங்கோ போராட்டம் நடக்கிறது. இவரோ, பார வண்டியிலிருந்து கீழே விழும் சிவப்புக் கொடியை ஏந்திப் போராட்டக்காரர்களைத் தள்ளிக்கொண்டு முன்னேறும்போது சிறையிலடைக்கப்படுகிறார். (அமெரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தின் மெக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர், பயங்கர கம்யூனிச விரோதி, உரிமை கேட்பவர்களை நசுக்கத் துடிக்கும் அதிகார ஒடுக்குமுறைக்கு மெக்கார்த்தியிசம் என்றே பின்னர் பெயர் வழங்கலாயிற்று. சாப்ளினே நாடு கடத்தப்பட்டவர் தான்).
சிறையில் மிகச் சிறப்பான கைதியாகத் தன்னை நடத்திக் கொள்கிறார் சாப்ளின். அவரை விடுவித்தால் அதிர்ச்சி அடைகிறார், வேளைக்கு ஒழுங்காகச் சோறு கிடைத்துக் கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து மீண்டும் வீதிக்குத் தள்ளப்படுவது அவருக்கு ஏற்பில்லை. போதிய ஊதியமற்ற தொழிலாளியின் குடும்ப மூத்த பெண் ஒருத்தி கிடைக்கிற இடங்களில் இருந்து பழங்களும் உணவுப்பொருள்களும் திருடி எடுத்துக் கொண்டு வந்து தம்பி தங்கைக்கும் அப்பாவுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்பாவும் சுடப்பட்டு இறக்கையில், அவள் ரொட்டி திருடுமிடத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறாள், தற்செயலாக அந்த வழியே வரும் சாப்ளின் குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு சிறைக்குப் போகத் துடிக்கிறார், ஆனால் இருவரும் சிக்கிக் கொண்டுவிட அவளைத் தப்புவித்து அவளுக்காக அவரும் தப்பித்து வருகிறார்.
ஏதுமற்றவர்களின் காதலை சாப்ளின் என்னமாக சித்தரிக்கிறார். அவரை உள்ளன்போடு நேசிக்கிறாள் அவளும். டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றின் காவலாளி அடிபட்டுக் கீழே கிடக்கிறான், இவரோ சமயோசிதமாக உள்ளே போய் அந்த வேலையை எனக்குப் போட்டுத் தந்துவிடுங்கள் என்று சேர்ந்து விடுகிறார். தனது இளம் காதலியை வசதியான இலவம் பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கும் பேராசை மட்டுமே அவருக்கு. இரவில் அங்கே களவாட வருகிறவர்களில் ஒருவன், இவரது பழைய தொழிற்சாலை சகா. ‘நாங்கள் திருட வரவில்லை, பசி தான் இங்கே கொண்டு வந்தது’ என்கிற அவர்களது மொழியில் சமூக அவலத்தை எத்தனை பளீர் என்று காட்டுகிறார் சாப்ளின்!
அங்கிருந்தும் விதி அவரை வெளியேற்றுகிறது. இப்போது அந்த இளம் காதலி ஓர் ஓட்டலில் நடன நங்கை ஆகிவிடுகிறாள். சாப்ளினை பாடகராக அங்கே நுழைக்கப் பார்க்கிறாள். பழைய குற்றத்திற்காக அவளைத் தேடி வந்து விடுகிறது காவல் துறை ! ஆனால், வாழ்க்கை இன்னும் பெரிய போராட்டங்களோடு காத்திருக்கவே, இவர்கள் அதற்கு ஈடு கொடுக்கத் தப்பி ஓடுமிடத்தில் நிறைவு பெறுகிறது சாப்ளினின் மௌன வரிசையில் கடைசியானது என்று சொல்லப்படும் படம். சிறப்பான படத்தொகுப்பும், மிகப் பொருத்தமான இசையும், திரைக் கலைஞர்களது மிக இயல்பான நடிப்பும் குறிப்பிட்டாக வேண்டியது – அதுவும் அந்த இளம் காதலி, ஆஹா…
அழுக்கான உடைகளோடு அழுக்கான வீடுகளில் அல்லது அழுக்கான பிளாட்பாரங்களில் மிக அழுக்கான வாழ்க்கை வாழ்கின்றனர் தொழிலாளிகள். ஆனால், அவர்கள் இதயம் தூய்மையானது. உள்ளபடியே பன்மடங்கு அழுக்கான இதயம் கொண்டிருக்கின்றனர் முதலாளிகள். மூலதனத்திற்கு அந்த இதயம் கூடக் கிடையாது என்பது தான் சுவாரசியமான கொடூர உண்மை. இன்றும் புதிதாகப் பார்க்கத் தக்க திரைப்படமாக, மாடர்ன் டைம்ஸ் மின்னிக் கொண்டிருப்பது மலைக்க வைக்கிறது.
பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை திரைக்கலை பெறாத காலத்திலேயே அதி நவீன எந்திரங்களை அவர் எப்படி திரையில் கொணர்ந்தார் என்பது வியப்புக்குரியது. ஸ்க்ரூ போல் எது காட்சியளித்தாலும் அதை முடுக்கியே தீருவேன் என்று ஒரு பெண்மணியைத் துரத்திக் கொண்டு சாப்ளின் ஓடும் ஒரு காட்சி சிரிப்புக்கானது மட்டுமல்ல, மனப் பிறழ்வு வந்தவர்களைப் போல் ஒரு சமூகப் பெருங்கூட்டத்தை மூலதனம் தனக்கு அடிமைப்படுத்திச் சிதைக்கும் வக்கிரத்தைத் தான் சாப்ளின் காட்சிப் படுத்துகிறார்.
தொழிலாளர் சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டியே மூலதனம் பசியை விதைக்கிறது, களவு செய்யத் தூண்டுகிறது, குற்ற உணர்ச்சி, போட்டி, பொறாமை போன்றவற்றில் உழலும் மனிதர்கள் ஒருபோதும் தங்கள் விடுதலையை சிந்திக்க மாட்டார்கள் என்கிற முதலாளித்துவ தத்துவ நம்பிக்கை. இத்தனையையும் மீறி, எளிய மக்கள் உன்னதமான மனித நேயத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதையும், சக மனிதனுக்கான அவர்களது கண்ணீரில் தெறிக்கும் வெளிச்சத்தில் விடுதலை நோக்கியும் நகர்வார்கள் என்பதையும் படம் கவித்துவமாகப் பேசுகிறது. அதனாலேயே காலம் கடந்து நிற்கிறது.
இதோ அந்த சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் காணொளிகள்: