தற்செயலாக யோகா கற்றுக் கொள்ள வகுப்புக்குக் போனபோது, அதில் ஒரு பட்டப்படிப்பு படிக்க சாத்தியக்கூறு இருக்கிறது என்று தெரிந்ததும் ரொம்ப ஆர்வமாக ரெண்டு வருட படிப்புக்குப் பதிவு செய்து முதுகலை பட்டமாக யோகா படிக்க ஆரம்பித்தான் முருகன்.
யோகா என்பது உடலுக்கு மட்டுமல்ல, அது மனத்தையும் வளப்படுத்தும் மனவளக்கலை என்பது படிக்கக் படிக்க புரியவந்ததிலிருந்தே எப்போதும் ஏதோ ஆத்ம விசாரந்தான் அவனுக்குள். எதுக்கு மனிதப் பிறவி? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நம் பிறப்பின் ரகசியம் என்ன? இந்த உலகில் உயிர்களுக்குள் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? அடுக்கடுக்காகக் கேள்விகள். முக்கியமாக நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்புக்கென்ன அர்த்தம்?
தியானத்தில் அமர்ந்து சுற்றிலும் இருக்கும் எல்லோரையும், எல்லாவற்றையும் நம்மை அவற்றோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாமல் ஒரு மூன்றாம் மனிதப் பார்வையாகப் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன. இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்குமே ஏதோ தொடர்பு இருக்கிறது. காரண காரியம் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது மிக்க அவசியம் என்று தோன்ற தன் எட்டு வயது மகளை ‘களரி’ வகுப்பில் சேர்த்தான் முருகன். அந்த வகுப்பு தினமும் கடற்கரையில் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு முடியும். மகளை வகுப்பில் விட்டு விட்டு வகுப்பு முடிவதற்காக காத்திருக்கும் நேரத்தில் தினமும் கடற்கரையிலேயே யோகா பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தான். அதிகாலை குளுமையான காற்றும் இதமான கடற்கரை சூழ்நிலையும் மனதிற்கு உற்சாகமாக இருந்தன. அந்த அமைதியான இதமான சூழலில் அவனுக்குள் வழக்கமான ஆத்மவிசாரமும் தேடலும் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும்.
களரி வகுப்பு ஆரம்பிக்கும் முன் குழந்தைகளை ஒரு 500 மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் ஓட வைப்பார்கள். கடற்கரை மணலில் குழந்தைகள் உற்சாகமாக ஓடுவார்கள். ஏதாவது குழந்தை வகுப்பிற்கு தாமதமாக வர நேரிட்டால் அந்தக் குழந்தை தனியாக பந்தயம் ஓட வேண்டியிருக்கும். கடற்கரையில் ஆங்காங்கே நாய்கள் ஒரு குழுவாக ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும். அன்று வகுப்பிற்குத் தாமதமாக வந்த ஒரு ஐந்து வயது பெண் குழந்தை தனியாக 500 மீட்டர் தூரம் ஓட ஆரம்பிக்க, அவள் தன்னுடன் விளையாடத்தான் தன்னை நோக்கி ஓடி வருகிறாள் என்று நினைத்து ஒரு கறுப்பு நிற குட்டி நாய் நாலு கால் பாய்ச்சலில் அவளை துரத்த ஆரம்பித்தது. இதைக் கண்ட குழந்தை பயத்தில் அலறி பாய்ந்து ஓட ஆரம்பித்தாள். களரி வகுப்பில் இருந்த ஒரு பெரிய சிறுவன் சட்டென்று பாய்ந்து ஓடி அந்த நாயை விரட்டி அந்தப் பெண்ணை பத்திரமாக திரும்ப வகுப்பிற்குக் கூட்டி வந்தான்.
முருகன் அந்த நாயை உற்று கவனித்தான். இப்பொழுது தன் கும்பலோடு சேர்ந்து கொண்ட கறுப்பு நாய்க்குட்டியும் பதிலுக்கு அவனையே உற்றுப் பார்த்தது. அதன் கண்களில் தென்பட்ட ஒரு தீனமான பாவம் அவனை என்னவோ செய்தது. கழுத்தில் ஒரு பட்டை, யார் வீட்டிலோ வளர்க்கப்பட்ட நாயோ? அதன் சேட்டையை பொறுக்க மாட்டாமல் வெளியே விட்டு விட்டார்களோ? என்னை யாராவது கவனிக்க மாட்டீர்களா? என்பது போல ஒரு பார்வை. ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்திருந்த அவனுக்கு, அதற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.
வீட்டிற்கு வந்தாயிற்று. பெண் குளித்து விட்டு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தயாராக, முருகன் கீழே தோட்டத்திற்கு வந்தான். அவன் வீடு தோட்டத்தோடு கூடிய பெரிய தனி வீடு. தினமும் காலையில் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது அவனுக்கு வழக்கம். தோட்டத்தில் அன்றாடம் விழும் இலைக் குப்பைகளை வாரி உரக்குழியில் போட்டு விடுவான். தென்னை, மா, பலா மரங்களை சுற்றி கொத்தி விட்டு நீர் பாய்ச்சி விட்டு தோட்ட மூலையில் இருக்கும் கிணற்றருகே வந்தபோது என்னவோ முனகல் சப்தம் கேட்பது போல் இருந்தது. அவர்கள் வீட்டில் கிணற்றின் மேல் ஒரு வலையைப் போட்டு மூடி வைத்திருப்பார்கள். அந்த வலையின் மேல் மூன்று பூனைக்குட்டிகள் தினமும் விளையாடிக் கொண்டிருப்பதை ஒரு வாரமாகப் பார்க்கிறான். இப்பொழுது பூனைக்குட்டிகளையும் காணும். பின்னே எங்கிருந்து முனகல்?
பதட்டத்தோடு ஓடிப் போய் வலையை விலக்கி கிணற்றுக்குள் பார்த்தபோது ஒரு கறுப்பு நிற நாய்க்குட்டி…..அடடா! நாம அதிகாலையில் கடற்கரையில பார்த்த நாய் போல இருக்கே? ஆமா! கழுத்தில அந்தப் பட்டை கூட இருக்கே…… தவறி விழுந்திருக்குமோ? ஒரு வேளை பூனைக்குட்டிகளை துரத்தி விளையாடும்போது விழுந்திருக்கலாம். நாய்க்குட்டி மேலே ஏறும் முயற்சியில் தன் கால் நகங்களால் கிணற்றின் பக்கவாட்டுக் கற்களை பிடித்துக் கொண்டு எம்பப் பார்த்தது. ஊஹூம்! முடியவில்லை. திரும்ப சறுக்கல். திரும்ப நகங்களால் பற்றிக் கொண்டு ஏற முயற்சி. அவனைப் பார்த்ததும் தன் முயற்சியை சற்றே நிறுத்தி விட்டு தீனமாக ஒருமுறை அவன் கண்களையே பார்த்தது. ‘என்னைக் காப்பாற்ற மாட்டியா?’ என்பது போல.
ஆனால் முருகன் கையை உள்ளே விட்டு அதைத் தூக்க முயற்சித்தபோது பயத்தினாலோ என்னவோ தன்னைக் குறுக்கிக் கொண்டு திரும்ப சறுக்கி விழுந்தது. இப்படியே சற்று நேரம் செல்ல, காம்பவுண்ட் சுவர் வழியே இவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் பக்கத்து வீட்டுக்காரர் என்ன விஷயம் என்று விசாரித்து அறிந்தார். “பேசாம தீயணைப்புக்காரங்களுக்கு சொல்லிடுங்க தம்பி. அவங்க கயத்தைப் போட்டு சட்னு தூக்கிடுவாங்க!” என்றார்.
தீயணைப்பு குழு வந்தது. பலவிதமான முடிச்சுகள் போட்டக் கயிற்றை உள்ளே வீசியதும் நாயின் இரு கால்கள் அதில் மாட்டிக் கொண்டது. சற்றும் தாமதிக்காமல் அலேக்காக வெளியே தூக்கிப் போட பாய்ந்து வெளியே ஓடிய நாய் வாசலருகே வந்ததும் சற்றே நின்று, ‘நன்றிப்பா என்னைக் காப்பாத்தினதுக்கு! நல்லா இரு!’ என்று சொல்வது போல அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டுப் பிடித்தது ஓட்டம்.
முருகன் அப்படியே வீட்டு ஹாலில் உட்கார்ந்து காலையில் எழுந்ததிலிருந்து நடந்ததை மனதிற்குள் அசை போட்டான்.
அவன் பெண்ணிற்கு களரி வகுப்பு இல்லாவிட்டால் அவன் காலை நேரத்தில் கடற்கரைக்கு செல்ல வாய்ப்பில்லை. அந்த நாயையும் பார்த்திருக்க முடியாது. ‘அந்த நாயை என்னைப் பார்க்க வைத்தது சற்று நேரத்திற்குப் பிறகு அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டட நிகழ்வா?’
ஒரு நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவ்வுலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் ஏதோ திட்டமிடலுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பிறவியில் ஏதோ வேலை இருக்கிறது. அதை நடத்த இறைசக்தி துணை நிற்கிறது என்பதெல்லாம் முருகனுக்குப் புரிய ஆரம்பித்தது.
இந்த மாதிரி நமக்குள்ளேயே தேடித் தேடி அறிந்து கொள்ள முற்படுவதைத் தான் ‘அறிய அறிய கெடுவாருண்டோ’ என்று சொல்லியிருப்பார்களோ? என்று நினைத்தான். இது போல ஆராய்ந்து அறிய தன்னை அறிய முனையும் முயற்சியில் அவனுடன் துணை நிற்கும் இறைசக்தியை மானசீகமாக வணங்கினான்.