மொழிபெயர்ப்பு :ஜப்பானிய மொழி சிறுகதை:
மூலம் : யசுநாரி கவபட்டா [ Yasunari Kawabata 1899—1972]
ஆங்கிலம் : எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர்[ Edward G.Seidensticker]
தமிழில் : தி.இரா.மீனா
அதிகாலையிலிருந்தே பனங்காடை சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தது. மழைத்தடுப்புக்கான ஷட்டரைத் திறந்தபோது அவர்களின் கண்முன்னால் பைன் மரத்தின் தாழ்ந்த கிளையிலிருந்து பறந்தது.அது திரும்பி வந்திருக்க வேண்டும். காலை உணவுவேளையின் போதே சிறகுகளை அடித்துக் கொண்ட சப்தம் கேட்டது.
“அது ஓர் உபத்திரமான பறவை” என்று சொல்லிக் கொண்டே தம்பி எழுந்தான்.
“சரி..சரி” என்று பாட்டி அவன் பேச்சைத் தடுத்தாள்.“அது தன் குஞ்சைத் தேடுகிறது.நேற்று குஞ்சு கூட்டிலிருந்து விழுந்து விட்டது.இருட்டும் வரை சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது.அது எங்கே விழுந்திருக்கும் என்று தாய்க்குத் தெரியாதா? பார்! விடிந்தவுடன் தேடிக் கொண்டு வந்து விட்டதே”
“பாட்டிக்குப் புரிந்திருக்கிறது” யோஷிகோ சொன்னாள்.
அவள் பாட்டியின் கண்கள் கெட்டிருந்திருந்தன. பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சிறுநீரக அழற்சியைத் தவிர வாழ்க்கையில் அவளுக்கு எந்த நோயும் வந்ததில்லை. ஆனால் ,சிறுவயதிலிருந்தே ஏற்பட்ட கண்புரை காரணமாக இடதுகண் பார்வை மங்கலாகத்தான் இருந்தது. சாப்பாட்டுத் தட்டையும், கரண்டியையும் கையில்தான் தரவேண்டும். வீட்டின் பழக்கமான எல்லா இடங்களிலும் அவள் தட்டுத் தடுமாறிச் சுற்றி வந்தாலும் தோட்டத்திற்குத் தனியாக அவளால் போகமுடியாது.
சில சமயங்களில் நகர்த்தும் கண்ணாடிக் கதவின் முன் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ அவள் தன் விரல்களை விரித்துக் காட்டி , கண்ணாடியின் மூலமாக வரும் சூரிய ஒளியை உற்றுப் பார்ப்பாள்.இப்படி கவனமாக பல கோணங்களில் உற்றுப் பார்த்து பொழுதைக் கழித்தவள்.
அந்த மாதிரி சமயங்களில் யோஷிகோவுக்கு பாட்டியைப் பார்க்க பயமாக இருக்கும். பின்னாலிருந்து பாட்டியைக் கூப்பிட வேண்டும் என்று தோன்றி னாலும் செய்யாமல் ஓடிவிடுவாள்.
முழுவதும் கண்பார்வையற்ற நிலையிலும் பாட்டி பறவையின் குரலைக் கேட்கும்போது தான் எல்லாவற்றையும் பார்த்தது போலப் பேசினாள். யோஷிகோவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்துவிட்டு யோஷிகோ சமையல் அறைக்குள் போனபோது பக்கத்து வீட்டின் கூரையிலிருந்து பனங்காடை குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
பின்புறத் தோட்டத்தில் ஒரு கஷ்கொட்டை மரமும், இரண்டு மூன்று ஈச்ச மரங்களுமிருந்தன. அவள் அந்த மரங்களைப் பார்த்தபோது மெல்லியதாக மழை பெய்து கொண்டிருப்பது தெரிந்தது. அடர்த்தியான இலைகளினூடே கவனமாகப் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாத ஒருவகை மழை அது.
பனங்காடை கஷ்கொட்டை மரத்தில் உட்கார்ந்து பின்பு தாழ்வாகத் தரையைத் தொட்டுப் பறந்து மீண்டும் கிளைக்குத் திரும்பியது.பாடுவது தொடர்ந்தபடியிருந்தது.
தாய்ப்பறவையால் அங்கிருந்து பறந்து போகமுடியவில்லை. ஒரு வேளை அதன் குஞ்சு அங்கெங்கோ இருக்கிறதென்பதாலா?
கவலையோடு அதைப்பற்றி யோசித்தபடி யோஷிகோ தன் அறைக்குப் போனாள். மதியத்திற்கு முன்னால் அவள் தயாராகவேண்டும்.
அவளது வருங்காலக் கணவரின் தாயோடு அவள் பெற்றோர் மதியம் வருகின்றனர்.
கண்ணாடி முன்னால் உட்கார்ந்திருந்த அவள், தன் விரல் நகங்களிலிருந்த வெள்ளைப் புள்ளிகளைப் பார்த்தாள் .நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் நல்லது எதுவோ கிடைக்கப் போகிறது என்று சொல்வதுண்டு. ஆனால் வைட்டமின் ” சி’ யோ அல்லது வேறு எதுவோ உடலில் குறைந்து இருந்தால் அது வரலாம் என்பதை அவள் செய்தித்தாளில் படித்திருக்கிறாள். அலங்காரம் செய்து கொள்ளும் வேலை சிறப்பாக முடிந்தது. புருவங்கள், உதடுகள் எல்லாம் கவர்ச்சியாகத் தெரிந்தன.அவள் கிமானோவும்தான்.
உடை அலங்காரத்திற்கு அம்மா வரும்வரை காத்திருக்க நினைத்து, பின்பு தானே செய்துகொள்ள முடிவு செய்தாள்.
அப்பா அவர்களுடன் இல்லை. இது மாற்றாந்தாய். அப்பா தன் முதல்மனைவியை விவாகரத்து செய்தபோது யோஷிகோவுக்கு நான்கு வயது. தம்பிக்கு இரண்டு வயது. விவாகரத்துக்குக் காரணம் அம்மா ஆடம்பரமாக உடைகளுக்கும், மற்றவற்றிற்கும் மிக அதிகமாக செலவு செய்ததுதான் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் வேறு ஏதோ காரணம் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.
தம்பி சிறுவனாக இருந்த போது ,அம்மாவின் புகைப்படம் ஒன்றை அப்பாவிடம் காண்பித்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தில் கோபம் கொப்பளித்தது. திடீரென்று அதைப் பறித்து சுக்குநூறாகக் கிழித்து விட்டார்.
யோஷிகோவுக்கு பதிமூன்று வயதான போது சித்தி வந்தாள்.தனக்காகத் தான் பத்து வருடங்கள் அப்பா தனிமையின் வேதனையை அனுபவித்தார் என்று யோஷிகோ நினைத்தாள். சித்தி மிகவும்நல்லவள்.வீட்டு வாழ்க்கை அமைதியாகக் கழிந்தது.
தம்பி உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது விடுதியில் சேர்ந்தான். சித்தியைப் பற்றிய அவன் அபிப்ராயம் மாறிவிட்டது.
“அக்கா, நான் நம் அம்மாவைப் பார்த்தேன்.அவள் மறுமணம் செய்து கொண்டு அழபுவில் வசிக்கிறாள். நிஜமாகவே அம்மா அழகுதான்.என்னைப் பார்த்ததில் அவளுக்கு மிகவும் சந்தோஷம்”
திடீரென்று இதைக் கேட்டவுடன் யோஷிகோவுக்கு வார்த்தைகள் வரவில்லை. முகம் வெளிற அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த அறையிலிருந்த சித்தி அங்கு வந்து உட்கார்ந்தாள்.
“நல்லதுதான்,நல்லதுதான்.உன் அம்மாவைப் பார்ப்பது தப்பான விஷயமில்லை.அது இயற்கையானதுதான். இந்த மாதிரியான ஒருநாள் வரும் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு இது புதிய விஷயமில்லை.”
ஆனால் சித்தியின் உடலிலிருந்த பலம் போய்விட்டது போலத் தெரிந்தது. சித்தி மிகவும் மெலிந்து, பலவீனமாக பரிதாபமாக இருப்பதாக யோஷிகோ. நினைத்தாள்.
தம்பி எதுவும் சொல்லாமல் விருட்டென்று எழுந்துபோய்விட்டான். யோஷிகோவுக்கு அவனை அறைய வேண்டும் போலிருந்தது..
“யோஷிகோ, அவனிடம் எதுவும் பேசாதே. பேசினால் அது அவனைத்தான் மிகவும் பாதிக்கும்” சித்தி மிக மெல்லிய குரலில் சொன்னாள்.
யோஷிகோவுக்கு அழுகை வந்தது.
அப்பா அவனை விடுதியிலிருந்து வீட்டிற்கு வரவழைத்தார். அத்தோடு விஷயம் முடிந்ததென்று யோஷிகோ நினைத்தாள்.அப்பா சித்தியோடு வேறிடத்திற்குப் போய்விட்டார்.
அது அவளை அச்சுறுத்தியது. ஆணின் கோபம், சீற்றம் என்பவற்றால் தான் நசுக்கப்படுவது போல உணர்ந்தாள். அம்மாவோடு தொடர்பு இருப்பதால் அப்பா அவர்களையும் கூட வெறுக்கத் தொடங்கி விட்டாரோ? தம்பி அன்று அப்படி நடந்துகொண்டது அப்பாவிடமிருந்து அவனுக்கு வந்த பரம்பரை பிடிவாத குணத்தினால்தான் என்று அவளுக்குத் தோன்றியது.
எனினும் விவாகரத்துக்கும் ,மறுமணத்துக்குமான பத்தாண்டுக் காலத்தில் அப்பா அனுபவித்த வருத்தத்தையும், வலியையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவளிடமிருந்து விலகிப் போன அப்பா இப்போது திருமணப் பேச்செடுத்து ஒரு வரனோடு வருவது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நான் உனக்குப் பெரிய அளவில் மனவருத்தம் தந்துவிட்டேன்.அந்த மாப்பிள்ளையின் தாயிடம் நான் உன் நிலைமையைச் சொன்னேன். உன்னை மகளாக நினைப்பதை விட, மகிழ்ச்சியான உன் இளமைக்கால நினைவுகளை திரும்பிக் கொண்டு வர உதவவேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொண்டேன்”.
அப்பா அதைச் சொன்னபோது யோஷிகோ அழுதுவிட்டாள்.
யோஷிகோ திருமணம் செய்துகொண்டு போய்விட்டால் பாட்டியையும், தம்பியையும் பார்த்துக்கொள்ள எந்தப் பெண்ணும் வீட்டிலில்லை.அதனால் இரண்டு குடும்பங்களும் ஒன்றுசேர்வதென்று முடிவானது.அந்த ஏற்பாட்டிற்கு அவள் ஒப்புக் கொண்டாள். அப்பாவின் வாழ்க்கை திருமணத்தைப் பற்றிய அச்சம் தருவதாக இருந்தாலும் உண்மையில் திருமண பேச்சுகள் நடக்கத் தொடங்கிய பிறகு அவ்வளவு பயம் தெரியவில்லை..
தன்னை அலங்கரித்துக் கொண்டபிறகு அவள் பாட்டியின் அறைக்குப் போனாள்.
“பாட்டி, இந்த கிமோனோவில் உள்ள சிவப்புநிறத்தை உன்னால் பார்க்க முடிகிறதா?”
“அங்கே ஏதோ சிவப்புநிறம் போல லேசாகத்தெரிகிறது. எங்கே காட்டு” பாட்டி தன்னருகில் யோஷிகோவை இழுத்து கிமோனோவின் அருகே கண்ணை வைத்துப் பார்த்தாள்.
“ஏற்கெனவே எனக்கு உன் முகம் மறந்து போய்விட்டது யோஷிகோ. இப்போது நீ எப்படியிருக்கிறாய் என்று எனக்கு மட்டும் பார்க்க முடிந்தால்..”
யோஷிகோ கெக்கலித்தபடி தன் கையை பாட்டியின் தலைமீது மிக மெதுவாக வைத்தாள்.
அப்பாவையும்,மற்றவர்களையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. உட்கார முடியாமல் தவித்தாள். தோட்டத்திற்குப் போனாள்.கையை மேலே நீட்டினாள். ஆனால் மழை மிக மெலிதாக இருந்ததால் அவள் உள்ளங்கை கூட ஈரமாகவில்லை. கிமோனோவை மேலே சொருகியபடி, சிறு மரங்களினூடே அடர்ந்திருந்த புல்பகுதியில் சிரத்தையாகத் தேடினாள்.புல் உயரமாக இருந்த அடர்ந்த புதரின் அருகில் அந்தக் குஞ்சுப்பறவை இருந்தது.
அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.அவள் நகர்ந்து போனாள். தன் கழுத்து சிறகுகளினூடே தலையை வைத்திருந்த குஞ்சுப்பறவையால் சிறகுகளை அசையவில்லை.அதைச் சுலபமாக அவளால் கையில் எடுக்க முடிந்தது. அது பலமிழந்திருந்தது தெரிந்தது. யோஷிகோ சுற்று முற்றும் பார்த்தாள். ஆனால் தாய்ப்பறவை கண்ணில் தட்டுப்படவில்லை.
“பாட்டி !நான் அந்தக் குஞ்சுப் பறவையைக் கண்டுபிடித்து விட்டேன்.இதோ என் கையிலிருக்கிறது. பலவீனமாக இருக்கிறது” கத்திக் கொண்டே யோஷிகோ வீட்டிற்குள் ஓடினாள்.
“ஓ! அப்படியா? சிறிது தண்ணீர் கொடு.”
பாட்டி நிதானமாக இருந்தாள்.
அவள் தண்ணீரை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து அதில் குஞ்சின் அலகை லேசாக அமிழ்த்தினாள் .அது குடித்தது. அதன் சிறிய தொண்டை புடைப்பது தெரிந்தது. அது சரியாகிவிட்டதா?— கி..கி…கி… கி..— இசைக்கத் தொடங்கிவிட்டது.
தெளிவாக அந்தக் குரலைக் கேட்டுவிட்ட தாய்ப்பறவை பறந்து வந்தது. டெலிபோன் கம்பியில் உட்கார்ந்து அது பாடியது. யோஷிகோவின் கையில் போராடிக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை மீண்டும் கி…கி…கி.. என்று குரல் கொடுத்தது.
“ஓ..அது வந்துவிட்டது பார் ! குஞ்சைத் தாயிடம் கொடுத்துவிடு சீக்கிரம்” பாட்டி சொன்னாள்.
யோஷிகோ தோட்டத்திற்குப் போனாள். தாய்ப்பறவை டெலிபோன் கம்பியிலிருந்து பறந்து செர்ரி மரத்தின் உச்சிக்குப் போனது.அங்கிருந்து யோஷிகோவை நிலைகுத்திப் பார்த்தது.
தாய்ப்பறவைக்கு தன் கையிலுள்ள குஞ்சைக் காட்டுவதைப்போல யோஷிகோ தன் கையை உயர்த்தி குஞ்சைத் தரையில் வைத்தாள்.
கண்ணாடிக்கதவின் பின்னாலிருந்து கொண்டு யோஷிகோ தாய்ப் பறவையை கூர்ந்து கவனித்தாள். குஞ்சுப்பறவை வழிகாட்டி போல இனிமையாகப் பாட, தாய்ப்பறவை மெதுவாக நெருங்கி வந்தது. அருகிலுள்ள பைன் மரத்தின் தாழ்ந்த கிளைக்கு அது வந்தபோது குஞ்சு தாயினருகே செல்வதற்காக தன் சிறகை அடித்துக் கொண்டது.அது தன் முயற்சியில் தடுமாறிக் கீழே விழுந்த நிலையிலும் இசைத்துக் கொண்டிருந்தது.
தாய்ப்பறவை இன்னமும் தரையில் விழுந்து விடக்கூடாத கவனத்தோடு இருந்தது.
பிறகு வேகமாக நேரடியாகப் பறந்து தன் குஞ்சின் அருகே போனது. குஞ்சுப் பறவையின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தலையைத் திருப்பித் திருப்பி சிறகுகள் நடுங்க தன் தாயின் அருகே போய்விட்டது. குஞ்சு சாப்பிடுவதற்கு தாய்ப்பறவை எதையோ கொண்டு வந்திருந்தது.
தன் அப்பாவும் ,சித்தியும் சீக்கிரம் வரவேண்டும் என்று யோஷிகோ விரும்பினாள். அவர்களுக்கு இதைக் காட்டவேண்டுமென்று அவள் நினைத்தாள்.
———————————————————————————————————–
யசுநாரி கவபட்டா ஜப்பான் மொழியில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்றவர்.ஜப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்திலும்,பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க பெருமளவில் உதவியவர். Thousand Cranes, Beauty and Sadness, Lake, Snow Country ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.