“மருமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா’, “மருமகளே மருமகளே, எங்க வீட்டு மருமகளே, இங்கு வாழ வந்த மருமகளே”
இப்படி கல்யாணம் ஆகி மாமியார் (கணவர்) வீட்டிற்கு வரும் பெண் எப்படி எந்த எந்த சூழ்நிலைகளை எதிர் கொள்கிறாள் என்று
யோசிக்க வைத்தாள் ஒரு மனைவி. ஜோத்புரில் நான் சுவாமி என்கிற ஓர் ஆபிசரின் மனைவி விஜயாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தாள். ‘ஏன் உங்களுக்கு சமைக்கத் தெரியாதா’ என்று கேட்ட போது சிரித்துக் கொண்டே ‘இல்லை நான் எக்ஸாமுக்குப் படிக்கிறேன், அதனால்’ என்றாள். ‘ஓகே, அதற்கு ஏன் சிரித்தீர்கள்’ என்றதற்கு அவள் சொன்ன பதில்தான் இந்த சித்திரம். ‘ஓ இப்போது நான் நன்றாக சமைப்பேன். ஆனால் நான் முதன் முதலில் என்னவர்க்கு மண் சோறு போட்டேன். அதை நினைத்தால் இன்றும் நாங்கள் சிரிப்போம்’ என்றாள். விடுவேனா இந்தக் கூத்தை. அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டேன். யாரிடமும் சொல்லக் கூடாது என்று என்னிடம் கூற ஆரம்பித்தாள். நீங்களும் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பி கூறுகிறேன்!
விஜயா சொன்னதாவது – ‘நான் கல்யாணம் ஆகி வந்த போது சுவாமி கல்யாணம் ஆகாதவர்கள் தங்கும் குடியிருப்பில் தங்கி இருந்தார். குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் வீடு இவருக்கு அப்போது உடனே கிடைக்காததால் நானும் முதலில் அங்கேயே குடித்தனம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு அடுப்புக் கூட பற்ற வைக்கத் தெரியாது. எனவே ஓர் எலெக்ட்ரானிக் அடுப்பு வாங்கி வந்தார். அதில் குக்கரை தண்ணீர் இல்லாமல் வைத்ததினால் வெடித்து மூடி கூரை வரை தூக்கி எறியப் பட்டது. ‘நாங்கள்தான் குண்டு வெடிப்போம் என்றால், நீ குண்டு வைத்து கூரையெல்லாம் தகர்க்கிறாயே’ என்று பின்னாலிருந்து கூப்பாடு போட்டார் சுவாமி.
இரண்டாம் நாள் இது சரி படாது என்று என் மாமியாரை நலம் விசாரித்து விட்டு மெதுவே ‘தங்கள் வீட்டில் எவ்வளவு அரிசிக்கு எத்தனை தண்ணீர்’ என்று கேட்டேன், அரிசி, தண்ணீர் அளவு எல்லோர் வீட்டிலும் பொது என்பது கூடத் தெரியாமல். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்று சொன்னதை மறந்து இரண்டு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் விட்டு வைத்தேன். அவ்வளவுதான் குக்கர் அடி பிடித்து வீடு பூரா கருகல் நாற்றம். அந்த சாப்பாட்டை பின்புறம் தூக்கி போட வேண்டி வந்தது. பிறகு கோவம் வந்து ஒரு பங்கு அரிசிக்கு நாலு பங்கு தண்ணீர் வைத்தேன். ஓ குக்கரைத் திறந்தால் ஆற்றில் ஓடும் நதி தான். அதையும் பின்னால் கொண்டு கொட்டினேன். கான மயில்கள் ஆனந்தமாக நடமாடிக்கொண்டே அதனை ருசித்து சாப்பிட ஆரம்பித்தன. மெஸ்ஸில் இத்தனை நாட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னவர் மிகவும் ஆசையுடன் வீட்டு சாப்பாடு சாப்பிட வந்தார். அவரைப் பார்த்த மற்ற ஆபிசர்கள் முதல் மாடியிலிருந்து ‘சுவாமி எங்கே போகிறீர்கள்?’ என்று சத்தம் போட்டு கேட்க ‘சாப்பிட’ என்றதற்கு ‘அதற்கு வீட்டிற்குள் போக வேண்டாம், உங்களுக்கு சாப்பாடு பின்பக்கம், கூட சாப்பிடுகிறவர்கள் மயில்கள்’ என்று ஒரே கிண்டல்தான்.
அதன் பிறகு எனக்கு ரோஷம் வந்து ஒரு பார்ட்டிக்காக ஆலு (அதாங்க நம்ம உருளைக் கிழங்கு) பராத்தா (ரொட்டி) செய்ய ஆரம்பித்தேன். உருளை மசாலா தண்ணீர் விட்டு பிசைந்ததால் ரொட்டி உள்ளே வைத்தால் ரொட்டி செய்யவே வரவில்லை. அதை யாருக்கும் தெரியாமல் ஃப்ரிஜில் வைத்து விட்டு. சாபுதானா (ஜவ்வரசி) வடை செய்ய ஆரம்பித்தேன். சரியான பொருள் சேர்க்காததால் வடையை எண்ணையில் போட்டால் அதைத் தேட சீபீஐயை வரவழிக்க வேண்டியதாய்ப் போயிற்று. துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எல்லாம் ஏன் தான் ஒரே கலர், ஒரே அளவில் இருக்கின்றனவோ! நான் ஒரு மெசேஜ் பார்த்தேன். ஒரு மாமியார் பொலம்பிக் கொண்டே சுடு தண்ணீர் கேட்டால், மருமகள் ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள், கணவர் சுடு தண்ணீர் கொடுக்காமல் என்ன செய்கிறாய் என்று அதட்டியதற்கு ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன் என்றாளாம். அப்படித்தான் என நிலைமையும் இருந்தது’ என்று கூறினாள்.
இதைக் கேட்ட எனக்கு என் தோழிகள் இரண்டு பேர்களைப் பற்றி ஞாபகம் வந்தது. அகிலா தஞ்சாவூர்க்காரி, பாலக்காட்டு மாப்பிள்ளை, அவள் நாத்தனார் சுந்தரியின் கணவர் தஞ்சாவூர்க்காரர். சுந்தரி அவள் வீட்டில் வெள்ளம் (தண்ணீர்) கேட்டால் ‘இங்கே என்ன ஆறா ஓடுகிறது’ என்று கமெண்ட். அரிசியைக் களையச் சொன்னதிற்கு அதை தூக்கிப் போட்டு விட்டாள் (களைதல்=அலம்புதல், தூக்கி எறிதல்). அங்கே அகிலாவை ‘கற்பூரத்தை ஒழிஞ்சிக்கோ (ஒத்திக்கோ)’ என்று சொன்னதிற்கு அவள் அழுத அழுகையை அடக்க அவள் கணவனாலே முடியவில்லை. சாப்பிடும்போது இஞ்சிப்புளியை புளிக்காய்ச்சல் என்று சொன்னதால் ஏமாற்றம் அடைந்த அகிலா, எதிரிலே இருந்த சர்க்கரையை பன்சாரை என்று கூறியதால் புரியாமல் தவித்த அகிலா, சவுட்டியை எடுத்து வா என்று சொன்னதிற்கு திருதிரு என்று முழித்த அகிலா என்று அவளது பன்முகங்கள் பார்க்க, கேட்க கண்கொள்ளா காட்சிதான். இப்படி எல்லா பெண்களுக்கும் சில பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். இதைத் தொடர்ந்து அவர்களும் அவைகளைப் பதிவு செய்தால் படித்து மகிழ்ச்சி அடைவோம்!
இப்படி பழக்க வழக்கங்கள் எத்தனை மாறினாலும் பெண் தன்னை புகுந்த வீட்டிற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்வதென்னமோ உண்மைதான்! இப்படி முழித்த அகிலாதான் பிரசவத்திற்குக்கூட தன் தாய் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றாள். பெண் தன் 7 பருவங்களான பேதை (1-8), பெதும்பை (9-11), மங்கை (12-14), மடந்தை (15-18), அரிவை (19-24), தெரிவை (25-29), பேரிளம்பெண் (30—) என்ற எல்லா நேரத்திலேயும் அன்பு வடிவமாக இருக்கிறாள். அவள் புதுப்பெண்ணோ புதுமைப்பெண்ணோ எந்த ஒரு நிலையிலும் பாசப் பெண், நேசப் பெண். ஆண்டவன் எல்லா நேரத்திலேயும் தான் வர முடியாதென்றுதான் தாயைப் படைத்துள்ளான் என்பர். பாரதியார் இந்தப் பெண்மையை எப்படி போற்றியுள்ளார்:
“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா! —-
உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்;—-
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!”