பூப்போல மலரும் நோய்! – மீனாக்ஷி பாலகணேஷ்

 

தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்? ] /பகுதி 18‏ ~ Theebam.comஅவள் மாமரக்கிளையில் கட்டிய ஊஞ்சலில் கால்களை உதைத்தெழுந்து ஆடுகிறாள். அடடே! பின்னிருந்து யார் அதனை ஊக்கி விடுவது? மெல்லத்திரும்பிப் பார்த்தால் அவன், அவளுடைய காதல் கணவன்! எப்போது அவன் ஊர் திரும்பினான்? வேலை காரணமாக வெளியூர் அல்லவோ சென்றிருந்தான்? வந்துவிட்டானா? மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளுகிறது. ஊஞ்சலில் பிடி நெகிழ்கிறது; கீழே விழுந்து விடப்போனவளைத் தாங்கிப் பிடித்து அணைத்துக் கொள்கிறான் அவன். முகம் சிவக்க, அந்தப் பிடியினின்றும் தன்னை மீட்டுக்கொள்ள முயன்றாள்- முயல்வது போல நடித்தாள் – அவள்!

சே! என்ன இது? அழகான இனிமையான கனவு கலைந்து விட்டது. எங்கோ சேவல் கூவுவது கேட்கிறது. புள்ளினங்கள் சலசலக்கத் தொடங்கி விட்டன. கனவின் இனிமையை எண்ணியவாறே படுக்கையில் கிடக்கிறாள் அவள். அக்கம்பக்கத்து வீடுகளில் வாசல்பெருக்கும் சப்தமும் மாடுகளைக் கறக்க முற்படும் ஒலிகளும் கேட்கின்றன. மெல்ல, தானும் எழுந்து, தோட்டத்துப்பக்கம் செல்கிறாள். எப்போது அவர் வீடு திரும்புவார் எனும் கேள்வி உள்ளத்தின் ஒரு கோடியில் எழும்புகிறது. சுரத்தே இல்லாமல் தன் காரியங்களைக் கவனிக்க முனைகிறாள்.

பித்திகக்கொடி அரும்புகளால் நிறைந்து நிற்கிறது. ஏதோ எண்ணியவாறே அவற்றையும் பறித்துவந்து ஒரு தாலத்தில் இட்டு வைக்கிறாள்.

பிரிவில் வருந்தினாலும் உயிரைத்தக்க வைத்துக்கொள்ள உணவு வேண்டுமல்லவா? மெல்ல மெல்ல ஏதோ ஒரு கீரையையும் சிறிது வரகரிசியையும் இட்டு ஒரு எளிமையான சமையலைச் செய்கிறாள். நேரம் ஊர்ந்து செல்கிறது; அடுத்தவீட்டு முதியவள் வருகிறாள். ‘இவள் இளையவள், சிறுபெண்; இப்போதுதான் திருமணமானவள்; கணவன் வெளியூர் சென்றமையால் தனியே இருக்கிறாள்’ என்று பசுவின் பாலால் செய்ததொரு பாயசத்தை அவளுக்காக ஆசையோடு ஒரு செம்பு நிறையக் கொண்டு வந்து தருகிறாள்.

“அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? ‘தனது அலுவல்களில் அலைந்து கொண்டிருப்பவர் சரியாக உண்டாரோ இல்லையோ?’ என இவள் எண்ணம் எங்கோ சிறகடிக்கிறது. உணவு செல்லவில்லை. கூம்பிய தாமரை போன்ற முகத்துடன் பாயசச் செம்பைப் பார்த்துப் பரிதவிக்கிறாள் இவ்விளம்பெண்.

முதியவள் இவளைக் கனிவோடு பார்க்கிறாள். ஏதேதோ பேசி அவள் எண்ணங்களைத் திசை திருப்ப முயல்கிறாள்; ‘உம்,’ என்ற முனகல்களுடன் ஒரு சொல் விடைகள் மட்டுமே இளையவள் வாயினின்று வருகின்றன. பகல் பொழுதும் மெல்ல மெல்ல விரைந்து செல்கின்றது. கதிரவன் மேற்கே விடைபெறத் தயாராகி விட்டான்.

தாலத்திலிட்ட பித்திக அரும்புகள் விரியத் தயாரான நிலையில் உள்ளன. இவற்றை இப்போது ‘போது’ என்பார்கள். ‘மலர்ந்து மலராத பாதிமலர்’ என்பாரே நமது கண்ணதாசன், அவ்வாறு உறங்கும் சின்னக்குழந்தையின் கண்மலர்கள் போல இருக்கின்றன.

முதியவள் வாழைநாரைப் பதமாக உரித்தெடுத்து நீரில் தோய்த்துக்கொண்டு பித்திக மலர்களைச் சரமாகத் தொடுக்க அமருகிறாள். சிறிது உரையாடிய படியே, தொடுத்த சரத்தை இவள் கரங்களில் தருகிறாள். மாலைப் பொழுதாகி விட்டதல்லவா? பித்திகமலர்கள் இவள் கைகளில் ‘கொல்’லென மலர்ந்து சிரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும் இவள் கண்களில் பிரிவின் ஆற்றாமை பொறுக்காமல் நீர் குளமாகத் தேங்குகிறது. முதியவளின் தோளில் சாய்ந்து விம்முகிறாள். முதியவளும் இவள் நிலையில் ஒருநாள் இருந்தவள் தானே!  இளையவளின் கூந்தலைத் தடவி அவளைத் தேற்ற முயல்கிறாள்.

‘கனவேயானாலும் தலைவர் என்னைப் பிரிந்ததும் காலையில் அந்தப் பிரிவு என்னும் நோய் இந்த மலர் அரும்பைப்போல் என் சிந்தையில் தோன்றுகிறது. பகல் பொழுது வளர வளர என்னுடைய பிரிவுநோயும் வளர்ந்துகொண்டே போகிறது. முதிர்கிறது. இனிமையான மாலைப் பொழுதில் மலர்ந்து விரிந்துவிடும் மென்மையான மலர்களை போல முழுமையாக விரிந்த இந்த நோயும் எனக்குத் துயரம்தரவே மலர்கிறது. இந்தப் பிரிவின் நோய் மாலைப்பொழுதில் எனக்குப் பெருத்த துன்பத்தை அல்லவா தருகிறது? வேதனையை அன்றோ அதிகப்படுத்துகிறது? பகல் முழுக்க நெடுநேரம் வளர்ந்து முதிர்ந்த இந்த இந்நோய் மாலை போன்ற குறுகிய காலத்தில் மொத்தமாய் அதன் கோர வடிவினை எனக்குக் காண்பிக்கிறதோ?’ என ஏங்குகிறாள் தலைவி.

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.’ (திருக்குறள் 1227)

[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

இதில் பொருளைச் சொல் சொல்லாக எடுத்துப் பிரித்துக் காண வேண்டும். தலைவி துயில் நீங்கி எழுந்தபோது காலை நேரம். கனவின் இனிமையும் அதன் எண்ணங்களும் இன்னும் அவளுக்குள் நிறைந்து நிற்கின்றன. ஆகவே அந்தக் காதல்நோய் அரும்பாகத் தான் இருக்கிறது, அவள் அப்போதைக்கு அதை லட்சியம் செய்யவுமில்லை.

பகற்பொழுதில் பலவேலைகள். ஊடே காதல்தலைவனின் நினைவுகள் வராமல் இல்லை. இருப்பினும் அவற்றை ஒருபக்கம் ஒதுக்கி வைக்க முடிகிறது. ஆனால் அந்த நோய் மெல்லப் பெருகி வளர்ந்து வருகிறதே!

மாலையில் பிரிவு அதிகம் வேதனை தருவது எதனால்? தம் துணையை எண்ணி வீடு வந்துசேரும் மனிதர்கள், ஆவினங்கள், கூடடையும் பறவைகள், இவர்களைக்கண்டு, தான் கணவனுடன் இன்பமாகக் கழித்த காலத்தின் நினைவுகளின் தாக்கத்தில் இந்நோய் மாலையில் மலர்கிறது (முழுமையாகத்தன் சுயரூபத்தைக் காட்டுகிறது) என்று வருந்தினாளாம் இவள்.

பூவின் நிலைகள் பொழுது (காலத்) திற்கேற்ப மாறும். அரும்பு என்பது பூவின் தோற்ற நிலை.  போது என்பது பூ விரியத் தொடங்கும் நிலை. மலர் என்றால் பூ விரிந்து மலர்ந்துவிட்ட நிலை. பூவினைப்போல பிரிவு / காதல் நோயும் காலத்திற்கேற்ப வளர்கிறது என்பது உருவகம். இதனை ஏகதேச உருவகம் என்பர்.

00000

இதேபோன்ற தாகூரின் ஒரு அழகான கவிதை நினைவிற்கு வந்தது. அவர், கீதாஞ்சலியில் இதே போலும் காதல் தாபத்தை பரம்பொருளின் மீதேற்றிக் கூறுவார்!!

மேகங்கள் மேன்மேலும் திரண்டு இருளடையச் செய்கின்றன. என் அன்பே, என்னை ஏன் தன்னந்தனியாக கதவிற்கு வெளியில் நிற்க வைக்கிறாய்?

           மதியநேரத்தின் வேலை மும்முரத்தில், நான் கூட்டத்தோடு இருக்கிறேன் (உன் நினைவு என்னைத் துன்பத்தில் அவ்வளவாக ஆழ்த்தவில்லை). ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில் உனக்காக மட்டுமே காத்திருக்கிறேன்.

           எனக்கு நீ உன் முகத்தைக் காட்டவில்லையென்றால், என்னை நீ முழுமையாகப் புறக்கணித்து விட்டால், நான் எவ்வாறு இந்த நீண்ட மழைநாட்களைக் கழிப்பேன் என அறியேன்.

           தொலைதூரத்து இருளை நான் வெறித்துக்கொண்டும் எனது இதயம் இந்த அமைதியற்று அலைந்து புலம்பும் காற்றைப்போல இருக்க, அழுதுகொண்டும் இருக்கிறேன்.                                                            (தாகூர்- கீதாஞ்சலி)     

 

           Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone?

            In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.

            If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours.

            I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.                                                    

                                                                                                (Tagore- Gitanjali)

இந்தக் கவிதைகளையெல்லாம் படித்து அவற்றின் பொருளிலாழ்ந்து தோய்ந்து அழுததுமுண்டு. தெய்வத்தை நம் அன்பில் கட்டிப்போட்டுக் காட்டும் காதல் மொழிகளல்லவோ இவை! காதலைப்போல ஒருவரைப் பித்தாக்கும் தாபநிலை இது. காதலைக் கூறி விளக்கினால்தான் சாமானியர்களான நாம் புரிந்துகொள்ள முடியும் என்று அந்த வழியிலேயே நின்று கூறுகிறாரோ தாகூர்?

எப்படியானால் என்ன?

ஆண்டாளும் மீராவும் இறைவனிடம் கொண்ட காதலைப் பற்றி அறிந்த நமக்கு இதனை உணர்ந்து புரிந்து கொள்வது எளிதே!

00000

பாரதியாரும் தன் பங்குக்கு இந்த நோயை ஒரு அலசு அலசியிருக்கும் அழகை ‘கண்ணன் என் காதலன்’ கவிதையில் கண்டு மகிழலாம்.

காதல் வயப்பட்ட பெண்ணுக்கு தன் ‘நோய்’ எதனால் என்று தெரியவில்லை! தூண்டிற் புழுவினைப்போல் நெஞ்சு துடிக்க, கூண்டுக்கிளியினைப் போல் செல்லும் வழியறியாமல் மிக நொந்து கிடக்கிறாள். தாயைக் கண்டாலும் சலிப்பு; தோழிமார் எல்லாம் நோய்போலத் துன்பம் தருகின்றனர்.

உணவு செல்லவில்லை- சகியே
உறக்கங் கொள்ள வில்லை;

பாலுங்க சந்ததடீ சகியே
படுக்கை நொந்த தடீ

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்
பாலத்துச் சோசியனும்- கிரகம்
படுத்து மென்று விட்டான்;

மருத்துவனும் சோசியனும் கைவிரித்து விட்ட நிலை!!

ஆனால் கனவில் அவன் வந்து அவள் மனதைத் தொட்டு விட்டான்; புதிய மகிழ்ச்சியில் திளைக்கிறாள் அவள்.

உச்சி குளிர்ந்து, உடம்பும் நேராகிறது. உள்ளத்தில் புதியதோர் சாந்தி பிறக்கிறது. எண்ணிப் பார்த்ததும் புரிகிறதாம் – அது அந்த மாயக்கண்ணன் தான் இவள் உள்ளத்தில் வந்து குடிகொண்டு விட்டான் என்று!!

கண்ணன் திருவுருவம் அங்ஙனே

           கண்முன்னே நின்ற தடீ!

பூப்போல பல நேரங்களில் பலகட்டங்களாக வளரும் காதல்நோயைப் பற்றிப் பார்த்தோம். இது உள்ளம் பற்றிய நோய்!

அடுத்த இதழில் உடலை வருத்தும் இன்னும் சில நோய்களைப் பற்றிய செய்திகளைக் காணலாமே!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.