“பொறுப்பு அலுத்தது” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

அன்னையின் மடியில் துயில் கொண்ட அனுபவத்தை கூற முடியுமா? - Quoraஉள்ளே நுழைந்ததும், “ராமாயி, என்னவொரு பெயர்! ரீமா, ரமா, எவ்வளவு பெயரை வைத்திருக்கலாம். அதான் இவர்கள் மேல் கோபம்” என்று பொருமினாள் ராமாயி. பக்கத்தில் வியந்து பார்த்துக்கொண்டிருந்த முதியவர் தன் அப்பா என்றாள்.

ராமாயி தனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரிடம் அடிக்கடி தலைவலி எனச் சொல்வதால், அவர் டீமில் இருந்த நரம்பியல் மருத்துவரிடம் அபிப்பிராயத்திற்காக அனுப்பி வைத்திருந்தார்.

பரிசோதனைகளைச் செய்தபின் உடலிலோ மூளையிலோ பிரச்சினை இல்லை எனத் தெரிந்தது. தலைவலியின் காரணி புரிய, விடுவிக்க என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்கள்.

தனக்கு ஏற்பட்டிருந்த தலைவலியை யாரும் புரிந்து கொள்ளவில்லை எனத் தொடர்ந்தாள். அவள் போக்கிலேயே விட்டு சூழ்நிலையைப் பற்றி விவரிக்கச் சொன்னேன். மனம் விட்டுப் பேச, தந்தையை வெளியே உட்காரச் சொன்னேன். “சரியானா, அதுவே போதும்” எனச் சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

முப்பது வயதான இவள் தனியார் நிறுவனத்தின் செயலாளர். பொறுப்புகள் அதிகம். வேலை பிடித்திருந்ததால் விருப்பப்பட்டுச் செய்தாள். சம்பளம் கூடியது. வசதியான வாழ்க்கையானது. கணவன் ரவி, வழக்கறிஞர். நன்றாக வாதாடுவதால் பிரபலமாக இருந்தான். வேலைக்கு முக்கியத்துவம் தரும் தம்பதியர்!

பெண் பார்க்க வருகையிலேயே கல்யாணத்துக்கு பிறகும் உத்தியோகம் செய்வதைப் பற்றி ராமாயி தெளிவு படுத்தி இருந்தாள். ரவியின் அபிப்பிராயமும் ஒத்துப்போனதால் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

அப்போதே ரவியும் ராமாயியும் முப்பது வயதில்தான் குழந்தை என முடிவு செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறே முதல் குழந்தை ராகினி பிறந்தாள்.

ஒன்பது மாதங்கள் ஆயிருந்தன. ராகினியின் உடல் நலன் சீராக இல்லாததால் கணவரின் வீட்டிற்கு இன்னும் திரும்பவில்லை. பிரசவத்திற்கு வந்ததிலிருந்து ரவியுடனும் இல்லை, வேலையில் பெற்ற சுகம் எதையும் இங்கு உணர முடியவில்லை என்றாள். இதற்கெல்லாம் இடையூறு ராகினியின் பிறப்பே என்றாள். குழந்தையின் தேவைகளைத் தான் பார்த்துக் கொண்டாலும் அதில் பற்றோ, பாசமோ உள்ளதோ எனத் தெரியவில்லை என்றாள், வருத்தப் படாமல்.

ராமாயிக்குப் பிரசவத்திற்குப் பெற்றோரிடம் வர விருப்பமே இல்லையாம். கணவரின் வீட்டு முறையில் பிரசவத்தை தாங்களே பார்த்துக் கொள்வது தான் குடும்ப வழக்கமாம். ராமாயி மனப்பூர்வமாக இதை வரவேற்றாள். அங்கேயே இருந்தால் கடைசி நாள் வரை வேலைக்குப் போகலாம், ரவி பக்கத்தில் இருப்பதும் உதவும் என்றாள்.

ராமாயின் பெற்றோர் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். தலைப் பிரசவத்தை தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினதால் மாமனார் மாமியார் ஒப்புக்கொண்டார்கள். ராமாயிக்கு இஷ்டமில்லை. அழைத்து வர, நாள் கிழமை குறித்து, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும், வேலை இருப்பதாகச் சொல்லிக் கிளம்ப மறுத்தாள். இருமுறை இப்படியே! கடைசியில் மனமில்லாமலேயே கிளம்பினாள்.

வந்ததும், பெற்றோரால் பல வேலைகளை ஒரேயடியாகச் செய்ய முடிவதில்லை, நிதானமாக ஆகிவிட்டார்கள் என்பதைக் கவனித்தாள். ராமாயி சலித்துக் கொண்டாள். இதற்கு அங்கேயே இருந்திருக்கலாம் எனப் புலம்பினாள். வெளியே போகையில் துணைக்கு வரக் கேட்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை. இதுவெல்லாம் தொல்லை என்று மனதில் குமுறிக் கொண்டிருந்தாள். பெற்றோர் என்பதால் ரவியிடமும் சொல்ல முடியவில்லை. தவிப்பும் வெறுப்பும் உலுக்கியது!

அடிக்கடி அங்குக் கிடைத்த சுதந்திரம், கவலைப் படாமல் இருந்ததை ஏங்கி ஞாபகப்படுத்திக் கொண்டு வருவதை விவரித்தாள். அவள், ரவி, மாமனார் மாமியார் எல்லோரும் வேலைக்குப் போவதால் சமைக்க ஒருவன் வருவான். விடியற்காலையில் அன்றைய சமையல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போவான். மற்ற வேலைகளுக்குத் தேவி வேறு.

இங்கு, அப்படி எதுவுமே இல்லை. நச்சரிப்பாகத் தோன்றியது. திரும்பிப் போக ஆவலாக இருந்தாள். குழந்தையின் உடல் நலத்திற்காக அது முடியாமல் போனதால், அதனிடம் பாசத்தைக் காட்ட முடியவில்லை,

ராமாயியின் தலைவலியை ஆராய்ந்தோம். அவசரப்படும் போதும், நெருக்கடியான வேளைகளிலும் தலை வலிக்குமாம். சூடான காப்பி அருந்தியதும் தலைவலி வந்த சுவடே தெரியாமல் போய்விடுமாம். ஏனோ ஒரு வருடமாகத் தலைவலியுடன் எரிச்சல் ஏற்படுகிறதாம். வலி கொஞ்ச நேரம் இருந்த பிறகே குறைகிறதாம். ராமாயி கூகிளில் எதையோ படித்து, தனக்கு மூளையில் ஏதோ கோளாறு என்ற முடிவுக்கு வந்தாள். ரவியைப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். நாங்கள் ஆசுவாசப் படுத்தி, சரிசெய்ய ஸெஷன்கள் தேவையை என விளக்கினோம். அன்று சனிக்கிழமை, தாமதிக்காமல் திங்கட்கிழமையன்று வருவதாகச் சொல்லிக் கொண்டு போனாள்.

வந்ததோ கைக்குழந்தையுடன் ராமாயின் பெற்றோர். இங்கிருந்து சென்றதும் பயப்பட்டாளாம், ரவியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஊருக்குச் சென்று விட்டதாக அழுதுகொண்டே கூறினார்கள். ஒன்பது மாதமான ராகினியும் அழுகையில் சேர்ந்து கொண்டாள்.

குழந்தை அழ ஆரம்பித்ததுமே இருவரும் சமாதானம் செய்து கொண்டார்கள். வருத்தத்துடன் சொன்னார்கள், ராமாயி சென்றதிலிருந்து ராகினி அமைதியாக இருக்கிறாளாம் அம்மாவை தேடவே இல்லையாம்.

ஸெஷனை இவர்களுடன் தொடர்ந்தேன். அப்பா, மது, அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அறுபது வயதினர். ஐம்பது வயதான பிரேமா இல்லத்தரசி. ஒரே குழந்தையான ராமாயிக்கு எல்லா விதமான சலுகைகள் கொடுத்து வளர்த்தார்கள். இப்போது போலவே, தன் இஷ்டப்படி செய்வாளாம்.

அப்போதெல்லாம் ராமாயி போக்கிலேயே விட்டார்கள். எந்த விதத்திலும் கண்டிப்பு இல்லை. தானாகப் புரிந்து கொள்வாள் என இருந்தார்கள். ராகினியை விட்டுச் சென்ற பிறகே வருந்தினார்கள். திடீரென்று விமானநிலையத்திலிருந்து அழைத்துச் சொன்னது திடுக்கிட வைத்ததாம். அப்படியும் அவளை எதையும் சொல்லவில்லை.

ஸெஷன்களில் இதை மேலும் ஆராய்ந்ததில், வளர்ப்பில் செய்யலாம்-கூடாது என்ற எல்லைக் கோடுகள் இடுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள்.

ராகினி சிணுங்கினாள். இருவரும், இதை-அதைத் தந்த போதிலும் நீடித்தது. அவர்கள் புரிந்து கொள்வதற்காக ராகினியின் கவனத்தைத் திருப்பினேன். உடனே கண்ணீர் விடாமல் அமைதியானாள். ஒரேயொரு தரம் என மது, பிரேமா விட்டார்கள்.

ஸெஷன் முடியும் தருணத்தில் திரும்ப ராகினி சத்தம் போட, மது பயந்து போகப் பிரமாவும் சேர்ந்து கொண்டாள். ராகினியைப் பெயர் சொல்லி அழைத்து, அவளிடம் “இல்லை” என நான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் அமைதியானாள்.

ஸெஷன்களுக்கு வந்ததும் ராகினி தாவி என்னிடம் வந்துவிடுவாள். சில நிமிடங்களுக்கு அவளுடன் பேசிய பின்னரே மற்றவரிடம் திரும்புவாள்.

இதனால் கண்டிப்பின் வெவ்வேறு வகையை மது-பிரேமாவிடம் காண்பிக்க முடிந்தது. மேலும் இதைப் பற்றி உரையாடினோம். பயிலும் வழிமுறைகளை வகுத்தோம். ராமாயி திரும்ப வருவதற்குள் இவர்கள் ராகினியிடம் கெஞ்சுவதைத் தவிர்க்கும் வழிகளைப் பழக நேரம் கிடைத்தது.

இப்படியும் செய்யலாம், செய்ய முடிந்தது என உணர்ந்து இரண்டு நாட்களுக்குள் வந்தார்கள். இந்த முறை ராமாயியும் கூட வந்திருந்தாள்.

மது, பிரேமா புதிய அனுபவத்தை ஆர்வம் பொங்கப் பகிர்ந்தார்கள். அத்துடன் இங்கு வருவதற்கு முன்பு, ராமாயியை சாப்பிட்டு வரச் சொன்னார்கள். அவள் தட்டிக் கழித்து விட, ராகினிக்கு சொல்லிப் பழகிய வழிமுறைகளைச் செயல்படுத்தியதில் ராமாயி சாப்பிட்டாளாம். இதைத் தங்களது மிகப் பெரிய வெற்றி எனச் சந்தோஷம் பொங்கக் கூறினார்கள்.

மது, பிரேமா உடல் பயிற்சி செய்யாததால் உடல் சோர்வாகிறது, குழந்தை ராகினியுடன் விளையாட முடியவில்லை என வருத்தப் பட்டார்கள். வேலை செய்யவும் தடையாக இருந்தது என்றார்கள். தினமும் ஒரு மணி நடக்கலாமா எனக் கேட்டார்கள். இந்த வயதில் மருத்துவரைப் பார்த்து, பரிந்துரை கேட்டு அதன்படி செய்ய வேண்டும் என்றேன்.

மறுமுறை அவர்கள் வந்த போது, ராமாயியுடன் வந்தவர் நிதானமாகத் தன்னை ரவி என அறிமுகம் செய்து கொண்டார். மனைவியின் திடீர் ஊர் விஜயம் ஆச்சரியம் தந்தது என்றார். ஆனால் ராகினியை விட்டு வந்தது சஞ்சலம் ஊட்டியது.

உடனே படக்குன்னு ராமாயி, குழந்தை இருந்திருந்தால் அங்கு அல்லவா கவனம் நின்றிருக்கும், அதனாலேயே தனக்கென்று செய்தேன் என்று கூறினாள்.

ரவி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தான். பெற்றோராகிய பின் அதன் பொறுப்பைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள, ராமாயி சங்கடம் அடைந்தாள். இதுவரை முழுக்க ஆதரவு கொடுத்த ரவி இவ்வாறு கூறுவதின் அதிர்ச்சி! எனினும், கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.

ராமாயி செயலை ஆராயப் பரிந்துரைத்தேன். வளரும் போது தனக்கு அளித்த சுதந்திரத்தில், எல்லைக்கோடு தனக்கு விதித்துக் கொள்ளவில்லை. இப்போது, தாய்மையையும் மீறி, தனது ஆசையைத் திருப்தி படுத்தச் சென்றதை உணர்ந்தாள்.

ராமாயியை பொறுப்புகளை வரிசைப்படுத்தி ஆராய முடிவேடுத்தோம். இவற்றைத் தவிர்க்க விட்டதை மையமாக வைத்தோம். பல ஸெஷன்களுக்குப் பிறகே பெற்றோர் பற்றியும் உணர்ந்தாள். கணவர் வீட்டிலும் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. பிரசவத்திற்கு வந்தபின் பெற்றோரின் தள்ளாமை, வயதான அறிகுறிகள் தெரிய மனதிற்குள் பயம் தோன்றியது. ஒரே குழந்தை என்பதால் பொறுப்பு ஏற்க வேண்டுமே!

அவர்களை கணவர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாலும் வேலை பாதிக்கப்படுமே என்ற வேதனை. நினைக்க நினைக்கப் பெற்றோரின் மீது வெறுப்பு கூடியது. நம்மை விட்டால் யார் பார்த்துக் கொள்வார் என்ற நினைப்பு ஏற்படவில்லை. குற்ற உணர்வில்லை.

தன் நிலையைப் புரிந்து கொள்ள ராமாயி வளர்ந்து வந்த நாட்களின் முக்கிய அம்சங்களைப் பகிரச் சொன்னேன். விவரிக்கும் போது எப்படி இது சாத்தியமானது என்ற கேள்வி எழுப்பினேன். பதினைந்தாவதான விவரிப்பில் உணர ஆரம்பித்தாள்: ஒவ்வொரு முறையும் எந்தவிதக் கட்டாயமோ, மறுப்போ இல்லாததாலேயே. இந்த கோணத்திலிருந்து ஆராய்ந்து வர, மெதுவாகப் புரிந்து கொண்டாள்.

மது, பிரேமா மருத்துவர் பரிந்துரைப் படி தினந்தோறும் நடைப்பயிற்சி செல்வது, தோட்ட வேலை, ராகினிக்குக் கதை சொல்வது, பாட்டுப் பாடுவது எனச் செய்ய, ஊட்டச் சத்துள்ள உணவின் பட்டியலையும் கடைப் பிடித்தார்கள். இருவரின் நிலை சுதாரித்தது.

ராகினி நலனும் தேர்ச்சி பெற்றது. இதைக் கண்ணெதிரே பார்த்து வந்தாலும், இதை ஏற்க ஏனோ ராமாயியின் மனம் மறுத்தது. மீண்டும் இதன் பொருளை ஆராய்ந்தோம். அப்போது அவளுக்குப் புலப்பட்டது, குழந்தையின் மீது உள்ள கசப்பினால்தான் இப்படி, இதுவரை தன்நலம் பற்றி மட்டுமே பார்த்து வந்தோம் என்று. இந்தப் புரிதல் விதை விதைத்தது. மெல்ல மெல்ல ராமாயியின் நடத்தையில் சிறு மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது.

அடுத்த நான்கு ஸெஷன்களுக்கு ரவியின் பங்களிப்பு தேவையிருந்ததால் ஊரிலிருந்து வந்திருந்தான். தேவைப்படும் போதெல்லாம் நாசூக்காக ரவி மாமனார் கையிலிருந்து ராகினியை அழைத்துக் கொண்டான். அவளும் முகம் மலர்ந்து தாவினாள்.

செயலில் மாறுதல் வருவதற்கு, அதை நம்பி கடைப்பிடித்துச் செய்ய வேண்டும். அதனால் தான் மாற்றத்திற்கு நாளாகும். ஆனதும் இவர்களின் மாற்றம் நிலைத்து நிற்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.