அழுந்தி, பாதங்களை மெதுவாக வைத்து, மெல்ல மெல்ல சாந்தி தன் அறையில் இருந்து வந்தார்.
அவர் வரும் ஓசைக்காகவே காத்திருந்த சாந்தியின் மருமகள் ஸ்வப்னா, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
கையில், மாமியாருக்கான காலை உணவு !
சாந்தியைப் பார்த்ததும், ஸ்வப்னாவுக்குச் சிரிப்பு வந்தது.ரொம்ப சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
பூசிய ( தடித்த எனப் படித்துக் கொள்ள வேண்டும் ) உடம்பு. நல்ல புடவையாகத் தான் கட்டியிருந்தார். ஆனால், உள்பாவாடை வெளியில் தெரிகிறது, ப்ளீட்ஸ்கள் எப்படியோ மடித்து உள்ளே தள்ளப்பட்டு, முந்தானை பரிதாபமாக மேலே கிடந்தது.
முழங்கால் வலி. அதனால், ஆடி ஆடி நடக்கும் பழக்கம் சாந்திக்கு.
இந்தக் கெட்டப்பில் பார்த்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும் ?
ஆனால், சிரித்து விட்டால், மாமியார் கோபப்படுவார் அல்லது வருத்தப்படுவாரே ?
“ ஆண்ட்டி, கொஞ்சம் இருங்க, சாரி ப்ளீட் கொஞ்சம் சரி பண்றேன்”
“ அய்யயோ” எனச் சொல்லி நகர்ந்து கொண்டார்.
“உள்பாவாடை தெரியுது, ஆண்ட்டி, அந்த ஒரு இடம் சரி பண்ணினா…”
”வேண்டாமா, நாந்தா தூக்கிக் செருகி இருக்கேன். கொஞ்ச தூரம் நடந்தா, புடவ இறங்கி வந்துடும்”
சொன்னதைக் கேட்க மாட்டார். புடவையைச் சரி செய்து,ஊக்கு போட்டால் அப்படியே நிற்காதா ?சொன்னால் வருத்தப்படுவார் ! ஸ்வப்னா புடவையைத் தொடவில்லை.
இன்றிலிருந்து வேலைக்குப் போகிறார் மாமியார் !
கஷ்ட ஜீவனம் இல்லை ! மகன் சுரேஷும் மருமகள் ஸ்வப்னாவும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சாந்தியும் சில வருடங்களுக்கு முன் வரை வேலை பார்த்தவர் தான் !
மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி… எலும்பு இருக்குமிடமெல்லாம் வலி ! மிக மிக சிரமமாக இருந்ததால், வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டார்.
வீட்டில் முடங்கிக் கிடக்காமல், கோவிலுக்குச் செல்லுவது, கடைக்குச் செல்லுவது வீட்டில் எல்லா வேலையையும் செய்வது என முழுத்தீர்மானம் மனது போட்டாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பொடிகிளி, ஆயில் மசாஜ் என போகப் வேண்டி இருந்தது. எத்தனை சிசுருஷை செய்தாலும், திரும்ப திரும்ப வலி வந்து கொண்டிருக்கும். முகம் மிகவும் இருளைடைந்து முனகிக் கொண்டே, அனத்திக் கொண்டே இருப்பார்.
உடல் சோர்ந்து இருந்தாலும், மனசும் மூளையும் மிகத் துடிப்பாக இருந்தது. சமையலறையில் கனமான சூடான பாத்திரத்தை ஏற்றி இறக்க கஷ்டப்படுவார். ஆனால், நியூஸ் முழுதும் அப்டேட் ஆக இருப்பார். எந்தப் படத்தின் பாட்டு சிங்கிள்ஸ் வெளிவந்துள்ளது எனச் சொல்வார்.
இரவு ஏழு மணி ஆனால், யூட்பில் கார்த்திக் கோபிநாத் என்ன சொல்கிறார் எனப் பார்ப்பார்.
இவ்வளவு ஏன்? ஸ்வப்னா தன் ஆபிஸ் ப்ராஜக்ட் வேலையில் தேர்ட் பார்ட்டி இல்லாமல் … பண பரிவர்த்தனை என்று சுரேஷிடம் சொல்ல ஆரம்பிக்க, “ அதாம்மா, இப்ப ‘ப்ளாக்செயின்’ வந்துருக்குல்ல” என்று சாந்தி சொன்ன போது சுரேஷும் ஸ்வப்னாவும் அதிர்ந்து போனார்கள்.
மூன்று வாரமாக சாந்திக்கு ரொம்ப முடியவில்லை. கழுத்து, கை வலி. பிஸியோதெரபி, மாத்திரை, நீராவி மசாஜ் என இருந்தார்.
முகத்தில் களையே இல்லை. பேச்சு ரொம்ப முனகல். முற்றிலுமாக முடங்கிப் போனார்.இந்த முறை மனதளவிலும் சோர்ந்து போயிருந்தார்
அப்போது தான் வந்தது இந்த வேலை வாய்ப்பு ! தனியார் பயிற்சி மையத்தில், பயிற்சியாளராக ! வேலையை விட்ட போது சில மையங்களில் விண்ணப்பித்தது. இப்போது கேட்கிறார்கள்.
சம்பளம் என்று அவர்கள் தரப்போவது…. அநாகரீகமாகத் தான் சொல்ல வேண்டும்…. அவ்வளவு குறைவு !
சாந்தியின் ஆர்வமும் உடற்சோர்வும் அவரது பலவீனம் என்றால், அவரது அறிவாற்றலும் அதே ஆர்வமும் அவரது பலம்.
“வேண்டாம். நான் போகவில்லை. என்னால் முடியவில்லை” என சாந்தி சொல்லவில்லை.
“ கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா, இந்த மையம் ரொம்ப பக்கமாக இருக்கு ! வேலை மற்றும் வெளிநாடு செல்வோர் பயிற்சி நிறுவனம் ! சே , இப்ப போய் வந்திருக்கு” என அலுத்துக் கொண்டார்.
“ஒரு வேளை கொஞ்சம் கஷ்டப்பட்டு இரண்டு மாசம் போனா, மெதுவா, ஆன்லைன் க்ளாஸ் கூட எடுக்கலாம்” என்று சொன்னார்.
சூம், கூகுள் எல்லாம் நன்கு தெரியும்.
மகனோ மருமகளோ போக வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவார் அல்லது வருத்தப்படுவார் என்பது புரிந்தது.
“சரிம்மா, போக வர ஆட்டோ ஏற்பாடு பண்ணிடறேன். செண்டரில கண்டிப்பா லிப்ட் இருக்கணும். இதான் என் ஸ்டேண்ட்” என்றான் சுரேஷ்.
இதோ இன்று கிளம்பிவிட்டார் சாந்தி !
முகத்தில் தெளிவு ! அதே சமயம், வீட்டு வேலைகளை இவ்வளவு நாள் செய்யாமல்,வெளியே வேலைக்குச் செல்வதை எண்ணி ஒரு தயக்கம் !
ஸ்வப்னா , டீயும் சுண்டலும் உள்ள பையைக் கொண்டு கொடுத்தாள். ஐந்து மணி நேரம் வேலை !
ஆட்டோ வாசலில் வந்து நின்றது. எல்.கே.ஜி குழந்தையை வழி அனுப்பவது போல் அனுப்பினார்கள்.
“ஏங்க ! இப்படிக் கஷ்டப்பட்டு போகணுமா ? போக வேண்டாம் என்று அடிச்சு சொல்லக்கூடாதா “ என்றாள் ஸ்வப்னா.
“சொன்னா வருத்தப்படுவாங்க” என்றான்
“சரிதான், கிடைக்கப் போற சம்பளம் ஆட்டோவுக்கும் எக்ஸ்ட்ரா மாத்திரைக்கும் தான் போகப் போவுது.வீண் அலைச்சல் தான் மிச்சம்”
“அம்மாவுக்கு எலும்பு தேய்மானம் ஆரம்ப நிலையில் தான் இருக்கு. வலியை நினைச்சு, பயந்துகிட்டு, முடங்கி இருக்காம, அவக்களுக்குப் பிடிச்ச வேலைக்குப் போகும் போது, தன்னை இன்னும் ஆரோக்கியமா வச்சுக்க முயற்சிப்பாங்க ! போன மாசம் அவங்க முகம் இருளடைந்து இருந்தது. இன்னிக்குப் பாரு ! முகத்தில ஒரு திருப்தி ! ரொம்ப நாளா ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு எடுக்கணும்ன்னு ஆசை அவங்களுக்கு !
“அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே “
“இல்லை ஸ்வப்னா ! இது ஒரு சின்ன மனோதத்துவம் தான் ! அவங்க வீட்டுக்குள்ளயே இருக்கறதால, தெருவுல ‘அம்மாவுக்கு என்னாச்சு, பெரிய ஹாஸ்பிடல் போங்க…” அது இதுன்னு சொல்ற நேரம் வந்துடுச்சு !
அம்மா தன் விருப்பப்படி வேலைக்குப் போனா, கை கால்கள் கொஞ்சம் வேலை செய்யும். மருந்தும் கரெக்டா எடுப்பாங்க !”
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா “
“இல்ல. மூணு மாங்கா ! நீ வீட்டுல வொர்க் ப்ரம் ஹோம் ! ஹாயா இருக்கலாம் ! மாமியார் வேலைக்குப் போறதால !”
ஸ்வ்ப்னா கையிலிருந்த கரண்டியால் அவனைச் செல்லமாக அடித்தாள்.