<—இவர் எழுதாத கதை
வாசல் உள்ள அழைப்பு மணி ஒலித்தபோது, கணேஷ் அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தான்.
பஸ்ஸர் சப்தம் கேட்டவுடன், “எஸ்” என்றான். உள்ளே பரபரப்பாக நுழைந்த பத்ரிக்கு 24 – 25 வயதிருக்கலாம்.
பின்னாலேயே கதவைத் தடாலெனத் திறந்தவாறு உள்ளே நுழைந்த வஸந்த், அந்தத் தெருவே அலறும் விதமாக, “மூணு காபி, சரவணா” என்று அறிவித்துவிட்டு, பத்ரியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, “உட்காருங்க, பத்ரி. நீங்க காபி சாப்பிடுவீங்கள்ல?” என்றான்.
கண்களில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த பத்ரி, “என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் வஸந்த்திடம்.
“எனக்கு முகம் பார்த்து ஜோஸ்யம் சொல்லத் தெரியும்” என்றான் வஸந்த் சிரிக்காமல்.
பத்ரி மேற்கொண்டு எதுவும் சொல்லும் முன், “உங்கள் சட்டை மேல் பட்டன் ரெண்டு திறந்திருக்கு. உங்க கழுத்துல இருக்கிற செயின்ல, டாலருக்கு பதிலா இருக்கிற உங்க பேரு க்ளியராத் தெரியறது” என்றான் கணேஷ் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
பத்ரி மிக லேசாகப் புன்னகைத்தான்.
“கணேஷ், நான் சொல்ல வந்தது ரொம்ப சீரியஸ். எங்க அப்பா போன வாரம் காலமாயிட்டாரு” என்றான் எங்கள் வீட்டில் கரண்ட் இல்லை என்பது போல.
“ஓ…..ஸாரி. உக்காருங்க பத்ரி” என்றான் கணேஷ்.
ஓஎம்ஆரில், சிறுசேரியில் இருக்கும் ஓபஸ் க்ராண்ட் என்ற அபார்ட்மென்டின் 13-வது மாடியிலிருந்து கீழே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் குதித்து உயிரை விட்டுள்ள ரமேஷ் ராவின் நடுநெற்றியில், பொட்டு வைத்தது போல பாய்ந்திருந்தது ஒரு தோட்டா.
“நான் எதற்கும் லாயக்கில்லை. என் மனைவி, மகன் யாரும் என்னைத் துளியும் மதிப்பதில்லை. எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. சேதமடையாத என் உடல் உறுப்புகளை அருகிலுள்ள ராஷ்ட்ரிய ஜெயின் கேந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்வதில் எனக்கு முழு விருப்பம் – ரமேஷ்” இப்படி ஒரு குறிப்பு எழுதி வெச்சிட்டு குதிச்சு இறந்துட்டாரு என் அப்பா…..” மேற்கொண்டு பத்ரி எதுவும் செல்லும்முன் வஸந்த் குறுக்கிட்டான்.
“இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி, அவர் குதிச்சது 13-வது மாடில இருந்து. அப்படி இருக்கும் போது, அவர் நெற்றில எப்படி புல்லட் பாஞ்சது? அது இல்லைனாலும், ஹிஸ் டிமைஸ் வாஸ் கன்ஃபார்ம்டு. இதுல நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க பத்ரி?” என்றான் வஸந்த்.
கணேஷ் ஆமோதிப்பது போல தலையாட்டினான்.
——————————————————————————————————–
கோர்ட்டில் பத்ரி……
“யுவர் ஆனர், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல இல்லாத ஒரு விஷயம் என்னன்னா, கீழ 4-வது மாடில பால்கனி ரிப்பேருக்காக சில கட்டிட ஆளுங்க வேலை பார்த்திருக்காங்க. அவங்க பாதுகாப்புக்காக நாலாவது மாடிக்குக் கீழ ஒரு பலமான ஸேஃப்டி நெட் கட்டியிருக்காங்க. எங்க அப்பா ரமேஷ் ராவ் கீழ விழுந்தபோது எங்க அப்பா நெத்தில குண்டு பாயாம இருந்திருந்தா, அந்த நெட்ல விழுந்து அவர் பிழைச்சிருக்கலாம். அப்புறம் எப்படி அந்த புல்லட்னு நீங்க கேட்கலாம். எட்டாவது மாடில 8-D ஃபிளாட்டுல இருக்கிற வயதான பெரியவர் ஸ்ரீனிவாச ராவும் அவர் மனைவி பத்மஜாவும் அடிக்கடி சண்டை போடுவாங்க. இதுல, ஸ்ரீனிவாச ராவ் ஒரு எக்ஸ்-மிலிட்டரி ஆளு. அவர்கிட்ட பாதுகாப்புக்காக பிஸ்டல், லைசென்ஸோட வெச்சிருக்காரு. கணவன், மனைவிக்குள்ள எப்போ சண்டை வந்தாலும், பிஸ்டலை வெச்சு மனைவியைச் சுட்டுடுவேன்னு மிரட்டறது ஸ்ரீனிவாச ராவோட பழக்கம்….…”
“அன்னிக்கும் அதுதான் நடந்தது. எப்போ மிரட்டினாலும், புல்லட் இல்லாத காலி பிஸ்டலை வெச்சுக்கிட்டுதான் மிரட்டுவேன். பாதுகாப்புக்காக லோடு பண்ணியிருந்தா கூட புல்லட்டை எடுத்திட்டுதான் மிரட்டுவேன். அன்னிக்கு லோடு பண்ணியிருக்கிறது தெரியாம. தவறிப் போயி ட்ரிக்கரை அழுத்தியிருக்கேன். சட்ன வெளியே வந்த புல்லட், கரெக்ட்டா ரமேஷ் ராவ் நெத்தி நடுல பாஞ்சிருக்கு. இது மிகவும் தவறுதலான, கைதவறி நடந்த விபத்து. ரமேஷ் ராவ் உடல் திடீர்னு ஜன்னல் வழியா க்ராஸ் ஆகும்னு எதிர்பார்க்கலை, யுவர் ஆனர்” என்றார் குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த ஸ்ரீனிவாச ராவ்.
தொண்டையைக் கனைத்து கொண்ட எழுந்த வஸந்த், “ஸ்ரீனிவாச ராவ், ‘எப்போ சண்டை போட்டாலும், இப்படித்தான் துப்பாக்கியால சுடுவீங்களா?” என்றான் வஸந்த் குரலில் கிண்டல் தெறிக்க.
“அப்ஜக்ஷன் மை லார்டு, திஸ் அலிகேஷன் இஸ் பேஸ்லெஸ்” என்றார் பிபி.
“சஸ்டைண்டு. வஸந்த், கேள்விகளை ஒழுங்கா கேளுங்க” என்றார் நீதிபதி.
“ஓகே ஐ வில் ரீஃபிரேஸ்” என்ற வஸந்த், “எப்போ சண்டை போட்டாலும், இப்படித்தான் துப்பாக்கியால சுடுவேன்னு மிரட்டுவீங்களா?” என்றான்.
“ஆமாம் சார், ஆனா, அது சும்மா விளையாட்டுக்குத்தான், என்னுடைய துப்பாக்கில எப்போதுமே குண்டு போட்டு, லோடு பண்ணி வெச்சிருக்க மாட்டேன். அன்னிக்கு எப்படி அப்படி ஆச்சுன்னு தெரியல, இரண்டாவது, நான் சுட்ட தோட்டா ஜன்னல் வழியா வெளியே போகும்போது, திடீர்னு ரமேஷ் ராவ் பாடி க்ராஸ் ஆகும்னு எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் ஸ்ரீனிவாச ராவ்.
“இது திட்டமிட்ட கொலை இல்லை என்றாலும், இதை கல்பபிள் ஹோமிஸைட் (Culpable Homicide) என்று சொல்லலாம், யுவர் ஆனர்” என்றான் வஸந்த்.
நீதிபதி ஆனந்த தீர்த்தன் அருகே வந்த குமாஸ்தா, அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
நீதிபதி கண் கண்ணாடியைக் கழற்றி துடைத்து மாட்டிக்கொண்டு, “வஸந்த், ஒரு நிமிஷம். இந்த ஸ்ரீனிவாச ராவ் ஃப்ளாட்டுக்கு அடுத்த ஃப்ளாட்டில் இருக்கும் பர்வதவர்த்தினிங்கிற மேடம் இந்த கேஸ் விஷயமா சொல்லணும்னு தன்னிச்சையா வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்” என்றார்.
“என்னவோ சொல்லணும்னு சொன்னீங்களாமே, சொல்லுங்க மேடம்” என்றார் நீதிபதி . தொண்டையைச் செருமிக்கொண்டு, “யுவர் ஆனர், நான் அன்னைக்கு பால்கனில நின்னுகிட்டு இருந்தபோது, சத்தம் போடாம ஸ்ரீனிவாச ராவ் ஃப்ளாட்டுக்குள்ள அவரோட ஸன் நுழைஞ்சு, புத்தக அலமாரில இருக்கிற மர டப்பால இருந்து ஒரு புல்லட்டை எடுத்து, பக்கத்தில இருந்த பிஸ்டல்ல லோடு செய்யும்போது நான் தெளிவா பார்த்தேன்……ஏன்னா, அவருக்குத் தன்னோட அப்பாவும், அம்மாவும் டெய்லி இப்படி சண்டை போட்டுக்கறது பிடிக்காது. அடிக்கடி வந்து கத்துவாரு..” என்று சொல்லி ஒரு சிறிய இடை வெளி கொடுக்க,
தன் மொபைலில் வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் பார்த்து விட்டு, கணேஷ் காதில் ஏதோ சொல்லிவிட்டு எழுந்த வஸந்த், “ஸாரி யுவர் ஆனர். தி கேஸ் இஸ் க்ளோஸ்ட்” என்றான் தெளிவாக.
நீதிபதி ஆனந்த தீர்த்தனுக்கு ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. “வஸந்த், புரியல. ரெண்டாவது, இது என் கோர்ட். ஒரு கேஸ் க்ளோஸ்டா இல்லையான்னு சொல்ல வேண்டியது என் வேலை” என்றார் கடுமையாக.
வஸந்த் புன்னகைத்து, இரு கைகளையும் தூக்கினான். “ஸாரி யுவர் ஆனர். நோ டிஸ்ரெஸ்பெக்ட் டு தி கோர்ட்…..இந்த பர்வதவர்த்தினி மேடம் சொன்னது முழுக்க ரொம்ப சரி. குற்றம் சுமத்தப்பட்டிருக்கிற ஸ்ரீனிவாச ராவ் வீட்டுக்குள்ள வந்து அவரோட பிஸ்டல்ல புல்லட் லோடு பண்ண அவரோட ஸன் வேற யாருமில்ல…..இறந்து போன ரமேஷ் ராவ் தான்” என்றான்.
இருக்கையிலிருந்து எழுந்த கணேஷ், “யுவர் ஆனர், டு சம் அப், இந்த கேஸ் ரொம்பவே காம்ப்ளக்ஸ்…..ரமேஷ் ராவ் மனசு வெறுத்துப் போயி, தன்னோட 13-வது மாடி ஃப்ளாட்ல இருந்து குதிச்சு, சரியா 8-வது மாடியை க்ராஸ் பண்ணும் போது ஸ்ரீனிவாச ராவ் பிஸ்டல்ல இருந்து வந்த குண்டு இவர் நெத்தில பாஞ்சு இறந்திட்டாரு. ஆனா, சுடப்பட்ட அந்த பிஸ்டல்ல புல்லட்டை லோடு பண்ணினதே இந்த ரமேஷ் ராவ் தான். எனவே தெரியாம, ரொம்ப யதேச்சையா, அவர் சாவுக்கு அவரே காரணமாயிட்டாரு. எங்க தரப்பு தோத்தாலும் பரவாயில்லைன்னு உண்மையைச் சொல்லிட்டேன்.” என்று புன்னகைத்தான்.
கோர்ட்டில் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க சிறிது நேரமாகியது.
நீதிபதி, “வெல்டன் கணேஷ், டு அப்ஹோல்ட் தி ஜஸ்டிஸ், நீங்க எடுத்துக்கிட்ட ஸ்டாண்ட் ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். கணேஷ் சொன்ன மாதிரி, ரமேஷ் ராவைச் சுட்ட பிஸ்டல்ல இருந்த தோட்டா, ரமேஷ் ராவே லோடு பண்ணது. அதை விஷயம் தெரியாம சுட்ட ஸ்ரீனிவாச ராவ் மேல குற்றம் சொல்ல முடியாது. வெரி ஸ்ட்ரேஞ்ச், ரமேஷ் ராவ் சாவுக்கு அவரே காரணம். எனவே இதை ஸூசைடுன்னு தாராளமா சொல்லலாம்….…”
அரை மணி நேரம் கழிந்து வெளியே வந்த கணேஷ் / வஸந்த் இருவரும் பத்ரியிடம் பேசிவிட்டு, அவர்களை கைகூப்பி வணங்கிய ஸ்ரீனிவாச ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, காரில் ஏறினார்கள்.
“யார்கிட்ட இருந்து வாட்ஸ்அப்ல மெசேஜ் வந்தது வஸந்த் ? அப்படியே பல்டி அடிச்சிட்ட?” என்றான் கணேஷ் புன்னகைத்தவாறே.
‘ஆமாம் பாஸ், கேஸ் ஒரே கண்ணாமூச்சியா இருந்தது. இறந்து போன ரமேஷ் ராவ் ஃப்ளாட்டுக்கு எதிரே விலாஸினின்னு ஒரு பாப்பா இருக்கு. அதுதான் அனுப்பினது. செம மாலு பாஸ். சும்மா நின்னு விளையாடும்” என்று கண் சிமிட்டிய வஸந்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் கணேஷ்.
(அமெரிக்காவில் 1994-ம் ஆண்டில் நடந்த “மிக வினோதமான தற்கொலை கேஸ்” என்ற நிகழ்வினால் ஈர்க்கப்பட்டு சுஜாதாவின் கணேஷ் -வசந்த்தை அவர் அனுமதியில்லாமல் சேர்த்துப் புனைந்த கதை)