ஜூன் மாதம் 2022
1.எம். முரளி – மாதவரம்.
நீங்கள் மிகவும் சுவைத்துப் படித்த கேள்வி-பதில் பகுதி எந்தப் பத்திரிகையில் வந்தது ? ஏன்?
”கல்கண்டு” என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியர் தமிழ்வாணனின் “கேள்வி-பதில்” பகுதிதான் நான் சிறு வயதிலிருந்தே சுவைத்துப் படித்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் , முக்கியமான காரணம் அப்பகுதியில் எதைப்பற்றிய கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் கிடைக்கும். வரலாறு, இலக்கியம், அறிவியல் , ஆன்மீகம், மருத்துவம், சுயமுன்னேற்றம், கவுன்சலிங் என்று பலவிதமான கேள்விகள் வரும் . அவற்றிற்கு அவர் பதில் சொல்லும் பாங்கே தனி அழகு.
உதாரணத்திற்கு ஒன்று –
கேள்வி : ஐயா ! எனது இடது கையில் ஆறு விரல்கள் உள்ளன. நான் ஆபரேஷன் செய்து கொள்ளலாமா?
ஆபரேஷன் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ஒருமுறை எண்ணிப்பார்க்கவும்.
2.கீர்த்திவாசன் – பெருங்களத்தூர்.
இராயப்பேட்டை முனிவர் என யாரைச் சொல்கிறார்கள் ?
திரு.வி.க. அவர்களுக்கே இப்பெயர் உரியது.
இல்லறத்தார் நல்லறம் காட்டும் தன் தலைவர் என்றனர். பெண்கள் எங்கள் அரண் – காப்பு என்றனர். துறவோர் எங்கள் ராயப்பேட்டை முனிவர் என்றனர். “ இப்படி எல்லாரும் ஒரே முகமாகப்போற்றப் பெற்ற ஒரு மனிதரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காண்போமா என்பதும் தெரியவில்லை.
இன்னும் எத்தனையோ நினைவுகள் என் முன் வருகின்றன. இராஜாஜி, சீனிவாச ஐயங்கார் போன்ற தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், திலகர், காந்தி போன்ற வடநாட்டு அரசியல் தலைவர்கள், ஞானியார், கதிர்வேற் பிள்ளை போன்ற சமயத் தலைவர்கள், அறிவறிந்த தமிழ்ப் புலவர்கள். சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த, சமணத் தலைவர்கள், வாடியா போன்ற தொழிலாளர், அன்னிபெசன்ட், அசலாம்பிகையார் போன்ற பெண் தலைவர்கள் நாள்தோறும் அவரை நாடியும் தேடியும் வந்தும், கண்டும், கேட்டும், உணர்ந்தும், உணர்த்தியும், வாழ்ந்து காட்டியும் அவருடன் நின்ற நிகழ்ச்சிகள் பல. குள்ளச் சாமியார் என்ற (சண்முகானந்தா) துறவியார் கடைசிக்காலத்தில் அவருடன் கூடவே இருந்தனர். அவர்களுடன் பழகிய நிகழ்ச்சிகள்-பேசிய பேச்சுக்கள்-செயல்கள் பலவற்றை அவரே தம் வாழ்க்கைக் குறிப்பில் காட்டியுள்ளார், காட்டாதன பல.
இவ்வாறு எல்லாரும் எல்லா வகையிலும் போற்றப் பெற்ற வகையில் வாழ்ந்த இராயப்பேட்டை முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனாருக்கு நாம் நிலைத்த நினைவாலயம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். ” என்று டாக்டர் மு.வ. குறிப்பிடுகின்றார்.
3.திவ்யா ,சென்னை
தமிழிசைக்கும் இசைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டா ? இல்லை இரண்டும் ஒரே பொருளைத் தருகிறதா?
இரண்டும் ஒன்றல்ல. தமிழிலே பாடப்படும் எல்லாப் பாடல்களும் தமிழிசை. கர்நாடக , ஹிந்துஸ்தானி ராகங்களில் தமிழில் பாடினால் அது தமிழிசைதான். ஆனால் எப்படி இசைக்க வேண்டும் என்ற இலக்கணத்தைக் கூறும் தமிழ், இசைத்தமிழ். அது மூவகைத் தமிழான இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் ஆகியவற்றுள் ஒன்று. இசைத்தமிழ் பண் அதன் விரிவு, என்று இசையின் பல கூறுகளைக் கூறுவது. சங்க இலக்கியம் முதல் இவை பற்றிய செய்திகள் பல நூல்களில் உள்ளன. ஆனால் தமிழிசை பற்றி மிகுதியாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம். சென்ற நூற்றாண்டில் சுவாமி விபுலானந்தரால் படைக்கப்பெற்ற “யாழ் நூல்” தமிழிசை பற்றிய பல தகவல்களைத் தருகின்றது.
- “செம்பருத்தி”துரைராஜ்.
வடமொழியிலோ, மற்ற பிற இந்திய மொழிகளிலோ உள்ளதுபோல், க, ச, ட, த, ப எழுத்துக்களுக்கு நான்கு வகைப்பாட்டில் இல்லாமல் ஒரே எழுத்தக இருப்பது சிறப்பானதா, அல்லது சங்கடமானதா?
இதிலே சிறப்பும் ஏதும் இல்லை. தமிழ்ச் சொற்களை ஒலிக்க நான்கு வகைப்பாட்டியல் தேவையில்லை. எனினும் வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொண்டு எழுதும் போது அவை நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த சிக்கல் பற்றி. மகாகவி பாரதியார் கட்டுரையே எழுதியுள்ளார்.
“தமிழில் எழுத்துக் குறை”, தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்று இரண்டு கட்டுரைகள் பாரதியார் எழுதியுள்ளார். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து “கலைமகள்” பத்திரிகையில் வெளியிட ( பிப்ரவரி 1941) உதவியவர் பாரதி அன்பர் திரு வி.ஜி, சீநிவாசன்.
பிறமொழிச் சொற்களை உச்சரிக்க தாம் கண்டுபிடித்திருக்கும் குறிப்பு முறையைப் பற்றி இக்கட்டுரைகளில் பாரதியார் பிரஸ்தாபிக்கிறார். ஆனால் அவரது குறிப்புமுறை எங்கும் வெளியிடப் படாததால் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது நமது துரதிர்ஷ்டமாகும் என்று பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
5.ராஜா திருப்பூர்
கிருஷ்னணைக் கண்ணன் என்று கூறுகிறோம். கண்ணன் என்ற இந்தப் பெயர் எந்த இலக்கியத்தில்முதன்முதலாக வந்தது?
சங்க காலத்திலிருந்தே கண்ணன் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது.. முல்லைத் திணையின் கடவுளான தெய்வம் மாயோன் என்று அறிகிறோம்.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்குரவை பகுதியில் கண்ணனின் பல லீலைகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ அடிகள்.
.நப்பின்னைப் பிராட்டித் திருமணம், கண்ணன் குருந்தொசித்தது, குடக்கூத்தாடியது, ததிபாண்டனுக்கு வீடளித்தது போன்ற வரலாறுகள் வடமொழி இலக்கியங்களில் காணமுடியாது – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பழமொழி, ஆழ்வார் அருளிச் செயல்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் அஷ்டப்ரபந்தம் அகியவற்றில் உண்டு.
எந்த இலக்கியத்தில் கண்ணன் என்ற சொல் முதலில் வந்தது என்ற ஆய்வுகள் பற்றி நானறியேன். ஆனால் என்னைப் போன்ற பலர் கண்ணன் என்ற சொல்லை முதலில் அனுபவித்தது ஆழ்வார் திருப்பாசுரங்களில்தான்.
”ஆழிமழைக் கண்ணா” என்று மார்கழிமாதக் காலையில் ஆண்டாள் பாசுரத்தை எம்.எல்.வி குரலில் கேட்டதுதான் முதலில் நானறிந்த இலக்கியக் கண்ணன்.
6.சந்திரசேகர் பாஸ்டன்
பாரதியாரின் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடல் ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுஎன்ற ஒரு செய்தி உலவி வருகிறது ! இது உண்மையா?
பாடல் எழுந்த வரலாறு பற்றிப் பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள்.. பாவேந்தர் பாரதிதாசன் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின் படி நடத்தப்பட்ட போட்டியில் பாரதியாரை எழுதச் சொல்லித் தானும் நண்பர்களும் வற்புறுத்தியதாகவும், பாரதியார் முதலில் அப்போட்டியில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பிறகு தங்களின் வற்புறுத்தலால் எழுதினார் என்றும் எழுதியிருக்கிறார்.
பாரதியின் நண்பர் மண்டயம் சீனிவாசாச்சர்யாரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ என்னும் புத்தகத்தில் சென்னத் தமிழ்ச்சங்கம் ஒன்று போட்டியை நடத்தியதாகவும் பாரதியின் பாடலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் பாரதியைப் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லிக் கடிதம் எழுதிய டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியும், போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற தமிழறிஞர் அ. மாதவய்யாவும் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இரண்டு பேரும் குறிப்பிடுவது ஒன்றே என்பதால் இதையே சரியானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம். சோமசுந்தபாரதியா பாரதியின் தம்பி விஸ்வநாtதய்யருக்கு 7-3-1944ல் எழுதிய கடிதத்தில் இதைப் பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.
‘தமிழ் இளைஞர்களுக்கு தேசபக்தியூட்டும் சிறந்த தேசியப் பாடல்களுக்கு இரண்டு பரிசுகள் வழங்கப் போவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு எஸ் வி விசுவநாத ஐயர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். நாவலர் சோமசுந்தரம் பாரதிக்கு விஸ்வநாதய்யர் ஒரு கடிதம் எழுதி அவருக்குத் தெரிந்த நண்பர்களுக்குத் தெரிவித்துப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு எழுதும் படி வேண்டினார். அதன்படி சோமசுந்ததர் பாரதி பாரதிக்கும் விவேக பாநு அசிரியர் கந்தசாமிக் கவிராயர்க்கும் கடிதம் எழுதினார். நாவலரின் வேண்டுகோளின் படி பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே என்னும் பாடலை எழுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
போட்டியை விடுங்கள் . பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் பின்னும் நிற்கும் அப்பாடல் அழியா வரம் பெற்ற பாடலன்றோ!
- சுந்தரராஜன் சியேட்டில் சென்னைகோவில்களில் உங்களை மிகவும் ஈர்த்த கோவில் எது?
நான் தி.நகர் எனப்படும் சென்னை மாம்பலம் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டின் அருகே கிரிபித் ரோடில் ( தற்போது மகாராஜபுரம் சந்தானம் சாலை) உள்ள முப்பாத்தம்மன் ஆலயம்தான் என்னை இளவயதிலிருந்தே கவர்ந்த ஆலயம்.. நான் மாம்பலத்தில் வசிக்கின்ற காலம் வரை தினம் அக்கோவிலுக்குச் செல்வேன். பள்ளிக் காலத்தில் தேர்வு நேரங்களில் அம்மனை அருளை நம்பித்தான் எங்கள் மதிப்பெண்கள் இருந்தன. கோவிலிலும் மாணவ மாணவியர் கூட்டம் அலைமோதும்.
அந்தக் கோவில் பிராகாரத்தைச் சுற்றிவரும் போது நான் எழுதிய பாடல்களை “முப்பாத்தம்மன் பதிகம்” என்ற சிறுநூலாக 1972-ல் வெளியிட்டேன். அதுதான் என் முதல் கவிதை நூல்.
- ராமமூர்த்திலாஸ்ஏஞ்சலிஸ்
தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி உங்கள் கருத்து?
டோட்டல் வேஸ்ட்.. எந்த மொழியும் தனித்தியங்க முடியாது என்பது உலக வரலாறு. தனித்தமிழ் வேண்டும் என்று சொன்ன மறைமலையடிகள் உரைநடையைப் படிப்பது கடினம்.
தனித்தமிழ் மோகத்தில் அக்காலத்தில் ஜி.யூ. போப் போன்றவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பை தமிழ் வளர்த்த சான்றோருள் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்கள் தனது நூலில் கடுமையாகச் சாடியுள்ளார். பிரிட்டனில் உள்ள “காண்டர்பரி” என்ற இடத்தை “கந்தர்புரி” என்று போப் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டி , இது போன்ற தனித்தமிழ் பித்து தேவையில்லை. பிறமொழி உச்சரிப்பை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளோடு தமிழில் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர் கருத்து.
- சந்திரமோகன்சென்னை
கம்ப ராமாயணம் போல வில்லி பாரதம் அதிகம் பிரபலமாகவில்லையே! ஏன்?
ஒரு கவிச்சக்கரவர்த்தியோடு வேறு யாரையும் ஒப்பிட முடியாது. கம்பனுக்கு நிகர் கம்பனே
மேலும் . கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார். அதுபோல் தமிழகம் எங்கும் கம்பன் கழகம் பல்வேறு ஊர்களில் பலரால் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கம்பன் இரசிகர்களை அது உருவாக்கியது. கம்பன் புகழ் காட்டுத்தீயாய்ப் பரவியது.
வில்லிப்புத்தூரார்க்கோ அல்லது அவர் படைத்த பாரதத்திற்கோ இது போன்ற வாய்ப்பு அமையவில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களிலும் கூத்துகளிலும் பாரதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவேதான் எளிய மக்களுக்காக எழுதிய பாரதி “பாஞ்சாலி சபதம்” படைத்தான். இன்றும் புத்தாண்டில் கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிப்பதும், பிறகு பாரதம் படிப்பதுமாகிய மரபு தொடர்கிறது.
10.சூரியநாராயணன், சென்னை.
சிறுகதைக்கும் நாவலுக்கும் என்ன வித்தியாசம் ?
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் பலர் சிறுகதை , நாவல் (புதினம்) இரண்டும் படைத்துள்ளனர். பலர் அதன் இலக்கணம் பற்றியும் எழுதியுள்ளனர். நான் அப்படி விளக்கப் போவதில்லை.
சிறுகதை என்பது ஒற்றைப்பழம் போல – வாழைப்பழம், மாம்பழம், போல..
நாவல் என்பது பலாப்பழம் போல பழம் ஒன்றுதான் உள்ளே பல சுளைகள் இருக்கும். ( ஆனால் ஒவ்வொரு சுளையிலும் சுவை மாறுபடும்)
சரி நாவல்பழம் என்றால் என்ன என்கிறீர்களா ? ஒளவையைத்தான் கேட்கவேண்டும்.
முத்தான கேள்விகளை தெரிந்தெடுத்துத் தொடுத்த குவிகத்திற்கும், சத்தான பதில்களை நகைச்சுவை கலந்து வழங்கிய வ.வே.சு அவர்களுக்கும் பாராட்டுகள் பல. தவிர பல தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கிறது.
வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகள்.
LikeLike
சிறுகதை மாம்பழம், நாவல் பலாப்பழம் என்று எளிமையாக வகைப்படுத்திய வவேசு ஒரு ஞானப்பழம்!
LikeLike