
மகள் கல்யாணத்திற்குப் பத்து நாட்கள் விடுமுறையில் இருந்து விட்டு அன்றுதான் அலுவலகம் வந்தேன். டேபிள் ஓரத்தில் பைல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஜோனல் மேனேஜர் என்பதால் முக்கிய முடிவுக்கான பெரும்பாலான விஷயங்கள் நோட் போட்டு என்னுடைய முடிவுக்கு வரும். எங்கள் வங்கி, அளவில் சிறியது, வளர்ந்து வரும் வங்கி.
பி ஏ விடம் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொல்லிவிட்டு வங்கி வேலையைத் தொடங்கினேன். வங்கி சேர்மன் ஆபிஸில் இருந்து ஒரு கடிதம் மேலே இருந்தது, அத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு ஊழியரின் கடிதம். அந்த ஊழியர் வங்கிச் சேர்மனுக்கு எழுதி இருக்கிறார். என் கவனத்திற்கு என்று வங்கிச் சேர்மன் எனக்கு அனுப்பி இருந்தார். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் விசாரணை முடிந்து தீர்வு ஏற்பட்ட பின் மேல்முறையீடு இருந்தால் தான் என் கவனத்திற்கு வரும்.
அவருக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ் சீட்டில் அவர் மேல் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் சேர்மனுக்கு எழுதிய கடிதத்தையும் படித்தேன். நீண்ட ஆலோசனைக்கு பின் அடுத்த வாரத்தில் ஒரு தேதியை குறிப்பிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியரையும் கிளை மேலாளரையும் நேரில் விசாரணைக்கு வருமாறு அழைத்தேன்.
சஸ்பென்ஷன் கொடுத்த ரீஜனல் மேனேஜரை ஃபோனில் அழைத்து காரணம் என்னவென்று விசாரித்தேன்.
மேனேஜர் சொன்ன வேலையைச் செய்யாமல் அவரை எதிர்த்துப் பேசினார் என்று கிளை மேலாளர் போனில் கூறினார். மேனேஜர் உத்தரவுக்குக் கீழ்படிந்து வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்தேன் என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் மேனேஜர் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து நீங்கள் சஸ்பெண்ட் செய்தது சரியா நீங்கள் சஸ்பெண்ட் செய்வதற்கு முன்னால் அந்த குற்றம் சாட்டப்பட்டை ஊழியரை விசாரித்திருக்க வேண்டும் அல்லது யாராவது ஒரு மேலதிகாரியை அனுப்பிக் கிளையில் அந்த ஊழியரிடம் நடந்தது பற்றி கேட்டு விஷயத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம் .
மேனேஜர் சம்பந்தப்பட்ட ஊழியர் கீழ்படியவில்லை என்று சொன்ன காரணத்தை வைத்துக்கொண்டு மட்டும் உடனே சஸ்பெண்ட் செய்தது சரியா என்று அவரிடம் விசாரித்தேன். சரியான பதில் இல்லை, சரி என்று போனை வைத்து விட்டேன்.
விசாரணை அன்று முதலில் கிளைமேளாளரை கூப்பிட்டேன். நடந்த விவரங்களைக் கூறும்படி கேட்டபோது, “நான் அலுவலக நேரத்தில் சொன்ன வேலையை செய்யாமல் என் அறைக்கு வந்து மிரட்டும் தொனியில் , கவுண்டரில் வைத்து அத்தனை பேருக்கும் முன்னால் நீங்கள் இந்த வேலையைச் செய்யச் சொல்லி இருக்கக் கூடாது என்று கூறினார். ஒரு சீனியர் ஊழியர் இந்த மாதிரி சொன்னால் நான் மற்றவர்களை எப்படி வேலை வாங்க முடியும்.
எனவே மேலதிகாரிக்கு கீழ்ப்படிய மறுக்கிறார் என்று சொல்லி கம்ப்ளைன்ட் செய்தேன்”.
நீங்கள் இந்த கிளைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகிறது”.
“மூன்று மாதங்கள்ஆகிறது சார்” . “மூன்று மாதத்தில் சார்ஜ் எடுத்து கிளையைப் பற்றியும் கிளையில் உள்ள எல்லா ஊழியர்களை பற்றியும் அறிந்து கொண்டீர்களா?”.
“ஆமாம் சார்”.
“நீங்கள் என்ன வேலையை செய்ய சொன்னதற்கு அவர் அந்த பதிலை கூறினார்”.
தான் சொன்ன வேலையை கூறினார்.
சரி என்று அவரை வெளியில் சென்று உட்காரும்படி கூறிவிட்டு குற்றம் சாட்டப்பட்ட ஊழியரை அழைத்தேன்.
” உட்காருங்கள்”. அவர் பைலைப் புரட்டினேன். வாரா கடன் வசூலில் அவருடைய பங்களிப்பையும் டெபாசிட் கேன்வாஸிங்கில் அவருடைய ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டும் வகையில் பல பாராட்டு கடிதங்களின் நகல்கள் இருந்தன.
“உங்கள் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன”.
” சார் அன்று நான் கவுண்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மேனேஜர் சார் வந்து குறிப்பிட்ட வேலையை கூறி தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்பதாகவும் உடனே பட்டியல் தயார் செய்யும்படி கூறினார். அந்த இடத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தனர். மேனேஜர் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார்.
நான் சிறிது நேரம் கழித்து அவர் அறைக்கு சென்று, “சார் நீங்கள் சொன்ன வேலையின் முக்கியத்துவம் கருதி தயவு செய்து கவுண்டரில் வாடிகையாளர்களின் முன்னிலையில் கூற வேண்டாம் என்னைத் தனியா அழைத்து அந்த வேலை கூறி இருக்கலாம் என்றேன்.
நீங்கள் நினைத்தபடி எல்லாம் நான் வேலை செய்ய முடியாது. எனக்கு உள்ள பிரஷரில் நான் உடனே வேலையை ஆரம்பிக்க உங்களை அழைத்தேன். வேலையை கொடுத்தால் செய்ய வேண்டியது உங்கள் கடமை. உங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் நான் நடக்க முடியாது. சொன்ன வேலையை செய்யவில்லை என்று நான் ரிப்போர்ட் பண்ணி கொள்கிறேன். நீங்கள் போகலாம் என்றார்.
என்னிடம் வாராக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் தாரர்களின் பட்டியல் கொடுக்காததால் அது சம்பந்தமான ஸ்டேட்மென்ட் எதையும் என்னால் தயாரிக்க முடியவில்லை.
மூன்றாம் நாள் காலை நான் வந்தவுடன் என்னை கூப்பிட்டு சஸ்பென்ஷன் ஆர்டரை கொடுத்தார்.
“சார் நான் தவறாகப் பேசவில்லையே, வேலை செய்ய மறுக்கவும் இல்லை. அதை காரணம் என்று கூறி என்ன சஸ்பெண்ட் செய்திருக்கிறீர்கள் என்றேன்” .
“நீங்கள் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம் போகலாம்” என்றார். “
சார் நான் அந்தக் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இதுவரை என் மேல் எந்தப் பழியும் வந்தது கிடையாது, நானும் வங்கியின் நேரம் போக காலையில் மாலையிலும் மேனேஜர்களுடன் டெபாசிட் சம்பந்தமாகவும் கடன் வசூல் சம்பந்தமாகவும் வெளியில் சென்று வருவது, என்னுடைய வாடிக்கையான ஒன்று. மேனேஜர் வந்து மூன்று மாதம் ஆகிறது. இவரிடம் சுமூகமாகவே இருந்தேன் என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை.
சார், உங்களுக்கு தெரியாததில்லை, வங்கியில் வாராக்கடன் பெருகி வருகிறது. நாம் வாராக்கடனும் வசூல் செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களில் பலர் வசதி இருந்தும் கடனைத் திரும்பச் செலுத்துவதில்லை. மேனேஜர் சார் வாராக்கடன் தள்ளுபடி சம்பந்தமாக பட்டியல் தயாரிக்கக் கவுண்டரில் சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது. கடன் தள்ளுபடி பற்றி பலர் முன்னிலையில் வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணத்தில் தான் தனியாக சந்தித்துக் கூறினேனே தவிர, வேறு ஒன்றும் இல்லை. வேலை செய்ய மாட்டேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. வங்கியின் நலன் கருதி கடன்காரர்கள் திருப்பி செலுத்தும் எண்ணம் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தான் நான் அவரிடம் கூறினேன் என்றார்.
சரி நீங்கள் சென்று வாருங்கள் என்று அனுப்பினேன்.
மாலை 4:00 மணி மேனேஜரை அழைத்தேன். “எவ்வளவு நாளா மேனேஜரா இருக்கீங்க”. “இப்ப மூணு மாசம் தான் சார் ஆகுது”.
“சரி, நீங்க வேலை சொன்னபோது அவர் அங்கேயே உங்களிடம் விவாதித்தாரா? “.
” இல்லை சார், ரூமில் வந்துதான் நான் கவுண்டரில் வந்து அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்றார். நான் வேலை சொல்லும் போது உடனே செய்யாமல் எனக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அவர் பேசியதால் கீழ்ப்படியாமை என்ற குற்றச்சாட்டிற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ரீஜனல் மேனேஜர் அவர்களுக்கு அன்றே போனில் கூறினேன். விரிவாகக் கடிதம் அனுப்பினேன்”.
“நீங்கள் குறிப்பிட்ட வேலையை கவுண்டரில் நின்று பல வாடிக்கையாளர்களுக்கு முன் நீங்கள் சொன்னபோது அவர் உங்களிடம் விவாதம் செய்யவில்லை.
உங்கள் அறைக்கு வந்து நீங்கள் தனியாக இருந்தபோது நீங்கள் சொன்ன வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அது வெளியில் நின்ற வாடிக்கையாளர்களுக்கு தெரிந்தால், அதனால் வங்கிக்கு ஏற்படும் இழப்பு கருதியே உங்களிடம் கூறியுள்ளார். உங்களிடமும் அதை கூறினார் அல்லவா? “.
” ஆமா சார் “.
” நீங்க சொல்ற வேலையை செய்யாமல் உங்களுக்கு அறிவுரை சொன்னதாக நீங்க டென்ஷன் ஆயிட்டீங்க.
அவருக்குச் செய்யச் சொன்ன வேலைக்கான விவரங்களைக் கொடுத்தீர்களா? தேவையில்லாமல் டென்சன் ஆகி ஈகோ பிரச்சனையால் எல்லாம் நடந்து விட்டது. அவர் சொன்னதைப் அமைதியாக உட்கார்ந்து ஈகோ இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.
நமக்கு வங்கி தான் முக்கியம். வங்கி வேலையில் ஈகோ பிரச்சனையே வரக்கூடாது. வங்கியில் உயர் பதவியில் இருந்து துப்புரவு தொழிலாளி வரை அனைவரும் வங்கியைப் பாதுகாப்பதில் முக்கியமானவர்கள் தான்”.
“நீங்கள் கவுண்டரில் சொன்னது வெளியில் கடன்காரர்கள் மத்தியில் பரவினால் வங்கியின் கதி என்னவாகும்.
நீங்கள் மேனேஜர் பதவிக்கு புதியவர். மேலே இருந்து வேலை சொன்னாலும் இடம் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். உங்கள் டென்ஷனை உடனே மற்றவர்களிடம் காட்டக்கூடாது. உங்க கஷ்டம் எனக்கு தெரியுது,
நீங்கள் கிளையின் மேனேஜர் என்பதை மறந்து சக ஊழியர்களிடம் பழகுங்கள். வேலை வாங்குங்கள். நீங்களும் நன்றாக வருவீர்கள். ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன்.
சேர்மன் சார் அவர்களுக்கு ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து, விஷயத்தை இத்துடன் முடித்துவிடலாம் என்றும், என்குயரி பனிஷ்மென்ட் எதுவும் வேண்டாம் என்றும், மேனேஜரை மட்டும் அவர் சர்வீஸ் கருதி சிறிய சைஸ் கிளைக்கு அதிகாரியாக மாற்றலாம் என்று கூறி ஊழியர் மேலிருந்த சஸ்பென்ஷன் உத்தரவை கேன்சல் செய்து திரும்பவும் வேலைக்கு சேர அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தேன்.
சரியாக விசாரிக்காமல் அவசர கதியில் சஸ்பென்ட் செய்யக் கையெழுத்து போட்ட ரீஜனல் மேனேஜரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்தேன். நிறுவனம்தான் முக்கியம் தனிமனிதன் நல்ல நிர்வாகி இல்லை என்றால் நிறுவனம் பாழாகிவிடும்.