முதல் காண்டம் – அக்கிலிஸின் கோபம்
டிராய் தேசத்தின் மன்னன் பிரியம். அவன் மகன் பாரிஸ் கிரேக்க நாட்டு மன்னன் மெலிசியஸின் மனைவியும் உலகப் பேரழகியுமான ஹெலனைக் கடத்திக் கொண்டு வர, துவங்கியது கிரேக்க நாட்டுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே மாபெரும் யுத்தம்.
மெலிசியஸின் சகோதரன் அகமெம்னன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்களில் கிரேக்கப்படை புறப்பட்டது. கிரேக்கப்படைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல டிராய் நாட்டுப் படை. டிராய் நாட்டின் முக்கிய நகரமான இலியம் கோட்டையைக் கிரேக்கப் படை முற்றுகை இட்டது. பத்து ஆண்டுகளாக இரு பெரும் நாடுகளுக்கிடையே யுத்தம் தொடர்ந்து நடை பெற்றது.
அது மட்டுமல்ல. கடவுளர்களும் இந்த யுத்தத்தில் பங்கேற்றனர். சிலர் கிரேக்கர் பக்கம். சிலர் டிராய் பக்கம். அதனால் போரின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
கிரேக்கப் படையில் மாபெரும் வீரன் அக்கிலிஸ். இலியட் கதையின் நாயகன்.
அவனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து கிரேக்க மன்னன் மெலிசியஸ் மட்டுமல்ல, டிராய் நாட்டுப் போருக்கு கிரேக்க சேனாதிபதியாக விளங்கும் அகமென்னனும் பொறாமையில் துடித்தான்.
இனி ஹோமரின் அடிச்சுவட்டில் நம் பாணியில் கதைக்குள் செல்வோம்….
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கிரேக்க மாவீரன் அக்கிலிஸ் கோபாவேசத்துடன் தனது கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலில் குதித்தான். கரைய நோக்கி நீந்தத் தொடங்கினான். அலைப் பிரவாகம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அலைகளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மூச்சிலிருந்து வெப்பக் காற்று பாம்பின் மூச்சு போல வந்து கொண்டிருந்தது. அலைகள் குளிர்ந்த தண்ணீரை அவன் மீது மிகுந்த வேகத்துடன் வாரி இறைத்த போதிலும் அதனால் அவனைக் குளிர வைக்க முடியவில்லை. கரைக்கு அருகில் உள்ள பெரிய பாறையில் அமர்ந்தான். அலைநீர் பாறையை மூழ்கடிப்பதும் பின்னர் வடிவதுமாக இருந்தது. அலைநீரை லட்சியம் செய்யாமல் அமர்ந்திருந்தான். அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்திருக்கும் நேரம் அது.
கிரேக்கர்கள் நடத்தும் இந்தப் போருக்கு அவர்களுக்கு உதவுவதற்காக வந்ததை எண்ணி மிகவும் வேதனைப் பட்டான்.
” தீட்டீஸ் தேவதையின் திருமகன் நான். வீரத்தில் என்னை மிஞ்சக் கூடியவன் எவனும் இந்த மண்ணுலகில் பிறக்கவில்லை. அப்படியிருக்க ஏன் இவர்களுக்கு உதவும்படி அதீனி தேவதை எனக்கு ஆணையிட்டாள்? அதுவும் இந்த அகமெம்னன் சேனாதிபதியாக இருக்கும் படையில் அவனுக்குக் கீழே பணிபுரிவதைவிடக் கேவலம் ஒன்றுமில்லை.
குறுக்குத் தந்திரத்தில் தலைவன் ஆனவன் அகமெம்னன். என்னுடைய வாளுக்கு முன்னால் அவனால் சிறிது நேரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. பத்து ஆண்டுகளாக இந்த டிராஜன் முற்றுகையை நடத்திக் கொண்டிருக்கிறான். இலியம் கோட்டையை மோதி உடைத்து உள்ளே சென்று வீரத்துடன் போரிட உத்தரவு தராத இவனெல்லாம் ஒரு தலைவனா? கோட்டைக்கு வெளியே இருக்கின்ற சிறு நகர்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து சுகபோகமாக இருக்கும் இவர்களால் எப்படி டிராய் நகரைக் கைப்பற்றி பாரிசிடமிருந்து ஹெலனை மீட்க முடியும்? அதுவும் டிராய் நகரத்தின் மூர்க்க இளவரசன் கோர அரக்கன் ஹெக்டரை இவர்களால் வெல்ல முடியுமா? “
அப்படி எண்ணும்போது அவனுக்கே சிரிப்பு வந்தது. அதற்காகத்தானே இவர்கள் என்னைக் கூட்டி வந்திருக்கிறார்கள். கடவுளர் சொன்னால்தான் கட்டுப்படுவேன் என்று தெரிந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி என்னை இவர்களுடன் சேரும்படி செய்துவிட்டார்கள். நான் மறுக்க முடியாத கடவுளிடம் இருந்த வந்த கட்டளை இது.
இன்னும் கொஞ்ச நேரம் இதே கோபாவேசத்துடன் இருந்திருந்தான் என்றால் அந்தக் கடலின் அலையெல்லாம் வற்றிப்போய் புகை மண்டலமாகியிருக்கும். அப்போது இரு தளிர்க்கரங்கள் அவனுக்குத் தெரியாமல் பாறையின் பக்கவாட்டில் வந்து அவன் உடலை இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டன. கண்களைத் திறக்காமலேயே அவள் யார் என்பதை நன்கு உணர்ந்தான் அக்கிலியஸ். அவளது குளிர் மேனி தந்த சுகம் அவனது வெப்ப உள்ளத்துக்கு இதமாக இருந்தது. ஒரு கையால் அவனது இடையைப் பற்றி அணைத்த அந்தப் பேரழகி மறு கையால் அவனது தலையைக் கோதி அவனுக்கு ஆறுதல் தர முயன்றாள். எவ்வளவு நேரம் அந்த நெருக்கம் நீடித்தது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவது போல அவனது கோபமும் அவள் அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதைப் போலத் தோன்றியது.
அவள் பிரிஸிஸ். அந்தப் பிராந்தியத்தில் அழகும் அறிவும் நிரம்பிய இளவரசி. அவள் நாட்டுடன் கிரேக்கப் படை போரிட்டபோது அவளுடைய நாடு வீழ்ந்தது. அதில் அடிமையாக இழுத்துவரப்பட்ட இளவரசி அவள். தலைவர் அகிலியஸுக்குத் தகுதியான அடிமை என்று அவளை அவனிடம் கொடுத்தார்கள். தனக்கு அடிமையாக வந்த இளவரசியைக் கண்ட அக்கிலிஸ் அவளுடைய அழகுக்கு அடிமையானான். தனக்குப் போரில் கிடைத்த மாபெரும் பரிசு பிரிஸிஸ் என்று எண்ணினான்.
“என் கோபத்தைக் குறைத்த உன்னை எப்படிப் பாராட்டினாலும் தகும் பிரிஸிஸ்” என்று கூறினான் அக்கிலிஸ்.
” வீரர்களின் கோபத்தைக் குறைப்பது தவறு. அது அவர்களைக் கோழைகளாக்கிவிடும். அவர்கள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கவேண்டும். நான் குறைத்தது உங்கள் கோபத்தை அல்ல , ஆத்திரத்தை”
” உண்மை பிரிஸிஸ். ஆத்திரம் எந்த வீரனையும் அழித்துவிடும். என் கோபம் ஆத்திரம் எல்லாம் அந்த அகமெம்னன் மீதுதான். அவன் கப்பலில் இன்று ஒரு முக்கியமான மந்திராலோசனை நடக்க இருக்கிறது. நான் போகாமலிருக்க முடியாது. ஆனால் நான் போனால் என் கையால் அந்தத் திமிர் பிடித்த அகமெம்னனைக் கொன்றாலும் கொன்றுவிடுவேன். அதன்பின் கடவுளர் கோபத்துக்கு நான் ஆளாக நேரிடும். அதுதான் என் கோபத்தை ஆத்திரமாக மாற்றியிருக்கிறது. “
“மாவீரரே! இன்றைய மந்திராலோசனை என்னுடன் பிடிபட்ட அர்ச்சகர் கிரைசிஸின் மகள் கிரீஸஸ் பற்றியதுதானே! எனக்கு வீர புருஷர் நீங்கள் கிடைத்தீர்கள்! அதை என் பாக்கியமாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவளையோ அகெம்னனக்கு அடிமையாக அனுப்பினார்கள். அவள் துடிதுடித்துப் போனாள். அவள் என் நெருங்கிய சினேகிதி. அவளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொண்டேன். நீங்கள் அகெம்னனக்கு அறிவுரை கூறினீர்கள். அவன் கேட்க மறுத்துவிட்டான். பின்னர் உங்கள் உதவியால் அப்பல்லோ தேவனின் அர்ச்சகரான அவளது தந்தைக்குத் தகவல் அனுப்பி மீட்புத் தொகையுடன் வரச் சொன்னோம்.
அவரும் அப்பல்லோ அளித்த நம்பிக்கையில் பெரும் பொருளைக் கொண்டுவந்து அகெம்னனிடம் கொடுக்க வந்தார். ஆனால் அகெம்னன் அவரது மீட்புத் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ‘ உன் மகள் ஆயுள் முழுவதும் என் அடிமையாகவே இருந்து உயிரை விடுவாள்’ என்று அவரை விரட்டிவிட்டான்.
அவரும் அப்பல்லோவிடம் ‘ உன் பக்தனுக்கே இப்படி அநீதி நடக்க விடலாமா’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டதும் அப்பல்லோ கோபமுற்று கிரேக்கப் படை மீது கொள்ளை நோயை ஏவிக் கடந்த பத்து நாட்களாக உங்கள் படைகளை அழித்துக் கொண்டிருக்கிறார்.
இனி இந்த நோயால் படை வீரர்கள் அழிந்தால் டிராய் நாட்டுடன் போரிட வீரர்களே இல்லாமல் போய் விடுவர் என்பதை அறிந்த அகெம்னன் இப்போது மந்திராலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு நீங்கள் போவதா வேண்டாமா என்பதுதானே உங்கள் பிரச்சினை.?”
” அழகாகச் சொன்னாய் பிரிஸிஸ்! இன்று நான் போனால் ஒன்று என்னால் அவன் அழிவான். அல்லது அவனால் எனக்கு மாபெரும் தீங்கு வரும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. “
” நீங்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டும். ஆத்திரத்தைக் குறைத்துக் கொண்டு, கோபத்துடன் செல்லுங்கள். என் சினேகிதி கிரீஸிஸ் அவள் தந்தையுடன் சேரவேண்டும். நீங்கள் வலியுறுத்தினால் இது கட்டாயம் நடக்கும். உங்கள் தயவின்றிக் கிரேக்கப்படைகள் டிராய் நகரை வெல்லுவது முடியாத காரியம். அதுமட்டுமல்ல நீங்கள் மனிதரில் கடவுள் , கடவுளரில் மனிதர். உங்களை அழிக்க யாராலும் முடியாது. நீங்கள் அகெம்னன் கப்பலுக்குப் புறப்பட்டு அந்த மந்திராலோசனையில் உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள்! “
இப்படி ஆலோசனை கூறிய அந்த அழகி அவன் இதழில் ஆசை ததும்ப முத்தம் ஒன்று கொடுத்தாள். அதுவும் வெகுநேரம் நீடித்தது. பெரிய அலை ஒன்று அவர்கள் பாறையை நீர்த்திவலைகளால் மூழ்கடித்தது.
பாவம் அவளுக்குத் தெரியாது அதுதான் அவள் அவனுக்குத் தரும் கடைசி முத்தம் என்று!
(தொடரும்)