அடுத்த வாரம் வைதேகியின் ஸ்ரார்த்தம். வாத்தியாருக்கு போன் பண்ணி ‘ரிமைன்ட்’ பண்ணியாகி விட்டது. சமையல் மாமியும் அவளே போன் பண்ணி, ‘காத்தால ஏழு மணிக்கு டான்னு வந்துடறேன் மாமா’ என்று சொல்லிவிட்டாள். காய்கறி, பழம் எல்லாம் முந்தின நாள் வாங்கிக் கொள்ளலாம், போதும். மாமிக்குப் புடவை, வாத்தியார்களுக்கு வேஷ்டி எல்லாம் வாங்கியாகி விட்டது. ‘காக்கும் கரங்கள்’ இல்லத்திற்கும் அன்று எல்லோருக்கும் ஸ்பெஷல் லஞ்ச்சுக்கு பணம் அனுப்பி விட்டதாக வசுதா சொன்னாள் .
ராஜாராமன் ஊஞ்சலில் ஆடியபடியே ஒவ்வொன்றாக மனதில் லிஸ்ட் போட்டார். இது ஆறாவது வருஷம். நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடி விடுகின்றன.
நீ எங்க போன வைதேகி ? இப்போ எங்க இருக்கே ? பித்ரு லோகத்தில் இருந்து வருஷா வருஷம் வந்து சாப்டுட்டு போறியா ? எங்க மேல உயிரா இருந்தியே, எங்களை எல்லாம் நெனைச்சிக்கிறயா? ஏதேதோ கேள்விகளை அவளிடம் கேட்பது போல் மனதுள் கேட்டுக் கொண்டார்.
இல்ல இல்ல, நீ வைகுண்டத்தில அந்த பகவான் கிட்ட சந்தோஷமா கதை கேட்டுண்டு, பாட்டு பாடிண்டு இருப்ப, என்று அவரே கேள்விகளுக்குப் பதிலும் சொல்லிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.
வசுதா நாளை வருகிறாள். இந்த முறை இந்தியா வருவதற்கு டிக்கெட் புக் பண்ணும் போதே, அம்மா தெவசத்திற்கு இருக்கா மாதிரி வரேன்பா என்று சொல்லி இருந்தாள். அவள் மட்டும்தான் வருகிறாள். மாப்பிள்ளையும் பேரனும் ஆபீஸ் , ஸ்கூல் என்று பிஸி.
நான் கொஞ்ச நாள் லீவு போட்டிருக்கேன், கொஞ்சம் சென்னைலேந்து ஒர்க் பண்றேன்னு சொல்லி இருக்கேன்’ என்றாள். ஒரு மாதமாவது இருப்பதாக பிளான். ஆனால் எந்த பிளானும் நடக்கும் வரை நிச்சயம் இல்லை. அதுவும், இந்த கொரோனா காலத்தில், எப்போ லாக்டவுன், எப்போ ப்ளைட் கான்சல், என்பதெல்லாம் பகவானுக்குத் தான் வெளிச்சம்.
இந்த முறை வரும் போது வீடு பற்றி பேசி ஒரு முடிவு எடுத்து விட வேண்டும். எவ்வளவோ முறை பேசியாகி விட்டது. இனிமே புதிதாக பேச என்ன இருக்கிறது? வீட்டை விற்று விட வேண்டியதுதான். வீட்டை வித்துட்டு என்னோட வந்துடுங்க அப்பா , என்று அவளும் அதைத் தான் சொல்லப் போகிறாள். அந்த பிளானோடுதான் ஓரிரு மாதங்கள் இருக்கும் படி வருகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் வாழ்ந்த வீடு. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? எல்லா பந்தங்களும், உறவுகளும் என்றாவது ஒரு நாள் முடிந்துதானே போகின்றன. அதுவும் வீடு போன்ற ஒரு உயிரில்லாத ஜடப் பொருளின் மேல் என்ன பெரிய பந்தம், ஓட்டுதல் ? ஆனால், அப்படி நினைத்ததுமே வைதேகியின் ஞாபகம் வந்தது. அவள் அதை ஒத்துக் கொள்ள மாட்டாள். ‘வீடு ஒன்னும் ஜடப் பொருள் இல்ல. அதுக்கும் உயிர் இருக்கு’, என்பாள்.
கும்பகோணத்தில் அவளைப் பெண் பார்க்க போன போது ‘உனக்கு என்ன பிடிக்கும் வைதேகி?’ என்ற அவன் கேள்விக்கு, ‘எனக்குப் தோட்டம் வெச்சு, ஊஞ்சல் இருக்கற வீடு ரொம்ப பிடிக்குங்க’ என்று வெகுளியாக பதில் சொன்னவள்.
கல்யாணம் முடிந்து சென்னை வந்த பிறகும் எங்கு வெளியில் போனாலும், ‘இந்த வீடு ரொம்ப அழகா இருக்குல்ல, வாசல்ல எவ்வளவு செம்பருத்தியும், ரோஜாவும் வெச்சிருக்காங்க; அந்த நாலாவது வீடு நல்லாவே இல்ல, முன்னாடி எடமே விடாம பில்டிங் கட்டியிருக்காங்க, அந்த கோடி வீட்டு பங்களா அவளோ பெருசா இருக்கே, எவ்வளோ கிரௌண்ட் இருக்கும்’ என்று சதா வீடு புராணம் தான். உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குப் போனாலும், அவர்கள் வீட்டையும், அதை அலங்கரித்திருக்கும் விதத்தையும் கூர்ந்து கவனிப்பாள். மனம் திறந்துப் பாராட்டுவாள்.
கல்யாணமான புதிதில் மந்தைவெளியில் ஒரு சிறிய வாடகை வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால், அவள் மனம் போலவே, அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகில், இந்த வீடு விற்பனைக்கு வந்தது.
சதுர வடிவில் ஒன்றரை கிரௌண்ட் நிலம். வாசல் கேட்டுக்கு அருகே ஒரு வேப்பமரம். உள்ளே நுழைந்ததும் ஒரு சின்ன வெராண்டா. பெரிய ஹால். அதன் சீலிங்கில் இரு கொக்கிகள் மாட்டி வளைந்து நெளிந்த கம்பிகளில் தொங்கிய அழகிய மர ஊஞ்சல். இரு பக்கமும் ரெண்டு ரூம்கள். பக்கத்திலே கிச்சன். கொல்லைப் புரத்தில் ரெண்டு தென்னை மரங்கள்.
ஊஞ்சலைப் பார்த்ததும் வைதேகியின் கண்கள் பெரிதாக விரிந்து அவள் முகம் மலர்ந்ததை ராஜாராமன் கவனித்தான்.
அவளுக்குப் பிடித்துவிட்டது.
“அவங்க சொல்ற விலை ரொம்ப அதிகமா இருக்கேங்க, நம்பளால வாங்க முடியுமா ?”
“மந்தவெளி ஏரியாக்கு இந்த ரேட் ரொம்ப நியாயமானதுதான், வைதேகி. பத்து நிமிஷம் வேகமா நடந்தா கபாலீஸ்வரர் கோயில். இந்த பக்கம் பெருமாள் கோயில். பக்கத்திலேயே ராமகிருஷ்ணா மடம், பீச். இது மாதிரி சென்ட்ரல் ப்லேஸ்ல அமையாது, எப்படியோ சமாளிச்சு வாங்கிடலாம்”, என்றான். இதையெல்லாம் வெளிப்படையான காரணங்களாக சொன்னானே தவிர, அவள் ஆசைப்பட்ட மாதிரி ஒரு வீட்டில் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு அதில் இருந்தது. அது வைதேகிக்கும் புரிந்தது.
நாம் மிகவும் ஆசைப்பட்ட பொருள் கையில் கிடைக்கும் போது அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அப்படியே அனுபவித்தாலும் கொஞ்ச நாட்களில் அந்த ஆசையும் மோகமும் போய் ஒருவித சலிப்புத்தன்மை வந்து விடுகிறது.
ஆனால், வைதேகி அதற்கெல்லாம் ஒரு விதி விலக்காக இருந்தாள்.
வீட்டின் ஒவ்வொரு அடியையும், ரசித்து ரசித்து அழகுப்படுத்தினாள். ஹாலில் இருக்கும் ஊஞ்சல் போதாது என்று வாசல் வெராண்டாவிலும் ஒரு ஊஞ்சல். வீட்டைச் சுற்றிப் பூச் செடிகளும், கொய்யா, மாமரம், வாழையும், காய்கறி தோட்டமும் எல்லாம் அவள் கை வண்ணத்தில் மின்னின.
பண்டிகை நாட்களில் வாழை இலையில் தான் சாப்பாடு. தாம்பூலம் போட வசதியாக வெத்திலை கொடி கூட வீட்டில் இருந்தது.
பால்காரன் முதல் கீரைக்காரிவரை யார் வந்தாலும், வாசலில் உள்ள ஊஞ்சலில் வைத்துதான் வியாபாரம் நடக்கும். அவர்களின் குழந்தைகளோ, ஏன் சில சமயம் பெரியவர்களே கூட ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடி விட்டுதான் போவார்கள். அவர்கள் சந்தோஷத்தை வைதேகி ரசிப்பாள்.
கிரஹப்பிரவேசம் செய்த நாள் முதல் அவள் வாழ்ந்த கடைசி நாள் வரை, அந்த வீட்டின் மேல் அவளுக்கு இருந்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.
வீட்டிற்கு ‘ஸ்ரீ நிகேதம்’ என்று பெயர் வைத்தது கூட அவள்தான். ஆனால், எல்லோரும் ‘ஊஞ்சல் வீடு’ என்றே அழைக்க, அதுவே அந்த வீட்டிற்கு ஒரு அடையாளமாகி நிலைத்து விட்டது.
அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு வாசலில் இருக்கும் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி விட்டு கிச்சனுக்குள் நுழைந்தால் என்றால் மதியம் வரை ஓயாமல் வேலை செய்து கொண்டு இருப்பாள். வாசலில் அவள் போடும் கோலத்தை வைத்தே அன்று என்ன விசேஷம் என்று சொல்லி விடலாம்.
இப்போது கோலம் இல்லாத வாசலையும், குப்பை மண்டிக் கிடக்கும் தோட்டத்தையும் பார்க்கும் போது சில சமயம் வருத்தமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது ? வீட்டு வேலை செய்ய வரும் பெண் மாதத்தில் பாதி நாள் வந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. பழகின ஆட்கள் தவிர யாரையும் உள்ளே விடுவதற்கும் யோசிக்க வேண்டியிருக்கிறது. எப்படி நடக்கிறதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டார்.
நல்ல வேளை, சமையலுக்கு ஆள் வைக்கவில்லை. உடலும் மனமும் ஓத்துழைக்கும் நாட்களில் ஒரு காயோ கூட்டோ செய்து சாப்பிடுவார். மற்ற நாட்களில் ஏதோ ஒரு ரெடிமேட் மிக்ஸ் பொடி அல்லது தொக்கு. போதுமே என்று தோன்றும். ஆனால் சாப்பிடும் போது, வைதேகியின் கை மனமும் , வாழை இலையில் அவள் உணவு பரிமாறும் அழகும் நினைவிற்கு வரும்.
முதுமையில் தனிமை கொடியது என்று சும்மாவா சொன்னார்கள்?
ஏதேதோ யோசனையில் இருந்தவரின் சிந்தனையைக் காற்றில் மிதந்து வந்த அந்த கீதம் கலைத்தது. எம். எஸ் சின் “பாவயாமி கோபால பாலம் ” தன்னிச்சையாக அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. வைதேகிக்கு மிகவும் பிடித்த பாட்டு.
பனிக் காலங்களில், படுக்கப் போகும் முன், ஒரு பழைய வேஷ்டியை, பவழ மல்லிச் செடிக்குக் கீழே விரித்து வைத்து விடுவாள். காலையில் அந்த வேஷ்டி முழுக்க பவழ மல்லிப் பூக்கள் நிறைந்து பார்க்கவே ரம்யமாக இருக்கும். அவற்றை நூலில் கோர்த்து அவளது இஷ்ட தெய்வமான கிருஷ்ணனுக்கு மாலையாகப் போடுவாள். ரொம்ப சந்தோஷமாக இருக்கும் நாட்களில் ‘பாவயாமி கோபால பாலம்’ பாடுவாள்.
விடுமுறை நாட்களில் ஊஞ்சலில் அமர்ந்து நித்திய மல்லி பூக்களைத் தொடுக்கும் போதும் பாட்டு கச்சேரி நடக்கும். சில சமயம் வசுதாவும் சேர்ந்து கொள்வாள்.
எவ்வளவு இனிமையான அழகான பொழுதுகள். அவற்றையெல்லாம் இன்னும் கொஞ்சம் ரசித்து அனுபவித்திருக்கலாமோ, என்று இப்போது தோன்றுகிறது.
இன்றும் கூட மார்கழி மாத முன்னிரவு வேளையில் ஊஞ்சலில் உட்காரும் போது காற்றில் தவழ்ந்து வரும் பவழ மல்லியின் நறுமணம், சந்தோஷமும் வருத்தமும் கலந்த ஒரு உணர்வைக் கொடுக்கும்.
இது போன்ற ஒரு நாளில் தான் அவள் உயிர் பிரிந்தது. காத்தாலேந்து நெஞ்சுல சுருக் சுருக்குனு குத்தற மாதிரி இருக்குங்க என்றவள், அசிடிடின்னு நெனைக்கறேன் என்று அதற்கு காரணமும் சொன்னாள். ஆனால் அரை மணி நேரத்தில் எல்லாம் கை மீறிப் போய் விட்டது. டாக்டருக்கு ஃபோன் பண்ணி, அவர் வந்து பார்ப்பதற்கு முன்னே அவள் காற்றோடு கலந்து விட்டிருந்தாள்.
*****************
வசுதா துபாய் ஏர்போர்ட்டில் இருந்தாள். கனெக்டிங் ஃப்ளைட்டுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது.
செல்ஃபோன் எடுத்து அப்பாவுக்கு முதலில் மெஸேஜ் அனுப்பினாள். அவர் காத்துக் கொண்டிருப்பார் என்று தெரியும். “ஏர்போர்ட்லேந்து நானே கார் புக் பண்ணி வந்துடறேன். நீங்க சிரமப்பட வேண்டாம்”, என்று முன்னாலேயே சொல்லி இருந்தாள்.
கொஞ்ச நேரம் பாட்டு கேக்கலாம் என்று காதில் ஏர் பாட் மாட்டிக் கொண்டாள். ஆனால் மனம் இசையில் லயிக்கவில்லை. இந்த முறை திரும்ப வரும் போது, வீட்டையும் விற்று விட்டு, அப்பாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். மனம் அடம் பிடிக்கும் சிறு குழந்தைப் போல அதே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.
முகுந்த்திடம் இதைப் பற்றி முன்னாலேயே பேசி இருந்தாள். அவனுக்கும் அப்பாவிடம் பிரியம் ஜாஸ்தி. ரெண்டு பேரும் சலிக்காமல் கிரிக்கெட் பார்ப்பார்கள், பேசுவார்கள். அனிருத் கூட அவள் கிளம்பும் போது, “வெந் வில் யூ கம் பாக் ? இஸ் ராஜா தாத்தா கமிங் வித் யூ” என்றெல்லாம் கேட்டு கொண்டு இருந்தான்.
வீடு விற்பதுதான் பெரிய வேலை. எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.
அம்மா போன பின், வீட்டின் மேல் அப்பாவிற்கு ‘சென்டிமண்ட்டான’ ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அதை விற்கவோ, இல்லை இடித்து ப்ரமோட்டர் மூலம் ‘ப்ளாட்’ கட்டவோ அவர் ஒத்துக்கொள்ளவில்லை. உங்கம்மா ராணி மாதிரி இருந்த வீடு, அதுல போய், பத்துல ஒண்ணா, நானும் ஒரு ஓனர்னு எப்படி இருக்கிறது? என்பது அவர் வாதம்.
அவளுக்கும் அந்த வீடு பிடிக்கும்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து, விளையாடி, படித்து, வளர்ந்து, வாழ்ந்த வீடு.
ஸ்கூல் படிக்கும் நாட்களில், அம்மா வாசல் ஊஞ்சலில் வைத்துதான் தலை பின்னி விடுவாள். படிப்பது கூட, மொட்டை மாடியில் நடந்த படியோ அல்லது ஊஞ்சலில் ஆடியபடியோதான். ஊஞ்சலில் ஆடியபடி படித்தால், அந்த ‘ஸ்விங்கிங் எஃபெக்ட்ல்’, வரும் உற்சாகம், மூளையை சுறுசுறுப்பாக்கி, படித்ததை எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும். இந்த காலத்தில் கதவைச் சாத்திக் கொண்டு சூரிய ஒளியும்,காற்றும் வராத ரூமில் உட்கார்ந்து படிக்கும் அனிருத் போன்றவர்களிடம் இதையெல்லாம் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
அதே போல, சித்ரா பௌர்ணமி நாட்களில், அம்மா விதவிதமான கலந்த சாதம் செய்து மொட்டை மாடியில் ‘நிலாச்சோறு ‘ சாப்பிடுவார்கள். அம்மா போடும் மாவடுவின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இணையே கிடையாது என்று தோன்றும்..
தன் கல்யாணத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள், அனிருத் டெலிவரிக்கு வந்தது, அவனுக்குத் தொட்டில் போட்டது, ஊஞ்சலில் பாட்டி மடியில் படுத்தபடியே அனிருத் கதை கேட்டது, என்று மனம் ஞாபகக் குளத்தில் மூழ்கி எழுந்தது.
இனிமையான நினைவுகள் எல்லாம் சரி. ஆனால், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா . அப்பா தனியாக எத்தனை நாள்தான் அந்த வீட்டில் இருக்க முடியும் ? வருடத்திருக்கு ஒரு முறை, சம்மரில், தன்னுடன் வந்து ஓரிரு மாதம் இருக்கிறார். அதுவும் கொரோனா காலத்தில் அவரும் வர முடியாமல், தானும் போக முடியாமல் தவித்தது, அப்பப்பா!
அப்போதுதான், அப்பாவிடம் பேசிப்பேசி, ஒரு வழியாக அவரைத் தன்னுடன் வந்து இருக்க சம்மதிக்க வைத்தாள்.
அவர்களுக்கும் வேலை, அனிருத் மேல்படிப்பு என்று இப்போதைக்கு இந்தியா வரும் உத்தேசமே இல்லை. அப்புறம் எதற்கு இங்கே ஒரு வீடு? அதுவும் பராமரிக்க வகை இல்லாமல் ஒரு ‘தனி வீடு’. அப்பாவிடம் பேசி, ஒத்துக்கொள்ள வைத்து வீட்டை விற்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் என்று அவள் நினைக்கவும், போர்டிங் செய்ய ஆங்கிலத்தில் அழைத்தார்கள்.
********************
“அப்பா”, என்று முகமெல்லாம் சிரிப்பாக, இரு கரம் நீட்டி தன்னிடம் வரும், மகளைப் பார்த்தவுடன், தன் மொத்த சந்தோஷமும் ஒரு உருவெடுத்து தன் முன்னே நிற்பது போலத் தோன்றியது ராஜாராமனுக்கு.
வாம்மா , என்று அவளை மெல்ல அணைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
‘ஜெட்லாக்’, அப்புறம் அம்மாவின் தெவசம் என்று நாட்கள் போனதே தெரியவில்லை. வெகு நாட்கள் கழித்து அன்று இரவு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னடி வசு, இன்னும் தூங்கிண்டு இருக்க? மார்கழி மாசம் அதுவுமா வாசல்ல கோலம் போடலை, துளசி மாடம் கிட்ட விளக்கு ஏத்தலை. என்ன நீ, எழுந்து போய் தோட்டத்துலேந்து கொஞ்சம் மாவிலை பறிச்சிண்டுவா, வாசல்ல கட்டணும்” என்று அம்மா அடுத்தடுத்து கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தாள். “ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கறேன்மா இன்னும், ப்ளீஸ்,” . என்றவள் சட்டென்று விழித்துக் கொண்டாள்.
அம்மாவின் முகமும், அவள் பேசியதும், கனவென்று சொல்ல முடியாதபடி தத்ரூபமாக இருந்தது.
அந்த கனவின் தாக்கம் அடுத்த நாள் முழுவதும் இருந்தது. அன்று இரவு சாப்பிடும் போது, “வசுமா, என்ன ப்ளான் உனக்கு, என்ன டிஸைட் பண்ணி இருக்க,” என்று கேட்டார் ராஜா ராமன்.
“அப்பா, நான் திரும்ப ஊருக்குப் போற போது நீங்களும் என்னோட வந்துடுங்க. எவ்ளோ நாள் தனியா இருந்தாச்சு. ஆனா, இந்த வீட்டை விக்க வேண்டாம்பா,” என்று சொன்ன மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.
So moved by this story. Very thought-provoking and reminiscing.
LikeLike