“எவ்வளவு குவித்தாலும் மனதிற்குப் போதவில்லை!” /
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
பாஸு கொல்கத்தாவிலிருந்து வந்தவன். விற்பனையாளன் வேலை. கணிசமான சம்பளத்துடன் விற்பனைக்கு ஏற்ற கமிஷனும். மிக எளிய வசதி உள்ளவர்களுடன் வாடகைக்கு ஒண்டிக் குடித்தனத்தில் குடியிருந்தான்.
எங்களது பொதுப்பணி நிறுவனத்தின் ஒரு அம்சம், எளியவர்களுக்கு வசிக்கும் இடத்திலேயே அவர்களுடன் ஆலோசித்து உதவும் திட்டங்களைத் தீட்டுவது. அப்படியே அங்குச் செய்து வந்தோம். படிப்பைப் பலர் நிறுத்தி விட்டிருந்ததால் வகுப்பு பரீட்சையை ஓபன் ஸ்கூல் (Open School) வழியே எழுதுவதற்குத் தயார் செய்வது, கைத்தொழில், சுயதொழில் வகைகளுக்கான பயிற்சி அளித்து வந்தோம். மனம் விட்டுப் பகிர்வதற்கும் ஒரு அறையை அமைத்திருந்தோம்.
வாரத்திற்கு இருமுறை வருவோம். என்னைப் போல் இன்னொருவரும் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர். மற்ற ஏழு பேரும் ஸோஷியல் வர்க்கில் முதுகலை பட்டதாரி.
எல்லாம் இலவசம் தான். அதனாலேயே பாஸு எங்களை அணுகினான் என்றதை ஒப்புக்கொண்டான். அன்றைய தினம் நான் இருந்ததால் என்னிடம் சங்கடத்தைப் பகிர நேர்ந்தது.
பாஸு புத்தகங்களைக் குவிப்பதைப் பெருமையாகக் கூறினான். தெரிந்தவர்களை, புது நட்புகளை அவர்கள் செலவில் வாங்கித் தரச் சாடையாகச் சொல்வானாம். புத்தகங்களைத் திரட்டுவதே குறிக்கோள் அவர்களுக்குச்
செலவு செய்யப் பணம் இருக்கிறதா, இன்னல் படுகிறார்களா என்றெல்லாம் நினைத்ததோ, பொருட்படுத்தினதோ இல்லையாம்.
இங்கு வந்ததிலிருந்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பிள்ளைகள் புத்தகங்களைக் கையாளுவது, எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்பதிலிருந்து, அவை களவு போய்விடுமோ என்ற கவலை ஆரம்பித்ததை உணர்ந்தானாம். மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ள வேலைக்கு இடையூறாக இருப்பினும் வீட்டிற்கு வந்து புத்தகங்கள் இருக்கிறதா எனப் பார்த்து விட்டுப் போவானாம்.
வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற பயம். திரும்பவும் சிறுவயதில் ஏங்கிய நிலை நேரிடுமோ எனக் கூறினான். அந்த சூழலைப் புரிந்து கொள்ள, மேலும் தகவல்களைத் தரப் பரிந்துரைத்தேன்.
முப்பது வயதுள்ள பாஸு, தன் பெற்றோருக்கு மூன்றாவது மகன். இரண்டு அக்கா. ஒரு அக்காவுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருடம் ஆயிருந்தது. சின்ன அக்காவின் நிறத்தினால் திருமணம் தள்ளிப் போனது. தாய் தந்தை இருவரும் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்கள். இவர்களுடன் தந்தையின் பெற்றோரும், தாயின் தந்தையும் இருந்தார்கள். அப்பாவின் அப்பா (தாத்தா) வேலை எதுவும் செய்து பார்த்ததில்லை. பாட்டி, தையல் வேலை, அப்பளம் இட்டு பக்கத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்து, வீட்டுச் செலவுக்குத் தந்து வந்தாள். அம்மாவின் அப்பா அரசாங்க பணியில் உயர் அதிகாரியாக இருந்ததால் நல்ல சம்பளம். அந்த காலத்தில் மாதாமாதம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் இவர்களுக்குக் கொடுத்தார்.
தாத்தாவுக்கு மாத்திரை மருந்து, பிள்ளைகள் படிப்பு செலவு, அக்காக்கள் திருமணம், என பல்வேறு தேவையைப் பூர்த்தி செய்ய, பணத்தை கச்சிதமாகச் செலவு செய்வது வீட்டின் மௌன கட்டளை. இந்தத் தாக்கம் பாஸுவின் இயல்பானது.
பொருளாதார நெருக்கடியினால் வீட்டில் ஒரு புத்தகத்தைக் கூட வாங்கியதில்லை என்றான். தன் ஆழ் மனதில், “என்றைக்காவது வாங்குவேன்” எனப் புதைத்து வைத்திருந்தான்.
பட்டதாரியாகி வேலையில் சேர்ந்த பின்பே, கிடைத்த சம்பளத்தில் புத்தகங்களை வாங்கியதாக பாஸு கூறினான். புத்தகத்தைப் பற்றிக் கேள்விப் பட்டாலோ, படித்தாலோ அதை வாங்கி விடவேண்டும். கண்ணில் படும்போது வாங்கிடுவானாம், கடையோ, நடைபாதையோ. வாங்குவதில் குறியாக இருந்தானே தவிரப் படிப்பதில் அல்ல. தன்னிடம் புத்தகங்கள் குவிந்து கிடக்க வேண்டும். யாரையும் இதன் பக்கத்தில் நெருங்க விடமாட்டானாம். “இங்கு வந்ததும் பிள்ளைகள்…” என இழுத்தான்.
எங்களது நிறுவனத்தின் பல விதமான ப்ராஜெக்ட் பல வருடங்களாக நடப்பதால் குறிப்பாக இங்குள்ள பெண்கள், பிள்ளைகள் பற்றி நல்ல பரிச்சயம் இருந்தது. பாஸுவின் ஆதங்கம் புரிந்தது. பிள்ளைகளிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்றதும் நிதர்சனம். பிள்ளைகளுக்கும் பாஸுவுக்கும் பாலம் கட்ட யோசித்தேன்.
பாஸுவுடன் ஸெஷன்கள் ஆரம்பமானது. சேகரிப்பதை வாங்கி வைக்கும் போது உணருவதைப் பற்றி விவரமாக உரையாடச் செய்தேன். ஏன் எதற்கு எப்போது என்றதை வெளிப்படையாகக் கேட்காமல், தன் செயலைத் தானாகக் கூறி மனதைத் திறக்க வழி அமைத்தேன். பல விவரங்களைப் பகிர்ந்தான்.
தன்னுடைய எதிர்மறை உணர்ச்சிகளைப் பார்த்து, குறித்து வர பரிந்துரைத்தேன். பாஸு கண்டது, யாரேனும் தன் உடமைகள் பக்கத்தில் வந்தாலே மனதில் ஒரு படபடப்பு ஏற்படுவதை உணர்ந்தான். அவனைக் கிண்டல் செய்யும் வகையில் அவற்றை தொட்டோ எடுத்தாலோ கோபம் பொங்கியது என்றதை கவனித்தான். பாஸு தான் பகிர்ந்து கொள்ளும் சுபாவத்தை இழந்ததையும் கவனித்தான்.
இந்தத் தருணத்தில் பாஸுவிடம் நான் தொடங்க இருந்த ஒரு கூட்டமைப்பைப் பற்றி விவரித்து பார்வையாளராக வரப் பரிந்துரைத்தேன். அந்தக் குழுவில் ஒவ்வொருவரும் மற்றவரின் நிலையை, சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் துவக்கியிருந்தேன். இதை நடைமுறைப்படுத்த அன்று வரும் பிள்ளைகளில் ஒருவரின் வீட்டில் சந்தித்து அங்குள்ள புத்தகங்கள் எவை எனப் பார்த்து, அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து சில பக்கங்களைப் படித்த பிறகு அதைப் பற்றி கருத்துகளைப் பகிர்வதாக அமைத்திருந்தேன். மேலும் படிக்க விரும்புவோர் புத்தகங்களை அடுத்த சந்திப்புக்குள் படிக்கலாம்.
இதன் விளைவு, பல தரப்பில் தென்பட்டது. பிள்ளைகளின் சண்டைச் சச்சரவு குறைந்தது, உதவும் மனம் அதிகரித்ததால் மகிழ்ந்தனர் பெற்றோர். ஒருவருக்கு ஒருவர் உதவியால் படிப்பில் கவனம் அதிகரித்தது மதிப்பெண்களில் காட்டியது.
புத்தகப் பகிர்தல், படித்ததை உரையாடுவது வரவேற்பு பெற, சூடு பிடித்துச் சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் பாஸு வந்தான், நடப்பதைப் பார்ப்பான். இந்த நேர்காணலை பாஸு அனுபவிக்க அனுபவிக்க மனத்தைச் சிந்திக்கத் தூண்டியது! பிள்ளைகள் படித்துப் பகிரும் குழுவை பாஸு வாராவாரம் பார்வையிட்டான். பங்கு கொள்ளவில்லை. பிள்ளைகளின் இந்த குழுவால் உருவான நட்பு வட்டத்தைக் கவனித்து மேலும் இளைஞர்கள் பலர் சேர்ந்தார்கள். பங்களிப்பு, பகிருவதில் உருவான பந்தத்தைப் பார்த்து பாஸு வியந்தான்.
விளைவாக பாஸுவின் உள்மனத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது தலையைத் தூக்கிக் காட்டியது. இளம் வயதில் ஆசிரியர் ஒருவர் அவன் பொருளாதார நிலையைப் பார்த்து, எங்கே அந்த ஒளவையார் சொன்ன “கொடியது இளமையில் வறுமை” நேரிடுமோ என்றாராம். அப்போதிலிருந்து பயம் கவ்வியது. அப்படி நடந்து விடக்கூடாது என முடிவு செய்து விட்டான். யாருக்கும் எதையும் பகிர விருப்பப்படவில்லை.
ஆகப் புத்தகங்களை யாருக்கும் தர மறுத்தான். புத்தகங்களைக் குவித்து வந்தான். இருப்பிடத்தை ஆக்கிரமித்திருந்தது. இருப்பிடம் சுருங்கியது. பொருட்படுத்தவில்லை.
இங்குப் பிள்ளைகள் வறுமையின் பல இன்னல்களைத் தாண்டியும் வாழ்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். வாராவாரம் உருவாகியுள்ள கம்யுனிட்டீ ஆஃப் லர்னர்ஸ் (Community of Learners) பகிருதல், பரிமாறுதல், அன்பையும் தான்! ஸெஷனில் இந்த நேர்காணல் பல்வேறு சிந்தனைகள் எழுப்புவதாக விவரித்தான்.
தன்னைக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான். சுற்றி உள்ளவரின் வறுமை, இளமை நிலைமையும்.
இதையே மையமாக வைத்து ஸெஷனில் உரையாட, தன்னைத் துளைத்திருந்த “கொடியது இளமையில் வறுமை” பற்றி அஞ்சுவதை இளைஞர்கள் குழுவில் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கூறினான். முன்னேற்றத்திற்கான அடிக்கல் என எடுத்துக் கொண்டேன்.
தயக்கம் ததும்ப இதைப் பகிர்ந்து கொண்டான். பல மணித்துளிகளுக்கு யாரும் எதையும் சொல்லவில்லை. பூமியைப் பார்த்திருந்தாலும் உடல்மொழி தகவல்களைத் தெரிவித்தது. மெதுவாக இழைச் சிரிப்பு விரிந்தது. “அப்போது நீ எங்களை அறிவாய்” என்ற வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டு பக்கத்தில் உள்ளவரின் கைகளைப் பற்றிக் கொண்டார்கள்.
ஒன்றிணைந்த மனதாக இருப்பது தென்பட்டது. “பாஸு, ஒவ்வொரு வாரமும், இங்கே நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம்.” பாஸு வியந்து பார்த்தவுடன் இன்னொருவன் தொடர்ந்து பேசினாள், “இதை நாங்கள் படித்து, கேட்டும் இருக்கிறோம். நொறுங்கிப் போய் விடும் இந்த நிலையை மாற்றி அமைக்க வழியை உருவாக்க நினைத்தே மாலதி மேடத்திடம் பேசத் துவங்கினோம். அதிலிருந்து உதயமானது இந்தக் குழு அமைப்பு, வாராவாரம் கூட்டம். என்ன நான் சொல்வது?” என்றதும் மற்றவர் பாதங்களைப் பூமியின் மீது ஒன்றாகத் தட்டி ஒப்புக்கொள்வதைத் தெரிவித்தார்கள்.
அமைதியான பின்னர் சில வினாடிகள் ஓடின. மேலும் பாஸுவைப் பகிரத் தூண்டினார்கள். தன் சங்கடங்களை வெளிப்படையாகக் கூறினான்.
குழுவினரும் இந்தச் சட்டை மற்றவனுடையது, காலணி அவன் தந்தது எனப் பகிரங்கமாகச் சொன்னது உருவான பந்தத்தைக் காட்டியது. பதினாறு வயதான குமார் கூறினான், “ஆசிரியர் சொன்னது போல வறுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்”. தீர்க்கமான குரலில் ஒருத்தி விளக்கினாள், “இங்கு நாங்க எல்லாரும் இல்லாதவர்கள். உன்னிடம் இருப்பதைப் பகிர மனம் வரவில்லை. அதுதான் வறுமை. குற்ற உணர்வினால் மனம் குறுகுறுக்கின்றது”.
இந்த கம்யுனிட்டீ ஆஃப் லர்னர்ஸ் செய்வதின் சாயல் ஆப்ரிக்காவின் “உபன்ட்டு, “நான் இருப்பது நம்மால்” (Ubuntu, “I am because we are” ) அம்சங்களைக் கொண்டது என்று அடையாளம் காட்டியிருந்தேன். இதையே நினைவுக்கூறி பாஸுவுக்கு இதை மையமாக வைத்து அவன் பங்களிப்பு இதனுடன் சேரும் என்றார்கள்.
பாஸு புகழாரம் சூட்டக் கிளம்பியதும், அதை நிறுத்தி இதன் வடிவமே “பெரியோர் எல்லாம் பெரியவர்கள் அல்ல” எனச் சொல்லியதும் பாஸு சுதாரித்துக் கொண்டான். பகிரவில்லை ஆமோதித்து. பாஸு மனதைத் திறந்து பேசியதை வரவேற்றார்கள்.
பகிர்ந்து கொள்ள தன் அச்சத்தின் ஒரு வடிவமே சுயநலம் என்றதை உணர்ந்தான். தன்னலத்தால் கஷ்டமோ நஷ்டமோ புத்தகங்களை வாங்க வைத்ததும், யாரையும் இவற்றின் அருகே வரவிடாமல் செய்ததின் விளைவையும் உணர ஆரம்பித்தான். பல ஸெஷனில் இதைப் பற்றி ஆராய்ந்தோம்.
முழு மனதுடன் பகிர்வதால் பல நன்மைகள் உருவாகியது. அவனும் வாராவாரம் சந்திக்கும் குழுவில் பங்களிப்பு, சிறுதுளி உதவுவது எனத் தீர்மானித்தான்.
முதல் கட்டமாக, பிள்ளைகளை தன் அறையின் அருகில் வரவழைத்தான். பிள்ளைகளுக்குக் குதூகலம். “பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்” என்ற குறள் பாஸுவின் குவிக்கும் பழக்கத்திற்குப் பொருந்தியது.