ஜப்பானிய மொழி சிறுகதை
மூலம் : ஹாருகி முராமி [ Haruki Murakami ]
ஆங்கிலம் : ஜே .ருபின் [ Jay Rubin ]
தமிழில் : தி.இரா.மீனா
ஏப்ரல் மாதக் காலையில் 100 % பொருத்தமான பெண்ணைப் பார்த்து..
ஓர் ஏப்ரல் மாதத்தின் காலைப் பொழுதில் டோக்கியோ நகரில் நாகரிகமான ஹருஜூக்கு பகுதியின் குறுக்குத்தெருவில் 100 % பொருத்தமான அந்தப் பெண்ணைக் கடந்தேன்.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவள் அப்படி ஒன்றும் அழகி இல்லை.அழகு என்று கூட சொல்லமுடியாது. அவள் உடைகள் விஷேசமானவையல்ல. அவள் பின்புறத் தலை முடியின் வடிவம் தூக்கத்திலிருந்து எழுந்து வந்தது போல வளைந்தேயிருந்தது.அவள் இளமையானவளுமில்லை. முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கலாம். தெளிவாகச் சொன்னால் இளம்பெண் என்றுகூடச் சொல்லமுடியாது. ஆனாலும் ஐம்பது அடி தூரத்திலிருந்து பார்க்கும்போதே அவள் எனக்கு 100 % பொருத்தமானவள் என்று தெரிந்தது. அவளைப் பார்த்த கணத்தில் நெஞ்சு குறுகுறுக்க, வாய் வறண்டு போனது.
உங்களுக்குப் பிடித்த பெண் என்பவள் — மெலிதான கணுக்கால்கள் அல்லது பெரிய கண்கள் அல்லது நீண்ட விரல்கள் , அதிக நேரம் சாப்பிடும் இயல்பு என்று எந்த அம்சம் கொண்டவளாகவுமிருக்கலாம்.ஒரு பெண்ணைப் பிடிக்க எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். எனக்கென்று சில அபிப்பிராயங்களுண்டு. சில சமயங்களில் ஹோட்டலில் பக்கத்து மேஜையருகே உட்கார்ந்திருக்கும் பெண்ணை வெறித்தபடி இருப்பேன். அவளுடைய மூக்கின் வடிவம் பிடித்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். முன்கூட்டியே முடிவு செய்த தன்மையோடு 100 % பொருத்தமாக தனக்குப் பிடித்த பெண் இருக்க வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனக்கு மூக்குகளின் மேல் ஒரு விதக் கவர்ச்சியிருப்பதால் அவளுடைய உருவத்தை நினைவில் வைத்திருக்க முடியவில்லை.எனக்கு ஞாபகத்திலிருப்பது அவள் பேரழகியில்லை. அது வினோதமானதுதான்.
“நான் நேற்று தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் 100 % பொருத்தமானவளாகத் தெரிந்தாள்.” நான் யாரிடமோ சொல்வேன்..
“அப்படியா? மிகவும் அழகா? ” அவன் கேட்கிறான்.
“அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.”
“அப்படியானால் உனக்குப் பிடித்த வகையோ?”
“எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவள் கண்கள், தோற்றம் ,மார்பு என்று என்று எதுவும் நினைவிலில்லை.”
“விசித்திரம்”
“ஆமாம்.விசித்திரம்தான்.”
“சரி. என்ன செய்தாய்? பின் தொடர்ந்து போனாயா? பேசினாயா? ”அவன் உற்சாகமிழந்து கேட்பான்.
“இல்லை. தெருவில் அவளைக் கடந்து போனேன்”.
அவள் கிழக்கிலிருந்து மேற்கே நடந்தாள். நான் மேற்கிலிருந்து கிழக்கே போனேன். அது ஓர் அற்புதமான ஏப்ரல் மாதக் காலைநேரம்.
நான் பேசியிருக்க வேண்டும். அரைமணி நேரம் அதிகம்தான். அவளைப் பற்றிக் கேட்டிருக்கலாம். என்னைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்—நான் என்ன செய்ய விரும்புகிறேன்… ஓர் ஏப்ரல் மாதக் காலை நேரத்தில் ஹஜுருக்கு தெருவில் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்க நேர்ந்த விதியின் தன்மையைச் சொல்லியிருக்கலாம். இந்த விஷயத்தில் மென்மையான ரகசியங்கள் புதைபட்டிருக்கும் என்று தோன்றுகிறது. உலகில் அமைதி நிறைந்திருந்த நாளில் ஒரு மிகப் பழமையான
கடிகாரம் உருவாக்கப்பட்டது போல.
பேசியதற்குப் பிறகு மதிய உணவு எங்காவது சாப்பிட்டிருக்கலாம். உடி ஆலானின் படம் பார்த்திருக்கலாம். பிறகு காக்டெயிலுக்காக ஒரு ஹோட்டல் பாருக்குப் போயிருந்திருக்கலாம். அதிர்ஷ்டமிருந்திருந்தால் இருவரும் சேர்ந்தும் இருந்திருக்கலாம்.
சாத்தியக்கூறுகள் என் நெஞ்சக் கதவைத் தட்டின.
எங்கள் இருவருக்கும் இடையிலான தூரம் பதினைந்து அடியாகக் குறைந்தது.
எப்படி அவளை அணுவது? என்ன பேசுவது ?
காலை வணக்கம். ஓர் அரைமணி நேரம் என்னோடு பேசமுடியுமா?
கேலியாகிவிடும். இது இன்ஷுரன்ஸ் வியாபாரி பேசுவது போல இருக்கும்.
மன்னியுங்கள். இங்கு பக்கத்தில் யாராவது இஸ்திரி செய்பவர்கள் இருக்கிறார்களா?
இல்லை. இதுவும் வேடிக்கையாகிவிடும். என் கையில் எந்தத் துணியுமில்லை. தவிர யார் அப்படிப் பேச விரும்புவார்கள்.
நேரடியாக விஷயத்திற்கு வருவதே சரி.”வணக்கம். நீங்கள் எனக்கு 100 % பொருத்தமான பெண்”
அவள் நம்பமாட்டாள். நம்பினாலும் என்னோடு பேச விருப்பமில்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும். நான் உங்களுக்கு 100 % பிடித்த பெண்ணாகத் தெரியலாம்.ஆனால் நீங்கள் எனக்கு 100 % பொருத்தமானவரில்லை என்று அவள் சொல்லலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் உடைந்து போய்விடுவேன். அந்த அதிர்விலிருந்து மீளமுடியாது. எனக்கு 32 வயதாகி விட்டது.
ஒரு பூக்கடையைக் கடந்தோம். மெல்லிய இளங்காற்று என்னைத் தழுவியது. என்னால் அவளோடு பேசமுடியவில்லை.அவள் வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வலது கையில் ஒரு வெள்ளைக் கவர் வைத்திருந்தாள். அதற்குத் தபால்தலை ஒட்ட வேண்டும் போலிருக்கிறது. அவள் யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள். இரவு முழுதும் தூங்காமல் எழுதியது போலக் கண்கள் தூக்கக் கலக்கத்திலிருந்தன.அவள் ரகசியங்கள் அனைத்தையும் தாங்கியதாக அந்தக் கடிதம் இருக்கவேண்டும்.
நான் மேலும் சில அடிகள் நடந்தேன்.அதற்குள் அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.
இப்போது அவளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டுமென்று தெரிந்து விட்டது. அது ஒரு ஓர் எளிய உரையாடலாக இருந்திருக்கும்.அதைச் சரியாகச் சொல்ல எனக்கு நேரமாகியிருந்திருக்கலாம். எனக்கு வந்த சிந்தனைகள் மிக மிக இயல்பானவை.
அது இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். “´ஒரு காலத்தில்” என்று தொடங்கி “சோகமான கதைதான் இல்லையா” என்று முடிந்திருக்கும்.
ஒரு பையனும் பெண்ணும் வசித்து வந்தனர்.அவனுக்கு 20 வயது. அவளுக்கு 18 வயது. அவன் பெரிய அழகனில்லை.அவளும் மிகச் சாதாரணமானவள். இருவரும் தனியாகவே இருந்தனர். தனக்கு 100 % பொருத்தமானவன் கிடைப்பான் என்று அவளும்,தனக்கு தனக்கு 100 % பொருத்தமானவள் கிடைப்பாள் என்று அவனும் முழுமையாக நம்பினார்கள். அந்த அற்புதம் நிகழ்ந்தது.
ஒரு நாள் இருவரும் தெருவில் சந்தித்தனர்.
“இது அற்புதமானது. இவ்வளவு நாட்கள் உனக்காகத் தான் காத்திருந்தேன். நீ நம்பமாட்டாய். ஆனால் நீதான் எனக்கு 100 % பொருத்தமான பெண் ” என்று அவன் சொன்னான்
“நான் எனக்குள் கற்பனை செய்து வைத்திருந்தவனைப் போலவே நீ இருக்கிறாய். நீ எனக்கு 100 % பொருத்தமானவன். இது ஒரு கனவு போல இருக்கிறது.” என்றாள் அவள்.
பார்க் பெஞ்சில் உட்கார்ந்து கைக்குள் கைகோர்த்தபடி இருவரும் தங்கள் கதைகளைப் பரிமாறிக்கொண்டனர்.அவர்கள் இப்போது தனியானவர்கள் இல்லை. 100 % பொருத்தமானவரை இருவரும் கண்டுபிடித்து விட்டனர். 100 % பொருத்தமானவரைக் கண்டுபிடிப்பது எவ்வளவு உன்னதமான விஷயம் ! அற்புதம்.. இது உலக ஆச்சர்யம் !
அவர்கள் பேசியபடி இருந்தனர். என்றாலும் இருவர் மனதிற்குள்ளும் மெல்லிய இழையாய் ஒரு சந்தேகம். ஒருவரின் கனவு இவ்வளவு எளிதாக உண்மையாவது சாத்தியமாகுமா? சரியானதாகுமா?
இந்த எண்ணத்தால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது. ”ஒரு சிறிய பரிசோதனை செய்வோம் .நாம் இருவரும் ஒருவருக்கொருவர் 100 % பொருத்தமானவர்கள் என்றால் எங்கேயாவது ,எப்போதாவது மீண்டும் சந்திப்போம். அப்படிச் சந்திக்கும்போது நாம் 100 % பொருத்தமானவர்கள் என்பது உறுதியாகும். உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம். என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான்.
“சரி. அப்படியே செய்யலாம்”
அவர்கள் பிரிந்தனர். அவள் கிழக்கும்,அவன் மேற்குமாக. அவர்கள் மேற் கொண்ட சோதனை தேவையில்லாதது. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் 100 % பொருத்தமானவர்கள்.அவர்கள் சந்தித்தது அற்புதம்தான். அவர்கள் மிக இளையவர்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. விதி இரக்கமற்று அவர்களைப் பிரித்தது.
ஒரு குளிர்காலத்தில் இருவருக்கும் கடும் காய்ச்சல் வந்தது. வாழ்வுக்கும் சாவுக்குமிடையே இருவரும் போராடினார்கள். நோயின் தீவிரத்திலிருந்து மீண்டபோது அந்த நினைவுகள் நீங்கியிருந்தன. இளம் டி.எச்.லாரன்சின் பிக்கி பாங்க் போல… தலை காலியானது.
இருவரும் புத்திசாலிகள் என்பதால் கடுமையான முயற்சிகள் செய்து தங்களை ஒரு சமுதாயத்திற்கு எல்லா வகையிலும் தகுதியுடையவர்கள் ஆக்கிக் கொண்டனர். ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் பிரஜைகளாய் மாறியிருந்தனர். 75 % அல்லது 85 % அளவு காதலுணர்வை அனுபவித்திருந்தவர்களாயிருந்தனர்..
காலம் கடந்தது. அவனுக்கு முப்பதிரண்டு வயது. அவளுக்கு முப்பது. ஓர் ஏபரல் மாத காலம். அவன் மேற்கிலிருந்து கிழக்கும்,அவள் கிழக்கிலிருந்து மேற்கும் நடந்து வந்தனர். அவள் கையில் ஒரு கவரோடு வந்தாள். தெருவின் பிரதான சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தனர். ஒரு நொடி இருவரின் மனதிலும் தொலைந்து போன நினைவு ஓரிழையாக ஓடியது. நெஞ்சு படபடப்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும்.
அவன் எனக்கு 100 % பொருத்தமானவன்.
அவள் எனக்கு 100 % பொருத்தமானவள்.
ஆனால் அந்த ஞாபகங்களின் இழை மிக பலவீனமாகிவிட்டது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த தெளிவு இல்லை. ஒரு வார்த்தை பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் கடந்தனர்; கூட்டத்தில் கலந்து மறைந்தனர்.
ஒரு சோகமான கதைதான்.இல்லையா?
ஆமாம். அதுதான். அதுதான் அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டியது.
———————————
ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி[ 1949]சர்வதேச அளவில் புகழ் பெற்ற படைப்பாளி. சிறுகதை,நாவல்,கட்டுரை ,மொழி பெயர்ப்பு என்ற பன்முகம் கொண்டவர்.இவர் படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. World Fantasy Award, Frank O’ Connor International Short Story Award உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
A Wild Sheep Chase , Norwegian Wood, The Wind – Up Bird Chronicle , Kafka On the Shore , IQ84 ஆகியவை அவருடைய சிறந்த படைப்புகளில் சிலவாகும்.
மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது. ஜப்பானில் பெண்கள் 35 வயதில்தான் திருமணம் பற்றி யோசிக்கிறார்களாம்!
LikeLike