ராஜராஜன்- காலத்தை வென்றவன்
“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடினான் ராஜராஜன் தன் மகன் ராஜேந்திரனைப் பார்த்து.
“காலத்தை வென்றவன் நீ.. காவியமானவன் நீ”- என்று இராஜேந்திரன் தந்தையைப் பற்றிப் பாடினான்.
‘படையெடுப்பு முடிந்ததா’ என்றால் ‘இல்லை’ என்கிறான் ராஜராஜன்!
வேங்கியில் கலிங்க மன்னன் ஜடாசோடன் வீமன் அரசாண்டு வந்தான். இந்த வீமன், முன்னாளில், சக்திவர்மன் – விமலாதித்தன் இருவருடைய தந்தையான தானர்ணவனை கொன்று, தான் அங்கு அரசனாயிருந்தான். மேலைச்சாளுக்கியரும் (சத்தியாசிரயன்), வீமனும் கூட்டணி ஒன்று அமைத்துக்கொண்டனர். கி பி 999 வருடத்தில் ராஜராஜன் வேங்கியின் மீது படையெடுத்தான். வேங்கியில் வேங்கை பாய்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால், வீமன் கூட்டணியின் எதிர்ப்பு பலமாக இருந்தது.
வீமனின் படைத்தளபதி ‘ஏசுவீரன்’ ஒரு பெரும் வீரன். முரட்டுத்தனமும், அறிவுத்திறனும் கொண்ட தலைவன். அவனை வீமன் அனுப்பினான். ராஜராஜன் போரில் ஏசுவீரனைக் கொன்றான். வீமன் மனம் சோர்ந்தான். ஆயினும் தனது இரட்டைத் தலைவர்கள் பட்தேமன், மகாராசன் என்ற சக்தி கொண்ட இரு படைத்தலைவர்களை சோழனுக்கு எதிராக அனுப்பினான். போர் உடனடியாக முடிந்திடவில்லை. இரண்டு வருடம் இழுத்தடித்தது. ராஜராஜனும், ராஜேந்திரனிடம் படைகளை விட்டு விட்டு தஞ்சை செல்வதும் – வருவதுமாக இருந்து சண்டை செய்தான். ‘இராஜேந்திரா! எதிரிகள் வலுவானவர்கள். நமது படையின் வலிமையும் குறைந்ததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு சோழ ரத்தத்தை சிந்தவிடாதே. மெல்ல மெல்ல இந்தப் பகையை அழி!’ என்று அறிவுறுத்தினான்.
ராஜாராஜன் பட்தேமன், மகாராசன் இருவரையும் போரில் கொன்றான். முடிவில் – வீமனும் தோல்வியுற்று ஓடினான்.
ஓடிய வீமனும் காத்திருக்கத் தொடங்கினான்.
‘எத்தனை நாள் இந்தச் சோழர்கள் சக்திவர்மனைக் காத்திருப்பர்’ – என்று கொக்கு மீனுக்காகக் காத்திருப்பதைப் போலக் காத்திருந்தான்.
ராஜராஜன் சக்திவர்மனுக்கு முடிசூட்டினான்.
அப்பொழுதே, சக்திவர்மனின் இளவல் விமலாதித்தனே என்றும் – சக்திவர்மனுக்குப் பின் அரசன் விமலாதித்தனே என்பதையும் உறுதி செய்து, அவனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டினான்.
சோழப்பெரும் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக தஞ்சைக்குத் திரும்பின.
வீமன் துணிவு கொண்டான்.
சக்திவர்மன் மீது படையெடுத்தான்.
காஞ்சி வரை அவனை வீரட்டித் துரத்தினான்.
ராஜராஜன் வெகுண்டான்.
கி பி 1001ல் சோழப்படைகள் காஞ்சி அருகில் நடத்திய போரில் வீமனை தோற்கடித்தனர். இந்தத்தோல்வியில் வீமன் துவண்டான். கலிங்கத்துக்குப் பின் வாங்கினான். ராஜராஜனை வெல்வது இயலாது என்று ஓய்ந்தான்.
சக்திவர்மனும் கி பி 1011 வரை ஆண்டான். பிறகு விமலாதித்தன் அரசனாயினான். ராஜராஜன் மகள் குந்தவி வேங்கியின் பட்டத்தரசியானாள்.
இப்படி வீமன் தோல்வியுற்றதையும், ராஜராஜன் ஆதிக்கம் ஏற்பட்டதையும், சாளுக்கிய சத்யாசிரசனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. வேங்கியின் மீது பல படையெடுப்புகளைச் செய்து வந்தான். இராஜேந்திரனின் இரட்டபாடிப் படையெடுப்பால் சத்யாசிரசன் தன் படைகளை வேங்கியிலிருந்து விலக்கிக் கொண்டான். கலிங்க நாடு – அது கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதி. விமலாதித்தனும், இராஜேந்திரனும் சேர்ந்து குலூதன் என்ற கலிங்க மன்னனை வென்றனர்.
இப்படி நானா திசைகளிலும் வெற்றி கண்ட ராஜராஜன் ‘சரி போர் முடிந்தது. இனி நாட்டைக் கவனிக்கலாம்’ என்று எண்ணினான்.
ஆனால்.. அரண்மனையில் அன்று மாலை ஒரு செய்தி வந்தது.
அது போர் முரசங்களை அலறவைத்தது.
செய்தியுடன் வந்தவன் வேறு யாருமல்ல.
நமது பழைய நண்பன் சேர மன்னன் பாஸ்கரன் தான்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜனிடம் தோற்ற சேரமன்னன் இப்பொழுது அவனுக்கு அடங்கிய நண்பனாக ஆகி இருந்தான்.
அவன் சொன்ன செய்தி இது தான்:
அரபிக்கடலில் இருக்கும் ‘முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்’ என்கிற (இன்றைய மாலத்தீவு) தீவு நாடு. அது மேற்குக் கடற்கரையிலிருந்து பல நூற்றுக் கல் தொலைவில் இருந்தது. சேரநாட்டினருக்கு அந்தத் ‘தீவு மக்கள்’ துன்பம் கொடுத்து வந்தனர். அந்தத்தீவு மக்கள் கடற்கொள்ளையராக மாறி சேர நாட்டு மரக்கலங்களைக் கொள்ளையடித்து வந்தனர். ராஜராஜனிடம் தீவுக்கொள்ளைக்காரர்களது அட்டூழியங்களை எடுத்துக் கூறி உதவி வேண்டினான்.
ராஜராஜன், ‘அந்நாளில் தனது கடற்படையின் பெருமை பேசித் திரிந்த சேரன்’, இன்று தனது கடற்படையின் உதவி நாடுவதை எண்ணி மனதுக்குள் மெல்ல நகைத்தான். எனினும் சேரனுக்கு உதவுவது தனது கடமையென்பதை உணர்ந்த ராஜராஜன்,
“கவலை வேண்டாம் பாஸ்கரா! நமது கடற்படை உடனே புறப்படும்” என்றான்.
இராஜேந்திரன் தலைமையில் சேர சோழ கடற்படை கடலாடிச் சென்றது. பழந்தீவு, கடலின் நடுவே பல கல் தொலைவில் இருப்பதால், பெருங்கப்பல்கள் கொண்ட பெருங்கடற்படை கொண்டே அதைத் தாக்க முடியும். இந்நாளில் கூட அப்படிப்பட்ட படையெடுப்பு சிரமமான காரியமே. சோழக்கடற்படை சென்றது. கொள்ளையர்களை அழித்தது – தீவை வென்றது. அருகிருந்த இலக்கத்தீவுகளையும் வென்றது.
ஒரேயடியாகச் சண்டைக்காட்சிகளையே காட்டிக் கொண்டிருந்தோம். அப்படி ராஜராஜன் பரபரப்பாக இருந்த போதிலும் அரண்மனையின் அந்தப்புரத்தையும் வளர்த்திருந்தான். ‘அடைந்தால் மகாதேவி.. அடையாவிட்டால் மரணதேவி’ என்ற வசனத்துக்கொப்ப இராஜராஜன் பல மகாதேவிகளை மணந்திருந்தான். நமக்குக் கிடைத்த தகவல்படி அந்த எண்ணிக்கை 15.
- உலக மகாதேவி – (தந்திசக்தி விடங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன் மகாதேவி
6. பிருத்திவி மகாதேவி
7. இலாட மகாதேவி
8. மீனவன் மகாதேவி – பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி (திருபுவன மாதேவி. வானதி) – இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி மகாதேவி.
12. நக்கந்தில்லை அழகியார் மகாதேவி
13. காடன் தொங்கியார் மகாதேவி
14. இளங்கோன் பிச்சியார் மகாதேவி
15. தைலா மாதேவி
அடேங்கப்பா!
அந்தப்புரத்தில்..
எந்தப்புரத்திலும் ..
காந்தக்கண்ணாட்டிகள் ..
சொந்தமான ராணிகள் ..
‘இராஜராஜ சோழன் நான்.. எனையாளும் காதல் தேசமிது’ என்று அவன் பாடிக்கொண்டே வரும் சிருங்காரக் காட்சி உங்கள் மனத்திலும் விரிகிறது அல்லவா?
இராஜராஜனின் திக்விஜயங்களைப் பேசினோம்.
காதல் காட்சிகளையும் சிறிது பார்த்தோம்.
இனி அவனது பக்தி, மற்றும் அவன் தமிழர் சரித்திரத்துக்கு கலங்கரை விளக்கமாகக் கட்டிய பெரியகோவில் .. அக்கதைகள் விரைவில் வரும்.
தொடரட்டும் சோழ நாட்டின் சரித்திரம்!.