10/7/22 அன்று மாலை 6 30 மணிக்கு குவிகம் நிகழ்வில் இயக்குனர் ஸ்ரீதர் பற்றி ஆற்றிய உரை
-நன்றி குவிகம் சுந்தரராஜன் அவர்களே, வணக்கம், குவிகம் நண்பர்களே.
அலை கடலில் எங்களது சிறிய தோணி, கலை உலகில் எங்களது புதிய பாணி ‘ என்ற வாக்கியங்களோடு மெல்லிய இசையோடு மெதுவாக நகரும் அந்தச் சித்ராலயா ‘ படகை ‘ மறக்க முடியுமா. அதன் உரிமையாளர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா ஸ்ரீதர் அவர்களைத்தான் மறக்க .முடியுமா
புதுமை இயக்குனர் , காதல் இயக்குனர் , தென்னகத்து சாந்தா ராம் என்றெல்லாம் புகழப்பட்ட சித்தாமூர் விஜயராகவலு ஸ்ரீதர கிருஷ்ணன் என்ற ஸ்ரீதர் அவர்களின் புகழ் பாட பத்து நிமிடங்கள் பத்தாது என்பதால், மிகச் சுருக்கமாக அவரைப் பற்றியும் அவர் படங்களில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை மட்டும் சொல்லுகிறேன்.
இந்த ஜூலை மாதம் அவர் பிறந்த மாதம் . 22 ஜூலை 1933 இல் பிறந்து 20, அக்டோபர் 2008 இல் மறைந்தார்.
பதினெட்டு வயதிலேயே திரைக்கதை வசனம் எழுதியவர் .
அந்த முதல் படம் ‘ ரத்த பாசமும் வெற்றிப் படம்.
இயக்குனராக அவர் உருவாக்கிய ‘கல்யாணப் பரிசும் வெள்ளி விழா படம்.
1951 இல் ஆரம்பித்த அவர் திரைப்பயணம் 1991 வரை நாற்பது வருடங்களாகத் தொடர்ந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு , கன்னடம், என்று அவர் கதை வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பங்கேற்ற படங்கள் ஐம்பதுக்கும் மேல். பிலிம் பேர் விருதுகள், கலை மாமணி விருது என்று பல விருதுகள், பரிசுகள்,
தமிழ்த் திரைப்பட உலகில் பல விஷயங்களை முதலில் முயற்சி செய்தவர் ஸ்ரீதர் .
‘பிராண நாதா’ என்று காதல் மொழி பேசிய நாயகியரின் , ,வசனத்தை இயல்புத் தமிழுக்கு மாற்றியவர்.
முதன் முதலில் காஷ்மீருக்கு வெளிப்புறப் படப்பிடிக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் . தேனிலவு படம் .
முதன் முதலில் பாரிஸ், சுவிட்சர்லாந்து என்று வெளிநாட்டுக்கு சென்று எடுத்த முதல் தமிழ்ப் படம்- சிவந்த மண்
நடிக நடிகையரை ஒப்பனை இல்லாமல் நடிக்க வைத்த முதல் தமிழ்ப் படம் – நெஞ்சிருக்கும் வரை
பூர்வ ஜென்ம ஞாபகங்களை வைத்து முழுமையாக எடுத்த முதல் தமிழ்ப் படம் – நெஞ்சம் மறப்பதில்லை
ஒரே செட்டில் முழுப் படம் எடுத்து முதல் தமிழ்ப் படம் – நெஞ்சில் ஓர் ஆலயம்
முழுக்கவும் புது முகங்களை வைத்து எடுத்த முதல் தமிழ்ப் படம் – வெண்ணிற ஆடை .
ஈஸ்ட்மென் கலரில் எடுத்த முதல் முழுநீள நகைச்சுவைப் படம் – காதலிக்க நேரமில்லை
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எம்ஜிஆர் சிவாஜி என்று நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் இயக்குனரின் பெருமையை எடுத்துரைத்து அந்தக் கர்வத்தோடு வாழந்தவர் ஸ்ரீதர். அதற்காக மற்ற பிரபல கலைஞர்களோடு அவருக்கு தகராறு ஏற்பட்டதும் உண்டு. பிறகு அவர்களோடு சேர்ந்து கொண்டதும் உண்டு .
எம் ஜி ஆரோடு சேர்ந்த ‘ அன்று சிந்திய ரத்தம் ‘ படம் நின்று போனதும் உண்டு. பிறகு அவரோடு ‘ உரிமைக் குரலில்’ சேர்ந்து கொண்டதும் உண்டு.
சிவாஜியோடு மனவருத்தம் ‘ ‘ வைர நெஞ்சம் ‘ படத்தில் . பிறகு ‘ மோஹனப் புன்னகை ‘ படத்தில் சேர்ந்தது .
பி சுசீலா அவர்களோடு கோபத்தில் போலீஸ்காரன் மகள் , சுமைதாங்கி படங்களில் அவரை ஒதுக்கியதும் உண்டு. பின்பு நெஞ்சில் ஓர் ஆலயத்தில் சேர்த்ததும் உண்டு.
ஸ்ரீதரின் பெருந்தன்மைக்கு உதாரணமாக படிக்காத மேதை படத்திற்கு இவரை வசனம் எழுதச் சொன்ன போது தனது உதவியாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இந்தக் கதைக்கு வசனம் எழுத மிகவும் பொருத்தம் ஆனவர் என்று விட்டுக் கொடுத்த குறிப்பு ஒன்றைக் கேட்டேன்.
அவரின் இயக்குனர் ஆளுமைக்கு உதாரணமாக , இவரது ஹிந்திப் படம் ஒன்றில் லதா மங்கேஸ்கர் ஒரு பாடல் பதிவுக்கு வர தாமதம் ஆனதால், சுமன் கல்யாண்பூரை வைத்து அந்தப் பாடலைப் பதிவு செய்ய அந்த ஹிந்தி இசை அமைப்பாளரைக் கேட்டுக் கொண்டு, அவர் அதன் படி நடக்க, அந்த இசை அமைப்பாளரை அதன் பின் லதா மங்கேஸ்கர் ஒதுக்கி விட, பிறகு அவர்களை ஒன்று சேர்த்து வைத்தார் ஸ்ரீதர் என்று ஒரு குறிப்பு .
இப்படி ஒரு மனித நேயமும் அதே நேரம் ஒரு தனிப்பெரும் ஆளுமையும் உடையவராக இருந்து இயக்குனர்களின் பெருமையை திரைப் பட உலகில் உயர்த்திக் காட்டியவர் ஸ்ரீதர்.
இப்படி, தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்ற ஒரு கர்வத்தில் , தைரியத்தில் வாழ்ந்த கலைஞர் அவர்.
ஜெமினிக்குக் காதல் மன்னன் என்ற பெயர் வரும் அளவுக்கு காதல் காட்சிகளை அமைத்துக் கொடுத்ததில் ஸ்ரீதருக்கும் பெரும் பங்கு உண்டு.. கல்யாணப் பரிசு, மீண்ட சுவர்க்கம் என்று அவளுக்கென்று ஒரு மனம் வரை , பாடல் காட்சிகளில் என்ன ஒரு மென்மையான காதல் உணர்வைக் கொண்டு வந்திருப்பார் ஸ்ரீதர் .
அது மட்டுமா , எத்தனை புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். மறைந்த முதல்வர் கலைச்செல்வி ஜெயலலிதா முதல், நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் , ரவிச்சந்திரன் , காஞ்சனா , மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ‘ ஆதித்ய கரிகாலன் ‘ விக்ரம் ‘ என்று பல திறமையான கலைஞர்களை திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் .
பாடகராக இருந்த ஏ எம் ராஜா அவர்களை கல்யாணப் பரிசு மூலம் இசை அமைப்பாளராக மாற்றியவர் .
ரிஸ்க் எடுப்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல் என்று சொல்லலாம். முதலில் வீனஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து , பிறகு நண்பர்கள் கோபு, வின்சென்ட் மற்றும் சில நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து சித்ராலயா நிறுவனம் தொடங்கி , தமிழ், ஹிந்தி என்று எத்தனை வெற்றிகள். எத்தனை தோல்விகள். தோல்விகளில் மனம் தளராமல் அடுத்த முயற்சி . கடைசிக் காலத்தில் , உடல் நலம் குன்றி இருந்த காலத்திலும் அவருக்கு பண உதவி செய்ய வந்த நண்பர் ஒருவரிடம், பணம் வேண்டாம், படம் பண்ணித்தந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன நம்பிக்கை .
அவரது படங்களில் வெற்றி படங்களே அதிகம் வெற்றிகளே அதிகம் என்பதற்கு அவரது நிர்வாகத் திறனும் ,முக்கியக் காரணம்.
சரி, இப்போது அவரது காதல் காட்சிகளுக்கு வரலாம். சுருக்கமான காதல் வசனங்கள் அவர் சிறப்பு . கல்யாணப் பரிசில் சரோஜா தேவி ‘ அம்மா நான் போயிட்டு வர்றேன் ‘ என்று கல்லூரிக்குச் செல்லும் போது காதலனுக்கு கொடுக்கும் சமிக்ஞை காதல்.
‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ , – விலகிச் செல்லும் ஜெமினி, நாகேஸ்வர ராவ் ‘கூப்பிடவா’ என்று கேட்க , ‘வேண்டாம் , அவர் போகட்டும் ‘ என்று சொல்லி விட்டு அவர் குழந்தையை சரோஜா தேவி தனது கல்யாணப் பரிசாக ஏற்றுக் கொள்ளும் இடம், கல்யாணப் பரிசு கடைசி காட்சி வசனங்கள் மறக்க முடியுமா
இன்று அறுபது வயதுக்கு மேல் ஆகி, வசந்தி என்று பேர் வைத்திருக்கும் பெண்களிடம் கேட்டால், பலர், அவர்கள் பெற்றோர் ; கல்யாணப் பரிசு பார்த்த பாதிப்பில் வைத்த பெயர் என்று சொல்லலாம்
அதே போல் அவர் இயக்கிய கடைசிப் படத்தில்’ தந்து விட்டேன் என்னை ‘ படத்தில் காதலியின் திருமணத்திற்கு வந்து அதே போன்று அட்சதை பெறும் நாயகனாக விக்ரமின் முதல் படம். ஸ்ரீதர் இயக்குனராக முதல் படம், கடைசிப் படம் இரண்டின் இறுதிக் காட்சிகள் இவ்வாறு அமைந்தது வியப்புக்கு உரிய விஷயம் தான். . ஆனால் அதில் விக்ரம் , இன்னொரு பெண்ணின் கரம் பிடிப்பதாக மகிழ்ச்சியாக முடித்திருப்பார். இந்தக் காலத்தில் மக்கள் அந்த சோகத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்ததால் இருக்கலாம்
அந்த பழைய படங்களில் முக்கோணக் காதலில் தோல்வி அடைந்த காதலனோ காதலியோ மற்றவரை ‘ எங்கிருந்தாலும் வாழ்க ‘ என்று வாழ்த்தும் குணம் உடையவர்களாக படைத்திருந்தது அந்தக் காட்சிகளை இன்றும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .
இப்போது போல், ‘ அடிடா அவளை, குத்துடா அவளை ‘ என்று வன்முறையை தூண்டி இன்றும் பத்திரிகைகளில் படிக்கும் பல கொலைச் சம்பவங்களைத் தூண்டாத மென்மையான காதல் காட்சிகள் அவர் அமைத் தவை .
மென்மையான , தியாகம் நிரம்பிய முக்கோணக் காதல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது இயக்குனர் ஸ்ரீதர் தானே . கல்யாணப் பரிசில் தொடங்கி , நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை, அவளுக்கென்று ஒரு மனம், இளமை ஊஞ்சலாடுகிறது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
கல்யாணப் பரிசில் ஜெமினி, சரோஜா தேவி, விஜயகுமாரி
நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண் குமார் , முத்துராமன், தேவிகா
வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் , ஜெயலலிதா , நிர்மலா
அவளுக்கென்று ஓர் மனம் , ஜெமினி , முத்துராமன், பாரதி
இளமை ஊஞ்சலாடுகிறது கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா
முக்கோணக் காதல் கதைகளில் முத்திரை பதித்தவர் அல்லவா ஸ்ரீதர்
இது போன்று பாடல் காட்சிகளை அவர் படம் ஆக்கி இருக்கும் விதமும் அருமையாக இருக்கும் .
நிலவொளியில் ,காஷ்மீரில், ஏரியில் ,படகில் இருந்து நாயகன் நாயகி பாடும் தேன் நிலவு . ‘ நிலவும் மலரும் பாடுது ‘ பாடலை அவர் படம் ஆக்கி இருந்த விதம் மறக்க முடியுமா .
கண்ணதாசன் , ஸ்ரீதர் சேர்ந்து ஏ எம் ராஜா ,விஸ்வநாதன் இன்னிசையில் அமைந்த காதல் பாடல்களையும் இசையமைப்பையும், காட்சிப்படுத்தலையும் மறக்க முடியுமா. ஸ்ரீதருக்குப் பிடித்தமான முக்கோணக் காதலை சோகத்தின் நெகிழ்வோடு நமக்குள் பாய்ச்சிய பாடற் காட்சிகள் அல்லவா அவை .
நெஞ்சில் ஓர் ஆலயம் ‘சொன்னது நீதானா ‘ பாடல் காட்சியில் வின்சென்டின் கேமெரா கோணங்கள். சித்தாரோடு தேவிகா, திறந்திருக்கும் ஜன்னல், முத்துராமன் கட்டில் , என்று காட்டி அந்தக் கட்டிலுக்கும் அடியில் சென்று வரும் காமெரா, என்று படம் ஆக்கியுள்ள விதம்.
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘பாடல் காட்சியில் ‘ஒன்றிருக்க ஓன்று வந்தால் வரியில்’, சிறிய முக கண்ணாடியில் முத்துராமன் உருவம் தெரிய , தேவிகா அதை பார்த்து கலங்குவது .
‘எங்கிருந்தாலும் வாழ்க ‘ ஏ எல் ராகவனின் உருக்கமான குரலில் கல்யாண் குமார் , தேவிகா புகைப்படத்தை வைத்துக் கொண்டு பழைய நினைவுகளில் கலங்கி அதே சமயம் ‘தூயவளே நீ வாழ்க ‘ என்று போற்றிப் பாடும் அந்தக் காட்சியைக் காதல் கவிதையாக கண் முன் வடித்துத் தந்தது ஸ்ரீதரின் இயக்கம் அல்லவா.
சோகத்தின் நெகிழ்வை நமக்குள் பாய்ச்சிய பாடற் காட்சிகள் அல்லவா அவை
குறைந்த ஒளியில் படம் ஆக்கப்பட்ட ‘முத்துக்களோ கண்கள்’ , நெஞ்சிருக்கும் வரை பட பாடல் காட்சி யின் காதலும் கவிதையும் மறக்க முடியுமா
‘ பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி ‘ பாடலில் சிவாஜி , முத்துராமன் , கே ஆர் விஜயா நடிப்பில் .அந்தக் காட்சிகள், அந்தக் காலத்தில் எல்லாத் திருமண நிகழ்வுகளிலும் ஒலித்த பாடல் அல்லவா அது.
ஸ்ரீதர் டச் , நீங்கள் பார்த்து அனுபவிக்க வேண்டும் .
பெரிய பிரேமுக்குள் சின்ன பிரேமாக மற்றும் ஒரு காட்சி வரும் பாணி.
மீண்ட சுவர்க்கம் படத்தில் ‘படத்தில் துயிலாத பெண் ஒன்று கண்டேன்’ – ஆகாயத்தில் காதல் சின்னத்தில் ஜெமினி, பத்மினி பறப்பது
அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் – பாரதி , ஜெமினி காதல் காட்சி யிலும் வரும் , . இந்த பாணி சிவந்த மண் ; ஒரு ராஜா ராணியிடம் பாடலிலும் வரும்.
இந்த பாணியெல்லாம் பின்னால் பலர் செய்தாலும் மீண்ட சொர்க்கத்தில் ஸ்ரீதர் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
அது போல் ‘என்ன பார்வை உந்தன் பார்வை ‘ காதலிக்க நேரமில்லை பாடலிலும் , கார் கண்ணாடியில் முத்துராமன் முகம் தெரிய முன்னால் காஞ்சனா ஆடிச் செல்லும் காட்சியும் அருமையாகப் படம் பிடித்திருப்பார்.
ஒளிப்பதிவாளர் வின்சென்டை வேலை வாங்கியவர் ஸ்ரீதர் தானே.
காதல் காட்சிகள் இப்படி சோகத்தில் நெகிழ வைத்தால், அவர் தந்த நகைச்சுவை காட்சிகள்,
பார்க்கில் படுத்துக் கொண்டு எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லும் கல்யாணப் பரிசு தங்கவேலு,
பிறகு நண்பர் கோபுவோடு சேர்ந்து அவர் தந்த நகைச்சுவைக் காட்சிகள்
காதலிக்க நேரமில்லை
‘ அசோகன், மகன் என்று ‘ ன் விகுதியோடு சொல்வது மரியாதை இல்லை என்று அசோகர் உங்க மகரா’ என்று பாலையா , முத்துராமனிடம் கேட்கும் காட்சி .
நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் , ஒரு கண்ணுள்ள பொண்ணா என்பதை ‘ ஒரு பொண்ணுள்ள கண்ணா ‘ என்று பயத்தில் பாலையா உளறுவது ‘
ஊட்டி வரை உறவு நகைச்சுவை .
சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நேரக் கட்டுப்பாடு கருதி , அவரது படத் தலைப்புகளையே உபயோகப்படுத்தி
நம் நெஞ்சிருக்கும் வரை . நெஞ்சம் மறப்பதில்லை , நெஞ்சில் ஒரு ஆலயமாய் ஸ்ரீதர் நினைவு என்றும் நிற்கும் என்று சொல்லி இத்துடன் நிறைவு செய்கிறேன்.நன்றி.

பாரதிராஜா – புதிய பரிமாணத்தைத் தொட்ட இயக்குனர் (முனைவர் தென்காசி கணேசன்)
எனக்கு தெரிந்து திரைப்படம் தொடங்குமுன், 1950களின் இறுதிகளில், திரு பி ஆர் பந்துலு அவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் , வெளிவந்தபோது, ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு, கலா ரசிகப் பெருமக்களே, என்று அடிமை இந்தியா மற்றும் போரிட்ட விடுதலை வீரர்கள் என்று பேசுவார். பின்னாட்களில, இயக்குனர் ஏ பி நாகராஜன், நவராத்திரி மற்றும் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள், படங்களில் பேரனபுடைய ரசிகப் பெருமக்களே என்று தொடங்குவார். இரண்டு குரல்களும் அன்றைய தமிழ் ரசிகர்களை , அந்தப் படங்களை எதிர்பார்ப்பில் இருக்க வைத்தன.
பாரதிராஜா – கிராமத்தைப் படமாககியவர் மட்டுமல்ல – பாடமும் ஆககியவர்.
அவரோடு பணியாற்றிய படங்களில் நான் நடிக்கவில்லை – என்னை நடிக்க வைத்தார் – இப்படிப்பட்ட வாழ்த்தை வழங்கியவர் வேறு யாருமில்லை – பார் போற்றும் கலை உலக சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி தான்.
கிராமங்களை நான் நேசிக்கிறேன் – அந்த அடையாளங்களை நான் காதலிக்கிறேன் என்பார். கிராமம் அவர் கைகளில் வீணை யானதால், ஒவ்வொரு மீட்டலும், புதிய ராகமாய் வெளிவந்தது.
16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, மண்வாசனை என பல கிராமிய படங்கள் – அதை தவிர, பல வகைப் படங்கள்.
புதிய வார்ப்புகள், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், பசும்பொன , என எல்லாவற்றிலும ஒரு புதுமை – மண்ணின் இளமை – அது தான் பாரதிராஜா
அவரின் பெருவாரியான படங்கள் – புதுமை மற்றும், கூரான வசனங்கள் – கண்ணை கவரும் ஒளிப்பதிவு – கிராமத்தின் தத்ரூபம் – அதேபோல, பாடல்களும் இவரின் படங்களுக்கு உறுதுணையாக இருந்தன. பெரும்பான்மை இளையராஜா, அப்புறம் தேவேந்திரன், வித்யாசாகர், ரஹ்மான் என அனைவரின இசையில வெளிவந்தது. இவரின் படங்களுக்கு, ஒளிப்பதிவு, பீம்சிங் மகன் பி கண்ணன். -ஒளிப்பதிவிற்கு, நான் காமிராவை எடுத்துச் செல்வதில்லை. கண்ணனைத்தான் அழைத்துச செல்கிறேன் என்று. ஶ்ரீதருக்கு வின்சன்ட்,பாலகிருஷ்ணன் போல, பாரதிராஜாவிற்கு, கண்ணன்.
பீம்சிங், ஶ்ரீதர், பாலச்சந்தர், கே எஸ் கோபாலகிருஷ்ணன் வரிசையில் இவருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. இவரின் படங்களில் எதை விட – எதைக் கூற ? தொடக்கத்தில், புட்டன்னா, ரா சங்கரன் இவர்களிடம் உதவியாளராக பணி புரிந்தார்.
பதினாறு வயதினிலே பாத்திரப் படைப்பு – கமல், ரஜினி, ஶ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி என் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா, ஆனா நாயி மட்டும் வளக்கல – இந்த சப்பாணியை வளத்தா , பத்த வச்சுட்டியே பரட்டை, போன்ற வசனங்கள் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. சப்பாணியின் நேயத்தை காட்ட , ஒனானைக் கொலலாதீங்கடா என்பான் சப்பாணி – ஶ்ரீதர் பாலச்சந்தர் போல directorial டச். இதில் வந்த ஶ்ரீதேவி தொட்ட உயரம் தான் என்ன ?
கிராமத்தில் சந்தை கூடுதல் என்பது முக்கியமான ஒன்று. 16 வயதினிலே படத்தில், மயிலின் தாய் குருவம்மாளுடன் சப்பாணி சந்தைக்கு போகும்போது, மருமவனே என்பாள் குருவம்மாள்.
முதல் மரியாதை படத்தில் – சிவாஜி , ராதாவிற்கு, ஆடு விற்றுக் கொடுப்பது, ஃபோட்டோ எடுப்பது, அதை ஒருவர் பார்த்து கண் அடிப்பது – அதைப் பார்த்த சிவாஜி அட சீ என்று துண்டை உதறிக்கொண்டு செல்வது என இப்படி , கிராமதுக்கே உரித்தான காட்சிகள்; ( அந்த ஃபோட்டோ தான் பின்னாளில் குருவம்மாவின் கோபத்துக்கு விதை ஆகிறது.) செருப்பு தைக்கும் செங்கோடன் மகள் காதலைக் கூட , காதலி pant வாங்கி தருவதன் மூலம் தெரியப்படுத்துவார் . கிழக்கே போகும் ரயில் படத்தில், கிராமத்து ராட்டினம் அவர்கள் காதலை உறுதி செய்யும் இடம் திருவிழா சந்தை,
மண்வாசனை – நாயகி முத்துப்பேச்சி ஃபோட்டோ எடுக்க ஸ்டுடியோவில் இருக்கும்போது, போட்டோக்காரன் அவளை ஒரு மாதிரி பார்க்கும்போது, முறை மாமன் அடிப்பது, அப்புறம், நாயகியை அடிப்பது – இது காதலை உறுதி செய்யும் சந்தை சூழ்நிலை
இந்தச் சந்தையே, இவரின் பல படங்களில், கதை வளர்க்கும் களமாக அமைந்து விடுகிறது என்றால் மிகை ஆகாது.
முதல் மரியாதை – கதாநாயகன் இமயம் சிவாஜி – அந்த உடல் வாகு – அதற்கேற்ப ஒரு தொட்டுக் கொள்ளாத காதல் கதை – உண்மையிலே அது ஒரு கிராமத்துக் காவியம் என்றால் மிகை ஆகாது.
சிவாஜி நடிக்க வந்து 32 வருடங்கள் கழித்து இந்தப் படம். சிவாஜி வெகு இயல்பாக வாழ்ந்திருப்பார். மீன் குழம்பு சாப்பிடும் இடம் – கல்லை தூக்கி, இளமையை நிரூபிக்கும் காட்சி -ஆற்று நீரில் மீன் பிடிக்கும் காட்சி – தனித்தனியே எதுவும் கிடைக்கவில்லை, இருவர் இணைய, நிறைய மீன்கள் – இதயம் இணைந்திருக்கிறது என்பதை கூறும் டச். இறக்கும் நிலையில் மூச்சு மேலும் கீழும் வாங்க, கைக்குள் தலைமயிரில் கோர்த்த முத்து என வைத்து , ராதா வந்தவுடன் கண்கள் மேலே போய், மூச்சு சிவாஜிக்கு மட்டுமா நிற்கிறது ? பார்க்கின்ற அனைவர்க்கும் தான். உயிரின் சிலிர்ப்பை கண்களில் கொண்டு வந்திருப்பார்.
திருவரங்கப் பெருமானாக சிவாஜி ஒருக்களித்துப் படுத்து இருக்க, உள்ளே ராதா காலடி கேட்டவுடன், உடலும் கண்ணும் சிலிர்க்கும். அவர் இறக்கும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் கூட உடல் சிலிர்க்கும். – இயக்குனரின கை வண்ணம் அது.
ஆனால் பாரதிராஜா, குமுதம் பேட்டியில், கூறும்போது, வாழ்க்கைக்கு இராமாயணம், மகாபாரதம் எப்படி வழிகாட்டியோ, அதுபோல, நடிப்புக்கு வழிகாட்டி நடிகர் திலகம் என்றும், அவர், நடிப்பு, அசைவு, உச்சரிப்பு இந்த மூன்றினால், ரசிகர்களைக் கட்டிபோட்டவர் என்றும் கூறினார்.
நிறம் மாறாத பூக்கள் படத்தில், மெட்ராஸ் க்ர்ள் என்னும் வார்த்தை ரசிகர்கள் மனதில் அப்படிப் பதிந்தது. காதல் ஓவியம் வித்தியாசம் கொண்ட காதல் இசைக் காவியம்.
புதிய வார்ப்புகள் – அற்புதமான் படம். ஜி சீனிவாசன் அவர்களின அசாத்திய இயல்பான நடிப்பு.அமாவாசை என்று அழைக்க, கவுண்டமணி, உள்ளதை சொல்றீங்க என்று கூற, அதகளம் தான்.
இப்படிப பல படங்கள் – பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, பாரதிராஜா படங்கள் ஒவ்வொன்றும் ஒரு நேர்த்தி,
பாரதிராஜாவின் படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று – வேதம் புதிது திரைப்படம். நிலம் பேதம் பார்ப்பதில்லை – நீரும் , ஆகாயமும், நெருப்பும், காட்றும் பேதம் பார்ப்பதில்லை. பஞ்ச பூதங்களும் பார்க்காத பேதம், பஞச பூதங்களால் ஆன மனிதன் பார்கிறான் என்பார்.
இந்தப் படத்தில் , இயக்குனர், கத்திமே ராதா, கத்திதிருப்பார். எந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தாமல், மனித உணர்வுகளை, வாழ்வின் யதார்த்தத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் கையாண்ட விதம் மிக அழகு.
ஆட்று நீரின் பேதமற்ற தன்மை , வாழும் மக்களிடம் இல்லையே என்பதை கூறி இருப்பார். ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் தானே – அன்பு இல்லாத வழிபாடு எதற்கு என்பார்.
புறையோடிப்போன புத்துநோய் மாதிரி சாதி என்னும் நோய் மனிதற்களிடத்தில் பரவி இருக்கிறது. அதைக் காட்ட, ஊர்ப் பெரியவர் பாலுத்தேவரிடம் , சிறுவன் சங்கரன் கேட்பான் – சாதி இல்லைனு சொல்ற நீங்க மூச்சுக்கு முன்நூறு தரம் பாலுதேவர் என்று சொல்லிக்கிரிங்களே, அது நீங்க வாங்கின பட்டமா எனும் போது, சத்யராஜுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற நமக்கும் நெஞ்சில் ஒரு சுறுக் .
இந்தக் கேள்விகள் சென்ற தலைமுறையோடு போகட்டும் – புதிய தலைமுறை வாழட்டும் என்பார். இந்த படத்தின கதை வசனம் TVS நிறுவனத்தில் பணிபுரிந்த கண்ணன் என்பவர். வேதம் புதிது கண்ணன் என்றே அழைக்கப்பட்டார்.
கிராமங்களில் இனப்பகையும், சாதிபேதமும், மூட நம்பிக்கையும் , மனிதர்களை விலங்குகளாக மாற்றுகின்றன. நகர்ப்புறங்களில் அரசியல் மற்றும் கடமை மறந்த காவல்துறை காரணமாகிறது என்பார்.
அதேபோல – கருத்தம்மா – பெண் சிசு கொலை – மற்றும் கிராமத்து யதார்த்தம் – சற்றே அறச்சீற்றத்துடன் காண்பிக்கிறார். இவள் உடலால் பெண் – உள்ளத்தால் ஆண் என்று ஒரு வசனம் வரும்.
அலைகள் ஓய்வதிலலை படம் அப்போது, பள்ளி மாணவர்கள் காதல் மற்றும் கொஞ்சம் காமம் தொட்ட காதல் என்று விமரிசனம் வந்தது. இருந்தாலும், இதிலும், அவரின் directorial touch மற்றும் கூர்மையான வசனங்கள் நன்றாக இருக்கும். இங்கே பேச்சு மதம் பற்றி இல்லை – இரண்டு மனம் பற்றி – இடையில் வரும் பணம் பற்றியும் கூட, என்று வரும்.
முண்டாசுக்கவி பாரதியின் புதுமைப் பெண்ணை அப்படியே தந்தார், திரைப்படமாக. தென்றலாம் பெண்மை புயலாக மாறிய அழகு – அவதாரம் இந்த படம்
என்னுயிர்த் தோழன் – வெளியில் அதிகம் தெரியாமல் போன மிக அருமையான படம் – தலைவனே, தொண்டனை தீ குளிக்க வைக்கும் படம் – நீயே நான் எனப் பேசும் நய வஞ்சகம் , அற்புதக் கதாபாத்திரங்கள். நறுக்கு வசனங்கள் – அறியாமைக்கு எப்போது விலங்கிடப் போகிறோம் ? இந்த தேசத்தை சூழ்ந்திருக்கும் இருட்டுக்கு இபிகோ வில் பிரிவு உண்டா? இப்படித் தெறிக்கும் வசனங்கள்.
ஆற்றின் சலசலப்பு, கோயில்களின் கலைப்பரப்பு, மேகங்கள் சூழ்ந்த வானம்,பொன் விளையும் பூமி, வயல் வெளிகள், அருவிகள், பறவைகளின் சப்தங்கள் , மரங்களின் அசைவுகள், இவற்றுடன், கிராமத்து யதார்த்தம், உண்மை வாழ்வு – பேதமற்ற வாழ்க்கை முறை – புரிதல் என – ஒரு ராக மாலிகையாகவே இவர் படங்களைத் தந்திருக்கிறார்.
வாலிபமே வா, கல்லுக்குள் ஈரம், கொடி பறக்குது, கேப்டன் மகள், டிக் டிக் டிக் போன்ற சில சுமார் படங்களை தந்தாலும், பெரும்பான்மையான படங்கள் கலை நயம், மற்றும் யதார்த்தம் இவற்றை தான் தந்தது என்றால் மிகையாகாது.
ராதிகா, ராதா, ரேவதி, ரதி, சுகன்யா, பாக்கியராஜ்,ராஜா, மணிவண்ணன் என பலரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஆறு முறை தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றவர்.
பாரதிராஜாவே கூறி இருக்கிறார் – கலைஞன் என்ற முறையில் பொழுதுபோக்கு இன்பங்களைத் தருவதுடன்,, மக்களை சிந்திக்கவும் வைக்க வேண்டும் – அவரைப் பொறுத்தவரை, சமூக உணர்வு தீக்குச்சியாக உரசப்பட்டாலும், தீவட்டியாக கொழுத்தப்பட்டாலும், வெளிச்சம் நிச்சயம் வெளிப்படுகின்றன – அந்த விடியலைக் கலைமூலம் தர முயற்சிக்கிறேன் என்பார். அதைத் தந்தும் இருக்கிறார் என்பதே உண்மை.
ஶ்ரீதர், பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போல, தமிழ்த் திரையின் புதிய பரிமாணத்தைக் காட்டிய பெருமை நிச்சயம், மதுரை மண் தந்த பாரதிராஜாவிற்கு உண்டு.
மணிரத்தினம்
(10/07/2022 அன்று குவிகம் அளவளாவில் பேசிய உரையின் எழுத்து வடிவம்)
கோபால் ரத்தினம் சுப்பிரமணியன் .
‘தென்பாண்டிச் சீமையிலே, தேரோடும் மதுரை’யில் பிறந்த இவரது தேர் இன்று உலகெங்கும் ஓடுகிறது.
ஜூன் மாதம் இரண்டாம் தேதி 1956 இல் பிறந்த இவரை நாம் மணிரத்தினம் என்று தான் அறிவோம். அவரது தந்தைஃபிலிம் டிஸ்ட்ரிபியூஷன் செய்து வந்தார். பெரும்பாலும் வீனஸ் கிரியேஷன்ஸ் படைப்புகள். ஆனாலும் சிறு வயதில் சினிமாவில் அவருக்கு ஆர்வம் இல்லை. பின்னர், கே பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, சிவாஜி கணேசன், நாகேஷ் ஆகியோரது திறமைகள் இவரை ஈர்த்தன.
சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவிட்டு மும்பையில் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்பிஏ படித்தார். சிறிது காலம் கன்சல்டன்ட்டாக இருந்தார். பிறகு சினிமாவில் தான் தன்னுடைய எதிர்காலம் என்று அவருக்குத் தோன்றி விட்டது. அவருடைய அங்கிள் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்க, குறைந்த பட்ஜெட்டில், 1983 ஆம் வருடம் பல்லவி அனு பல்லவி என்ற கன்னடப் படத்தை இயக்கினார். ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்ற படம் அது. கர்நாடக அரசின் விருதுகளையும் வாங்கியது. ஆனாலும், 1986ல் ‘மௌன ராகம்’ படம் வரும் வரை இடைப்பட்ட ஆண்டுகள் அவருக்கு சினிமாவில் சரிவு தான்.
கேபி, மகேந்திரன், பாரதிராஜா மூவருமே அவரைத் தம்முடைய உதவி இயக்குனராகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மௌன ராகம் எல்லாவற்றையும் மாற்றியது. அதில் அவர் பயன்படுத்திய லைட்டிங் அதுவும் பின்னொளிகள், கேமராவை நகர்த்தும் முறை, சிச்சுவேஷனுக்கு தகுந்த பாடல்கள், நல்ல ரீரெகார்டிங் அவரை சிறந்த இயக்குனராக அறிமுகப்படுத்தியது. ‘சந்த்ர மௌலி, சார், சந்த்ர மௌலியை’ மறக்க முடியுமா? அல்லது மழையில் ஆட்டம் போட்டுவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் தவிர்த்த ரேவதியையும், காத்திருந்து அவளை மணம் முடிக்கும் மோஹன் பாத்திரத்தையும் ஒரே மழைக் கால பின் மாலையுடன் இணைத்து அவர்களது கேரக்டரைச் சொன்னதைத்தான் மறக்க முடியுமா? ஒளியும், நிழலுமாக செல்லுலாய்டில் ஒரு ஓவியம் வரைந்தார் அவர்.
அவரது படைப்புகள் சமுதாய சூழல்களைக் கதையுடன் பொருத்திக் காட்டுபவை. சிலவற்றில் புராண சம்பவங்கள்; தளபதியில் மம்முட்டி ரஜினி இருவரின் பாத்திரம் துரியோதனன் கர்ணன் நட்பாகும். அதில் அவர் போட்டிருந்த அரங்க அமைப்புகள் உண்மை என்றே தோன்றியது . அதிலும் ‘ராக்கம்மா கையைத் தட்டு’ பாட்டை எடுத்திருந்த விதம், அதைக் கோயிலில் கை விளக்குகள் ஏந்தி பெண்கள் நடனமாடும் அழகுடன் இணைத்த இசை அபாரம்! என்ன ஒரு அழகியல். ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்’ என்று அழகிய அரவிந்தசாமி தந்தையிடம் ஆவேசப்படும் அந்தக் காட்சி, அந்த அரங்கம், அந்த உணர்வு, பாடலைச் சொல்லிக் கொண்டே வருகையில் இறுதித் தழுதழுப்பு, மிக அருமை. அந்த அரங்கம், அதன் ஒளி, நிழல், இருட்டு விந்தைகள், ஸ்ரீவித்யாவின் கண்களில் நிரந்தரமாகத் ததும்பும் சோகம் என்று காட்சிப்படுத்துதலில் அசத்தியிருப்பார் மனிதர்.
ரோஜா படத்தில் கூட சாவித்திரி சத்தியவான் கதைதான். ஆனால் தென்கோடியிலிருந்து சென்ற பட்டிக்காட்டுப் பெண், காஷ்மீரில், தீவிரவாதிகள் கடத்திய கணவனைப் போராடி மீட்கிறாள். கதையுடன், காஷ்மீர் பிரச்சினையுடன், அருவி, நதி, பனி என்ற பன்முக இயற்கை அழகுடன், சரியான ஒளி விகிதத்துடன், அருமையான இசையமைப்புடன் அனைவரையும் கவர்ந்து பல பரிசுகளை வென்ற படம் அது. இசைப்புயல் ஏ ஆர் ரெஹ்மான் அதில் தான் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானார். பல தேசீய விருதுகள் பெற்ற படம் அது.
இன்று பல ‘பயோபிக்’குகள் வருகின்றன. ‘கப்பலோட்டிய தமிழன்’ பயோபிக் இல்லையா என்ன? 1987 இல் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைப் பிரதிபலித்து இவர் கொணர்ந்த ‘நாயகன்’! ஆணித்தரமான ஒரு செய்தி அதில் இருந்தது; குற்றவாளிகள் சமூகத்தால் உருவாக்கப்பட்டு சூழ்நிலைகளால் மேன்மேலும் குற்றம் செய்கின்றனர். கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மனதை தைக்கும் விதத்தில் அவர் சொன்னது மிக இயல்பாக இருந்தது. இன்றும் அந்த தாராவி செட்டை மறக்க முடியவில்லை. ஹோலி கொண்டாட்டங்கள், நிலவும் கடலும், அன்பும் பாசமும், இசையும் சரியான உடை அலங்காரங்களும் இன்று வரை பல சினிமா இயக்குனர்களுக்கு உதவும் கையேடு என்றே அதைச் சொல்வேன். அதில் வன்முறை, கடத்தல் எல்லோமே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது- ஆனால், மிகைப் பாராட்டுதல்கள் இல்லாத வகையில். பல மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் கலந்து கட்டிய குணம் உடையவர்கள். அதனால் தான், அதில் பாலகுமாரன் எழுதிய ‘தாத்தா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்ற வசனம் இன்றளவும் நிலைக்கிறது. “நீ ஒரு காதல் சங்கீதம்’. ஆஹா, அந்தப் பாடலைப் படமாக்கிய விதமும், மென்மையான உணர்வுகளும், அந்தக் காதலும் அருமையல்லவா?
88 ல் வெளியான அக்னி நட்சத்திரம் அதன் மியூசிக்கல் வீடியோ ‘ஷாட்ஸ்’சால் உள்ளம் கவர்ந்தது. ‘ராஜாதி ராஜன் இந்த ராஜா’ அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம், அந்தப் புகைவண்டி நிலையம், ஒளிப் பிழம்புகளாக இளைஞர்கள் தாவிக் குதித்த அற்புதம், ஃப்ளேர் வடிகட்டியின் உதவி அது; ஸ்ரீராமும், மணிரத்னமும் ஒன்றாகவே சிந்தித்தது போல இருந்தது. அதற்கு நேர் எதிரானது, சாஃப்ட் ஃபோகஸ் ஷாட்ஸ் அமைந்த, உயிர் கொடுத்து ஜானகியும், ஜேசுதாசும் பாடிய அமிர்தவர்ஷினி இராகப் பாடலான ‘தூங்காத கண்கள் ஒன்று’ பாடல். அதில் படஇயக்குனர், கேமரா இயக்குனர், இசை இயக்குனர் என்ன ஒரு அழகாக இணைந்திருந்தனர். அந்த ரேஸ் கோர்ஸ் சண்டைக் காட்சி, கனகம்பீரமான குதிரைகள், காட்சிப் படுத்துதலில் களத்தின் தேர்வு அற்புதமல்லவா?
ரோஜா, பாம்பே, தில் சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை காஷ்மீர் டெரரிசம், இந்து- முஸ்லீம் மதக்கலவரம், உல்ப்பா, இலங்கை நிலவரம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டவை.
அஞ்சலி, ‘ஆடிசம்’ பாதித்த குழந்தைகளைப் பற்றி பார்ப்போர் மனம் கசியும் வண்ணம் சொல்லியது. அதிலும் ‘வேகம் வேகம் தூரம் போகும் மேஜிக் ஜர்னி’ -அட்டகாசமான உஷா உதுப்பின் குரலில், ராஜாவின் தரமான ஸ்வரக் கோர்வைகளில், நேர்த்தியான படப்பிடிப்பு. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படிகளில் கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்ற கோபத்தில் நாயகி விரைவாக இறங்கிச் செல்ல, நாயகன் அவளைத் தடுத்து நிறுத்த இறங்க, அந்தப் படிக்கட்டுகளில் கேமரா சுழன்றாடிய விதம் அபாரம். கடைசிக் காட்சியில் ‘ஏந்துரு அஞ்சலி, ஏந்துரு’ என்று அந்தச் சின்னப் பெண் கூவுவது நம்மைப் பார்த்துத்தான்- ஆடிஸக் குழந்தைகள் பைத்தியங்கள் அல்ல என்ற தெளிவை நாம் பெறத்தான். ஆடிசக் குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் ‘பன்யான்’ என்ற அமைப்பிற்காகவும் இயக்குனர் வசந்துடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் ‘நேற்று இன்று நாளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி பெருமளவில் பணம் திரட்டித் தந்தார்.
குரு என்ற படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது திருபாய் அம்பானியின் வாழ்க்கையைக் காட்டியது. கீதாஞ்சலி தெலுங்கு திரை உலகிலும் அவருக்கு பெயர் சொல்லும் படமாக வந்தது. ராவண் ஹிந்தியில் மற்றும் அயல்நாட்டில் சிறப்பாக ஓடியது ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம் வெற்றிப்படங்கள் தான். சீரியஸாகவும் படம் எடுப்பார்; சிரிப்பாகக் கூட ‘திருடா திருடா’ அப்படிப்பட்ட ஒரு படம். அதில் கோட்டையில் ஆடும் அந்தப் பாடல்- ‘சந்த்ர லேகா.’
தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளைப் பற்றிய ‘இருவர்’ என்னைப் பொறுத்த வரையில் ஏமாற்றமே. முழுமையான சித்தரிப்புக் கைகூடாத படம் என்றே தோன்றும்.
‘அலைபாயுதே’ மிக மிக இயல்பாக இளைஞர்களைக் காட்டிய படம். குடும்பத்திற்குள்ளும் இருப்பார்கள், தாங்கள் விரும்புவதில் உறுதியாகவும் இருப்பார்கள்.
பல படங்கள், அதில் 90 சதவீதம் வணிகமாவும், கலையாகவும் இணைந்து வெற்றி பெற்றவை. தன்னுடைய பல படங்களுக்கு அவரே திரைக்கதை எழுதியிருக்கிறார். ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், மது அம்பாட், ராஜீவ் மேனன், ரவி கே சந்திரன், மணிகண்டன், ரவிவர்மன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தோட்டாதரணி, என்ற அற்புதக் கூட்டணி அவரது பலம்.
ஆறு தேசிய விருதுகள், நான்கு பிலிம் ஃபேர் விருதுகள், ஆறு பிலிம் ஃபேர் விருதுகள் தென்னகத்திற்காக பெற்றவர்
பல சினிமா விமர்சகர்கள் இவரது ஒளி அமைப்பை, காட்சிப்படுத்துதலை, சிறு சிறு உரையாடல்களால் கதை சொல்வதை வியந்து பாராட்டி இருக்கிறார்கள். ஒரு சிறந்த இயக்குனராக அவர் சர்வதேசப் புகழ் பெற்றவர்.. நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்வோம் ‘உம்’ என்று ஒரு காட்சியில் சொல்ல வேண்டி வந்தால், அதை, கிட்டத்தட்ட குளோசப் ஷாட் வைத்து முகக் குறியால் காட்டி விடுவார் மணிரத்தினம் என்று.
2002 ம் ஆண்டு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்தது.
அயல்நாடுகளிலும் இவரைக் கொண்டாடுகிறார்கள் டொராண்டோ இன்டர்நேஷனல் ஃப்லிம் ஃபெஸ்டிவல், டோக்கியோ பிளிமிக்ஸ் பெஸ்டிவல், மான்ட்ரியல் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல், பாம் ஸ்பிரிங், என்று அனைத்துலக விருதுகளை வென்றவர். லண்டன் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அமைப்பு இவருக்கு “சன்மார்க் லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்ட்” வழங்கியிருக்கிறது.
நியூயார்க்கில் ‘மியூசியம் ஆப் மூவிங் இமேஜ்’, ரோஜா, பாம்பே, தில் சே ஆகிய படங்களைக் காட்சிப்படுத்தி சிறப்பு அந்தஸ்தையும் வழங்கி இருக்கிறது.
உலக அளவில் சத்தியஜித்ரேயை, சாந்தாராமைத் தெரிந்து வைத்திருப்பார்கள். கோலிவுட் என்ற தமிழ் தென்னக சினிமாவை பாலிவுட் ஹாலிவுட் போன்ற இடங்களிலெல்லாம் கொண்டாடச் செய்தவர் இவர்.
இவரது சிறப்புகள் என்ன? ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கும், கறாரான சினிமா விமர்சகருக்கும் இவர் சமமாகப் புரிந்து விடுகிறார். காட்சி அமைப்பின் விந்தை, கேமரா கோணங்கள், அளவு மிகாத வசனங்கள், பொருத்தமான களம், அலட்டல் இல்லாத தன்மை, டெக்னிக்கல் நாலெட்ஜ், லவ் ஃபார் ம்யூசிக், சமூக நிலவரம் அனைத்தும் சரியான விகிதத்தில் தர முடிந்த இவரால் ‘பொன்னியின் செல்வனை’ சிறப்பாகத் தானே தர முடியும்? அந்த பிரம்மாண்டமும் இவருக்கு வசப்படும். பொன்னியின் செல்வன் தமிழர் அனைவருமே விரும்பும் பெருமை மிக்க வரலாற்று நாவல். கல்கி அதை ‘விசுவலாகவே பல இடங்களில் எழுதி இருப்பார். மணிரத்னமும் சினிமாவை சரியான விஷுவல் மீடியமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். நிச்சயமாக நம் அனைவருக்கும் நல் விருந்து காத்திருக்கிறது அவர் தேர்வு செய்த நடிகர்களை எண்ணி எண்ணி வியக்கிறேன். சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் , சின்னவர் பார்த்திபன், ஆதித்த கரிகாலன் விக்ரம், குந்தவை திரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி அருண்மொழிவர்மராக ஜெயம் ரவி. நம் உள்ளம் அனைத்தையும் கொள்ளை கொண்ட குறும்பு இளவலாக, வீரனாக, குந்தவையின் கணவனாக, வல்லத்து இளவரசன் வந்தியத் தேவனாக கார்த்திக். இசை ஏ ஆர் ரஹ்மான்.
கரிகாலனைக் கொன்றவர் யாரென்று மணிரத்தினத்திற்குத் தெரியும்!
தேடல் கொண்ட கலைஞர் இவர். கொண்டாடுவோம்.
பானுமதி ந