என் பையன் கார்த்திக் ‘அம்மா, ப்ரீத்தி, வருண், எனக்கு தஜிகிஸ்தானுக்கு மாற்றலாகி வந்திருக்கிறது’ என்று கூவிக் கொண்டே வந்தான். ‘எதுக்கடா தடிக்கி விழுந்து கொண்டு வருகிறாய்’ என அம்மா வினாவினாள். ‘தடி இல்லைம்மா, தஜிகிஸ்தான் என்று சொன்னேன்’ என்றான். ‘ஆங் அது எங்கே இருக்கு!’ ‘ரஷ்யாம்மா’. ‘இப்ப அங்கே சண்டையாமே! அங்கே ஏன் நீ போகிறாய்’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன் ஆர்மியில் வேலை செய்யும் ஆபிசரிடம். இந்தக் கேள்வியையே பிறகு எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். கழகஸ்தான், கிர்கிஸ்தான் என்று தெரிந்தவர்களுக்கு இந்த தஜிகிஸ்தான் கொஞ்சம் புதிதாகத்தான் தெரிகிறது. ‘என்னம்மா நீ இப்படி என்னிடம் கேட்கிறாய். மேலும் எத்தனை டெஸ்ட், இன்டர்வியூ, அதற்கப்புறம்தானே வெளிநாட்டு வேலை கிடைத்திருக்கிறது’ என்று என்னை சமாதானப்படுத்தினான். இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வந்தான். பொங்கல் கழிந்த பின் கிளம்பி விட்டான். நானும், என் மருமகள் ப்ரீத்தி, பேரன் வருண் மூவரும் லீவில் அங்கே சென்றோம். நீங்கள் எத்தனை பேர்கள் அங்கே சென்றிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்து மகிழ்ந்த தஜிகிஸ்தானைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் எனது மனம் சங்கடப்படும், உங்களுடையதும்தான்!
சுத்தம், தண்ணீர்: தஜிகிஸ்தான் விமான நிலையம் மிகவும் சிறியது. எப்போதும் போல இறங்கினவுடனே வாஷ்ரூம் செல்லப் போன எங்களை கார்த்திக் தடுத்து விட்டான். சுத்தமான தண்ணீருக்குப் பஞ்சமில்லாத நாட்டில் எந்த இடத்திலும் வாஷ்ரூமில் தண்ணீர் கிடையவே கிடையாது. ஆனால் குளிக்கும் இடத்திலும், வாஷ்பேசினிலும் எங்கேயும், எப்போதும் குளிர் நீரும், சுடு தண்ணீரும் வரும். நாங்கள் ஒரு இராத்திரி ஒரு ஹோட்டலில் தங்கினோம். அங்கும் ரூமீல் தண்ணீர் பாட்டில் வைக்கப்படவில்லை. நல்ல வேளை நாங்கள் எடுத்துக் கொண்டு சென்றோம். இரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவது போல தினமும் ஒரு லாரியிலிருந்து பைப்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்க ரோடு பூராவும் சுத்தம் செய்கிறார்கள். எவ்ளோ பெரிய ரோடாக இருந்தாலும் சரி. ஆனால் வாஷ்ரூமில் ஏன் இப்படி, புரியவில்லை, பிடிக்கவில்லை. இந்த ஒன்றைத் தவிர இந்த நாடு பல விதத்திலும் சுவர்கபூமி தான். எல்லா இடமும் சுத்தம், சுத்தம், சுத்தம். அத்தனை சுத்தம். பாலிதீன் அதிகம் உபயோகிக்கும் நாடு. ஆனால் ஒரு பையோ, குப்பையோ எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அங்கே எப்படி குப்பைகளைக் களைகிறார்கள் என்று இப்போது வரை எங்களுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு எல்லா நாடுகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா!
எங்கும் பசுமை: தண்ணீர் பிரச்சனை இல்லாததால் எல்லா இடமும் பசுமையாக இருக்கிறது. நகரத்திற்கு நடுவிலேயும் மரங்களைப் பார்க்கலாம். இது அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. சென்னையில் கிண்டி ராஜ்பவன் அருகில் இப்படி சில மரங்களைப் பார்க்கலாம். அது கூட இப்போது அழிந்து போகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு செழிப்பான நாடு வேறு ஏதாவது உண்டா என்று தெரியவில்லை!
பூக்கள்: நிறைய குட்டி குட்டி கலர் கலர் பூக்களுடன் ரோஜாத் தோட்டம். பெரியதாக. ஆனால் வாசமில்லா மலரிது! நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இரண்டு மரங்கள் அழகாக எங்களை வரவேற்பது போல வளைந்து இருந்தன.
பழ மரங்கள்: அப்பப்பா, நான் ஒன்றும் உலகம் சுற்றும் வாலிபி (வாலிபனது பெண் பால்) அல்ல. ஆனால் நான் இப்போது குறிப்பிடும் மாதிரி ரோடில் சாதாரணமாக கைக்கெட்டும் தூரத்தில் பழங்களைத் தாங்கிய மரங்கள் இருக்குமா என்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். செர்ரி (என்ன இனிப்பு), பச்சை ஆப்பிள், வால்நட், ஆப்ரிகாட், திராட்சை, மல்பெரி (இரண்டு வகை). இவைகளை அப்படியேப் பறித்து சாப்பிடலாம். மே-ஜூனில் எங்கும் செர்ரி. அங்கு இருப்பவர்கள் இந்த செர்ரியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டி சர்க்கரை போட்டு குடிக்கிறார்கள். நாங்கள் உடல் நலம் கருதி சர்க்கரை சேர்க்காமல் குடித்தோம். எந்த ஒரு செயற்கை எருவோ, கலரோ சேர்க்காத பழங்கள். கண்ணைப் பறிக்கும் கொத்து கொத்து திராட்சை. இதில் என்ன விசேஷம் என்றால் எல்லோரது வீட்டிலும் இத்தனை மரங்களும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களேத் தயாரித்த நான் என்கிற ரொட்டி, பிரட், கேக் (வித விதமான கேக்குகள்) அப்பறம் இந்தப் பழங்கள் தருகிறார்கள். சில சமயம் அவர்கள் சிறிது சோம்பேறிகளோ என்று எண்ண வைக்கிற அளவிற்கு பெரிய பெரிய தடிமனான நான் (ரொட்டி) செய்கிறார்கள் அல்லது கடையில் வாங்குகிறார்கள் அதோடு இந்த ஜூஸ், ஜாம் என்று தங்களது சாப்பாட்டை முடித்துக் கொள்ளுகிறார்கள். வித விதமான தேன் கிடைக்கிறது. எலுமிச்சைத் தோலில் செய்த ஜாம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
உணவு: உணவைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். இதைத் தவிர சாப்டி என்கிற கோன் ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு, சாக்லேட் இவைகளுக்கு கணக்கே கிடையாது. யாரையாவது பார்த்தாலோ அல்லது கல்யாணம் சொல்ல, குழந்தை பிறந்தால் என்றோ உடனே கை நிறைய சாக்லேட் தருகிறார்கள். இதனால் இவர்கள் யாருக்கும் எல்லா சொந்தப் பற்களும் இருக்காது. பல்லைத் தட்டி கையில் வைத்திருப்பார்கள் போலும்! ஜகஜகவென்று ஜொலிக்கும் தங்கப் பற்கள்தான். ஆனால் இவர்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. கடைகளிலும் சாக்லேட் விதவிதமாக குவியல் குவியலாக உள்ளது. எனக்கு அதைப் பார்த்து தலை சுற்றியது. அவைகளை அப்படி பார்க்கும்போது சாப்பிடும் ஆசையே அற்று விட்டது. இன்னொன்று அசைவ உணவு. இங்கு அது சாதாரணம். ஹோட்டலுக்குப் போகும் போது நாங்கள் ஏதாவது எடுத்துக் கொண்டு போய் விடுவோம். பால் சேர்க்காமல் ‘தஜிகி டீ’ என்று அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் ரோஜா இலை, புதினா என்று சில நல்ல மூலிகைகளையும் சேர்க்கிறார்கள்.
தட்ப வெட்ப நிலை: இத்தனை மரங்கள் இருப்பதாலா, மக்கள் தொகை குறைவாக இருப்பதாலா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருப்பதாலா எப்படியோ அங்கு எப்போதும் ஒரு குளிர்ந்த நிலை இருக்கிறது. பென்சிலால் படம் வரைந்த மாதிரி மலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இதனால் எந்த நேரமும் காலாற நடக்க ஆசையாக இருக்கும்.
பூகம்பம்: நில நடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடு இது. ஜூன் 2 ஆம் தேதி பதினொன்று மணிக்கு நாங்கள் எல்லோரும் படுத்த பிறகு தட தடவென்று கட்டில் அடியில் சப்தம். பயந்து வெளியில் வந்து பார்த்தால் 5.38 ரிக்டர் அளவில் நில நடுக்கம் என்று தெரிந்தது. அப்பப்பா இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.
வாகனங்கள்: மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பஸ், கார், சைக்கிள் மட்டும் தான் இருப்பதாலும், அதுவும் சீராகச் செல்வதாலும், அவற்றின் இயங்கும் சப்தமோ, ஹார்ன் சப்தமோ இல்லாததாலும், மக்களது, வாகனங்களது அடர்த்தியான கூட்டம் இல்லாததாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது. வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. பணக்காரான நாடாக இல்லாவிட்டாலும் அவசியம் கருதி எல்லோரிடமும் கார் இருக்கிறது. மொத்தமாக வியாபாரம் நடக்கும் இடங்களுக்கு காரில் வந்து டிக்கி முழுவதும் சாமான்களை வாங்கிச் செல்வது சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.
மனிதர்கள்: இத்தனை சர்க்கரை சாப்பிடுவதால் பற்கள் கெட்டுப் போகலாம். ஆனால் மனிதர்களது உடம்பும், மனசும் மிகவும் மென்மையானது. சிவந்த மென்மைத் தோல், நல்ல உள்ளம். பயமில்லாமல் இரவில் வெளியில் செல்ல முடியும். எந்த நாட்டில் பெண்கள் இரவில் சுதந்திரமாகச் செல்ல முடியுமோ அது தான் நன்நாடு, அது இந்த நாடு. தெரியாதவர்களாக இருந்தாலும் வணக்கம் சொல்லுகிறார்கள். சிரித்த முகத்துடன் கை ஆட்டுவார்கள். இந்திய நாட்டு மக்களை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.
மின்சாரமும், விளக்குகளும்: இரவில் சுதந்திரமாகச் செல்ல இன்னொரு காரணமும் உண்டு. மின்சாரம் தேவைக்கு மேல் உற்பத்தி செய்வதால் இரவில் எங்கு நோக்கினும் வண்ண வண்ண கலரிலும், டிசைனிலும் விளக்குகள் எரிகின்றன. சில இடங்களில் நடை பாதைகளில் கல்யாணத்திற்குப் பந்தல் போட்ட மாதிரி இரு பக்கமும் விளக்குகள் எரிகின்றன. அதன் நடுவில் நடந்து செல்வதே ஒரு தனி ஆனந்தம். அதனால் இந்த நாடு தூங்கா நாடாக இருக்கிறது. ஆம், இரவு எத்தனை மணி ஆனாலும் மக்கள் வெளியில் வந்து குழந்தைகளை விளையாட விட்டு தாமும் உலாவி விட்டுச் செல்கின்றனர். எலெக்ட்ரிக் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகின்றனர், நடை பயிற்சி செய்கின்றனர்.
முக்கிய இடங்கள்: சோமானி ஸ்குயர் மிகவும் முக்கியமான இடம் (இந்த இடத்தில் அமெரிக்காவிலுள்ள லிபெர்டி சிலை மாதிரி ஒரு சிலை இருக்கிறது). இந்த இடத்தில் ஒரு தியேட்டரும் இருக்கிறது. அங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ம்யூசியம், லேக் என்று பொழுதுபோக்கு இடங்கள் நிறைய இருக்கின்றன. இங்கெல்லாம் இரவில் வண்ண விளக்குகளின் அடியில் நடை பயிலுவது மனத்திற்கு ரம்யமாக இருக்கும். மொத்த வியாபாரம் நடக்கும் இடங்களும் நான்கு ஐந்து இருக்கின்றன. எல்லா இடத்திலேயும் பிரெஸிடெண்ட் சிலை இருக்கின்றன. அவர்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். நிறைய இடங்களில் அவரது உருவப்படங்கள் பெரியதாக வைக்கப்பட்டுள்ளன.
ஆப்பாக்களும், ஆக்காக்களும்: நாங்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் கார்த்திக் காரில் எங்களை அழைத்துச் செல்லும்போது டிரைவரை ‘ஆக்கா’ என்று விளித்துக் கொண்டே வந்தான். இதென்னது இவரை ‘அக்கா’ என்று நீட்டிக் கூப்பிடுகிறானே என்று யோசித்தோம். எங்கள் இடத்துக்குப் போனவுடன் ‘அம்மா இங்கே வேலை செய்யும் ‘ஆப்பாக்கள்’ உங்களைப் பார்க்க வந்திருக்கின்றனர்’ என்றான். சரி வேலை செய்பவர்களை ‘ஆப்பா’ என்று சொல்கிறான் என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது எல்லா ஆண்களையும் ‘ஆக்கா’ என்றும் எல்லா பெண்களையும் ‘ஆப்பா’ என்றும் எல்லோரும் எல்லா இடத்திலும் கூப்பிடுகிறார்கள் என்று. இனம் மாறி விட்டதோ!
நாணயம்: இங்கு உபயோகப்படுத்தப்படும் நாணயம் “சோமானி”. 1 சோமானி சுமார் 7 ரூபாயாகும். மொத்த வியாபார கடைகளில் நன்கு பேரம் பேசி வாங்கலாம். அவர்களும் இந்தியர்கள், சுற்றுல்லாப் பயணி, நிறைய வாங்குபவர்கள் என்று குறைத்துக் கொடுப்பார்கள்.
மொழியும் முழியும்: அங்கு பேசும் மொழி தஜிகி. நமக்கு அது புரியாது. ருஷ்ஷியனும் பேசுவார்கள். தஜிகி மொழியில் ஒன்று இரண்டு வார்த்தைகள் கற்றுக் கொண்டு நாங்கள் கடைக்குச் செல்லுவோம். ஒரு முறை கார்த்தியும், ப்ரீத்தியும் வருணுக்கு டிராயிங் பேப்பர் வாங்கச் சென்றனர். வரைந்து காட்டி, கோடு போட்டுக் காட்டியும் டிராயிங் பேப்பரைப் புரிய வைக்க முடியவில்லை. அது எங்கும் கண்ணில் தட்டுப் படாததால் வாங்க மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியில் ஒரு கடையில் அதைப் பார்த்து எடுத்த போது கடைக்காரன் ‘நீங்கள் முதலிலேயே வெள்ளைப் பேப்பர் என்று சொல்லியிருக்கலாமே’ என்ற போது அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது.
படிப்பு: தஜிகிஸ்தானில் மருத்துவ படிப்பதற்கான கல்லூரி உள்ளது. இது நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தருகிறது. கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். டெல்லியிலிருந்து தஜிகிஸ்தான் செல்ல நேர் விமான சேவை இல்லாத நேரங்களில் துபாய், கத்தார் வழியாகச் செல்லலாம்.
ரசித்தல்: அதீத பகட்டோ, ஆடம்பரமோ, மாட மாளிகையோ இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழும் இவர்கள் அதனை ரசிக்கிறார்கள். ஆபரணங்களும் அதிகம் இல்லை. சாதாரணமான ஒன்று இரண்டு அணிகலங்கள்தான். இவர்களது காதல் இனிப்பு மேல் தான். இரவிலும் குடும்பத்தோடு வெளியில் சென்று பொழுதைக் கழிக்கின்றனர்.
வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த தஜிகிஸ்தானையும் தங்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த மென்மையான குளிர்ந்த சூழல், ஆடம்பரமில்லாத அமைதியான, சுத்தமான சூழ்நிலை, கள்ளங் கபடமற்ற மென்மையான சாதாரணமான மனிதர்கள், மனித நேயங்கள், சுத்தமான சுற்றுப்புரம், பச்சைப்பசலேன்ற சுவையும் சுகாதாருமுமான கனி தரும் மரங்கள், படம் வரைந்தாற் போல மலைகள் இவை எல்லாவற்றையும் கொண்ட தஜிகிஸ்தானை விட்டு வர மனமே இல்லை.
லீவு முடிந்து விட்டது. திரும்ப வர வேண்டுமே! வாழ்க்கை இங்கேதானே! தாய் நாட்டை மறக்க, மறுக்க முடியுமா!