பஞ்ச லட்சண திருமுக விலாசம்
“என்ன தாத்தா இது? சித்த மருந்தா இல்லை ஏதாதவது முகவரியா? புது மொழியாக இருக்கே என்றாள் என் பெயர்த்தி.
“இல்லம்மா! ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றி பேசப் போறேன்” என்றேன். “ புத்தகத்திற்கு இப்படியெல்லாம் பேர் இருக்குமா” எனக் கேட்டாள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் அவள். அவளுக்கு ஆச்சரியம்.
ஆம்! எந்த வகை இலக்கணத்தைச் சாரா விட்டாலும் 19ம் நூற்றாண்டில் ‘விலாசம்’ என நூலுக்கு பெயரிடுவது ஒரு fashion ஆக இருந்தது எனத்தான் கருத வேண்டும். அவ்வகை நூல்கள் ஒரு இலக்கிய எல்லைக்குள் அடங்காது பல விதமான பாடு பொருளை கொண்டதாக அமைந்திருக்கும்.
‘டம்பாசாரி விலாசம்’ ‘மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம்’, ‘சந்திர விலாசம்’ சமுத்திர விலாசம்’ என சொல்லிக் கொண்டே போகலாம்.
பம்மல் சம்பந்த முதலியாரால் அதே காலத்தில் அவர் எழுதிய சுகுணா விலாசம் என்ற நாடகத்தின் பெயரால் தோற்றுவிக்கப் பட்ட’சுகுணா விலாச சபா” இன்றும் சென்னை, அண்ணா சாலையில் புதுப் பொலிவுடன் மக்களை மகிழ்வித்துக் (!)கொண்டுள்ளது.
நான் ‘விலாசம்’ என்ற தலைப்பை விலாசமாக விவாதிக்க வரவில்லை. என்னை எழுதத் தூண்டியது நான் தேடிக் கண்டு பிடித்த பிரமனூர் வில்லியப்ப பிள்ளை இயற்றிய ‘ பஞ்ச லட்சணத்திருமுக விலாசம்’ என்ற புதையலை ஒரு சிலரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணம்தான்.
தாது வருஷமான 1876 ம் ஆண்டின் பஞ்சத்தின் கொடூரத்தை 60- 70 ஆண்டுகள் கழித்துப் பிறந்த என் போன்றோர் அனுபவிக்காமலேயே பெரியோர்கள் மூலம் அறிந்துள்ளோம். இன்றைய தலைமுறைகூட முகநூல்,Whats up மூலமாக ஓரளவு அறிவர். பல லட்சம் மக்களை பட்டினியால் காவு வாங்கிய பஞ்சம் பல நல்லவைகளையும் செய்துச் சென்றது.
(படம்: சொல்வனம் )
மதுரை, வடக்கு ஆவணி மூல வீதி, அன்று நல்லோர் நடந்து கடந்து செல்ல தயங்கிய வீதி. காரணம் அங்கு பல வீடுகளை வாங்கிக் குவித்து வசித்த குஞ்சரம் என்ற பரத்தை.
அவள் அத்தனை ஆண்டுகள் சம்பாதித்த கெட்ட பெயரை தாது வருஷ பஞ்சம் நீக்கி குஞ்சரம்மாள் என்ற புனிதவதியாக்கியதாம். தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று இரவும் பகலும் கஞ்சித்தொட்டியில் கஞ்சியை நிரப்பி சாக இருந்த பல உயிர்களை காப்பாற்றினாராம் குஞ்சரம்மாள். பஞ்சம் முடிந்த தருணம் நோயுற்று தன் குடிசையில் உயிர் விட்டாராம். அன்று அவர் மறைவிற்கு கூடிய அது போன்ற கூட்டம் பல ஆண்டுகள் சென்று சித்திரை திருவிழாவிற்குதான் கூடியதாம்.
தனி மனித துதி பாடாத கோபால கிருஷ்ண பாரதியாரையே கஞ்சித் தொட்டியமைத்து பசி தீர்த்த மாயூரம், வேதநாயகம் பிள்ளை புகழ் பாட வைத்தது அப்பஞ்சம்.
பஞ்சம் முடிந்த இருபது ஆண்டுகள் பின் நம் ஆசிரியர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பஞ்சத்தை பாடு பொருளாகவும், சிவகங்கை துரைசிங்க ராஜாவை பாட்டுடைத் தலைவராகவும் கொண்டு இனிய நெடுங் கவிதையாக ( Fascinating Poem) பாடப்பட்டதே நம் விலாசம்.
பல லட்சம் உயிர்களை பலி கொண்ட பஞ்சம் பற்றி 4600 அடிகளில் சிறு காப்பியத்தை நமக்கு அங்கதம் ( satire) அல்லது நையாண்டி இலக்கியம் ( Lampoon) என்ற வடிவில் நூல் முழுதும் பஞ்சமின்றி நகைச்சுவையை கொட்டிக் கொடுத்துள்ளார் ஆசிரியர். அவ்வகையில் தமிழில் தோன்றிய முதல் அங்கத நூலை “ இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் உலக இலக்கியத்தில் கிடையாது” என்கிறார் கு.அழகிரிசாமி.
கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரோ மிகச்சுருக்கமாக “ விந்தை ‘முக விலாசம்’ உரை வில்லியப்பர்க்கு அடியேன்” என புகழ்ந்து தள்ளுகிறார்.
இதற்கு மேலே நான் என்ன சொல்வதற்குள்ளது. நூலைப் படிக்கத் துவங்கும் முன், கொடுமையான பஞ்சத்தை எப்படி நகைச்சுவையாக பாடமுடியும் என சந்தேகம் எனக்குத் தோன்றியது. நியாயம்தானே!
யோசித்துப்பார்த்தால் முடியுமென்றே தோன்றுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரால் ஏமாற்றப்பட்டு அனைத்தும் இழந்தேன். வாழ்வே முடிந்ததென நினைத்தேன். இறையருளால் அனைத்து தடைகளையும் உடைத்து வெளிவந்த நான், இன்று அச்சம்பவத்தை ஒரு கதையாக பேசுகிறேன். ஏன்? நான் வெளியிட்ட புத்தகத்தில் என் அந்த அனுபவத்தை நகைஉணர்வோடு எழுதினேன்.
எனவே முடியும்.
“வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை விற்கவும் கையில் இல்லாமல் கடன் கேட்ட இடத்தில் கிடைக்காமல் சிலர் கெஞ்சி இறக்கிறார் பாருங்கடி
எறும்பு வலைகளை வெட்டி அதனில் இருக்கும் தானியம் தான் எடுத்து முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து உண்ணுகிறார் சிலர் பாருங்கடி
குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம் கொண்டு திரிந்தாலும் கிட்டாமல் இடிக்குப் பயந்த பாம்புகள் போலே ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி”
என அப்பஞ்சத்தை பாடுகிறது ஒரு கும்மிப் பாட்டு.
கொடுமையான பஞ்சம்தான். ஆசிரியரும் அனுபவித்துள்ளார். 23 ஆண்டுகள் ஓடி விட்டது. நடந்த நிகழ்வுகளை சந்ததிக்கு விட்டுச்செல்ல எண்ணுகிறார். சம கால நினைவுகளை உள் வாங்கி விமர்சிப்பதற்கு அங்கதமே (satire) ஏற்ற இலக்கிய வகையென (Genre) கையில் எடுத்துக் கொண்டார். நகைச்சுவை இல்லாத அங்கதம் வசை மாரியாகி விடும். இலக்கியத் தரமில்லா அங்கதம் கோமாளித்தனமான சிரிப்பாய் தரம் தாழ்ந்து விடும். ஆசிரியர் கத்தி மேல் சுலபமாக நடந்து செல்கிறார்.
நூல் முழுதும் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு ஏழை எளிய மக்கள் பட்ட பாட்டையும், எத்திப் பிழைப்போரின் பித்தலாட்டத்தையும், ஏமாற்றுக் காரர்களின் இழி செயல்களையும், வியாபாரிகள், லேவாதேவிக்காரர்களின் மோசடிகளையும் நையாண்டிச் சுவை சொட்டச் சொட்ட பாடுகிறார் ஆசிரியர். போலி கௌரவம் கேலிக்கிடமானதையும் , அச்சமயம் நாட்டில் நடந்த திருட்டு, புரட்டு அனைத்தையும் சுவையோடு புட்டு புட்டு வைக்கிறார்.
ஆசிரியர் விறலி ஒருத்தியை முன்னிலைப் படுத்தி நூலின் கருத்தை சுருக்கமாக கூறுவதில் துவங்குகிறது கதை. பஞ்சத்தால் நாட்டுமக்கள் அடைந்த துன்பத்தை கூறி, அவர்கள் மதுரை சோமசுந்தரரை சரண் அடைகிறார்கள். சோம சுந்தரரரோ அவர்களுக்கு தன்னால் உடனடியாக உதவ இயலாமைக்கு காரணங்களை அடுக்குகிறார். தன் கஷ்டங்களை கூறுகிறார்.
அடகு வைத்துக் கொள்வீர் என்றால் தன்னுடைய ஆபரணங்களோ பாம்பும் எலும்பும், உடுப்பதோ ஒன்றுக்கும் உதவாத புலித்தோலும், யானைத் தோலும்,இருக்கும் இடங்கூட மாமியார்வீடு, நானே தாய் தந்தையற்ற அனாதை என்கிறார்.
“ தருக்குற்ற சூலமதைத் தந்தால் ஓர் துண்டுக் கருப்பட்டி ஈவான் கடையில்; – இருக்கின்ற வீடோ மயானம் அந்த வெட்கக் கேடு என்ன சொல்வேன்?
ஓடன்றிக் கையினில் வேறுஒன்றுமில்லை; நாடி கனமாய் நினைப்பீர்; என் காரியத்தை நீவிர்; வினைவியுற்றால் வெட்ட வெளியாம்….”
இருப்பினும் தஞ்சம் என்று வந்தவரை வெறும் கையோடு அனுப்ப ஈசனுக்கு மனமில்லை. தவிக்க விடாமல் சிவகங்கை ராஜாவிற்கு ஒரு சிபாரிசுக் கடிதம் (திருமுகம்) கொடுத்தனுப்புகிறார். சிவனின் சிபாரிசுக் கடிதத்தோடு வந்தவர்களை ராஜா அரவணைத்து வாழ்வு கொடுக்கிறார்.
நூலின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம். ஆசிரியரின் எழுத்தை பகிர நினைத்தால் எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. சான்றுக்கு ஒன்றேனும் கூறாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. பல தொழில் புரிவோரின் பித்தலாட்டங்களையும் கூறி வரும் ஆசிரியர், தனது சொத்தை அடமானம் வைத்து கடன் ( பொன்)வாங்க வந்தவரிடம் கடன் கொடுப்பவர் பேசும் உரை: ( அடிகள் பிறழ்ந்து வருகிறது)
…………. -‘பொன் கேட்பாற்கு
எவ்வளவு சொத்திருக்கும் என்பதை ஆராய்ந்து நன்றாய்
ஒவ்வியசொத்து ஆயிரத்துக்கு ஓர்நூறே – வவ்வுதற்குப் போதும் எனக் கொண்டு, உமக்கு இப்போது துகை நல்குதற்கு இங்கு யாதுமில்லை’ ஆகில் இருந்தாலும் – ஓதுமொரு நூற்றுக்குக் குன்றாது நோக்கப்படி கொடுப்பேன்; ஏற்றமில்லை நூற்றுக்கு இரண்டரையாம் (மாதம் இரண்டரை வட்டி) – போற்றும் அதை
ஆறுமாதக் கெடுவில் ஆய்ந்து செலுத்தாது விடில்
ஊறு இல் கடன்பத்திரம் உற்பத்திமுதல் -ஈறுவரை ஐந்து வட்டியாகவும் அவ்வாறு மாத்தைக்கு ஒருக்கால் முந்தை முதலோடு முதலாக்கி, (compound interest) – இந்தவிதமாச் செலுத்த வேண்டும்; ஈதன்றி மறுபேச்சில்லை; என்று ஊர்ச்சிதமாய்ச் சொல்ல, அவன் ஒப்பியே, -வாய்ச்சபடி பத்திரமும் ஈடுகண்டு பாங்காய் ரிஜிஸ்தர் செய்தும் அத்தொகையில் கால் வாசியாம் உசிதம் – பத்திரத்தின் கொள் கிரையம், நெட்டெழுத்துக் கூலி, ரிஜிஸ்தர் செலவோடு எள்ளரிய சேவகர்க்கு இனாம் செலவு – துள்ளுவண்டி வாடகை; மற்றின்ன செலவாம் என்றும் தள்ளிமிச்சம் கூடி, அதைக்கையிற் கொடுத்தபின்னர்…”
என இன்றைய கந்து வட்டி, மீட்டர் வட்டி ஒன்றும் புதிதல்ல என எண்ண வைப்பார் ஆசிரியர்.
பிரமனூர், மதுரை அருகே இராமநாதபுரம் சாலையில் உள்ள ஓர்அழகிய கிராமம். சிவகங்கை ராஜாவிடம் மிராஸு கணக்கராக வேலை பார்த்தவர் நம் வில்லியப்ப பிள்ளை. சிறந்த மருத்துவர், சிறந்த ஜோதிடர் அனைத்துக்கும் மேல் நல்ல அனுபவஸ்தர். தாம் அறிந்த அனைத்தையும் தம் நூலில் அங்கங்கே தெளித்துச் சென்றுள்ளார். மறைந்து நூறு ஆண்டுகள்தான் தாண்டியிருக்கும். நூலின் பதிப்பாசிரியர் தேடிச் சென்ற பொழுது ஆசிரியரைப் பற்றியோ அவர் படைப்புகள் பற்றியோ அவ்வூரில் ஒரு சிறு தகவல் கூட அறிய முடியவில்லை. ஏன்! நெருங்கிய உறவு கூட அவர் எழுதிய இந்நூலை அறிய வில்லை.
ஒரு நூறு ஆண்டிலேயே படைப்பாசிரியரின் கதி இதுவென்றால் சங்க கால இலக்கியங்களையும், அவற்றை படைத்த புலவர்களையும் தேடிக் கொண்டு வந்து நம் முன் நிறுத்திய தமிழ்த் தாத்தா திரு. உ.வே.சா அவர்களுக்கு குமரி முனையில் சிலை வடித்து கும்பிடலாம்.
இதுவரை அறியப்படாத ஒரு நூலை, பஞ்சத்ததின் அவலத்தை நகைச்சுவை உணர்வுடன் செப்பிய இலக்கியத்தை கண்முன் வைத்தது அருமை
LikeLike