கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..1
ராய செல்லப்பா அவர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 16-2-1992 அன்று நடைபெற்ற ‘கவியரசு கண்ணதாசன் நினைவுக் கவியரங்கில்’ தலைமையேற்று வாசித்த கவிதையில் அவர் ஊர் ராணிப்பேட்டையைப் பற்றி சொல்லும் வரிகள்!!
ஆறு காடுகள்
அணிவகுத்து நிற்கும்
ஆற்காடு’
அதனருகே
ஓடாமல் நிற்கும் மணலாறு-
‘பாலாறு!’
இக்கரையில் இருந்தது,
இராணிப்பேட்டை
என் ஊர்- பொன் ஊர்.
தெரியாத கதையா
தேசிங்குராஜன் கதை?
செஞ்சி நகரம் –அவன்
செய்த நகரம்.
முரட்டுக் குதிரையை
விரட்டிப் பிடித்து
முடியாட்சி கொண்டான்
தேசிங்கு.
அது, மதியால்!
ஆற்காட்டு நவாப்பின்
ஆயுதங்களின்முன்
அடங்கிப் போனான்.
அது, விதியால்.
செஞ்சி அழிந்தது,
தேசிங்கின்
தேகம் சிதைந்தது.
ஆளனை இழந்த
பத்தினிப் பெண்ணாள்
அஞ்சிடவில்லை.
ஆற்காட்டு நவாப்பின்
ஆசை மொழிகளில்
மயங்கிடவில்லை.
இருளும் நிலவும்
இணையும் பொழுதில்
கிளம்பினாள் –தன்
உயிரினின்றும் விலகினாள்.
அவளை உண்டது
எரியும் நெருப்பு.
பெண்ணென்றால்
அதற்கு விருப்பு,
அன்றும் கூட!
தேசிங்கின் ராணி
தீர்ந்த கதை கேட்டு
அயர்ந்து போனான்
நவாப்.
முரட்டு நாகத்தை
ஜெயித்த கரங்கள்-ஓர்
முல்லைப் பூவிடமா
தோற்பது?
காற்று அவனுக்கு
ஆறுதல் சொன்னது-விரைவில்
ஆங்கிலர் ஆட்சி
விரியப் போவதும், இவன்
சரியப் போவதும்
காதில் சொன்னது!
அவனுக்குப் புரிந்ததா
காற்றின் மொழி?
ஆங்கிலக் கம்பெனி –இவனை
ஆதரிக்க வருவதாய்ச்
செய்தி அனுப்பிற்று.
தொட்டால் வெடிக்கும்
ஆயுதம் தருவதாய்த்
தொடர்ந்து சொல்லிற்று!
வேலை ஒன்று கோரி
விண்ணப்பமும் செய்தது-
வரி வசூலிக்கும் வேலை!
சாவி இவனிடமே
இருக்கலாம்,
பெட்டிபோதுமாம்
அவர்களுக்கு.
கேட்டதும் பணமும்
கேளிக்கைக்கு மதுவும்
இலவசம்.
ஒப்பினான் நவாப்.
தென் இந்தியாவின்
முதல் துரோகி
அவன் தானோ?
காலம் அவனை
விரைந்து மறந்தது.
கம்பெனியும் கூட.
ஆற்காடு,
இன்றும் ஆற்காடே.
தீயில் குளித்த
செஞ்சி ராணியின்
தேகச் சாம்பல்கள்
பாலாற்று மணலில் படர்ந்தன.
இல்லாமல் போன
இராணியின் நினைவில்
எழுந்ததே,
‘இராணிப்பேட்டை’.
என்னூர்,
என் பொன்னூர்.
***
கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..2
உமா பாலு அவர்களின் கை வண்ணத்தில் வந்தவை இந்த வண்ணப் படங்கள்! அருமையாக இருக்கின்றன! அவர் கதை கவிதை மட்டுமல்ல, படங்கள் வரைவதிலும் சிறந்தவர் என்பதை நிரூபிக்கின்றன இவை! அதனால இவற்றைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம்.
கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..3
குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல பல சிறந்த கவிதைகளைப் படைத்து வருகிறார் இலத்தூர் கி. சங்கரநாராயணன் அவர்கள். அவருடைய ‘பால்’ என்ற கவிதையைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம்.
பால் !
பாலின் உள்ளே பலபொருளாம்
பார்க்கும் கண்ணில் தெரியாதாம்
பாலே தயிறாய் மோராகும்
பாலே வெண்ணெய் நெய்யாகும்
பாலே அல்வா கோவா போல்
பல்சுவை இனிப்பாய் மாறிடுமே
பாலைத் தந்திடும் மாடுகளைப்
பக்குவமாய் நாம் காத்திடுவோம்
பசுவின் நிறமோ மாறுபடும்
பாலின் நிறமோ ஒன்றுபடும்
சிசுவின் உடலை வளர்த்திடுமே
சீரும் சிறப்பும் தந்திடுமே
புசுபுசு புசுவென கன்றைப்போல்
புத்தொளி உடலில் வந்திடுமே
மசமச மசவென நிற்காதே
மாடுகள் பசி தாங்காதே .
Thankyou for publishing my paintings in your esteemed magazine!
LikeLike