உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Free download Download Awesome Backgrounds 28 Troy Quality HD Wallpapers [1280x1024] for your Desktop, Mobile & Tablet | Explore 40+ Troy Background |

 

முதல் காண்டம் – அக்கிலிஸின் கோபம்

டிராய் தேசத்தின் மன்னன் பிரியம். அவன் மகன் பாரிஸ் கிரேக்க நாட்டு மன்னன் மெலிசியஸின் மனைவியும் உலகப் பேரழகியுமான ஹெலனைக் கடத்திக் கொண்டு வர, துவங்கியது கிரேக்க நாட்டுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே மாபெரும் யுத்தம்.

மெலிசியஸின் சகோதரன் அகமெம்னன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்களில் கிரேக்கப்படை புறப்பட்டது. கிரேக்கப்படைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல டிராய் நாட்டுப் படை. டிராய் நாட்டின் முக்கிய நகரமான இலியம் கோட்டையைக் கிரேக்கப் படை முற்றுகை இட்டது. பத்து ஆண்டுகளாக இரு பெரும் நாடுகளுக்கிடையே யுத்தம் தொடர்ந்து நடை பெற்றது.

அது மட்டுமல்ல. கடவுளர்களும் இந்த யுத்தத்தில் பங்கேற்றனர். சிலர் கிரேக்கர் பக்கம். சிலர் டிராய் பக்கம். அதனால் போரின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

கிரேக்கப் படையில் மாபெரும் வீரன் அக்கிலிஸ். இலியட் கதையின் நாயகன்.

அவனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து கிரேக்க மன்னன் மெலிசியஸ் மட்டுமல்ல, டிராய் நாட்டுப் போருக்கு கிரேக்க சேனாதிபதியாக விளங்கும் அகமென்னனும் பொறாமையில் துடித்தான்.

இனி ஹோமரின் அடிச்சுவட்டில் நம் பாணியில் கதைக்குள் செல்வோம்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிரேக்க மாவீரன் அக்கிலிஸ் கோபாவேசத்துடன் தனது கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலில் குதித்தான். கரைய நோக்கி நீந்தத் தொடங்கினான். அலைப் பிரவாகம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அலைகளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மூச்சிலிருந்து வெப்பக் காற்று பாம்பின் மூச்சு போல வந்து கொண்டிருந்தது. அலைகள் குளிர்ந்த தண்ணீரை அவன் மீது மிகுந்த வேகத்துடன் வாரி இறைத்த போதிலும் அதனால் அவனைக் குளிர வைக்க முடியவில்லை. கரைக்கு அருகில் உள்ள பெரிய பாறையில் அமர்ந்தான். அலைநீர் பாறையை மூழ்கடிப்பதும் பின்னர் வடிவதுமாக இருந்தது. அலைநீரை லட்சியம் செய்யாமல் அமர்ந்திருந்தான். அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்திருக்கும் நேரம் அது.

கிரேக்கர்கள் நடத்தும் இந்தப் போருக்கு அவர்களுக்கு உதவுவதற்காக வந்ததை எண்ணி மிகவும் வேதனைப் பட்டான்.

” தீட்டீஸ் தேவதையின் திருமகன் நான். வீரத்தில் என்னை மிஞ்சக் கூடியவன் எவனும் இந்த மண்ணுலகில் பிறக்கவில்லை. அப்படியிருக்க ஏன் இவர்களுக்கு உதவும்படி அதீனி தேவதை எனக்கு ஆணையிட்டாள்? அதுவும் இந்த அகமெம்னன் சேனாதிபதியாக இருக்கும் படையில் அவனுக்குக் கீழே பணிபுரிவதைவிடக் கேவலம் ஒன்றுமில்லை.

குறுக்குத் தந்திரத்தில் தலைவன் ஆனவன் அகமெம்னன். என்னுடைய வாளுக்கு முன்னால் அவனால் சிறிது நேரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. பத்து ஆண்டுகளாக இந்த டிராஜன் முற்றுகையை நடத்திக் கொண்டிருக்கிறான். இலியம் கோட்டையை மோதி உடைத்து உள்ளே சென்று வீரத்துடன் போரிட உத்தரவு தராத இவனெல்லாம் ஒரு தலைவனா? கோட்டைக்கு வெளியே இருக்கின்ற சிறு நகர்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து சுகபோகமாக இருக்கும் இவர்களால் எப்படி டிராய் நகரைக் கைப்பற்றி பாரிசிடமிருந்து ஹெலனை மீட்க முடியும்? அதுவும் டிராய் நகரத்தின் மூர்க்க இளவரசன் கோர அரக்கன் ஹெக்டரை இவர்களால் வெல்ல முடியுமா? “

அப்படி எண்ணும்போது அவனுக்கே சிரிப்பு வந்தது. அதற்காகத்தானே இவர்கள் என்னைக் கூட்டி வந்திருக்கிறார்கள். கடவுளர் சொன்னால்தான் கட்டுப்படுவேன் என்று தெரிந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி என்னை இவர்களுடன் சேரும்படி செய்துவிட்டார்கள். நான் மறுக்க முடியாத கடவுளிடம் இருந்த வந்த கட்டளை இது.

இன்னும் கொஞ்ச நேரம் இதே கோபாவேசத்துடன் இருந்திருந்தான் என்றால் அந்தக் கடலின் அலையெல்லாம் வற்றிப்போய் புகை மண்டலமாகியிருக்கும். அப்போது இரு தளிர்க்கரங்கள் அவனுக்குத் தெரியாமல் பாறையின் பக்கவாட்டில் வந்து அவன் உடலை இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டன. கண்களைத் திறக்காமலேயே அவள் யார் என்பதை நன்கு உணர்ந்தான் அக்கிலியஸ். அவளது குளிர் மேனி தந்த சுகம் அவனது வெப்ப உள்ளத்துக்கு இதமாக இருந்தது. ஒரு கையால் அவனது இடையைப் பற்றி அணைத்த அந்தப் பேரழகி மறு கையால் அவனது தலையைக் கோதி அவனுக்கு ஆறுதல் தர முயன்றாள். எவ்வளவு நேரம் அந்த நெருக்கம் நீடித்தது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவது போல அவனது கோபமும் அவள் அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதைப் போலத் தோன்றியது.

அவள் பிரிஸிஸ். அந்தப் பிராந்தியத்தில் அழகும் அறிவும் நிரம்பிய இளவரசி. அவள் நாட்டுடன் கிரேக்கப் படை போரிட்டபோது அவளுடைய நாடு வீழ்ந்தது. அதில் அடிமையாக இழுத்துவரப்பட்ட இளவரசி அவள். தலைவர் அகிலியஸுக்குத் தகுதியான அடிமை என்று அவளை அவனிடம் கொடுத்தார்கள். தனக்கு அடிமையாக வந்த இளவரசியைக் கண்ட அக்கிலிஸ் அவளுடைய அழகுக்கு அடிமையானான். தனக்குப் போரில் கிடைத்த மாபெரும் பரிசு பிரிஸிஸ் என்று எண்ணினான்.

“என் கோபத்தைக் குறைத்த உன்னை எப்படிப் பாராட்டினாலும் தகும் பிரிஸிஸ்” என்று கூறினான் அக்கிலிஸ்.

” வீரர்களின் கோபத்தைக் குறைப்பது தவறு. அது அவர்களைக் கோழைகளாக்கிவிடும். அவர்கள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கவேண்டும். நான் குறைத்தது உங்கள் கோபத்தை அல்ல , ஆத்திரத்தை”

” உண்மை பிரிஸிஸ். ஆத்திரம் எந்த வீரனையும் அழித்துவிடும். என் கோபம் ஆத்திரம் எல்லாம் அந்த அகமெம்னன் மீதுதான். அவன் கப்பலில் இன்று ஒரு முக்கியமான மந்திராலோசனை நடக்க இருக்கிறது. நான் போகாமலிருக்க முடியாது. ஆனால் நான் போனால் என் கையால் அந்தத் திமிர் பிடித்த அகமெம்னனைக் கொன்றாலும் கொன்றுவிடுவேன். அதன்பின் கடவுளர் கோபத்துக்கு நான் ஆளாக நேரிடும். அதுதான் என் கோபத்தை ஆத்திரமாக மாற்றியிருக்கிறது. “

“மாவீரரே! இன்றைய மந்திராலோசனை என்னுடன் பிடிபட்ட அர்ச்சகர் கிரைசிஸின் மகள் கிரீஸஸ் பற்றியதுதானே! எனக்கு வீர புருஷர் நீங்கள் கிடைத்தீர்கள்! அதை என் பாக்கியமாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவளையோ அகெம்னனக்கு அடிமையாக அனுப்பினார்கள். அவள் துடிதுடித்துப் போனாள். அவள் என் நெருங்கிய சினேகிதி. அவளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொண்டேன். நீங்கள் அகெம்னனக்கு அறிவுரை கூறினீர்கள். அவன் கேட்க மறுத்துவிட்டான். பின்னர் உங்கள் உதவியால் அப்பல்லோ தேவனின் அர்ச்சகரான அவளது தந்தைக்குத் தகவல் அனுப்பி மீட்புத் தொகையுடன் வரச் சொன்னோம்.

அவரும் அப்பல்லோ அளித்த நம்பிக்கையில் பெரும் பொருளைக் கொண்டுவந்து அகெம்னனிடம் கொடுக்க வந்தார். ஆனால் அகெம்னன் அவரது மீட்புத் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ‘ உன் மகள் ஆயுள் முழுவதும் என் அடிமையாகவே இருந்து உயிரை விடுவாள்’ என்று அவரை விரட்டிவிட்டான்.

அவரும் அப்பல்லோவிடம் ‘ உன் பக்தனுக்கே இப்படி அநீதி நடக்க விடலாமா’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டதும் அப்பல்லோ கோபமுற்று கிரேக்கப் படை மீது கொள்ளை நோயை ஏவிக் கடந்த பத்து நாட்களாக உங்கள் படைகளை அழித்துக் கொண்டிருக்கிறார்.

இனி இந்த நோயால் படை வீரர்கள் அழிந்தால் டிராய் நாட்டுடன் போரிட வீரர்களே இல்லாமல் போய் விடுவர் என்பதை அறிந்த அகெம்னன் இப்போது மந்திராலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு நீங்கள் போவதா வேண்டாமா என்பதுதானே உங்கள் பிரச்சினை.?”

” அழகாகச் சொன்னாய் பிரிஸிஸ்! இன்று நான் போனால் ஒன்று என்னால் அவன் அழிவான். அல்லது அவனால் எனக்கு மாபெரும் தீங்கு வரும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. “

” நீங்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டும். ஆத்திரத்தைக் குறைத்துக் கொண்டு,   கோபத்துடன் செல்லுங்கள். என் சினேகிதி கிரீஸிஸ் அவள் தந்தையுடன் சேரவேண்டும். நீங்கள் வலியுறுத்தினால் இது கட்டாயம் நடக்கும். உங்கள் தயவின்றிக் கிரேக்கப்படைகள் டிராய் நகரை வெல்லுவது முடியாத காரியம். அதுமட்டுமல்ல நீங்கள் மனிதரில் கடவுள் , கடவுளரில் மனிதர். உங்களை அழிக்க யாராலும் முடியாது. நீங்கள் அகெம்னன் கப்பலுக்குப் புறப்பட்டு அந்த மந்திராலோசனையில் உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள்! “

இப்படி ஆலோசனை கூறிய அந்த அழகி  அவன் இதழில் ஆசை ததும்ப முத்தம் ஒன்று  கொடுத்தாள். அதுவும் வெகுநேரம் நீடித்தது.  பெரிய அலை ஒன்று அவர்கள் பாறையை நீர்த்திவலைகளால் மூழ்கடித்தது.

பாவம் அவளுக்குத் தெரியாது அதுதான் அவள் அவனுக்குத் தரும் கடைசி முத்தம் என்று!

(தொடரும்)

 

 

 

கோணங்கி மனசு -S.L. நாணு

தனியாக இருக்கும் வயதானவர்கள் டார்க்கெட் - மலப்புரத்தில் அடுத்தடுத்து நடந்த  கொலைகள்/elderly people back to back murder in kerala hrp – News18 Tamilஇரவுத் தூக்கம் மறந்து வெகு காலமாகிவிட்டது.. இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு.. மோட்டு வளையை வெரித்து.. மனதில் ஏதேதோ சிந்தனையோட்டங்கள்.. சில திகிலூட்டுபவையாகக் கூட..

இது வழக்கமாக வயதானவர்களுக்கு வரது தான்.. இன்சோம்னியா.. நானே டாக்டர் தான்.. சர்ஜன்.. எனக்குத் தெரியாதா? டிராங்குலைஸர் முயற்சி பண்ணினேன்.. மைல்ட் டோஸ் தான்..”

ஆனால் வேலைக்காகவில்லை.. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் ஏறியும் பாச்சா பலிக்கவில்லை.

தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது..

“தூக்கமின்மை உடம்பை வீழ்த்தி விடும்.. விரைவில் மரணமும் சம்பவிக்கலாம்”

தற்செயலாக வந்த வாட்ஸாப் பதிவு தலைப்புச் செய்தி சொன்னது.. எனக்குத் தெரியாதா? நானே ஒரு டாக்டர்.. சரி.. ஓய்வு பெற்ற டாக்டர்..

ஆனால் கொஞ்சம் நிம்மதி..

இரவு தூக்கம் ஏமாற்றினாலும் காலையில் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு பிளேட்டை சிங்க்கில் போடுவதற்குள் கண்களை இருட்டிக் கொண்டு வரும்.. அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுவேன்.. சாப்பிட்ட உடனே படுக்கக் கூடாது என்று டாக்டர் மூளை எச்சரிக்கும்.. ஆனால் அந்த எச்சரிக்கை முடிவதற்குள் நான் குறட்டை விட்டுக் கொண்டிருப்பேன்.. அடுத்த ஒன்றரை இரண்டு மணி நேரம் எதுவும் உணராத பற்றற்ற நிலை.. மொபைல் சிணுங்கலோ.. அழைப்பு மணியோ.. எதுவும் உரைக்காது..

சில சமயங்களில் தூக்கம் விழித்து நான் கதவைத் திறக்கும் போது.. பக்கத்து வீடு.. எதிரி வீட்டிலெல்லாம் பதட்டம் கலந்த கவலைப் பார்வை..

“ரொம்ப நேரமா பெல் அடிச்சும் கதவைத் திறக்கலையா? அதான் கொஞ்சம் கவலையாப் போச்சு”

“போலீசுக்கு சொல்லிட்டு கதவை உடைக்கலாமான்னு கூட நினைச்சோம்”

எனக்கு சிரிப்பு தான் வரும்..

எனக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று இவர்களுக்குக் கவலையா? இல்லை அப்படி ஏதாவது ஆகி விட்டால் பொறுப்பு அவர்கள் தலையில் விழுந்து விடுமோ என்ற கலவலையா?

“தனியா இருக்கீங்க.. பேசாம துணைக்கு பொண்ணு யாரையாவது வேலைக்கு வெச்சுக்குங்கம்மா.. உதவியா இருக்கும்?”

இது போன்ற உபதேசங்களும் நிறைய..

“வீட்டை சுத்தம் பண்ண.. துணி துவைத்து காயப் போட்டு மடிச்சு வைக்க, பாத்திரங்கள் துலக்க.. செல்வி வந்திட்டுப் போறா.. எடுப்புச் சாப்பாட்டுக்கெல்லாம் தடா.. சுயபாகம் தான் எனக்கு ஒத்துவரும்.. தெம்பாத் தானே இருக்கேன்?.. அப்புறம் எதுக்கு ஒரு துணை? துணைக்கு வந்தவ என்ன செய்யறதுன்னு தெரியாம போரடிசுண்டு மொபைலை நோண்டிண்டு உட்கார்ந்திருக்க.. அவளுக்கு நான் தண்டம் சம்பளம் கொடுக்கணுமா?”

“இல்லை.. வயசாச்சு.. திடீர்னு ஏதாவது எமர்ஜென்ஸின்னா உதவி பண்ண..”

“யாருக்கு வயசாச்சு? ஐயாம் ஜஸ்ட் செவண்டி த்ரீ.. இது ஒரு வயசா? அடுத்த மாசம் ஹரித்வார் ட்ரிப் போகலாம்னு இருக்கேன்.. முடிஞ்சா ட்ரெக்கிங் பண்ணணும்”

நான் சொன்னதில் கொஞ்சம் பிடிவாதம் தெரிந்தது..

அதாவது இவர்கள் சொல்லி நான் என்ன கேட்பது என்று..

உண்மையில் யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் கொஞ்ச நாட்களாகவே இருக்கிறது என்பது தான் உண்மை.. அதுவும் இஸ்கீமியா கண்டிஷன் என்று என் இதயத்தைப் பரிசோதித்த கார்டியாலஜிஸ்ட் மளிகை லிஸ்ட் போல் முழ நீளத்துக்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்ததிலிருந்து அந்த நினைப்பு இன்னும் அதிகமாகியிருந்தது…

ஆனால் மற்றவர்கள் அதைச் சொன்னவுடன் என் கோணங்கி மனசு ஏற்க மறுக்கிறது.. என் ஈகோ அரணாக நிற்கிறது.. இனி ஒரு பெண்ணை துணைக்கு வைத்துக் கொள்ளும் எண்ணமே மனதில் புகாதபடி அது பார்த்துக் கொள்ளும்..

நான் செய்வது சரியா தவறா என்ற குழப்பமே எனக்குக் கிடையாது.. நான் செய்தது தான் சரி என்ற தீர்மானம் எனக்குள் உரைந்திருக்கும்..

இந்த ஈகோ கலந்த பிடிவாதம் தான் சின்ன வயதிலிருந்தே என்னை செலுத்திக் கொண்டிருக்கிறது..

“தலைல எண்ணை வெச்சுக்கோடி”

அம்மாவின் குரல் கெஞ்சும்..

எண்ணை பாட்டிலை கையிலெடுத்தவள் அதை கீழே வைத்து விட்டு..

“முடியாது.. எனக்கு எண்ணை தடவிக்க வேண்டாம்”

“எண்ணை தடவிக்கலைன்னா முடி வளராது.. அதோட சிக்காயிரும்”

“ஆகட்டும்”

அதிலிருந்து தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளவில்லை..

இப்போது என் தலை முடியைத் தொட்டுப் பார்க்க..

பாய் கட்..

அம்மா சொன்னது போலவே சீக்கிரமே என் தலை முடி வளர்ச்சியை நிறுத்திக் கொண்டு செம்பட்டையாகி.. மற்றவர்களின் பின்புற கேலிகளுக்கு ஆளாகி..

ஆனால் நான் கவலைப் படவில்லை.. பிறர் சொன்னதை நான் கேட்கவில்லை என்ற ஒரு வெற்றி மிதப்பு மனதில் சிம்மாசனமிட்டிருந்தது..

பி.யு.ஸி. முடித்தவுடன் இஞ்சினியரிங் படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்..

“உன் மார்குக்கு இஞ்சினியரிங் சுலபமாக் கிடைக்கும்.. உடனே அப்ளை பண்ணு”

அப்பா சொன்னவுடன் என் கோணங்கி மனசு விரைத்துக் கொண்டது..

“முடியாது.. எனக்கு இஞ்சினியரிங் வேண்டாம்.. மெடிஸின் தான் படிக்கப் போறேன்”

கல்வி வியாபாரமாகாத அந்தக் காலத்தில் எனக்கு தகுதி அடிப்படையில் மருத்துவ சீட் கிடைத்தது..

கைனகாலஜியில் சாதனை புரிய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்..

“பேசாம கைனியே எடுத்துக்கோ.. பொம்பளைகளுக்கு அது தான் நல்லது”

அம்மா உபதேசம் செய்தவுடன் மீண்டும் கோணங்கி மனசு..

“முடியாது.. நான் சர்ஜரி தான் எடுத்துக்கப் போறேன்”

அப்பாவுக்கு டென்ஷன்..

“சர்ஜரியா? வேண்டாம்.. சொல்றதை கேளு.. பொம்பளை சர்ஜனுக்கு அவ்வளவு டிமாண்ட் கிடையாது”

“நான் டிமாண்ட் உண்டு பண்ணுவேன்.. இதுக்கு மேல டிஸ்கஷன் வேண்டாம்.. நான் சர்ஜரி தான் படிக்கப் போறேன்”

சர்ஜரி படித்து முடித்து ஆணாதிக்க சூழலில் நிறைய கிண்டல்கள்.. கேலிகள்.. அவமானங்கள்.. அதையெல்லாம் திறமையால் முறியடித்தேன்..

அந்த ஆணாதிக்கக் கும்பலில் ஒரு தனி முகம்.. அஜயன்.. எப்போதும் ஒரு ஆதரவுப் பார்வை.. எனக்குப் பிடித்தது.. அவனுக்கும் தான்..

வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்க..

“ஒரு வரன் வந்திருக்கு.. பையனும் டாக்டர்.. உன் சித்தப்பனுக்குத் தெரிஞ்ச குடும்பம்.. பொண்ணு பார்க்க எப்ப வரலாம்னு நீ சொன்னா..”

“… …”

“என்னம்மா எதுவும் பேச மாட்டேங்கறே.. நான் ரிடையர் ஆறதுகுள்ள உன் கல்யாணத்தை முடிச்சாத் தான் எனக்கு நிம்மதி..”

சைக்கிள் கேப் கிடைத்தால் போதுமே.. உள்ளே புகுந்து விடும்..

வேறு யாரு? என் கோணங்கி மனசு தான்..

“ஏம்பா.. நீ ரிடையர் ஆகப் போறேன்னு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?”

“அதில்லைம்மா.. உனக்கும் வயசாயிட்டிருக்கு..”

“என்ன பெரிய வயசு? முடியாது.. நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை”

அப்பாவுக்கு அதிர்ச்சி..

“என்ன.. என்ன சொல்றே?”

“நான் சொன்னா சொன்னது தான்.. எத்தனை வயசானாலும் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை.. இது நிச்சயம்”

பாவம் அஜயன்.. அவனுக்குப் பெரிய அதிர்ச்சி..

ஆனால் அதெல்லாம் எனக்கு அப்போது உரைக்கவில்லை..

பல வருடங்கள் கழித்து ஒரு மாலில் அஜயனை மனைவி மகளுடன் பார்த்த போது மனதில் லேசாக ஒரு உரசல்..

காலம் கடந்த உணர்வுகள்..

என் கோணங்கி மனசு மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்..

பிரம்மன் சித்தம்.. இன்று வரை என் கோணங்கி மனசின் ஆதிக்கம் குறையவில்லை.. சொல்லப் போனால் அதிகமாகிக் கொண்டே தான் போனது..

பலரின் பார்வையில் அது பைத்தியக் காரத்தனமாகத் தெரிகிறது என்பதும் எனக்குத் தெரியும்..

இருந்தாலும் வெளி வர முடியாத வியூகம்..

அன்று..

அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தேன்..

“கொரியர்..”

கவரை நீட்டினான்..

நான் வாங்கிப் பார்க்கும் விநாடியில் சடாலென்று என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்..

இப்போது அவன் கையில் கத்தி.. பார்வையில் கொலை வெறி..

“ஐயோ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே.. பீரோவுல பணம் இருக்கு.. நகை இருக்கு.. தாராளமா எடுத்துக்கோ”

சொல்ல நினைத்தேன்..

அதற்குள் அவன் கர்ஜித்தான்..

“மரியாதையா பணம், நகைலாம் எங்க வெச்சிருக்கேன்னு சொல்லு.. இல்லை குத்திருவேன்”

சில மணிநேரங்களில் எல்லா டி.வி. சேனல்களும் முக்கியச் செய்தியை அறிவித்தன..

 

 

 

 

 

 

 

 

திரை ரசனை வாழ்க்கை 17 ராக்கெட்ரி – துரோகம் கற்பிக்கப்படும் பக்தியின் கதை – எஸ் வி வேணுகோபாலன்

ராக்கெட்ரி விமர்சனம் | Rocketry The Nambi Effect Review in Tamil
 
யிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் வழங்கிய அறிவியலாளர் என்று கொண்டாடப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் கன்னத்தில் வாங்கிய ஓர் அறையில் தமது செவிப்புலன் பாதிப்புற்றுக் கேட்புத் திறன் பெரிதும் இழந்தார் என்று வாசிக்கிறோம்.  ‘நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா’ என்ற தலைப்பிலான (அதன் துணைத் தலைப்பு அய்யய்யோ அறிவியல்) நூலில், ஆயிஷா இரா நடராசன், சமூகப் பயன்பாட்டுக்கான தேடலில் எத்தனையோ பறிகொடுக்க நேர்ந்த அறிவியலாளர்களது ஆய்வுக்கூட அனுபவங்களையும், வாழ்க்கை சோதனைகளையும் விவரித்திருப்பார்.  அதிகம் சிந்தித்த சாக்ரடீஸ் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைந்தார். கலீலியோ கண்ணெதிரே எரிக்கப்பட்ட ஆய்வுக் காகிதங்களைக் கண்ணீர் மல்க பார்த்து நின்றார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்பதறியாது கோபர்நிகஸ் தண்டிக்கப்பட்டு மாண்டு போனார்.  
 
இதெல்லாம் நாம் கண் கொண்டு பார்க்காது தப்பிய கொடுமைகள். சம காலத்தில், அபாரமான அறிவியல் ஆய்வுத் தேடலும், ஆற்றலும், அறிவும், சாகச மனப்பான்மையும், தளராத மனவுறுதியும் – எல்லாவற்றுக்கும் மேலாக, கனன்றெரியும் தேச பக்தியும் சுடர் விட்டு ஒளிர்ந்த மனிதர் ஒருவரை தேச துரோகி பட்டம் சூட்டி (இந்த லேபிளுக்கு மேல் வேறொரு தண்டனை உண்டா என்ன?), கைது செய்து, போதுமே வேறென்ன சொல்லவேண்டும், காவல் துறையில் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் தலைகீழாகப் புரட்டி எடுக்கப் பயிற்சி பெற்ற போர் வீரர்களைப் பெற்றுள்ள தேசம் ஆயிற்றே…..  அப்படியான மனிதர் சரண் அடைந்துவிடாமல், உயிராகக் கருதும் தேசத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிரூபித்து நெருப்பில் இறங்கிக் கருக்காது ஜொலித்து வெளியேறி வந்த கதை தான் ராக்கெட்ரி.  அவரை வாட்டியெடுத்த தீயின் சூடும், தேசக் குடிமக்களாக உண்மை உணரும்போது நமக்குப் படும் சூடும் சேர்த்து உறைக்கிற உணர்வை வழங்கும் திரைக்கதை தான் ராக்கெட்ரி -நம்பி விளைவு!
 
மிகுந்த இறை பக்தியும், தேசப்பற்றும், சதா சர்வகாலமும் (கலாமும்!) விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்போடு தன்னிகரற்று இந்தியா முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உணர்வும் கொண்டிருக்கும் விண்வெளி அறிவியலாளர் அவர். குடும்பம், மகன், திருமணமான மகள், மருமகன், பேத்தி, இம்மியளவும் மாறாத ஆர்ப்பாட்டம் அற்ற அன்றாட விடியல் அது, அன்றாடக் குளியல், அன்றாட பூசைகள், அன்றைக்குச் சிறப்பு வழிபாட்டுக்கு வழக்கமான கோயில்.. என்று நம்பி (நாராயணன்) வீட்டில் அன்றாட அமளி துமளிகள், பாசமிகுந்த உரையாடல்கள் முடித்துக் கொண்டு ஆலயம் நுழைகிற அவர், பார்க்காத அன்றைய நாளேட்டின் முக்கிய செய்தி ஒன்றில் தான் பேசப்பட்டிருக்கிறோம், தேச துரோகி ஆக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம் என்று அறியாது வழிபடும் இடத்தில், ஆரத்தி எடுத்த கற்பூரச் சுடரை இவரிடம் காட்டாது முறைத்து விட்டு அந்தப் பூசாரி  அணைத்து விட்டுப் போகும் இடத்தில் தொடங்குகிறது திரைக்கதை.
 
இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) நிறுவனத்தில் ஆராய்ச்சி தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்நிய தேசத்திற்குக் கை மாற்றிய மிகப் பெரிய தேச துரோகச் செயலை அவர் செய்து விட்டார் என்ற செய்தி போதுமானதாக இருக்கிறது, மிக சாதாரண மக்களைக் கூட அவர்கள் அதற்குமுன் கேள்விப்பட்டிராத ஒரு மனிதருக்கு எதிராக, அவரது குடும்பத்திற்கு எதிராக, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கு எதிராகப் பொங்கி எழுந்து ஒழிக என்று குரலெழுப்ப – ஒழிந்து போ என்று சபிக்க –  தொலைத்துக் கட்டுவோம் என்று கூட்டாகக் கொந்தளிக்க வைக்க!
 
காவல் துறைக்கு ஒற்றைச்சொல் ஸ்டேட்மென்ட் தான் எப்போதும் தேவைப்படுவது, அதைச் சொன்னால் முடித்துக் கொள்ளலாம் என்பார்கள், இப்போதே விட்டுவிடுகிறோம் என்பார்கள்! உண்மையைச் சொல் என்று அவர்கள் அடிக்கும்போது, உள்ளபடியே, பொய்யை ஏற்றுக் கொள் என்பது தான் அவர்கள் பூடகமாகத் தெரிவிப்பது.  ‘பதி இழந்தனம், பாலனை இழந்தனம், படைத்த நிதி இழந்தனம் ….இனி எமக்குளது என நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்’  என்று செம்மாந்து நின்ற அரிச்சந்திரன் போல் நின்ற அந்த மனிதர் என்னென்ன சித்திரவதைகள் எல்லாம் எதிர்கொண்டார், புறவுலகில் எத்தனை அவமதிப்புக்கு உள்ளானார், குடும்ப அமைதியை எப்படி பறிகொடுத்தார் என்பதெல்லாம் காட்சிப்படுத்தப் படுகிறது.
 
தனது கணவருக்கு எதிரான  நடவடிக்கைகள், குடும்பத்திற்கு எதிரான தாக்குதல்கள் இவற்றால் நிலைகுலைந்து பித்துப் பிடித்துப் போனவளாக ஆராய்ச்சியாளரது மனைவி சிதறிப்போகும் இடம் யாரையும் உலுக்கும்.  முன் பின் பார்த்திராத பெண் ஒருத்தியோடு படுக்கையைப் பகிர்ந்து, தேசத்தின் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டதான அராஜகக் குற்றச் சாட்டை, ஆய்வுலகத்திற்கு அப்பால் ஏதும் பிடிபடாத ஓர் அறிவியலாளர் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? ஆனால், குடும்பத்தின் மீதான கறையாக அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பிதுரார்ஜித சொத்தாக இந்த அவமதிப்பு போய்க்கொண்டே இருக்கும் என்ற பரிதவிப்பில், தற்கொலை முயற்சிக்குப் பதிலாக, பொய்களை மாய்ப்பது எப்படி என்று முடிவெடுப்பது அவர் வாழ்க்கையின் அடுத்த முக்கியமான கட்டம்.
 
நம்பி நாராயணன் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் திரைப்படமாக (பயோ பிக்) முதலில் யோசித்த திரைக்கலைஞர் மாதவன், அவரது அனுமதி பெறுவதற்காக அணுகவும், திரும்பத் திரும்ப அவரோடு நடந்த உரையாடல்களின் ஒரு கட்டத்தில் – அவரது வாழ்க்கை குறித்த முக்கிய புத்தகங்கள் வாசிப்பில், ஒரு போராட்டத்தின் திரைக்கதையாக, அதனுள் பேசப்பட வேண்டிய ஓர் அறிவியலாளரது அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைத் தடங்களையும் ஆர்வத்தோடு சேகரித்துக் காதலுற எழுதி முடித்துத் தான் விரும்பியபடி தானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று வலுவாகத் திரையில் கொணர்ந்து இருக்கிறார். 
 
நீதிக்கான போராட்டத்தின் களைப்பு மேலிட்டாலும் கம்பீரம் வற்றாத முதிய முகத்தோடு நம்பி நாராயணனாக மாதவன் அமர்ந்திருக்க, அவரைத்  தொலைக்காட்சி சானலுக்காக நேர்காணல் செய்யும் சூர்யா (இந்தி / ஆங்கில வடிவத்தில் ஷாருக் கான்), தான் சேகரித்திருக்கும் தரவுகள் வழியே அவரது உள்ளத்தின் கதவுகளை மெல்லத் திறக்க வைக்கிறார்.  விக்ரம் சாராபாய் (ரவி ராகவேந்தர் இதமான நடிப்பு) ரசித்து வளர்த்தெடுக்கும் ஆராய்ச்சி மாணவப் பருவத்தில் இருந்து புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலையில் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு அமெரிக்கப் பயணம், அதன் வெற்றியில் மிகப் பெரிய ஊதிய பலன்களோடு நாசா ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும் வேலையைக் கூட உதறி சொந்த மண்ணில் தாயகத்தின் விண்வெளி சாதனைகளை உயர்த்தும் ஆவேசக் கனவுகளோடு திரும்புவது, அதன் அடுத்தடுத்த கட்டங்களில் பிரான்ஸ், ரஷ்ய பயணங்கள், கிடைத்தற்கரிய பொக்கிஷமான அனுபவங்களை, கருவிகளை, சாதனங்களைத் தனது நட்புறவாலும், அறிவினாலும், சாதுரியமாமுயற்சிகளாலும் பெற்றுக்கொண்டு திரும்புவது எல்லாம் சுவாரசியமாக பின்னோக்கிக் காட்சிகள் வழி சொல்லப்படுகிறது. 
 
1990 – 91 சோவியத் ருஷ்யா கோர்பச்சேவ் – யெல்ட்சின் காலத்தில் ஏகாதிபத்திய ஆசிகளோடு சீர்குலைக்கப்படும் கடைசிகட்ட தருணத்தில் அங்கிருந்து பொருள்களையும் உயிரையும் தற்காத்துக் கொண்டு, அமெரிக்க உளவாளிகள் ஊகிக்க முடியாத வான்வழியில் தேசத்திற்குத் திரும்புமிடத்தில், உள்நாட்டில் கேரள மாநில அரசியல் சதிராட்டத்தில் சந்தேகப் புயல் உருவாக்கப்படும் சதியில் சிறை வைக்கப்படுகிறது நம்பி நாராயணனின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சி பங்களிப்பும்!  
 
அத்து மீறிய காவல் துறை சித்திரவதைகள், பொய்யாக ஜோடிக்கப்படும் சாட்சியங்கள் எல்லாவற்றையும் பின்னர் சிபிஐ உடைத்தெறிந்தாலும், நீதிக்கான தொலைவு, ஆண்டுகளை விழுங்கி நிற்கிறது. தம் வாழ்நாளில் தன்னைக் குற்றமற்றவராக அய்யத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டுவிடும் நம்பி நாராயணன், நஷ்ட ஈடு கேட்கிறார் – காசுக்காக அல்ல, இனி வேறொரு மனிதருக்கு எதிராக இப்படியான பொய்யான குற்றச்சாட்டுகள் ஒருபோதும் சாட்டப்படக் கூடாது என்பதற்காக!  இந்திய அரசு 50 லட்சமும், கேரள அரசு 1.30 கோடியும் அவருக்கு வழங்கியதையும் பதிவு செய்திருக்கிறது திரைப்படம். 
 
கதையின் மெல்லிய இந்தச் சரடில் முக்கியமான இன்னொரு வாக்கியம், இந்த தேசத்தின் நேர்மை மீதான அவரது நம்பிக்கை. அது சாதாரணமானதன்று. அந்த உறுதிதான் அவரது போராட்டத்திற்கான அடிப்படை. இந்த நம்பிக்கையை சமூகத்தில் தக்க வைக்க வேண்டியது இக்காலத்தில் மிக முக்கியமானது. உங்களது சக மனிதர்கள் ஏன் உங்கள் பக்கம் உடனே வந்து நிற்கவில்லை என்ற சூர்யாவின் கேள்விக்கு, ‘ராக்கெட் சாய்ந்தால் எப்படி உடனே நிமிர்த்த முடியும் என்று தெரிந்த அவர்களுக்கு, ஒரு மனிதன் சாய்க்கப்படும் போது என்ன செய்யணும் என்று தெரியவில்லை’ என்று கூறுவது வேதனையான உண்மை.
ஆய்வுக்கருவியில் முக்கியமான பாகத்தில் செய்யவேண்டிய சீரமைப்புப் பணிக்காக பிரான்ஸ் நாட்டுக்குத் தங்களுக்கு உதவி செய்யவரும் உண்ணி என்ற பொறியாளரது குழந்தை இங்கே தாயகத்தில் நோயிலிருந்து குணம் பெறமுடியாமல் மரித்துப் போகும் செய்தியை, அவரிடம் சேர்ப்பதில்லை மாதவன். அந்தப் பரிசோதனை வெற்றி பெற்றபின் உண்ணிக்கே நேரடியாக அந்த உண்மை தெரியவரும்போது வெகுண்டெழும் உண்ணி, ‘இனி வாழ்நாள் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்’ என்று போகிறவர், பின்னர், இவர் பொய்யான குற்றச்சாட்டில் சிறைப்பட்டிருக்கையில் வந்து பார்க்கும் முதல் மனிதராகத் தோன்றுவது உணர்ச்சிகர காட்சி.  அத்தனை கல்நெஞ்சத்தோடு ஆராய்ச்சி செய்பவன் தேசத்திற்கு எதிராகப் போயிருக்க முடியாது என்று இவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்.
 
நேர் காணல் நிறைவில் சட்டென்று மாதவன் மறைந்து உண்மையான நம்பி நாராயணன் தோன்றுமிடம், சூர்யாவின் நடிப்பு, வசனங்கள், தேசத்தின் சார்பில் அவரிடம் மன்னிப்பு கோருவது எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.  நம்பி நாராயணனின் உதவியாளர்களாக வருவோரும் இயல்பாகச் செய்திருக்கின்றனர். பெருங்குறை, அயல் நாட்டவர்களை அவரவர் மொழியில் இயல்பாகப் பேசக் காட்டாமல், தமிழில் டப்பிங் செய்திருப்பது. 
 
இசை, படத்திற்கான தேவைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. வசனங்கள் பல இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. அப்துல் கலாம் இன்னும் நேர்த்தியாக நம் மனத்தில் இடம் பெறும் வண்ணம் அந்தப் பாத்திரத்திற்கான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  
 
சிம்ரன் மிகக் குறைவான இடங்களில் வந்தாலும் தன்னியல்பாகத் தனது நடிப்பை வழங்கி இருக்கிறார். மொத்தப் படத்தின் கனத்தையும் கனமாகவே எடையேற்றிக் கொண்ட மாதவன் சுகமாகச் சுமந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.  சிபிஐ அதிகாரி, உங்களை அடிக்க மாட்டேன் என்று சொன்னபின்னும், தேநீர்க் கோப்பையை நடுங்கும் கைவிரல்களால் பிடித்துக் கொள்ளுமிடம், நியாயத்திற்காக எழுப்பும் கேள்விகள், அயல் நாடுகளில் சாமர்த்தியமாக வேலைகளை முடித்துக் கொள்ளும் உடல் மொழி என்று சிறப்பாகச் செய்திருக்கிறார். முதிய வேடத்தில் மிகவும் ஈர்க்கிறார், அதிராமல் பேசுகிறார், உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துகிறார். யாரையும் மாணவராக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று சொல்லப்படும் பிரின்ஸ்டன் பல்கலை பேராசிரியர் க்ரோக்கோ அவர்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் காட்சிகள், நோயாளியாக வரும் பேராசிரியர் மனைவி என நெகிழவைக்கும் இடங்கள் படத்தில் நிறைய உண்டு. 
 
தங்களை விமர்சிப்போரை ஒடுக்குவதற்கு இப்போதும் அதிகார பீடங்களில் இருப்போர் மிக இலகுவாக முன்னெடுக்கும் ஆயுதம், தேச துரோக குற்றச் சாட்டு தான் என்கிற போது, திரைப்படம் மேலும் நிறைய செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. 
 
படத்தைப் பார்த்தபின், மிகச் சிறந்த வாசகரும், கணிதத் தேர்ச்சி மிக்க விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளருமான பிரசன்னா அவர்களிடம் பேசுகையில், “நம்பி நாராயணன் அவர்களுக்கு நேர்ந்தது அநியாயம்….ஆறுதலான விஷயம் என்னவெனில், அதற்குப் பிறகும், இஸ்ரோவில் அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போதும் குறைவில்லை, ஹீரோக்களை நான் வெளியில் தேடிச் செல்ல வேண்டியதில்லை” என்றார். 
 
நம்பி நாராயணன் அவர்களது கனவு அதுவாகத் தானே இருந்திருக்க வேண்டும், வேறென்ன வேண்டும்!
 
*

“நனைகிறேன்” – விக்னேஷ் ரவி

Swan Rangers Trade in Smoke for Rain! | Swan Range blog

ஒரு கூழாங்கல்லை ஊதியபடி
அகன்ற பாறையின் உச்சியிலேறி அமர்ந்திருக்கிறேன்.
எங்களூரில் மழை வரக்கூடுமா
இல்லையா என்பதை
இங்கமர்ந்து தான் பூட்டன் மக்களுக்குரைப்பானாம்.
அதன்பின் நான்தான்
அப்பாவத்தை என்
பரம்பரையிலேயே ஏற்றிருக்கிறேன்.
எதற்காக
உனக்காகத்தான்..

இதோ உலகின் முதல் துளி
என் உள்ளங்கையில்
கூலாங்கல்லாய்..
நேற்றைய மழை,
அதற்கு முந்தைய நாள் மழை,
போன வாரத்து மழை,
போன மாதத்து மழை,
போன வருடத்து மழை,
போன நூற்றாண்டு மழை,
ஏசு சிலுவையில் அறையப்பட்ட
அன்று பெய்த மழை,
புத்தனுக்கு முன்பான மழை,
இப்படி அத்தனை மழைகளிலும் இல்லாத ஒன்று இன்று இருக்கக் கூடுமென்றுணர்கிறேன்..

சென்ற கோடைகாலத்து
மைய நாளொன்றில்
நீதான் சொன்னாய்
இந்த மலையில் அந்த மழை
தொடும் நாள் நான் உன்னைக் காதலித்திருப்பேன் என்று..
அன்றும் மழை தான்..
உன்னையும் என்னையும்
மட்டும் நனைத்த கோடை மழை..
அன்று தொட்டு இன்று வரை
நீ வாயில் போட்டு என்
கையில் கொடுத்த கூலாங்கல்லும்
நான் அமர்ந்திருக்கும் பாறாங்கல்லும் தான் துணையெனக்கு..

வானம் ஒரு மசக்கைக்காரியைப் போல் திடுமென சோர்கிறது..
மேகம் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாய் இங்கும் அங்கும் கருமை கொண்டலைகிறது..
ஒரு பிரசவக்காரியின் அலறல் சத்தத்தை இடி நினைவு படுத்திச் செல்கிறது.. அந்தோ பனிக்குடம் உடைந்ததைப் போல் மழை கொட்டுகிறது..
சரிந்து விழுந்த சிசுவின் ரத்தமாய் என் கைகளில் மழைத்துளி பிசுபிசுக்கிறது.. பச்சைப் பிள்ளையை துடைத்த துணியாய் மழையோடு சேர்ந்த மண்வாசம் கவுச்சி வீசுகிறது..
முதன்முறையில் சேயின் முகம் பார்த்த தாயின் கண்ணொளியாய் மின்னல் வெட்டிச் செல்கிறது..

நிசப்தம்
பெரு நிசப்தம்
இரைச்சலைக் காட்டிலும் கொடுமை பயக்கும் அகலா நிசப்தம்.
வானில் ஒளியில்லை இடியில்லை கருமேகத்தில் அசைவில்லை மழையில்லை.
இனி எப்படி உனக்கும் எனக்கும் இருந்த உறவை இந்த உலகுக்கு எடுத்துரைப்பேன்..
இனி எப்படிப் புலங்கக்கூடும் நமக்குள் நாம் என்ற சொல்..
உன்னையும் என்னையும் இதே மொட்டைப் பாறையில் கலவிகூடப் பார்த்த மழை
இனி எப்படிச் சொல்லும்
நம் காதலைச் சாட்சி.

கைகளை உயர்த்தி எட்டும் வரைக்கும் நீட்டிப் பார்த்தேன் மழை இல்லை.
காற்றைப் பிழிந்து நுகர்ந்து பார்த்தேன் மழை இல்லை.
மேகம் சிலதை அசைத்துப் பார்த்தேன் மழை இல்லை.
கடலைக் குடித்து துப்பிப் பார்த்தேன் மழை இல்லை.
பூமி மீதும் ஏறிப் பார்த்தேன் மழை இல்லை.

மழை இறந்து போனது.
பிறந்த சிசு தாய் முகம் காணாமல் இறந்து போனதைப் போல்.
தாய் பிறந்த சிசுவைக் காணாமல் இறந்து போனதைப் போல்.
உனக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இறந்து போனதைப் போல்.
நம் காதல் இறந்து போனதைப் போல்.
மழை இறந்து போனது.

நான் மட்டும் மொட்டப் பாறையை கண்ணீரால் நனைக்கிறேன்.
நனைகிறேன்!!

 

 

பல்சுவைப் பதிவுகள் – ராய செல்லப்பா – உமா பாலு – கி. சங்கரநாராயணன்

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..1

மயிலிறகால் வருடி இன்ப வைத்தியம் செய்யும் பதிவர்!

ராய செல்லப்பா அவர்கள்  தில்லித் தமிழ்ச் சங்கத்தில்  16-2-1992  அன்று நடைபெற்ற ‘கவியரசு கண்ணதாசன் நினைவுக் கவியரங்கில்’ தலைமையேற்று வாசித்த கவிதையில் அவர் ஊர் ராணிப்பேட்டையைப் பற்றி சொல்லும் வரிகள்!!

ஆறு காடுகள்

அணிவகுத்து நிற்கும்

ஆற்காடு’

அதனருகே

ஓடாமல் நிற்கும் மணலாறு-

‘பாலாறு!’

இக்கரையில் இருந்தது,

இராணிப்பேட்டை

என் ஊர்- பொன் ஊர்.

தெரியாத கதையா

தேசிங்குராஜன் கதை?

 

செஞ்சி நகரம் –அவன்

செய்த நகரம்.

முரட்டுக் குதிரையை

விரட்டிப் பிடித்து

முடியாட்சி கொண்டான்

தேசிங்கு.

அது, மதியால்!

ஆற்காட்டு நவாப்பின்

ஆயுதங்களின்முன்

அடங்கிப் போனான்.
அது, விதியால்.

செஞ்சி அழிந்தது,

தேசிங்கின்

தேகம் சிதைந்தது.

ஆளனை இழந்த

பத்தினிப் பெண்ணாள்

அஞ்சிடவில்லை.

ஆற்காட்டு நவாப்பின்

ஆசை மொழிகளில்

மயங்கிடவில்லை.

இருளும் நிலவும்

இணையும் பொழுதில்

கிளம்பினாள் –தன்

உயிரினின்றும் விலகினாள்.

அவளை உண்டது

எரியும் நெருப்பு.

பெண்ணென்றால்

அதற்கு விருப்பு,

அன்றும் கூட!

தேசிங்கின் ராணி

தீர்ந்த கதை கேட்டு

அயர்ந்து போனான்

நவாப்.

 

முரட்டு நாகத்தை

ஜெயித்த கரங்கள்-ஓர்

முல்லைப் பூவிடமா

தோற்பது?

 

காற்று அவனுக்கு

ஆறுதல் சொன்னது-விரைவில்

ஆங்கிலர் ஆட்சி

விரியப் போவதும், இவன்

சரியப் போவதும்

காதில் சொன்னது!

அவனுக்குப் புரிந்ததா

காற்றின் மொழி?

 

ஆங்கிலக் கம்பெனி –இவனை

ஆதரிக்க வருவதாய்ச்

செய்தி அனுப்பிற்று.

தொட்டால் வெடிக்கும்

ஆயுதம் தருவதாய்த்

தொடர்ந்து சொல்லிற்று!

வேலை ஒன்று கோரி

விண்ணப்பமும் செய்தது-

வரி வசூலிக்கும் வேலை!

சாவி இவனிடமே

இருக்கலாம்,

பெட்டிபோதுமாம்

அவர்களுக்கு.

கேட்டதும் பணமும்

கேளிக்கைக்கு மதுவும்

இலவசம்.

ஒப்பினான் நவாப்.

தென் இந்தியாவின்

முதல் துரோகி

அவன் தானோ?

 

காலம் அவனை

விரைந்து மறந்தது.

கம்பெனியும் கூட.

ஆற்காடு,

இன்றும் ஆற்காடே.

 

தீயில் குளித்த

செஞ்சி ராணியின்

தேகச் சாம்பல்கள்

பாலாற்று மணலில் படர்ந்தன.

இல்லாமல் போன

இராணியின் நினைவில்

எழுந்ததே,

‘இராணிப்பேட்டை’.

என்னூர்,

என் பொன்னூர்.

***

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..2

 

உமா பாலு அவர்களின் கை வண்ணத்தில் வந்தவை இந்த வண்ணப் படங்கள்! அருமையாக இருக்கின்றன! அவர் கதை கவிதை மட்டுமல்ல, படங்கள் வரைவதிலும்  சிறந்தவர் என்பதை நிரூபிக்கின்றன இவை! அதனால இவற்றைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம். 

 

 

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..3

 

குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல பல சிறந்த கவிதைகளைப் படைத்து வருகிறார் இலத்தூர் கி. சங்கரநாராயணன் அவர்கள். அவருடைய ‘பால்’ என்ற கவிதையைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம். 

பால் !

பாலின் உள்ளே பலபொருளாம்
பார்க்கும் கண்ணில் தெரியாதாம்
பாலே தயிறாய் மோராகும்
பாலே வெண்ணெய் நெய்யாகும்

பாலே அல்வா கோவா போல்
பல்சுவை இனிப்பாய் மாறிடுமே
பாலைத் தந்திடும் மாடுகளைப்
பக்குவமாய் நாம் காத்திடுவோம்

பசுவின் நிறமோ மாறுபடும்
பாலின் நிறமோ ஒன்றுபடும்
சிசுவின் உடலை வளர்த்திடுமே
சீரும் சிறப்பும் தந்திடுமே

புசுபுசு புசுவென கன்றைப்போல்
புத்தொளி உடலில் வந்திடுமே
மசமச மசவென நிற்காதே
மாடுகள் பசி தாங்காதே .

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

                                    குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
47. மழை வருது ! – ஜூன் 2022
48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022

 

************************************************************

 

 

  1. என் சித்திரம் !

Learn to decode children's drawings - Novak Djokovic Foundation

 

 

அம்மா இங்கே வந்து

பார் ! பார் ! பார் !

அழகாய் சித்திரம்

வரைந்திருக்கிறேன் !

 

சூரியன் கிழக்கே

உதிக்கிறான் பார் !

பறவைகள் வானத்தில்

பறக்குது பார் !

 

ஆலமரம் இங்கே

தெரிகிறதா !

அருகே தென்னை மரம்

இருக்கிறதா !

 

ஆறு ஒன்று  சலசலத்து

ஓடுது பார் !

அதிலே மீன்கள்

துள்ளுது பார் !

 

சின்னதாய் அழகாய்

வீடொன்று பார் !

வீட்டினில் இருக்கும்

குடும்பத்தைப் பார் !

அம்மா, அப்பா

நானிருக்கிறேன் !

தம்பி, தங்கை

உடனிருக்கிறார் !

 

எத்தனை அழகாய்

இருக்குது பார் !

சந்தோஷம் இங்கே

பொங்குது பார் !

 

****************************************

  1. தஞ்சாவூரு பொம்மை !

Nanayam Vikatan - 27 March 2022 - தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை! | thalaiyatti bommai business - Vikatan

 

பொம்மை ! பொம்மை ! பொம்மை !

எனக்குப் பிடித்த பொம்மை !

தலையைத் தலையை ஆட்டும்

தஞ்சாவூரு பொம்மை !

 

எத்தனை தள்ளினாலும் –

தலையைத் தட்டினாலும் –

கீழே விழுந்த பின்னும் –

எழுந்து நிற்கும் பொம்மை !

 

கரடி, மோட்டார் சைக்கிள் – அட

எத்தனை பொம்மையிருந்தும் –

எனக்குப் பிடித்த பொம்மை –

தஞ்சாவூரு பொம்மை !

 

என்னைப் பார்த்து சிரிக்கும் – எனக்கு

சந்தோஷத்தைக் கொடுக்கும் !

கிறங்க கிறங்க அடிக்கும் –

தஞ்சாவூரு பொம்மை !

 

நானும் நிமிர்ந்து நிற்பேன் – கீழே

தள்ளினாலும் எழுவேன் !

எனக்கு சொல்லித் தந்த –

தஞ்சாவூரு பொம்மை !

 

எத்தனையோ பொம்மை –

எங்கள் வீட்டில் இருந்தும் –

எனக்குப் பிடித்த பொம்மை –

தஞ்சாவூரு பொம்மை !

 

******************************************************************

 

 

 

 

 

 

 

 

இடையன்எறிந்தமரம் – வளவ. துரையன்

திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தில் ஆண்டுதோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937-   ஆம்ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார்.

அந்தமடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப்பற்றித் தான்அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக்கொடுத்தார். 

            அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப்போட்டுக் காளைகளை அடக்குதல்,  ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

         அவன், “ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். ஆடுகள் தின்ன மரக்கிளைகளை வெட்டுவோம். அப்படி வெட்டுகையில் கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும்படி வெட்டுவோம். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும்” என்றான்.

         ”ஏன் அடியோடு வெட்டிப் போட்டால் என்ன?” என்று கேட்டார் உ.வே.சா.

         ”அப்படி வெட்டிவிட்டால் அந்தக்கிளை பிறகு பயன்படாமல் போய்விடும்.  நாங்கள் வெட்டும் கிளை இன்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்” என்று அவன் பதில் கூறினான்.

         ’இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்’ எனும் எண்ணம் அவருக்குள் உருவானது. 

         பட்டென்று அவருக்குத்தாம் முதல்முதல் பதிப்பித்த சீவகசிந்தாமணியின் 1914-ஆம் பாடல் நினைவுக்கு வந்தது.

அந்தப்பாடல் இதுதான்:

        ”கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவுமன்றி

        நடலையுளடிகள் வைக நட்புடையவர்கள் நைய

         இடைமகன் கொன்ற இன்னாமரத்தினேன் தந்த துன்பக்

         கடலகத்தழுந்த வேண்டா களைகவிக் கவலை”

            அதில் சீவகன் தன்தாயிடம்  “ என்தந்தை மரணமடைந்து யான்பிறந்தேன். நீயும் மனம் வருந்த, நண்பர்களும் மனம் வருந்த இடையன் வெட்டிய இன்னாமரம் போல இருந்தேன்” என்று கூறுகிறான்.

        இதற்குநச்சினார்க்கினியர்“உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன். உயிரையும் நீத்தேன் அல்லேன்” என்று கருதி ’மரத்தினேன்’ என்று உரை எழுதுகிறார்.

         உயிரையும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளை வேறு இலக்கியங்களில் வருவதும் அவர்க்குத் தோன்றியது. 

         பெரியதிருமொழியில் திருமங்கையாழ்வார் ‘இடையன் எறிந்த மரம்’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளதை அவர் நினைத்துப் பார்த்தார்.

         ”படைநின்ற பைந்தாமரை யோடணிநீலம்

         மடைநின்ற லரும்வய லாலிமணாளா

         இடையன் எறிந்தமரமே ஒத்திராமே

         அடைய அருள்வாய் எனக்குன்அருளே”

திருமங்கையாழ்வார் திருவாலித் திருநகரியில் உள்ள பெருமாளை நோக்கி

         ”ஆலிமணாளனே! நான் இன்னும் உன் அருளைப் பெறவில்லையே எனும் ஏக்கத்தால் மனம் அழிந்தும், பெறுவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் இடையன் எறிந்த மரம்போல நிற்கிறேனே” என்கிறார்.

         பழமொழி நானூறு என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள ஒரு பாடலும் அவருக்கு நினைவில் தோன்றியது.

         ”அடையப் பயின்றார்கொல் ஆற்றுவராக் கேட்டால்

         உடையதொன் றில்லாமைஒட்டிந்—–படைபெற்[று]

         அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்

         இடையன் எறிந்த மரம்.

என்ற பாடலிலும் இடையன் எறிந்த மரம் உவமை கூறியிருப்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.

         உ.வே.சா அந்த இடையனிடம் “அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டி விழச் செய்வது கஷ்டமல்லவா?” என்று கேட்டார்.

         அவனோ “அது கைப்பழக்கம்; இல்லாவிட்டால் பழமொழி வருமா?” என்று கேட்டான் பதிலுக்கு.

         ””என்ன பழமொழி?” என்று அவர் கேட்டார்.

         ”அதாங்க; இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழியைத்தான்  சொல்கிறேன். என்றான் அவன்.

         இந்த நிகழ்வைக் குறிப்பிடும் உ.வே.சா “அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதைவிட

“இடையன் வெட்டு அறாவெட்டு” என்ற சூத்திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினால் போதும்” என்று எழுதுவது பழமொழிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.

—————————————————————————————————————————-  

        

தஜிகிஸ்தான்- ரேவதி ராமச்சந்திரன்

 

Tajikistan | People, Religion, History, & Facts | Britannicaஎன் பையன் கார்த்திக் ‘அம்மா, ப்ரீத்தி, வருண், எனக்கு தஜிகிஸ்தானுக்கு மாற்றலாகி வந்திருக்கிறது’ என்று கூவிக் கொண்டே வந்தான். ‘எதுக்கடா தடிக்கி விழுந்து கொண்டு வருகிறாய்’ என அம்மா வினாவினாள். ‘தடி இல்லைம்மா, தஜிகிஸ்தான் என்று சொன்னேன்’ என்றான். ‘ஆங் அது எங்கே இருக்கு!’ ‘ரஷ்யாம்மா’. ‘இப்ப அங்கே சண்டையாமே! அங்கே ஏன் நீ போகிறாய்’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன் ஆர்மியில் வேலை செய்யும் ஆபிசரிடம். இந்தக் கேள்வியையே பிறகு எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். கழகஸ்தான், கிர்கிஸ்தான் என்று தெரிந்தவர்களுக்கு இந்த தஜிகிஸ்தான் கொஞ்சம் புதிதாகத்தான் தெரிகிறது. ‘என்னம்மா நீ இப்படி என்னிடம் கேட்கிறாய். மேலும் எத்தனை டெஸ்ட், இன்டர்வியூ, அதற்கப்புறம்தானே வெளிநாட்டு வேலை கிடைத்திருக்கிறது’ என்று என்னை சமாதானப்படுத்தினான். இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வந்தான். பொங்கல் கழிந்த பின் கிளம்பி விட்டான். நானும், என் மருமகள் ப்ரீத்தி, பேரன் வருண் மூவரும் லீவில் அங்கே சென்றோம். நீங்கள் எத்தனை பேர்கள் அங்கே சென்றிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்து மகிழ்ந்த தஜிகிஸ்தானைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் எனது மனம் சங்கடப்படும், உங்களுடையதும்தான்!

சுத்தம், தண்ணீர்: தஜிகிஸ்தான் விமான நிலையம் மிகவும் சிறியது. எப்போதும் போல இறங்கினவுடனே வாஷ்ரூம் செல்லப் போன எங்களை கார்த்திக் தடுத்து விட்டான். சுத்தமான தண்ணீருக்குப் பஞ்சமில்லாத நாட்டில் எந்த இடத்திலும் வாஷ்ரூமில் தண்ணீர் கிடையவே கிடையாது. ஆனால் குளிக்கும் இடத்திலும், வாஷ்பேசினிலும் எங்கேயும், எப்போதும் குளிர் நீரும், சுடு தண்ணீரும் வரும். நாங்கள் ஒரு இராத்திரி ஒரு ஹோட்டலில் தங்கினோம். அங்கும் ரூமீல் தண்ணீர் பாட்டில் வைக்கப்படவில்லை. நல்ல வேளை நாங்கள் எடுத்துக் கொண்டு சென்றோம். இரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவது போல தினமும் ஒரு லாரியிலிருந்து பைப்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்க ரோடு பூராவும் சுத்தம் செய்கிறார்கள். எவ்ளோ பெரிய ரோடாக இருந்தாலும் சரி. ஆனால் வாஷ்ரூமில் ஏன் இப்படி, புரியவில்லை, பிடிக்கவில்லை. இந்த ஒன்றைத் தவிர இந்த நாடு பல விதத்திலும் சுவர்கபூமி தான். எல்லா இடமும் சுத்தம், சுத்தம், சுத்தம். அத்தனை சுத்தம். பாலிதீன் அதிகம் உபயோகிக்கும் நாடு. ஆனால் ஒரு பையோ, குப்பையோ எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அங்கே எப்படி குப்பைகளைக் களைகிறார்கள் என்று இப்போது வரை எங்களுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு எல்லா நாடுகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா!

Tajikistan | Central Asia Luxury Travel | Remote Landsஎங்கும் பசுமை: தண்ணீர் பிரச்சனை இல்லாததால் எல்லா இடமும் பசுமையாக இருக்கிறது. நகரத்திற்கு நடுவிலேயும் மரங்களைப் பார்க்கலாம். இது அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. சென்னையில் கிண்டி ராஜ்பவன் அருகில் இப்படி சில மரங்களைப் பார்க்கலாம். அது கூட இப்போது அழிந்து போகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு செழிப்பான நாடு வேறு ஏதாவது உண்டா என்று தெரியவில்லை!

பூக்கள்: நிறைய குட்டி குட்டி கலர் கலர் பூக்களுடன் ரோஜாத் தோட்டம். பெரியதாக. ஆனால் வாசமில்லா மலரிது! நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இரண்டு மரங்கள் அழகாக எங்களை வரவேற்பது போல வளைந்து இருந்தன.

பழ மரங்கள்: அப்பப்பா, நான் ஒன்றும் உலகம் சுற்றும் வாலிபி (வாலிபனது பெண் பால்) அல்ல. ஆனால் நான் இப்போது குறிப்பிடும் மாதிரி  ரோடில் சாதாரணமாக கைக்கெட்டும் தூரத்தில் பழங்களைத் தாங்கிய மரங்கள் இருக்குமா என்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். செர்ரி (என்ன இனிப்பு), பச்சை ஆப்பிள், வால்நட், ஆப்ரிகாட், திராட்சை, மல்பெரி (இரண்டு வகை). இவைகளை அப்படியேப் பறித்து சாப்பிடலாம். மே-ஜூனில் எங்கும் செர்ரி. அங்கு இருப்பவர்கள் இந்த செர்ரியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டி சர்க்கரை போட்டு குடிக்கிறார்கள். நாங்கள் உடல் நலம் கருதி சர்க்கரை சேர்க்காமல் குடித்தோம். எந்த ஒரு செயற்கை எருவோ, கலரோ சேர்க்காத பழங்கள். கண்ணைப் பறிக்கும் கொத்து கொத்து திராட்சை. இதில் என்ன விசேஷம் என்றால் எல்லோரது வீட்டிலும் இத்தனை மரங்களும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களேத் தயாரித்த நான் என்கிற ரொட்டி, பிரட், கேக் (வித விதமான கேக்குகள்) அப்பறம் இந்தப் பழங்கள் தருகிறார்கள். சில சமயம் அவர்கள் சிறிது சோம்பேறிகளோ என்று எண்ண வைக்கிற அளவிற்கு பெரிய பெரிய தடிமனான நான் (ரொட்டி) செய்கிறார்கள் அல்லது கடையில் வாங்குகிறார்கள் அதோடு இந்த ஜூஸ், ஜாம் என்று தங்களது சாப்பாட்டை முடித்துக் கொள்ளுகிறார்கள். வித விதமான தேன் கிடைக்கிறது. எலுமிச்சைத் தோலில் செய்த ஜாம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.  

உணவு: உணவைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். இதைத் தவிர சாப்டி என்கிற கோன் ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு, சாக்லேட் இவைகளுக்கு கணக்கே கிடையாது. யாரையாவது பார்த்தாலோ அல்லது கல்யாணம் சொல்ல, குழந்தை பிறந்தால் என்றோ  உடனே கை நிறைய சாக்லேட் தருகிறார்கள். இதனால் இவர்கள் யாருக்கும் எல்லா சொந்தப் பற்களும் இருக்காது. பல்லைத் தட்டி கையில் வைத்திருப்பார்கள் போலும்! ஜகஜகவென்று ஜொலிக்கும் தங்கப் பற்கள்தான். ஆனால் இவர்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. கடைகளிலும் சாக்லேட் விதவிதமாக குவியல் குவியலாக உள்ளது. எனக்கு அதைப் பார்த்து தலை சுற்றியது. அவைகளை அப்படி பார்க்கும்போது சாப்பிடும் ஆசையே அற்று விட்டது. இன்னொன்று அசைவ உணவு. இங்கு அது சாதாரணம். ஹோட்டலுக்குப் போகும் போது நாங்கள் ஏதாவது எடுத்துக் கொண்டு போய் விடுவோம். பால் சேர்க்காமல் ‘தஜிகி டீ’ என்று அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் ரோஜா இலை, புதினா என்று சில நல்ல மூலிகைகளையும் சேர்க்கிறார்கள்.       

தட்ப வெட்ப நிலை: இத்தனை மரங்கள் இருப்பதாலா, மக்கள் தொகை குறைவாக இருப்பதாலா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருப்பதாலா எப்படியோ அங்கு எப்போதும் ஒரு குளிர்ந்த நிலை இருக்கிறது. பென்சிலால் படம் வரைந்த மாதிரி மலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இதனால் எந்த நேரமும் காலாற நடக்க ஆசையாக இருக்கும்.

பூகம்பம்: நில நடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடு இது. ஜூன் 2 ஆம் தேதி பதினொன்று மணிக்கு நாங்கள் எல்லோரும் படுத்த பிறகு தட தடவென்று கட்டில் அடியில் சப்தம். பயந்து வெளியில் வந்து பார்த்தால் 5.38 ரிக்டர் அளவில் நில நடுக்கம் என்று தெரிந்தது. அப்பப்பா இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.    

வாகனங்கள்: மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பஸ், கார், சைக்கிள் மட்டும் தான் இருப்பதாலும், அதுவும் சீராகச் செல்வதாலும், அவற்றின் இயங்கும் சப்தமோ, ஹார்ன் சப்தமோ இல்லாததாலும், மக்களது, வாகனங்களது அடர்த்தியான கூட்டம் இல்லாததாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது. வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. பணக்காரான நாடாக இல்லாவிட்டாலும் அவசியம் கருதி எல்லோரிடமும் கார் இருக்கிறது. மொத்தமாக வியாபாரம் நடக்கும் இடங்களுக்கு காரில் வந்து டிக்கி முழுவதும் சாமான்களை வாங்கிச் செல்வது சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.

Tajikistanமனிதர்கள்: இத்தனை சர்க்கரை சாப்பிடுவதால் பற்கள் கெட்டுப் போகலாம். ஆனால் மனிதர்களது உடம்பும், மனசும் மிகவும் மென்மையானது. சிவந்த மென்மைத் தோல், நல்ல உள்ளம். பயமில்லாமல் இரவில் வெளியில் செல்ல முடியும். எந்த நாட்டில் பெண்கள் இரவில் சுதந்திரமாகச் செல்ல முடியுமோ அது தான் நன்நாடு, அது இந்த நாடு. தெரியாதவர்களாக இருந்தாலும் வணக்கம் சொல்லுகிறார்கள். சிரித்த முகத்துடன் கை ஆட்டுவார்கள். இந்திய நாட்டு மக்களை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

மின்சாரமும், விளக்குகளும்: இரவில் சுதந்திரமாகச் செல்ல இன்னொரு காரணமும் உண்டு. மின்சாரம் தேவைக்கு மேல் உற்பத்தி செய்வதால் இரவில் எங்கு நோக்கினும் வண்ண வண்ண கலரிலும், டிசைனிலும் விளக்குகள் எரிகின்றன. சில இடங்களில் நடை பாதைகளில் கல்யாணத்திற்குப் பந்தல் போட்ட மாதிரி இரு பக்கமும் விளக்குகள் எரிகின்றன. அதன் நடுவில் நடந்து செல்வதே ஒரு தனி ஆனந்தம். அதனால் இந்த நாடு தூங்கா நாடாக இருக்கிறது. ஆம், இரவு எத்தனை மணி ஆனாலும் மக்கள் வெளியில் வந்து குழந்தைகளை விளையாட விட்டு தாமும் உலாவி விட்டுச் செல்கின்றனர். எலெக்ட்ரிக் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகின்றனர், நடை பயிற்சி செய்கின்றனர்.

முக்கிய இடங்கள்: சோமானி ஸ்குயர் மிகவும் முக்கியமான இடம்  (இந்த இடத்தில் அமெரிக்காவிலுள்ள லிபெர்டி சிலை மாதிரி ஒரு சிலை இருக்கிறது). இந்த இடத்தில் ஒரு தியேட்டரும் இருக்கிறது. அங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ம்யூசியம், லேக் என்று பொழுதுபோக்கு இடங்கள் நிறைய இருக்கின்றன. இங்கெல்லாம் இரவில் வண்ண விளக்குகளின் அடியில் நடை பயிலுவது மனத்திற்கு ரம்யமாக இருக்கும். மொத்த வியாபாரம் நடக்கும் இடங்களும் நான்கு ஐந்து இருக்கின்றன. எல்லா இடத்திலேயும் பிரெஸிடெண்ட் சிலை இருக்கின்றன. அவர்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். நிறைய இடங்களில் அவரது உருவப்படங்கள் பெரியதாக வைக்கப்பட்டுள்ளன. 

ஆப்பாக்களும், ஆக்காக்களும்: நாங்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் கார்த்திக் காரில் எங்களை அழைத்துச் செல்லும்போது டிரைவரை ‘ஆக்கா’ என்று விளித்துக் கொண்டே வந்தான். இதென்னது இவரை ‘அக்கா’ என்று நீட்டிக் கூப்பிடுகிறானே என்று யோசித்தோம். எங்கள் இடத்துக்குப் போனவுடன் ‘அம்மா இங்கே வேலை செய்யும் ‘ஆப்பாக்கள்’ உங்களைப் பார்க்க வந்திருக்கின்றனர்’ என்றான். சரி வேலை செய்பவர்களை ‘ஆப்பா’ என்று சொல்கிறான் என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது எல்லா ஆண்களையும் ‘ஆக்கா’ என்றும் எல்லா பெண்களையும் ‘ஆப்பா’ என்றும் எல்லோரும் எல்லா இடத்திலும் கூப்பிடுகிறார்கள் என்று. இனம் மாறி விட்டதோ!

நாணயம்: இங்கு உபயோகப்படுத்தப்படும் நாணயம் “சோமானி”. 1 சோமானி சுமார் 7 ரூபாயாகும். மொத்த வியாபார கடைகளில் நன்கு பேரம் பேசி வாங்கலாம். அவர்களும் இந்தியர்கள், சுற்றுல்லாப் பயணி, நிறைய வாங்குபவர்கள் என்று குறைத்துக் கொடுப்பார்கள்.

மொழியும் முழியும்: அங்கு பேசும் மொழி தஜிகி. நமக்கு அது புரியாது. ருஷ்ஷியனும் பேசுவார்கள். தஜிகி மொழியில் ஒன்று இரண்டு வார்த்தைகள் கற்றுக் கொண்டு நாங்கள் கடைக்குச் செல்லுவோம். ஒரு முறை கார்த்தியும்,   ப்ரீத்தியும் வருணுக்கு டிராயிங் பேப்பர் வாங்கச் சென்றனர். வரைந்து காட்டி, கோடு போட்டுக் காட்டியும் டிராயிங் பேப்பரைப் புரிய வைக்க முடியவில்லை. அது எங்கும் கண்ணில் தட்டுப் படாததால் வாங்க மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியில் ஒரு கடையில் அதைப் பார்த்து எடுத்த போது கடைக்காரன் ‘நீங்கள் முதலிலேயே வெள்ளைப் பேப்பர் என்று சொல்லியிருக்கலாமே’ என்ற போது அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது.

படிப்பு: தஜிகிஸ்தானில் மருத்துவ படிப்பதற்கான கல்லூரி உள்ளது. இது நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தருகிறது. கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். டெல்லியிலிருந்து தஜிகிஸ்தான் செல்ல நேர் விமான சேவை இல்லாத நேரங்களில் துபாய், கத்தார் வழியாகச் செல்லலாம்.        

    ரசித்தல்: அதீத பகட்டோ, ஆடம்பரமோ, மாட மாளிகையோ இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழும் இவர்கள் அதனை ரசிக்கிறார்கள். ஆபரணங்களும் அதிகம் இல்லை. சாதாரணமான ஒன்று இரண்டு அணிகலங்கள்தான். இவர்களது காதல் இனிப்பு மேல் தான். இரவிலும் குடும்பத்தோடு வெளியில் சென்று பொழுதைக் கழிக்கின்றனர்.

வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த தஜிகிஸ்தானையும் தங்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த மென்மையான குளிர்ந்த சூழல், ஆடம்பரமில்லாத அமைதியான, சுத்தமான சூழ்நிலை, கள்ளங் கபடமற்ற மென்மையான சாதாரணமான மனிதர்கள், மனித நேயங்கள், சுத்தமான சுற்றுப்புரம், பச்சைப்பசலேன்ற சுவையும் சுகாதாருமுமான கனி தரும் மரங்கள், படம் வரைந்தாற் போல மலைகள் இவை எல்லாவற்றையும் கொண்ட தஜிகிஸ்தானை விட்டு வர மனமே இல்லை.

லீவு முடிந்து விட்டது. திரும்ப வர வேண்டுமே! வாழ்க்கை இங்கேதானே! தாய் நாட்டை மறக்க, மறுக்க முடியுமா!    

 

                                             

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

பள்ளிக்கூட நாட்களில் வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ மதியம் உண்ட களைப்பு தீர, ‘மாரல் சயின்ஸ்’ பீரியட் ஒன்று இருக்கும். அந்த வயதில், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அது சொல்லும் நீதி போதனையில் இருக்காது!

சாதிகள் இல்லையடி பாப்பா, எம்மதமும் சம்மதம், ஆள்பவன் நீதி வழுவாமல் இருக்க வேண்டும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற அறிவுரைகளை சிறு கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தார்கள்! கற்றுக்கொண்டவர்களுக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டியிருக்கும் – பின்னாட்களில் வந்த தலைமுறைக்கு நீதிபோதனைகள் அவசியம் இல்லை என முடிவு செய்து, அந்த வகுப்புகளையே தூக்கி விட்டார்கள்! இழப்பு குழந்தைகளுக்குத்தான். நல்ல சிறுகதைகளைக் கேட்பதும், அதனால் உந்தப்பட்டு, பின்னர் நல்ல புத்தகங்களை வாசிப்பதும் வழக்கொழிந்து விட்டன. சிரிப்புடனும், சிந்தனையுடனும் வளர்ந்த குழந்தைகள், இன்று அந்த வாய்ப்பே இல்லாமல் கையில் செல்லுடனும், பையில் ‘லாப் டாப்’ உடனும் சுற்றி வருகின்றன!

குட்டிக் கதைகள் வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாவின் கதைகள், ஜென் தத்துவக் கதைகள், தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள், நாடோடிக் கதைகள், சின்ன அண்ணாமலை சிரிப்புக் கதைகள், தேவனின் சின்னஞ்சிறு சிறுகதைகள் இப்படித் தமிழ் மொழியில் ஏராளமான கதைத் தொகுப்புகள் காணக் கிடைக்கின்றன. தாத்தா, பாட்டிகளுக்கும், பெற்றோருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் கதைக்க நேரமில்லை. குறைந்த் பட்சம், இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தோன்றுகின்றது.

சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்!

வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஏழை பக்தர் ஒருவர், இறைவனுடன் நேரில் பேசும் ஒரு பெரியவரிடம், “எனக்கு ஏன் கஷ்டத்திற்கு மேல் கஷ்டமாகக் கொடுக்கிறார் கடவுள்? நேற்று என்னுடைய சிறிய குடிசையும் இடிந்து விழுந்துவிட்டது. இப்போது தங்குவதற்குக் கூட இடமில்லை. நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறைவனிடம் கேட்டுச் சொல்லச் சொல்கிறார். இதைக் கேட்ட இறைவன், பெரியவரிடம், ‘எனக்கு ஒரு செங்கல் கொண்டுவந்து தரவேண்டும்’ என்கிறார். பெரியவரும் பக்கத்து ஊர் சென்று, நல்ல கட்டடங்களை விட்டு, இடிந்து போய் விழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து வருகிறார். இறைவன், ‘ஏன் அங்கிருந்த நல்ல கட்டடங்களில் இருந்து எடுக்கவில்லை?’ என்று கேட்கிறார். அதற்குப் பெரியவர், ‘அந்தக் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. இடிந்த வீட்டிலிருந்து எடுத்தது நல்லதாகப் போயிற்று. இப்போது அங்கே ஒரு புதிய வீடு கட்டுவார்கள்’ என்கிறார். அப்போது இறைவன், “அந்த பக்தனுக்கு அதிகமான கஷ்டங்களைக் கொடுத்ததும் இதற்காகத்தான். அவனுக்கு வைராக்கியம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று சொல்கிறார்.

“துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது. துன்பங்கள் மனிதனைப் பக்குவப் படுத்துகின்றன” என்ற கருத்தை வலியுறுத்தும் கதை இது!

(தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் – தொகுதி – 1. வானதி பதிப்பகம்).

அதில் ஒரு கதை

மலிவான விலையில் கழுதை!

முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் | Mulla Stories in Tamil ~  Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்

ஒவ்வொரு வாரமும் ஒரு கழுதையை சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கிறார் முல்லா. வழக்கமாக உடன் வரும் கழுதை வியாபாரி, “முல்லா, நான் கழுதைக்கு வேண்டிய தீவனத்தைத் திருடிக்கொண்டு வந்து போடுகிறேன். ஆனாலும் நீ விற்கும் குறைந்த விலைக்கு என்னால் விற்க முடியவில்லையே? அது உனக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கிறான். அதற்கு முல்லா, “ப்பு… இது ரொம்ப சுலபம். நீ தீவனப் பொருளை மட்டும்தான் திருடுகிறாய். நான் கழுதையையே திருடிக்கொண்டு வருகிறேன். அதனால்தான் என்னால் உன்னைவிட மலிவான விலைக்கு விற்க முடிகிறது!” என்றார்! (சிந்திக்க, சிரிக்க முல்லாவின் கதைகள் – நர்மதா பதிப்பகம்)

கிணற்றுத் தவளை.

கிணற்றிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்த ஒரு தவளை, நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. சமுத்திரத்தில் வாழ்ந்த வேறொரு புதிய தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து குதித்தது.

“நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்றது கிணற்றுத் தவளை.

“நான் கடல் தவளை. சமுத்திரத்திலிருந்து வருகிறேன்”

“சமுத்திரமா! அது எவ்வளவு பெரிது?”

“மிகவும் பெரிது” என்றது கடல் தவளை.

தன் கால்களை அகல நீட்டி, “நீ சொல்லும் சமுத்திரம் இவ்வளவு பெரியதாக இருக்குமோ?” என்றது.

“அது இன்னமும் எவ்வளவோ பெரியது” – கடல் தவளை.

இதைக் கேட்ட கிணற்றுத் தவளை, கிணற்றினுள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தாண்டிக் குதித்து,”உன் கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?” என்றது.

“நண்பா! கிணற்றைக் கடலுக்கு எப்படி ஒப்பிட முடியும்?” என்றது கடல் தவளை.

இதை நம்பாத கிணற்றுத் தவளை, “இப்படி இருப்பதற்கு எந்தக் காலத்திலும் வழியில்லை. என் கிணற்றைக் காட்டிலும் பெரியது ஒன்று ஏது? இவன் பொய்யன். இவனை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்” என்று நினைத்ததாம்!

விரிந்த நோக்கம் இல்லாதவனின் விஷயமும் இப்படிப்பட்டதுதான். அவன் தனது கருத்தோ, அனுபூதியோ சிறந்ததென்றும், அதைவிடவும் சிறந்த கருத்தோ, அனுபூதியோ இருக்க முடியாது என்றும் நினைக்கின்றான்!

(ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் – ஶ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை – 600004).

அந்தக் கதைகள் காட்டும் வாழ்வின் நிதர்சனங்கள் சுவாரஸ்யமானவை – பின்பற்றத் தக்கவை!