பிரீஸஸ் தந்த முத்தத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு மந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றான் அக்கிலீஸ். அங்கே குழுமியிருந்த கிரேக்க வீரர்கள் அத்தனைபேரும் எழுந்து நின்று ஆரவாரத்தோடு வரவேற்றார்கள்.
நடுநாயகமாக அமர்ந்திருந்த அகெம்னனுக்கு இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்தது. அவன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் புயற் காற்றில் எழும்பும் பேரலைபோல பொங்கின!
‘நான் மன்னன் மரபைச் சார்ந்தவன். இவன் வெறும் சேனைத் தலைவன் ! இவனுக்கு இத்தனை பேர் ஆதரவா? இவன் இல்லாமல் டிராய் போரை வெற்றிகரமாக முடிக்கமுடியாது என்று இவனும் இந்தக் கிரேக்க மக்களும் நம்புவதுதான் அதற்குக் காரணம் நம் கடவுள்கள் இவனுக்கு ஆதரவாகப் பேசுவதனால்தான் இவன் இவ்வளவு திமிர் பிடித்து அலைகிறான். எனக்கும் கடவுள் துணை உண்டு. இவன் எனக்குப் புத்தி கூறுகிறான். நான் பிடித்து வந்த அடிமை அழகியை விடுதலை செய்யவேண்டுமாம். இவன்தான் அப்பல்லோவிடம் திரித்துக் கூறி கொடிய தொற்று நோயை நம் வீரர்கள் மீது ஏவி விட்டிருக்கிறான். இன்று இந்த கர்வம் பிடித்த ஆக்கிலீஸை அடக்கி வைக்காவிட்டால் நான் மன்னன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவன் ஆவேன். ‘ என்று மனதுக்குள் குமுறினான் அகெம்னன்.
அகெம்னனது எண்ணம் எந்த திசையில் செல்கிறது என்பதை நன்கு புரிந்துகொண்ட அக்கிலீஸ் தன்னுடைய முடிவைத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான்.
” இதோ பார்! அகெம்னா! டிராய் நகர அரசன் எனக்கோ என மக்களுக்கோ எந்த விதத் தீங்கையும் இழைக்கவில்லை. நம் மன்னர் மேனிலியசுக்கு உதவுவதற்காக நானும் என் வீரர்களும் வந்துள்ளோம். ஆனால் எங்களை அவமானப் படுத்தும் உரிமை உனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது என்பதை நீ உணர்ந்துகொள்! உழைத்துப் போரிட நாங்கள்! வெற்றி பெற்றபின் அதன் சுகத்தை அனுபவிக்கத் துடிப்பது இன்னொருவனா? அதை நான் என்றைக்கும் அனுமதிக்க மாட்டேன்! நான் சொல்வதைக் கேள்! அப்பல்லோ தெய்வம் நம் மீது கோபமாக இருக்கிறார். அவரது பூசாரியின் மகள் கிரியசை நீ அடிமையாக இழுத்து வந்தது மட்டுமல்லாமல் பிணையப் பயணம் கொண்டுவந்த அவர் தந்தையை அவமானப் படுத்தியும் அனுப்பினாய்! அதனால் கோபம் கொண்ட அப்பல்லோ கடவுள் தொற்று நோயை ஏவி நம் வீரர்களைக் கடந்த பத்து நாட்களாக அழித்து வருகிறார். இதற்கு முடிவு கட்ட நீ அந்தப் பெண்ணை இப்போதே திருப்பி அனுப்பி விடு! அத்துடன் அப்பல்லோவைச் சாந்தப்படுத்தப் பலிப் பொருட்களும் அனுப்பிவிடு! இல்லையென்றால் நம் வீரர்கள் அனைவரும் தொற்று நோயால் அழிந்துவிடுவார்கள்”என்று கூறி அக்கிலீஸ் சுற்றிலும் இருந்த வீரர்களை உற்று நோக்கினான்.
அவனது கருத்தை ஏற்றுக்கொள்ளவே அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்களது பார்வையே சொல்லியது. ஆனால் அகெம்னனும் அவனைச்சேர்ந்த சிலரும் அதை ஏற்கத் தயாராயில்லை என்பதும் அவர்களின் பார்வைக் குறிப்பு பறை சாற்றியது.
கொஞ்சமும் தயங்காமல் அகெம்னன் அக்கிலிஸை மறுதலித்துப் பேச ஆரம்பித்தான். ” அக்கிலிஸ் ! இதுவரை நடந்த போர் வெற்றியில் என பங்காகக் கிடைத்த பணயப் பொருள் கிரீஸஸ். அந்தக் கருநிற அழகி எனக்குக் கிடைத்த பரிசு! அவளை விட்டுவிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட நீ யார்? இருந்தாலும் அப்பல்லோ தேவனின் கோபத்தினால் நம் வீரர்களுக்கு ஏற்படும் அழிவை நிறுத்த நானும் விரும்புகிறேன். நான் நேசிக்கும் அந்தக் கருநிற அழகியையும் விட்டுவிடச் சம்மதிக்கிறேன். ஒரு சிறந்த படைத் தலைவன் மூலமாக அவளையும் அப்பல்லோவைச் சாந்தப் படுத்தும் பலிப் பொருள்களையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். ஆனால்..”
பேசுவதை சற்று நிறுத்திவிட்டு அக்கிலீசை உற்று நோக்கி, “அதற்கு ஈடாக உன் காதலி பிரிஸிஸை எனக்குத் தரவேண்டும். தருவது என்ன? நானே எடுத்துக் கொள்வேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
அகெம்னனின் வீரர்கள் அக்கிலிசை வளைத்துத் தாக்குதல் நடத்தவும் தயாராக இருந்தார்கள்.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாத அக்கிலீஸ் தன்னை நோக்கி வரும் வீரர்களை லட்சியம் செய்யாமல் தன் மகா வாளை உருவிக் கொண்டு அகெம்னனைக் கொல்லப் பாய்ந்தான்.
ஆனால் அப்போது யாரோ பின்புறமாக வந்து வாள் பிடித்த அவன் வலக் கரத்தைப் பற்றி இழுத்துத் தடைசெய்கிறார்கள் என்பதை உணர்ந்து கோபாவேசமாகத் திரும்பினான். அவன் உயிருக்கு உயிராக மதிக்கும் அதீனி தேவதைதான் யார் கண்ணுக்கும் புலப்படாமல் அங்கே நின்று கொண்டு அவனைத் தடுத்துக் கொண்டிருந்தாள்.
” தேவி! தாங்கள் ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்? மரியாதை கெட்டதனமாகப் பேசிய அகெம்னன் இன்று என் கையால் மடியப் போகிறான். என்னைத் தடுக்காதீர்கள்! ” என்று சிறகு கொண்ட வார்த்தைகளால் கூறினான் அக்கிலீஸ்
” அக்கிலிஸ் ! உன்னுடைய வீரம் எனக்கு நன்றாகத் தெரியும். கிரேக்க மக்கள் மீது நானும் ஹீரா தேவியும் அதிக அக்கறை வைத்திருக்கிறோம். இந்த நேரத்தில் நீ அவனைக் கொல்வது சரியல்ல. அதைத் தடுக்கவே நான் வந்தேன். நாம் பேசுவது யாருக்கும் கேட்காது. நீ அடங்கிப் போவதனால் அது வீரத்திற்கு இழுக்கு அல்ல. அதுதான் விவேகம். நீ இல்லாமல் கிரேக்கப் படை வெற்றி கொள்ள முடியாது. உன் காலடியில் ஒருநாள் அனைவரும் விழுந்து இந்தப் போரை முடித்துத் தருமாறு கெஞ்சுவார்கள்! அதுவரையில் நீ என்ன நடந்தாலும் அமைதி காக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு மறைந்து போனாள் அதீனி.
அதீனியின் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள அக்கிலீஸினால் அவளது வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. தன் மகா வாளை உறையில் போட்டுவிட்டு ,
” குள்ள நரித்தந்திரம் படைத்த அகெம்னா ! கூட இருக்கும் ஒருவனின் சொத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் நீயெல்லாம் ஒரு தலைவனா? கடவுளர் அருளால் இன்று நீ என் கையிலிருந்து தப்பிவிட்டாய்! அது உன் நல்ல நேரம் என்று எண்ணிக்கொள்! என கையில் இருக்கும் புனிதமான வாளின் மீது ஆணையிட்டுக் கூறிகிறேன். டிராய் நகரத்தின் கொடுமையின் அவதாரமான ஹெக்டர் உங்களைக் கொன்று குவிக்கும்போது நீ மனமுடைந்து நிற்பாய் ! உங்களைக் காக்க வந்த கிரேக்க நாட்டின் உண்மையான வீரனை அவமானப் படுத்தியதற்கு அன்று நீ மனம் வருந்தித் துடிப்பாய் ! இன்று நீ ஜெயித்தாக இருக்கட்டும்! உண்மையான வெற்றி எனதே!” என்று கூறிவிட்டுப் புறப்பட எத்தனித்தான்.
அகெம்னனும் அவனுக்குப் பதில் சொல்ல ஆவேசத்தோடு எழுந்தபோது, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முதியவர் – மூன்று தலைமுறை கண்டவர் நெஸ்டர் எழுந்து இருவருக்கும் ஆலோசனை கூறினார். அகெம்னனிடம் ‘ நீ அக்கிலிசை மதிக்கவேண்டும்’ என்றும், அக்கிலீஸிடம் ‘ நீ உலகத்திலேயே சிறந்த வீரனாக இருந்தாலும் இந்தப் போரில் அகெம்னன் உன் தலைவன். அவனை எதித்து வாள் பிடிப்பது தவறு. கிரேக்கர் இன்று இருக்கும் நிலையில் இருவரும் ஒத்துப்போக வேண்டும் ‘ என்றும் வேண்டினார்.
நெஸ்டர் அவர்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு ‘ கிரேக்கச் சேனை தனக்குள் போரிடும் நிலையை நான் தரமாட்டேன் ‘ என்று உறுதி கூறித் தன் மனப் போராட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் வெளியேறினான் அக்கிலீஸ்.
ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அகெம்னன் தனது ஆட்களை அனுப்பி அக்கிலிஸின் கப்பலை முற்றுகையிட்டு பிரிஸிஸைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தான்.
அகெம்னனின் அத்தனை வீரர்களையும் அழிப்பது அக்கிலிஸூக்கு முடியாத காரியமில்லை. ஒரு நொடியில் அவர்களைக் கொன்று குவிக்கும் திறமையும் தைரியமும் அவனுக்கு உண்டு. இருப்பினும் அதீனி மற்றும் நெஸ்டருக்குக் கொடுத்த வாக்கை மனதில் கொண்டு தன் நண்பனை அழைத்து தன் ஆருயிர்க் காதலி பிரிஸிஸை எதிரிகளிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து தன் தாயை மனம் உருக வேண்டி அழைத்தான்.
திட்டீஸ் என்ற அதிதேவதை மகனின் குரல் கேட்டு ஓடோடி வந்தாள். தாயின் மடியில் முகம் புதைத்து தன் மனக் குமுறலைக் கொட்டினான் அக்கிலீஸ்! “எனக்கு ஏன் இந்த அவமானம் ஏற்படவேண்டும்? நான் நீதிக்குத் தலை வணங்குவதால் இவர்கள் அதைச் சிறுமை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் அழிக்கும் ஆற்றல் இருந்தாலும் தேவதைகளும் கடவுளர்களும் ஏன் கையைக் கட்டிப் போடுகிறார்களே ” என்று பொறுமினான்.
மகனின் துயரம் ததும்பும் முகத்தைக் கண்ட தாய் துடித்தாள். அவன் துயரைத் தீர்க்க முடிவு கட்டினாள். தன் மீது மோகம் கொண்ட கடவுளர் தலைவருமான ஜீயஸிடம் சென்று முறையிட்டாள்.
நடந்துவரும் டிரோஜன் யுத்தத்தில் டிராய் நாட்டு வீரர்கள் கை ஓங்கவேண்டும் என்றும் கிரேக்க வீரர்கள் தோற்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.
ஜீயஸ் திகைத்தார்.
(தொடரும்)
மிகவும் சுவாரசியமான கதைப் போக்கு. வாழ்த்துகள்!
LikeLike