‘
‘நோ… ஸம்திங் ஈஸ் டெர்ரிப்ளி ராங்.. மூணு நாளா எனக்கு எல்லாமே தப்புத் தப்பா நடந்திட்டிருக்கு… நான் தூங்கி எழுந்ததும் முழிச்ச மூஞ்சி சரியில்லையா.. இல்லே வெளியே போகும்போது வந்த சகுனம் சரியில்லையா..? எங்கோ தப்பு நடந்திட்டிருக்கு.. ஒண்ணுமே புரியலே..’ மனைவி பூமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் மணியன்.
டின்னருக்காக பரிமாறப்பட்ட உணவு தொடப் படாமல் அப்படியே இருந்தது. இங்கே பாருங்க.. தயவு செய்து இந்தக் குழப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அமைதியா சாப்பிடுங்க.. ஏதோ நம்ம போதாத வேளை.. கடந்த மூணு நாளா சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். அமைதியா இருங்க.. நாளைக்கு நல்லபடியா இருக்கும். சாப்பிடுங்க..’ என்றாள் பூமா.
‘இல்லே பூமா…எப்போதும் மாதிரி காலையில் எழுந்ததும் நம்ம ரூமிலே உள்ள அம்பாள் படத்தைப் பார்த்து கண்ணில் ஒத்திக் கொண்டு ஒரு நிமிடம் அவளிடம் வேண்டிக் கொண்டுதானே நாளையே ஆரம்பிச்சேன்.. அதே போலே வெளியே கிளம்பும் போதும் நல்ல சகுனம் வரதா என்று பார்த்துத்தானே கிளம்பினேன்.. பின்னே எங்கே தப்பு நடந்தது..? எப்படி நடந்தது..? ‘ஐயோ நாளை நல்லா விடியும்.. நல்லபடியா இருக்கும். இப்போ சாப்பிடுங்க..’ என்று அவனிடம் போராடி ஒரு மாதிரி சாப்பிடச் செய்தாள் பூமா.
‘சாப்பிட்டாச்சு’ என்று பெயர் பண்ணி விட்டு, அதே நினைவோடு வந்து படுத்தான் மணியன்.
அடுத்த நாள் காலை. கண் விழித்து அப்படியே உட்கார்ந்தான். கால் மாட்டில் வைக்கப் பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் பார்த்து கலைந்திருந்த தன் சிகையைச் சரி செய்து கொண்டான்.
திடீரென்று மூளையில் ஒரு பொறி தட்டியது.’பூமா.. சீக்கிரம் இங்கே வா…’ என்று கத்தினான்.
என்னவோ ஏதோ என்று அலறிக் கொண்டு சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் பூமா.
‘என்னங்க… என்னாச்சு..?’
‘அந்த கல்ப்ரிட் கெடச்சுட்டான்..இந்த மூணு நாளா எனக்கு ப்ராப்ளம் கொடுத்த அந்தக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சிட்டேன். நீயே பார்..இந்த ப்ளடி மூஞ்சியிலே முழிச்சதனாலேதான் எனக்கு இந்தக் குழப்பமெல்லாம்.. நீயே பார்… ‘ என்று எதிரே இருந்த நிலைக் கண்ணாடியைக் காட்டினான். அதில் அவனுடைய முகம் அதைப் பார்த்து விட்டு பெரிதாகச் சிரித்தாள் பூமா.
‘அது உங்க முகம்ங்க…’
‘ஆமா.. என்னுடைய முகம்தான்.. இந்த நிலைக் கண்ணாடியை இங்கே எப்போ வெச்சோம். லாஸ்ட் ஸன்டே. . அதாவது மூணு நாள் முன்பு இதிலே என் முகத்தைப் பார்த்து விட்டு அப்புறம்தான் எனது வலது புறம் மாட்டப் பட்டுள்ள அம்பாளின் படத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனாலேதான் இந்தக் குழப்பம்..’
‘அட, நீங்க போங்க… ஒருத்தர் அவர் முகத்திலே முழிச்சு நாளைத் தொடங்கினா அப்படி ஒண்ணும் கெட்டது வந்துடாது.. சில பேர் எழுந்ததும் கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கை ரேகைகளைப் பார்ப்பாங்க தெரியுமா..?’
‘அப்படி ஒண்ணும் சொல்ல முடியாது.. எனக்கு என் முகமே சத்ருவா இருக்கு.. இதுதான் காரணம்.. இதற்கு உடனடியா ஏதாவது செய்யணும்.. ‘ என்றபடியே ஒரு சின்ன நிம்மதியோடு எழுந்து தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான் மணியன்.
அடுத்த நாள் காலை. மணியன் கண் விழித்து எதிரில் பார்த்தான். அவன் முகம் தெரியவில்லை.
கால்மாட்டில் இருந்த நிலைக் கண்ணாடி தலைமாட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தது.
தன் வலது புறமாக இருந்த அம்பாளின் படத்தைப் பார்த்துக் கும்பிட்டு வேண்டிக் கொண்டு தன் நாளைத் துவங்கினான்.
குட்டீஸ் லூட்டீஸ்:
அல்லா செய்த ஜாலம்
என் நண்பன் மோகனின் குடும்பம் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்த குடும்பம். அன்று அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
நானும் அவனும் ஹாலில் உட்கார்ந்து பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அவன் மனைவி ‘லலிதாஸகஸ்ரநாமத்தை’ச் சொல்லிக் கொண்டே பூஜை அறைக்கும், சமையலறைக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மிதிலா எங்களுக்கு ஒரு காதும், மோகன் மனைவிக்கு ஒரு காதும் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
‘அப்பா.. அந்த ஆன்டி டெ·பனிட்டா ஹிந்துதான். அங்கிள் என்ன முஸ்லீமா… ‘ என்றாள் மிதிலா திடீரென்று. திடுக்கிட்டு ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்த நாங்கள், ‘எதை வெச்சம்மா அப்படிச் சொல்றே..?’ என்றோம் கோரஸாக ‘இல்லேப்பா.. ஆன்டி லலிதா ஸகஸரநாமம் சொல்றாங்க. ஸோ அவங்க கண்டிப்பா ஹிந்து தான். ஆனா, அங்கிள், நீங்க பேசிட்டிருந்த இந்த பதினஞ்சு நிமிஷங்கள்லே ஒரு ஐம்பது தடவையாவது ‘அல்லா.அல்லா..’ என்று அல்லாவைக் கூப்பிட்டிருப்பார். அதனாலேதான்கேட்டேன்..’ என்றாள்.
சில விநாடிகள் அயர்ந்து உட்கார்ந்திருந்த நாங்கள், சிறிது யோசித்து நிலைமையைப் புரிந்துகொண்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தோம். மிதிலா மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.
‘மிதிலா.. நாம இப்போ ஜெனரலா வாக்குவாதம் பண்ணும்போது ‘அது அப்படி இல்லே’… ‘இது அப்படி இல்லே’ என்று சொல்ல மாட்டோமா அதை அங்கிள் மலையாளம் கலந்த தமிழிலே ‘அப்படி அல்லா’,
‘இப்படிஅல்லா’..என்று சொல்லிக் கொண்டிருந்தார். ‘ என்று அவளுக்குப் புரிய வைத்தேன்.
ஒரு நிமிடம் சங்கடத்தோடு சிரித்து விட்டு, ‘ஆன்டி கும்பிடறஅந்தப் பிள்ளையாரும், அம்பிகையும் அவங்களுக்கு அருள் புரியறாங்களோ இல்லையோ அங்கிளுக்கு அந்த ‘அல்லா’ இறங்கி வந்து அருள் புரிவார்.. அவர் அத்தனை தடவை அல்லாவைக் கூப்பிட்டு விட்டார்’ என்றாள் மிதிலா முத்தாய்ப்பாக.
நாங்கள் இரண்டாவது ரவுண்ட் சிரிக்க ஆரம்பித்தோம். இம்முறை மிதிலாவும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.