சீன மொழி சிறுகதை:
மூலம் : பிஷுமின் [Bi Shumin]
ஆங்கிலம் : கரோலின் சுவா
தமிழில் : தி.இரா.மீனா
ஒரு சென்டிமீட்டர்
தனியாக பஸ்ஸில் பயணம் செய்யும் போது பெரும்பாலும் டிக்கெட் வாங்குவதைப் பற்றி டாவ் யிங் கவலைப் படமாட்டாள்.ஏன் கவலைப் பட வேண்டும்? அவள் பயணம் செய்யாமல் இருந்தாலும் கூட பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்கும். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் வேலை இருக்கும். அதே அளவு பெட்ரோல்தான் செலவாகும்.
டாவ் யிங் சாமர்த்தியமாக இருக்க வேண்டும் .கண்டக்டர் பொறுப்பானவராகத் தெரிந்தால் அவள் பஸ்சுக்குள் ஏறின உடனே டிக்கெட் எடுத்து விடுவாள். ஆனால் அவன் சிறிதும் கவனம் இல்லாதவன் போல இருந்தால் கனவில் கூட அவள் டிக்கெட் வாங்க மாட்டாள். அது அவனுக்குச் சின்ன தண்டனையாக இருக்கட்டும்.அவளுக்கும் சிறிது பணம் சேரும் என்று நினைப்பாள். ஒரு தொழிற்சாலை கேண்டீனில் அவள் சமையல் வேலை செய்கிறாள். வெண்ணெயும், கோதுமையும் சேர்த்துச் செய்யப்படும் கேக் தயாரிப்பது அவள் வேலை என்பதால் நாள் முழுவதும் நெருப்பின் அருகேதான் இருப்பாள்.
இன்று தன் மகன் எக்சோ-யீயோடு இருக்கிறாள். பஸ்சுக்குள் ஏறும் அவனைத் தொடர்ந்தாள். பஸ்சின் கதவு மூடும் போது அவள் ஜாக்கெட் அதில் சிக்கி பின்பகுதி கூடாரம் போல புஸ்ஸென்று விரிந்தது. ஒருவாறு அதைச் சரி செய்தாள்.
( நன்றி: NCERT BOOK)
“அம்மா! டிக்கெட்” யீ கேட்டான்.பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்கள் மீது அதிக கவனம். தன் கையில் டிக்கெட் இல்லாமல் இருப்பது அவனுக்குப் பயணம் செய்வது போல் இல்லை.பஸ் கதவின் பெயிண்ட் உரிந்த பகுதியில் ஒரு விரலின் அடையாளத்தோடு 1.10 எம் என்ற எண் இருந்தது.
யீ வேகமாக நுழைந்தான். அவனுடைய தலைமுடி காய்ந்து பசையற்று ஒரு கட்டு போல தூக்கி இருந்தது. யிங் பணத்தை மிக கவனமாகச் செலவழித்தாலும் தன் குழந்தையின் உணவிற்குச் செலவாகும் பணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அதனால் அவன் போஷாக்கு உடையவனாக, புத்திசாலியாக இருந்தான். ஆனால் தலைமுடி மட்டும் கட்டுப் பாட்டிற்குள் இல்லாமல் இருந்தது. தூக்கி இருந்த முடியைச் சரி செய்து படிய வைத்தாள்.அவன் மண்டை மென்மையாகவும், ரப்பர் போலவும் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இரண்டு சரிபாதி பிரிவுகள் சந்திக்கிற இடைவெளி ஒவ்வொருவரின் தலை உச்சியிலும் உண்டு. அது சரியாகச் சேராவிட்டால் ஒரு மனிதனின் நிலை பொருத்தமில்லாமல் போகும்.அரைக் கோளங்கள் மிகச் சரியாக இருந்தாலும் அவை மூடிக் கொள்ள சிறிது நேரம் எடுக்கவே செய்யும். இது வாழ்க்கைக்கும் உரியது. அது திறந்தே இருந்தால் சிறு துவாரம் வழியாக உடலில் தண்ணீர் பாய்வதைப் போல வெளி உலகம் தெரியும். ஒவ்வொரு முறை மகனைப் பார்க்கும் போதும் கர்வமான பொறுப்பு உணர்ச்சியால் பெருமிதம் அடைவாள். அவள்தான் இந்த மென்மையான உயிரை உலகிற்குக் கொண்டு வந்தாள். இந்த உலகில் அவள் இருப்பு யாருக்கும் முக்கியமானதாகத் தெரியாமல் போனதை உணர்ந்தாலும் குழந்தைக்கு அவள்தான் உலகம். அதனால் எந்தக் குறையும் இல்லாத தாயாக இருக்க வேண்டும்.
யீயின் உருண்டைத் தலைக்கும், டிக்கெட் தேவைப் படுவதற்கான உயரத்தைக் காட்டும் பெயிண்ட் செய்யப் பட்ட எண்ணுக்கும் இடையில் அவள் விரல்கள் இருந்தன.அவள் எப்போதும் எண்ணையோடு வேலை செய்ததால் நகங்கள் பளீரென்றும் ,வெண்மையாகவும் இருந்தன.
“யீ ! நீ இன்னமும் அவ்வளவு உயரமாகவில்லை. ஒரு சென்டிமீட்டர் குறைவாகவே இருக்கிறாய்.” மென்மையாகச் சொன்னாள். அவள் குடும்பப் பின்னணி அப்படி ஒன்றும் உயர்ந்ததில்லை. கதைப் புத்தகங்களை அவள் படித்ததும் இல்லை.ஆனாலும் அவள் அன்பும், இரக்கமும் உடையவளாக தன் மகனுக்குச் சரியான உதாரணமாக இருக்க விரும்பினாள். இது சுயமுடையவளாகவும் , கண்ணியமானவளாகவும் அவளை உயர்த்தியது.
“அம்மா! நான் உயரம் தான். நான் உயரம் தான்”குதித்துக் கொண்டே கத்தினான். “அடுத்த முறை டிக்கெட் வாங்கலாம் என்று போன தடவை நீங்கள் சொன்னீர்கள். இது அடுத்த முறை. நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை” சொல்லி விட்டு கோபமாக அம்மாவைப் பார்த்தான். அவள் மகனைப் பார்த்தாள்.ஒரு டிக்கெட்டுக்கு இருபது சென்ட் ஆகும்.அது போகட்டும் என்று விட்டு விடக் கூடியதில்லை. அதை வைத்து ஒரு வெள்ளரிக்காய் ,இரண்டு தக்காளி அல்லது இரண்டு பத்தை முள்ளங்கி அல்லது நான்கு நாட்களுக்கான கீரை வாங்க முடியும்.ஆனால் யீயின் முகம் பாதி மலர்ந்த பூ சூரியனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல இருந்தது.
“ உள்ளே செல்லுங்கள். நுழைவு வழியை மறைக்கக் கூடாது. பீஜிங்கில் இருந்து பாடிங் வரை நின்று கொண்டே போகும் ரயில் இல்லை இது. நாம் அடுத்த ஸ்டப்பிங்கிற்கு வந்து விட்டோம்.” கண்டக்டர் கத்தினான். பொதுவாக இந்த மாதிரி பேச்சு அவள் டிக்கெட் வாங்குவதை தடை செய்யும். ஆனால் இன்று “இரண்டு டிக்கெட் “ என்று கேட்டாள்.
கூர்மையாக யீ யைப் பார்த்த கண்டக்டர் “இந்தக் குழந்தை டிக்கெட் வாங்குவதற்கு ஒரு சென்டி மீட்டர் உயரம் குறைவாக இருக்கிறது” என்றார் யீ தன்னை பல சென்டி மீட்டர் குறுக்கிக் கொண்டான். டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசையை மிஞ்சும் குழந்தைத்தனம்…
இருபது சென்டுக்குள் சுய கௌரவத்தை வாங்குவது என்பது சிறு பிள்ளை செயல்தான். எந்தத் தாயும் தன் மகனை மகிழ்ச்சிப் படுத்தும் வாய்ப்பை இழக்க விரும்ப மாட்டாள்.“ நான் இரண்டு டிக்கெட்டுகள் வாங்க விரும்புகிறேன்” மென்மையாகச் சொன்னாள். யீ இரண்டு டிக்கெட்டுகளையும் தன் உதடுகள் அருகே பிடித்து காகிதக் காற்றாடி போல ஒலி எழுப்பினான்.
அவர்கள் பஸ்ஸின் மையப் பகுதியை அடைந்தனர். இங்கே இன்னொரு கண்டக்டர் அவர்கள் டிக்கெட்டைச் சோதிக்க இருந்தான்.அவன் அவ்வளவு புத்திசாலி இல்லை என்று டாவ் யிங் நினைத்தாள்.மகனோடு பயணிக்கும் போது எந்தத் தாய்தான் சரியான கட்டணத்தைத் தராமல் இருப்பாள்? எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் தன் மகன் முன்பு அவமானப் பட விரும்ப மாட்டாள்.
அவள் டிக்கெட்டைக் கொடுத்தாள். “இந்த டிக்கெட்டுக்களுக்கான பணத்தை கம்பெனியில் இருந்து நீங்கள் திரும்பப் பெறுவீர்களா?”கண்டக்டர் கேட்டான் “ இல்லை” என்றாள். உண்மையைச் சொல்லப் போனால் இந்த டிக்கெட்டுகளை வேலை செய்யும் இடத்தில் சுற்றுலா போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பயன்படுத்துவாள்.தன் சைக்கிளைப் பயன் படுத்திக் கொண்டு இந்த டிக்கெட்டைக் காட்டிப் பணத்தை திரும்பப் பெற்று விடலாம். அவளும்,அவள் கணவனும் சாதாரணத் தொழிலாளர்களதான். எந்தச் சேமிப்பும் கண்டிப்பாகப் பயன் தரும். ஆனால் யீ புத்திசாலி.உடனே “அம்மா ! நாம் பிரத்யேகமாகப் போகும் இடங்களுக்கு எப்படி டிக்கெட் காசைப் திரும்பப் பெற முடியும்” என்று வெளிப்படையாக சப்தமாகக் கேட்டு விடுவான். குழந்தையின் முன்னால் அவள் எப்போதும் பொய் சொல்ல மாட்டாள்.
தாயாக நடந்து கொள்வது எப்படி என்று புத்தகங்களில் சொல்லப் பட்டவைகளைப் பின்பற்றுவது கடினம்தான். ஆனாலும் ஒரு நல்ல அம்மாவாகத் தன் மகன் முன்னே இருக்க அவள் முடிவு செய்தாள். அவளுடைய செயல்கள் எப்போதும் மென்மையானதும் ,அன்பானதும் ஆகும். உதாரணமாக அவள் எப்போதும் முலாம்பழம் சாப்பிட்டாலும் பழத்தைச் சாப்பிடுவாளே தவிர தோலின் அருகே ஒட்டியிருப்பதை நாசூக்காக ஒதுக்கி விடுவாள். பழத்துக்கும், தோலுக்கும் அப்படி ஒரு அதிக வித்தியாசம் இல்லாத போதும்.
ஒருநாள் தான் பழம் சாப்பிடுவதைப் போல அவன் சாப்பிடுவதைப் பார்த்தாள்.அவனைப் பார்த்த போது தலையில் ஒரு விதை ஒட்டிக் கொண்டிருந்தது. “ யார் உனக்கு இப்படிச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தது? அதிலேயே முகத்தையும் கழுவிக் கொண்டு விடுவாயோ” என்று கத்தினாள். யீ பயந்து போனான்.பழத்தைப் பிடித்துக் கொண்டிருந்த கை நடுங்கியது. ஆனால் கண்கள் மட்டும் எதிர்ப்பைக் காட்டின. உலகத்தில் தான் பார்ப்பதைச் சரியாகச் செய்பவர்கள் குழந்தைகள். அவள் அந்த அனுபவத்திலிருந்து அதை உணர்ந்து கொண்டாள். தன் மகன் நல்ல பண்புகள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் அவள் கவனமாக இருக்க வேண்டும். தானே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். இது மிகவும் கடினம்தான். விமானங்களைச் சிறிய துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதைப் போலத்தான். ஆனால் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை இந்தத் தெளிவான அபிப்ராயம் இருந்ததால் அவள் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாகவும் சவாலாகவும் இருந்தது.
முதல் முறையாக இன்று யீயை ஒரு பெரிய புத்தர் கோயிலுக்கு அழைத்துப் போகிறாள். அவன் புத்தரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அங்கு தரையைத் தொட்டு அவனை வணங்கச் சொல்ல மாட்டாள். அது மூட நம்பிக்கை என்று அவளுக்குத் தெரியும்.
ஒரு டிக்கெட் ஐந்து டாலர். இந்த நாட்களில் கோயில்கள் கூட வியாபார ஸ்தலங்களாகி விட்டன.லா சாங் அந்த டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்திருந்தான். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இன்று தான் கடைசி தினம். அவனுக்கு எல்லோருடனும் பரிச்சயம் உண்டு. “ இதைப் பார்த்திருக்கிறாயா? பெரிய பத்திரிக்கை. சாதாரணமான ஜனங்களுக்குக் கிடைக்காது” என்று ஒரு பத்திரிகையைக் கண் முன்னால் போட்டுவிட்டுக் கேட்பான். எப்படி ஒரு சிறிய பத்திரிக்கையைக் காட்டி இப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்தாள்.அவனிடமும் கேட்டாள்.அவன் குழம்பினான். எல்லோரும் அப்படிச் சொல்வதாகச் சொன்னான். பத்திரிக்கையைப் பிரித்து ஒவ்வொரு தாளாக வைத்தால் சாதாரணப் பத்திரிகையை விடப் பெரிதாக இருக்கும் என்றான். அது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது. டாவ் யிங்குக்கு அவனைப் பிடித்துப் போனது.
அவனும் அவளை மரியாதைப் படுத்தும் வகையில் தன்னிடமுள்ள கோயில் டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்தான். “ஒரு டிக்கெட்தானா?” என்று கேட்டாள். “ கணவனை விட்டு விடு. மகனோடு போ.1.10 சென்டி மீட்டருக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது .உனக்குப் போக விருப்பம் இல்லையென்றால் கோயில் வாசலில் விற்று விடு.அதில் சில பழங்கள் வாங்கலாம்” என்றான். அவன் எப்போதும் இயல்பாகப் பேசுபவன்.
யீயோடு வெளியே போக முடிவு செய்து டாவ் விடுமுறை எடுத்தாள். நகரின் மையப் பகுதியில் அப்படிப் பசுமையான பகுதியைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்தான்.
அவர்கள் உள்ளே போவதற்கு முன்னாலேயே உற்சாகப் படுத்துவது போலே பசுமை காற்றில் பரவ எங்கோ மலைச் சாரல் அருவிக்கு வந்திருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. யீ அம்மாவின் கையில் இருந்த டிக்கெட்டை பிடுங்கிக் கொண்டான்.உதடுகள் இடையே வைத்துக் கொண்டு கோயில் கேட் இடையே பறப்பது போல ஓடினான். ஒரு சிறிய விலங்கு தாகத்தை தணித்துக் கொள்ள வேகமாக ஓடுவது போல இருந்தது.
திடீரென்று டாவ் யிங்குக்கு வருத்தமாக இருந்தது.கோயிலைப் பார்த்ததும் குழந்தைக்கு ஏற்பட்ட ஆசை அம்மாவை மறக்க வைத்து விட்டதோ என்று. உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். மகிழ்ச்சியாக இருக்கத்தானே இன்று மகனை அழைத்து வந்திருக்கிறாள்.
நுழைவாயிலில் இருந்த காவலன் சிகப்பு பனியனும்,கறுப்பு டிராயரும் அணிந்திருந்தான். அவன் மஞ்சள் ஆடையில் இருக்க வேண்டும் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது. இந்தச் சீருடை ஒரு வெயிட்டர் போலக் காட்டியது.
யீக்கு என்ன செய்ய வேண்டும் என்று மிகச் சரியாகத் தெரிந்திருந்தது. கூட்டத்தில் அவன் போவது பெரிய அருவியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுவது போலத் தெரிந்தது. மரக்கிளையில் இருந்து ஒரு இலையை பறித்தபடி அந்த இளைஞன் அவன் வாயிலிருந்து டிக்கெட்டை எடுத்துக் கொண்டான். டாவ் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தாள். “ டிக்கெட்” அந்த இளைஞன் அவள் வழியை மறித்தபடி கேட்டான். டாவ் தன் மகனை நோக்கிக் கையைக் காட்டினாள்.அவன் அழகாக இருப்பதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். “ நான் உங்களிடம் டிக்கெட் கேட்கிறேன்” இளைஞன் சிறிதும் அசரவில்லை.
“ குழந்தை உன்னிடம் டிக்கெட் கொடுக்கவில்லையா?” அவள் குரல் அமைதியாக இருந்தது. அந்த இளைஞன் மிகவும் சிறியவன் என்று நினைத்தாள். இன்று விடுமுறையாக இருப்பதால் அவள் நல்ல மனநிலையிலும் இருந்தாள்.
“அது அவனுடையது.எனக்கு உங்கள் டிக்கெட் வேண்டும்”அவன் அதையே மீண்டும் சொன்னான். அவர்கள் இரண்டு பேர்.இரண்டு டிக்கெட் வேண்டும்.
“ குழந்தைகள் விதிவிலக்கம் என்று நினைத்தேன்.” குழம்பியவளாகச் சொன்னாள்.
“அம்மா! வேகமாக வாருங்கள்” யீ உள்ளேயிருந்து கத்தினான். “ உம். வருகிறேன் “என்று குரல் கொடுத்தாள்.கூட்டம் கூட ஆரம்பித்தது. விளக்கைச் சுற்றும் விட்டில்கள் போல.. அவளுக்கு பயம் வந்தது.இந்த அமளி முடியவேண்டும். குழந்தை அவளுக்காக காத்திருக்கிறான்.
“அவனுக்கு டிக்கெட் வேண்டாமென்று உங்களிடம் யார் சொன்னது?” தன்னை நிறையப் பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து அவன் தலையை உயர்த்திப் பேசினான்.
“ அது டிக்கெட்டின் பின்புறத்தில் உள்ளது”
“என்ன உள்ளது?” அந்த இளைஞன் நிச்சயமாக பயிற்சி பெற்றவனில்லை.
“110 செ.மீக்கு குறைவான குழந்தைகள் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லை என்று அதில் உள்ளது.” டாவ் நம்பிக்கையாக இருந்தாள்.சிறிது முன்னே போய் இளைஞன் அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து திருப்பி அங்குள்ளவர்களுக்கு கேட்குமாறு படித்தாள்.
“ அப்படியே நில்லுங்கள்” இளைஞன் கோபம் அடைந்தான்.அவள் அந்த பெட்டியைத் தொட்டிருக்கக் கூடாது என்று உணர்ந்தாள்.கையை வேகமாக எடுத்தாள்.
“ ஒ..உனக்கு சட்டதிட்டங்கள் நன்றாகத் தெரியும் .அப்படித்தானே?” இளைஞன் இப்போது மரியாதை இல்லாமல் ஏகவசனத்தில் பேசினான். அவன் குரலில் இருந்த கேலி அவளுக்குப் புரிந்தது.
“உன் மகன் 110 செ.மீக்கும் அதிக உயரமானவன்” உறுதியாகச் சொன்னான்
( மீதி அடுத்த வாரம்)