மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசி. சுதந்தரம் அடைவதற்கு முன்னமேயே, ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’ பாடிப் பரவசம் அடைந்தவன்! அவனது தீர்க்க தரிசனத்தில் அவன் கொண்டாடிய நம் நாட்டின் கொடியினைப் பற்றிப் பாடியதை வியப்புடன் பார்க்கிறேன்.
“தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின்மேல் ‘வந்தே மாதரம்’ என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!”
தேசீயக் கொடி பற்றி மகாத்மா காந்தியடிகள் சொல்வது இங்கு முக்கியமாகப் படுகிறது:
“எல்லா தேசங்களுக்கும் ஒரு தேசீயக் கொடி இன்றியமையாதது. அதற்காகக் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் உயிரினை இழந்திருக்கிறார்கள். சந்தேகமே இல்லாமல், தேசியக் கொடி ஒரு வணங்கத்தக்க அன்பும், பெருமையும் வாய்ந்த இறை வடிவம் – அதனை அழிக்க நினைப்பதே பாவம். ஏனெனில் கொடி என்பதே பின்பற்ற விரும்பும் ஒரு இலட்சியம் அல்லது கோட்பாடு…. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அனைத்து இந்தியர்களுக்கும் அவசியமானது ஒரு தேசீயக் கொடி – அதனைக் காப்பதற்காக வாழ்வதோ, வீழ்ந்து மடிவதோ மிகவும் முக்கியமானது”
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கொடி அவசியமானது. அது அந்த நாட்டின் சுதந்திரத்திற்கான ஒரு குறியீடு!
இதனை மனதில் வைத்தே, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் தேசீய முக்கிய தினங்களில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் நமது மூவர்ணக் கொடியை பறக்கவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். மூவர்ணக் கொடியின் வரலாறு, நமது தேசத்து சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. சுதந்திரத்திற்காக, கொடிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையே, நம் தேசீயக் கொடியை வணங்குவது. நாட்டிற்காக, நம் கொடிக்காகத் தன் உயிரையே ஈந்த ‘கொடி காத்த’ குமரனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?
இன்று பட்டொளி வீசிப் பறக்கும் நமது ‘மூவர்ணக் கொடி’ யின் வரலாறு தெரியுமா? சுவாரஸ்யமானது.
இந்திய தேசீயக் கொடி முதன் முதலாக, சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா அவர்களால் 1904 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது! மேலே சிவப்பு, கீழே மஞ்சள் என இரண்டு வண்ணங்கள் கொண்ட கொடியின் நடுவில் விஷ்ணுவின் ஆயுதமான ‘வஜ்ரம்’ (most powerful hand-held weapen of Lord Vishnu) – இரண்டு பக்கமும் வங்காள மொழியில் ‘வந்தே மாதரம்’!
1906ல் கல்கத்தாவின் பார்ஸி பாகனில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதன் முறையாக இந்திய தேசீயக் கொடி ஏற்றப்பட்டது (இன்றைய கிரீஷ் பார்க்). அந்தக் கொடியில் மேலே எட்டு தாமரை மலர்களுடன் பச்சை நிறமும், தேவங்கிரி எழுத்துக்களில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்ட மத்திய மஞ்சள் நிறமும், பிறைச் சந்திரனும், சூரியனும் வரையப்பட்ட சிவப்பு நிறம் கீழும் இருந்தன!
இந்தக் கொடியிலேயே சில மாற்றங்களுடன் – மேலே ஆரஞ்சு நிறம், மத்தியில் மஞ்சள் நிறம், கீழே பச்சை நிறம்; தாமரைக்கு பதிலாக எட்டு சூரியன்கள்; மத்தியில் வந்தேமாதரம் – பிகாஜி காமா, வீர் சவர்கார், ஷ்யாம்ஜி கிருஷ்ணகுமார் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. பெர்லினில் நடந்த ‘பெர்லின் கமிட்டி’ கூட்டத்தில் பிகாஜி காமா இந்தக் கொடியைப் பறக்க விட்டார்! இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய தருணமாக இது அமைந்தது!
1917ல் ‘தன்னாட்சி இயக்கம்’ (Home rule Movement) தொடங்கப்பட்டபோது, திலகரும், அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒரு புதிய கொடியை வடிவமைத்தார்கள் – ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிறப் பட்டைகள் கொண்டது !
1921ல் விஜயவாடாவைச் சேர்ந்த இளைஞர் பிங்காலி வெங்கையா, சிவப்பு, பச்சை நிறங்களைக் கொண்ட (இந்தியாவில் இருந்த இரண்டு பெரும் மதங்களைக் குறிக்கும் வகையில்) ஒரு கொடியை வடிவமைத்து, மகாத்மா காந்தியிடம் காட்ட, மற்ற மதங்களையும் குறிக்கும் வகையில் இடையில் வெள்ளை நிறத்தை சேர்க்கச் சொல்கிறார் காந்தியடிகள்! அதன் நடுவில் இராட்டையையும் சேர்க்கச் சொல்கிறார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் இராட்டையும், கதரும் கொடியில் சேர்த்தார் காந்தியடிகள்!
இந்திய தேசீயக் காங்கிரஸ், சுபாஷ் சந்திர போஸின் ‘இந்தியன் நேஷனல் ஆர்மி’ – போன்றவைகளும் இந்த மூவர்ணக் கொடியே உபயோகப்படுத்தின!
1947 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22 ஆம் தேதி, இன்று பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் நம் தேசீயக்கொடி அங்கீகரிக்கப்பட்டது. நடுவில் இருந்த இராட்டை மாற்றப் பட்டு, நீல நிறத்தில் அசோகரின் ‘தர்மச் சக்கரம்’ (24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் – கொடியின் வெள்ளை நிறப் பட்டையின் நடுவில், அதன் அகலத்தையே விட்டமாகக் கொண்ட சக்கரம்) பொறிக்கப்பட்டது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களும் அசோகச் சக்கரம் கொடியில் வருவதற்கு ஒரு காரணம் என்றும் சில குறிப்புகள் உள்ளன.
ஆரஞ்சு நிறம் தைரியம், வீரம் ஆகியவற்றையும், வெள்ளை நிறம் உண்மை, அமைதி ஆகிய தர்மங்களையும், பச்சை நிறம் நிலத்தின் வளமை, வளர்ச்சி மற்றும் புனிதத் தன்மையையும் குறிக்கின்றன.
26 ஜனவரி, 2002 ஆம் ஆண்டு, புதிய கொடிக் கொள்கையைக்(Flag Code) கொண்டு வந்தார்கள். அதன்படி, தேசீய முக்கிய தினங்களில் மட்டுமன்றி, எல்லா நாட்களிலும், விழாக்களிலும் தேசீயக் கொடியைத் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் பறக்க விடலாம் என்று அறிவிக்கப்பட்டது. கொடிக்கு உரிய மரியாதையையும், வணக்கத்தையும் போற்றும் வண்ணம், சில விதிமுறைகளையும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
பள்ளிக்கூட நாட்களில், சீருடை அணிந்து, பெருமிதத்துடன், சிறிய தேசீயக்கொடியை நெஞ்சில் குத்திச் சென்றது நினைவுக்கு வருகின்றது. கொடிக்கம்பத்தில் மெதுவாக மேலேறி, விரிந்து, பூமழை பொழிந்து, வீசிப் பறக்கும் நம் தேசீயக் கொடி மனதில் ஏற்படுத்திய பெருமிதத்திற்கும், நாட்டுப் பற்றுக்கும் ஈடு இணையே கிடையாது!
அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா – 75 வது சுதந்திர நாள் – மிகச் சிறப்பாக எல்லோராலும் கொண்டாடப் படுகின்றது! இந்த நன்னாளில், இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நாட்டையும், சுதந்திரத்தையும் போற்றிப் பாதுகாப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்!
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!!