. கண்ணன் கதையமுது -10
( கம்சனின் ஆணையை ஏற்ற பூதனை, பத்து நாள்களுக்குள் பிறந்த குழந்தைகளைக் கொல்லப் பல இடங்கள் செல்கிறாள்.
பின்னர், அழகிய பெண் வடிவம் கொண்டு கோகுலம் வருகிறாள்….)
பூதனையின் அழகிய வடிவம் கண்டு அனைவரும் மயங்குதல்
உருவை மாற்றியே உலவி வந்தனள்
பருவ மங்கையாய்ப் பார்த்தோர் எண்ணவும்
திருவைப் போலவே திகழ்ந்த பூதனை
வரவில் யாவரும் மயங்கிப் போயினர்.
அனைவரும் ஒருவித மயக்கத்தில் செயலற்று இருக்க நந்தனின் மாளிகை நுழைதல்
மயக்கம் என்பதோ, மந்திரம் என்பதோ,
இயக்கம் இன்றியே யாவரும் காண்கையில்,
தயக்கம் இன்றியத் தந்திரத் தையலாள்
வியக்கும் நந்தனின் வெல்மனை மேவினாள்.
(தையலாள் – பெண்)
(இயக்கம் இன்றி – செயலற்று)
தம்மை மறந்த நிலையில் தாயர் இருவர்
தாயர் இருவர் அருகிருந்தும்
தம்மை மறந்த நிலையானார்.
ஆயும் திறனும் இலையானார்
அங்கே பொம்மைச் சிலையானார்.
சேயும் சிரித்துப் படுத்திருந்தான்
செயல்கள் யாவும் அறிந்திருந்தான்
பேயும் அஞ்சும் பூதனையாள்
பிள்ளை நோக்கி நகர்ந்துவந்தாள்.
(தாயர் இருவர்– யசோதை, ரோகிணி)
பூதனை குழந்தையைத் தூக்கிச் செல்லுதல்
அழகிய உறையி னுள்ளே
அடங்கிய கூர்வாள் போன்றாள்
பழகிய பெண்ணைப் போலப்
பக்குவ மாக வந்தாள்
குழவியைக் கொஞ்சித் தூக்கிக்
கொண்டதும் தனியே சென்றாள்
தழலினைத் தழுவும் விட்டில்
தானென அறியாள் அந்தோ!
பாம்பினைப் பழுதை என்று
பாய்ந்திடும் தேரை போன்றும்
சாம்பலுள் கனலைக் காணாத்
தகவிலாப் பேதை போன்றும்
தீம்பியும் குழந்தைக் குள்ளே
செறிந்திடும் இறைமை காணாள்.
வீம்பினால் வெறியால் கொன்று
வீசவே எண்ணிச் சென்றாள்
( பழுதை – கயிறு, வைக்கோலை முறுக்கிய திரி)
( தீம்பி – தீயவள்)
(செறிந்திடும் – அடங்கிடும், பொருந்திடும்,மறைந்திடும்)
குழந்தைக்கு நச்சுப்பால் கொடுத்தல்
பசியினால் அழுவ தைப்போல்
பாலனும் மாயம் செய்யக்
கசிந்திடும் நச்சுப் பாலைக்
கனிவுடன் தருதல் போல
ஒசியிடை மீதி ருத்தி
உண்ணவே செய்ய, அந்த
நிசிநிற மதலை, பேய்ச்சி
நெடுமுலை உறிஞ்ச லானான்.
(ஒசியிடை- வளையும் இடை,)
( நிசிநிற மதலை – இருள் நிறத்துக் குழந்தை))
கண்ணன், பாலுடன் பூதனை உயிரையும் உறிஞ்சுதல்
அச்சுதன், ஆயர் செல்வன்,
அரக்கியின் நச்சுப் பாலை
மிச்சமோர் துளியு மின்றி,
விசையுடன் விரைந்து றிஞ்ச,
அச்சமும் வலியும் சேர
அலறினாள், ‘விடுவாய்’ என்றாள்.
பிச்சியைப் போலே முன்னும்
பின்னுமாய் ஓடி னாளே
(பிச்சி – பித்துப் பிடித்தவள், பைத்தியம்)
நீட்டியகை மடக்கிப்பின் மீண்டும் நீட்டி,
நீள்விரல்கள் மதலையின்மேல் அழுந்தப் பூட்டி
ஆட்டியவன் உடல்பிரிக்க வலிமை காட்டி
அவள்முயன்றும் வினைப்பயன்போல் பிரியாப் பிள்ளை,
ஊட்டியபால் உடனுயிரும் சேர்த்து றிஞ்ச
ஓலமிட்டுக் கண்விரியத் தரையில் சாய்ந்தாள்
கூட்டமொடு விண்ணுலவும் கோள்கள் மற்றும்
கோடுயர்ந்த பெருமலைகள் அதிர மாய்ந்தாள்.
(கோடுயர்ந்த – உயர்ந்த உச்சியைக் கொண்ட)
கீழே கிடந்த பூதனையின் தோற்றம்
அளியார்செந் தாமரைபோல் முகத்தாள் ஆங்கே
அரக்கியுருக் கொண்டாளே வீழும் போது.
வளையெயிறு கொழுவினைப்போல் கூர்மை காட்ட,
வளமரங்கள் நொறுங்கினவே ஆயி ரங்கள்.
துளைமூக்கு மலைக்குகையாய் ஆழ்ந்தி ருக்கத்
சுருள்செப்புக் கம்பிகளை ஒக்கும் கூந்தல்
கிளைத்தெழுந்த பெருமரம்தான் கைகள் கால்கள்
கிடந்தவளின் வயிறதுவோ வறண்ட ஏரி
( அளியார் – வண்டு மொய்க்கும்)
( வளையெயிறு– வளைந்த வெளிப்புறப் பல்)
( கொழு– ஏர்க் கலப்பையின் நுனி)
விளக்கம்:
இறந்து கீழே விழும் போது, பூதனை எடுத்திருந்த அழகிய தோற்றம் மாறி அரக்கி உருவம் மீண்டும் உண்டானது..
அவளுடைய வளைந்த பற்கள் கலப்பை நுனி போல் கூர்மையாக இருந்தன.ஆயிரக் கணக்கான மரங்கள் மீது அவள் விழுந்ததால் அவை நொறுங்கிப் போயின.அவளுடைய மூக்குத் துளைகள் மலையின் குகைகள் போல் ஆழமாக இருந்தன.
அவள் முடி செப்புக் கம்பிகளைப் போல் தோற்றம் தந்தது; கைகளும்,கால்களும் பெரிய மரத்தின் கிளைகளைப் போல் விளங்கின.பெரிய வயிறோ வறண்ட ஏரியை ஒத்திருந்தது.
வைகுந்தப் பேறு
(கவிக்கூற்று)
வீழ்ந்தவுடல் துண்டுகளாய் வெட்டிப் போட்டு
விறகடுக்கிக் கொளுத்துகையில் மேலெ ழுந்து
சூழ்ந்தபுகை நறுமணமே வீசக் கண்டார்
சூதுமகள் நஞ்செல்லாம் போன தாலே.
தாழ்ந்தசெயல் புரிந்திருந்தும் கண்ண னுக்குத்
தாய்போலப் பால்தந்த அரிய பேற்றால்
வாழ்ந்திடுவாள் வைகுந்த இறைவன் பாதம்
மாலவனின் மலர்க்கருணை வாழி! வாழி!
. கண்ணனுக்குக் கண்ணூறு கழித்தல்
( முதிய பெண்டிர் செய்கை)
பெண்ணூறு செய்வதற்குப் பேய்ச்சியென வந்தனளே
விண்ணூரும் கோள்காக்க, வேதங்கள் காக்கவென
மண்ணெடுத்துப் பூசியபின் மந்திரங்கள் பலசொல்லிக்
கண்ணூறு போவதற்குக் கருநிறத்துப் பொட்டுவைத்தார்
(தொடரும்)
அருமை சொல்லாட்சி. நடந்த்தை நநேரில் படம்பிடித்து காட்டிவிட்டீரகள்.
LikeLike
தங்கள் கவிதை படித்த பிறகு குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா என்று மனம் ஏங்குகிறது
LikeLike
அருமை கிருஷ்ண ஜெயந்திக்கு அருமை யான பரிசு
LikeLike