ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கல்யாணம் முற்றத்தைத் தாண்டி தன்னை நோக்கி வருவதை நடேசன் பார்த்தான் கீழ்க் கண்ணால். காலை வேளையில் வராந்தா தாண்டி இன்னமும் வெயில் விழாத இந்த நேரத்தில் இவனுக்கு என்ன அப்படி அவசர வேலை என்று நினைத்தாலும், அவன் கை கல்யாணியின் கழுத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வைக்கோலை அதி வேகமாகப் பதம் பார்த்துக் கொண்டிருந்த அது தென்னை மரத்தைச் சுற்றி வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணியின் அடர்த்தியை பார்த்துக் கொண்டே மணி ஆட ஆட மனதால் அந்தப் பசுமையைச் சப்புக் கொட்டிக் கொண்டே காய்ந்த இந்த வைக்கோலைத் தின்பதாக அவனுக்குத் தோன்றியதும் சிரிப்பு வந்தது. மனிதர்களைப் போல மாட்டிற்கும் சிந்தனைகள் உண்டா? ‘திருட்டுக் கல்யாணி, வைக்கல் இருக்கறச்சே கீரைக்குப் பாயறயே, திருடி, திருடி.’ என்றான்.
‘என்ன நடேசா, நான் கள்ளன் கள்ளன்னு சொல்லிண்டு வரேன். நீயானா, திருடி, திருடின்னு செல்லம் கொஞ்சற?’
“கள்ளனா? உன் வீட்டுக்கா? எப்ப? ஏதாவது பெரிசா காணமா? போலீசுக்குப் போணுமா?”
‘அட, எம் வீட்டுக்கு ஏன் திருடன் வரான்?’
“அது சரிதான். நீயே உள்ளுக்குள்ள ஆட்டயப் போட்றவன். உங்கிட்ட எவனாவது திருட வருவானா என்ன?”
அவர்கள் இருவருக்குமிடையில் நட்பு என்றோ, பகை என்றோ இனம் காண முடியாத ஒன்று எப்போதும் நிலவி வந்துள்ளது. நடேசன் பெரிய தொழில் நிறுவனத்தில் உதவித் தலைமை நிர்வாகியாக இருக்கிறான். அவனை அண்டி அவன் வீட்டிலேயே தங்கியிருப்பவர்களே ஏழெட்டுப் பேர்கள் இருக்கும். அவனுக்கும் மூன்று குழந்தைகள். அவன் வீட்டில் இருக்கும் சுற்றத்தாரைப் பற்றி அவன் மனைவி ருக்மணி அலுத்துக் கொண்டதில்லை. தங்கியிருக்கும் குடும்பத்தாருக்கும் தலா ஒரு குழந்தை. அவர்களும் குடும்பத்திற்குத் தகுந்தாற் போலத்தான் நடந்து கொண்டனர். சின்னச் சின்ன வேலைகள் செய்வார்கள், கடை கண்ணிக்குப் போய் வருவார்கள். பள்ளிக்கூடத்தில் அவர்களில் மூவர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நடேசனின் இரு பிள்ளைகள் கான்வென்ட்டில் படிப்பதில் மனக் குறை ஏதுமில்லை. ‘துணிமணி, சாப்பாடு, தங்கற இடம், புக்கு, நோட்டு, அந்தச் செலவு இந்தச் செலவுன்னு நாங்க வைக்கறது போறாதா? கான்வென்ட்டெல்லாம் வேணாம், மாமா’ என்று வெளிப்படையாகச் சொன்ன குழந்தைகள் அவர்கள். புரியாததை ஒன்றுக்கொன்று அந்தக் குழந்தைகளும் இவன் பிள்ளைகளும் தமக்குள்ளேயே பேசிப் பேசி புரிந்து கொண்டு விடுவதைப் பார்க்கும் போது, நடேசனுக்கு நிறைவாக இருக்கும்.
‘கல்யாணம் மாமாவா? காஃபி குடிக்கிறேளா?’ என்று கேட்டவாறு வந்த ருக்மணி ‘உங்களுக்கும் இன்னொரு டோஸ் வேணுமா?’ என்றாள்.
நடேசன் பதில் சொல்லும் முன்னே “காஃபி குடிச்சே கடனாளியாயிட்டான் அவன். அவனுக்கும் கொடுத்துடுங்கோ மாமி” என்ற கல்யாணத்தை சற்று விழித்துப் பார்த்துவிட்டு அவள் சமையலறைக்குப் போனாள்.
மனைவியின் முன்னால் இந்தத் தாக்குதலை நடேசன் எதிர்பார்க்கவில்லை. காலங்கார்த்தால வீட்டுத் தொழுவம் வரைக்கும் வந்து இங்கிதமில்லாமல் பேசும் இவன் எதற்காக வந்திருக்கிறான்?
‘கல்யாணம் மாமா, சூடு அதிகமா இருக்காம்; அப்டியே குடிச்சா பொசுக்கிடும்னு உங்ககிட்ட அக்கா சொல்லச் சொன்னா.’
சரியான பதிலடி அவனுக்கு என்று நடேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“மூன்றரை க்ரவுண்ட்ல கோட்டையாட்டம் வீடு. இன்னிக்குத்தான் ஹாலெல்லாம் பாத்தேன். ஆத்தங்குடி கல்லால இழச்சிருக்கே. ஆஃபீஸ் கூட இங்கயும் ஒண்ணு வச்சிண்ட்ருக்கப் போலருக்கு. அங்க பாத்தா ஃபுல்லா மாடர்ன், ஹால்ல வந்தா ஃபுல்லா ட்ரெடிஷனும், மாடர்னும்; பின்னாடி வந்தா தொழுவம்.”
‘சரி, என்ன விஷயம்? ஏதோ கள்ளன், கள்ளன்னு சொன்ன, பேச்சு தெச மாறிடுத்து.’
“ஆமாம் நடேசா, வர வழில சேவுகனைப் பாத்தேன். கண்டுக்காமப் போனான்.”
‘அவர் ஏதோ சிந்தனல போயிருப்பார், கல்யாணம். அவர் தொழில்ல கள்ளமில்லாம எப்படி?’
“அவனுக்கு நீ எதுக்கு சப்பக்கட்டுக் கட்டற. ஊர அடிச்சு உலைல போட்றான். அடகு புடிச்சே அத்தன சொத்து சேத்துருக்கான்.”
‘அவர் வழி அது. ரிஸ்க் எடுத்துண்டு பணம் கொடுக்கறார். நல்ல இலாபமில்லாம செய்ய மாட்டார்; குலத் தொழில், அதுல அவங்க வியாபார முறையே வேறதான. எனக்கும் இதெல்லாம் பிடிக்கத்தானில்ல; ஆனா, ஆத்திரம், அவசரத்துக்கு அவர் தானே அடைக்கலம்.’ என்று சிரித்தான் நடேசன்.
‘நடேசா, நா வந்ததே வேற விஷயத்துக்காக. நீ அசலும், வட்டியும் சரியாத்தான் கொடுத்துண்டு வர. ஆனா, மூணு மாசம் முன்னாடி அசல மொத்தமாத் திருப்பப் போறேன்னு சொன்ன; அத மனசுல வச்சுண்டு நா வேற திட்டம் போட்டேன். ஆனா, உன்னால முடியல.’
“அப்பவே சொன்னேனே, எதிர்பாரம ருக்மணியோட அண்ணாவுக்கு ஆஸ்பத்திரில செலவாயிடுத்து. அதனால, தவணையும், வட்டியும் கொடுக்கறேன், இன்னும் நாலு மாசத்ல மொத்தமா தரேன்னு சொன்னேனே.”
கல்யாணம் சற்று மௌனமாக இருந்தான். இவன் ஏன் இன்னமும் உக்காந்திருக்கான் என்று மனதில் நினைத்த நடேசன், ‘சரி, கொஞ்சம் வேலயிருக்கு’ என்றவாறே எழுந்தான்.
“இருப்பா, சொல்ல வந்ததை நா இன்னமும் சொல்லல.”
‘சொல்லு’
“தப்பா நெனக்காத. உன் வீட்ல கூட்டம் அதிகமாயிண்டே போறது. ஒத்தன் சம்பாத்யம்; எல்லாம் உக்காந்து திங்கறதுகள். தர்ம சத்ரமாயிடுத்து உன் வீடு.”
‘கல்யாணம். இதப் பத்தி நீ பேச வேண்டாம்.’
“இல்லப்பா, பேசல. என் வியாபாரத்த இங்க மாத்திக்கலாம்னு யோசன. உன் வீடு சரியா இருக்கும்.”
நடேசன் அதிர்ந்தான். இவன் என்ன சொல்ல வருகிறான்? நம் வீட்டில் இவனுடைய கடையைக் கொண்டு வைக்கக் கேக்கிறானா? இதென்ன வினோதம்?
“நடேசா, வீட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அத்தோட உனக்கும் கைல பணம் வந்ததுன்னா இத்தனாம் பெரிய சம்சாரத்த கட்டிக் காப்பாத்தலாம். என்ன சொல்ற?”
‘நீ சொல்றது சுத்தமா புரியல. இந்த வீட்ல உன் வியாபாரத்தக் கொண்டு வரணும்னு ஆசப்பட்ற. எனக்கு பணம் கைல வரும்கற. நான் வாடகைக்கெல்லாம் என் வீட்ட விடமாட்டேன்.’
“வாடகைக்கு இல்ல நடேசா. கிரயம் பண்ணிக் கொடுத்துடு. உன் கடனும் அடையும்; கைல நல்ல காசும் வரும்.”
நடேசனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள மனைக்கும் வீட்டிற்கும் வெறும் இருபத்தியைந்து இலட்ச ரூபாய் கடன் ஈடா? மனிதனுக்கு இத்தனை பேராசையா? வைக்கோலைத் தின்று கொண்டே கீரைப் பாத்தியை ஆசையுடன் பார்த்த மாட்டிற்கும் இவனுக்கும் என்ன வித்யாசம்? அது கூட கட்டறுத்துக் கொண்டு கீரைப் பாத்தியை நோக்கி ஓடவில்லை.
நடேசன் நாற்காலியிலிருந்து எழுந்தான். ‘நாளைக் காலல பாப்போம்’ என்றான்.
“என்னவோப்பா, உன் பணப் பிரச்சனை தீர வழி சொன்னேன். என்னத் தப்பா நெனக்காதே. நாளைக்கு நல்ல பதிலா சொல்லு.” என்றவாறே சென்று விட்டான் கல்யாணம்.
இவனுக்குத் தகுந்த பதில் சொல்ல வேண்டும், அதுவும் நாளைக்குள் ரூபாய் 25 இலட்சம் வேண்டும். அதைக் கொடுத்து விட்டு அவன் சங்காத்தமே வேண்டாமென விட்டு விட வேண்டும். அதுதான் சரி, ஆனால்..ஆனால் எப்படி?
‘மாணிக்கம் இடை கட்டி வைர மணி கட்டி ஆனிப் பொன் ஊஞ்சலால்..’ பாடியே எத்தனை குழந்தைகளை அம்மா இங்கே வளர்த்திருக்கிறாள்? தமிழ்ப் பதிகங்களும், வடமொழி சுலோகங்களும் முழங்கிய பூஜையறை. ‘ஆகி வந்த கட்டில்’ என்று அந்த ரோஸ்வுட் கட்டிலில் அவனுக்கு நடந்த சாந்தி கல்யாணம். குழந்தைகளின் குதூகலமும், சிறு சண்டைகளும், பண்டிகைகளும், அப்பா, அம்மா மரணமும், இந்த வீட்டில் தான். மருதாணி மரமும், கொடி சம்பங்கியும், செம்பருத்தியும், வரவேற்கும் முன் வாசல். தென்னையும், வாதா மரமும், கீரைப் பாத்தியும், வைக்கோல் பரணுமுள்ள கொல்லை. அங்குலம் அங்குலமாக ஜீவ களை ததும்பும் ஒரு குடில். வாழும் வீடு. இதைக் கேட்க ஒரு மனிதனுக்கு எப்படி நா எழுந்தது?
அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் ருக்மணி கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். ‘வைர ஹாரம், வைர ஒட்டியாணம், வைர வளையல்கள், ஒரு ஜோடி ப்ளு ஜாகர் வைரத் தோடு, முத்து மூக்குத்தி, 30 பவுன் காசு மாலை, ஐம்பது தங்க வளையல்கள், இரட்டைச் சர சங்கிலிகள் நாலு, டாலர் செயின் ஐந்து இதெல்லாத்தையும் சேவுகனிடம் வச்சு 25 இலட்சத்தை வாங்குங்கோ. மீட்டுக்கலாம். இனி கல்யாணம் இந்த வீட்டுப் படி ஏறக்கூடாது, ஆமா.’
“இல்ல ருக்கு, நான் வேற ஏதாவது செய்யறேன்”
‘ஒரு நாள்ல என்ன செய்ய முடியும்? சொல்றதக் கேளுங்கோ.’
நடேசன் அரை மனதுடன் தான் சென்றான். தெருவில் வண்ண பலூன்களை மேலும் மேலும் ஊதிய சில சிறுவர்கள் அது வெடித்தவுடன்
திடுக்கிட்டனர். பச்சைக் குதிரை தாண்டி பலர் கீழே விழ ஒரு சிறுவன் அனாயாசமாகத் தாண்டினான்.
‘வாங்க சார், அதிசயமா வந்திருக்கீங்க. சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன். நான் வெளில கிளம்பிக்கிட்டிருக்கேன். உங்களுக்காக கொஞ்சம் தாமசம் செய்யலாம்.’
“அப்றமா வரட்டுமா? வெளில போறச்சே நா வேற இடஞ்சலா வந்துட்டேன்.”
‘அட, அதெல்லாம் ஒண்ணுமிலீங்க. வந்த விஷயம் என்னதுன்னு சொல்லுங்க’
நடேசன் தன் பண நெருக்கடியைச் சொன்னான்.
‘இதுக்கா இம்புட்டுத் தயங்கினீங்க? செக் தரேன். உடனே பணம் கெடச்சுடும்.’
“இந்த நகை ஜாபிதா உங்ககிட்ட இருக்கில்ல. நாளைக்கு நான் பட்டியல சரி பாத்துட்டு அடமானம் வச்சிருக்கீங்கன்னு எளுதித் தரேன். இன்னிக்கி ஏற்கெனவே லேட் ஆயிடுச்சு. மச்சினன் வீட்டு விசேஷங்க. ஆச்சி கோபத்ல இருக்கு.”
மாலை பணத்தைக் கல்யாணத்திடம் கொடுத்தாகிவிட்டது. இரவு பத்து மணி வாக்கில் இடியென ஒரு செய்தி வந்தது. விருந்து முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சேவுகன் திடீர் மாரடைப்பால் காலமானார்.
துக்கம் கேட்க விசனத்துடனும், கவலையுடனும் அங்கே போன நடேசன் கைகளில் ஆச்சி நகைகளை அடகு பிடித்த இரசீதும், நகைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் கொடுத்த போது நடேசன் தன் வயதை மறந்து, தன் பதவியை மறந்து அழுதான்.