பல வருடங்களாக மேகா எனக்குப் பழக்கம். சிறுவர்களின் வகுப்பில் பிரபலமானவள், குழந்தைகளின் பிரியமான ஆசிரியை. தளர்ந்த, கவலை கலந்த முகத்தோடு என்னை அணுகினாள். குழந்தைகள் துவக்கப் பள்ளி மாணவியான சூசன் பிரச்சினைகள் பல செய்திருந்ததால் ஆலோசிக்க வந்தாள்.
சூசனை பள்ளியில் சேர்க்கும் போது அவளுடைய அம்மா வழியான பாட்டனார்கள் அவளை வளர்ப்பவர்களாகச் சொல்லிச் சேர்த்தார்கள். பள்ளியும் ஏற்றுக் கொண்டது.
சூசன் வகுப்பில் சொன்னதைச் செய்ய மறுத்து, மற்றவர்கள் செய்வதைக் அழிப்பதில் குறியாக இருந்தாள். மேகா பொறுமை காத்தாள். பல முயற்சிகளைச் செய்த பிறகே தாத்தா-பாட்டியைப் பேச அழைத்தாள். வரவில்லை. பல முறை எழுதி அனுப்பியதற்கும் பதில் அளிக்கவில்லை.
என்ன சொல்லிச் செய்த பின்னரும், சூசனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆரம்ப வகுப்புகளுக்குப் பிரத்தியேகமாகப் பிள்ளைகள் உணவு உண்ண, மற்றும் கழிப்பறைகளில் உதவும் சுஷிலா, அமுதாவும் சூசனின் இன்னல்களை விவரித்தார்கள். வகுப்பில் மட்டும் அல்லாமல் கழிப்பறையிலும் பிரச்சினைகள் செய்வதைக் கேட்டதும், தாத்தா-பாட்டி, தங்களுடன் சூசன் பெற்றோர் இருப்பதாக, அவர்களே வருவதாகச் சொன்னார்கள். ஆக, ஏமாற்றி சூசனை பள்ளியில் சேர்க்கச் செய்திருந்தார்கள்.
மேகா, அவளுடைய உதவி ஆசிரியை நிர்மலா, பள்ளி அதிகாரி பிரபாகர் மற்றும் நான் சந்திக்கக் காத்திருந்தோம்.
தலை கலைந்து, கசங்கிய உடையில் தந்தை ஆல்வினுடன் சூசன் பள்ளிக்குள் நுழைவதைக் கவனித்தோம். ஐந்து வாட்டசாட்டமான துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவனுடன் வருவதைப் பார்த்ததுமே காவல்நிலையத்திற்குத் தெரிவித்தோம்.
முப்பது வருடங்களுக்கு முன்னால் மேகா, பிரபாகர், நான், சூசனின் தந்தை ஆல்வினுடன் இதே சாயலுள்ள பிரச்சினைகளைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. ஏமாற்றி பள்ளியில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனால் தான்!
எல்லா குழந்தைகளைப் போல ஆல்வின் மூன்றாவது வயதில் சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தான். சேர்ந்த புதிதில் ஐந்து நிமிடம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டான். அந்த வயதில் குழந்தைகள் இப்படித் துடிதுடிப்பாக இருப்பது சகஜம். நாளடைவில் அமைதியாவான் என மேகா காத்திருந்தாள். மாறவில்லை. சுட்டிக் குழந்தை என நினைத்துக் காத்திருந்தாள்.
இரு மாதங்களில் வகுப்பில் மற்ற பிள்ளைகளின் நடத்தையில் கவனம் திரும்பியது. ஆல்வின் பள்ளிக்கு வரும்போது தலையைச் சீவியிருக்க மாட்டான், குளிக்காத வாடையினால் மற்ற பிள்ளைகள் அவன் வந்ததும் மூக்கை மூடிக்கொண்டு ஓடி மேகாவிடம் வந்து விடுவார்கள். அவனுடைய பெற்றோர், அப்பா மார்க், அம்மா ஐவியை அழைத்து ஆல்வின் இவ்வாறு வருவதை மாற்றிக்கொள்ள மேகா பரிந்துரை செய்தாள்.
மார்க் கோபம் பொங்கச் சத்தம் போட்டு ஆல்வினை வற்புறுத்த மாட்டோம் என மறுத்து விட்டான். ஐவீ, ஆல்வினை அணைத்தவாறு அழுது கொண்டே வெளியே ஓடினாள். மார்க் அவளைத் தொடர, வீட்டிற்குப் போய் விட்டார்கள்.
மறுநாளும் ஆல்வின் அவ்வாறே வந்தான். எப்போதும் போலப் பள்ளிக்குள் தமதமயென ஓடி வந்து, பையைத் தூக்கி எறிந்து, உதவிக்கு இருப்பவர் அவ்வாறு செய்யக் கூடாது எனச் சொல்லி முடிப்பதற்குள் அவர்களைத் தள்ளி விட்டு விளையாட்டு இடத்திற்கு ஓடினான். திரும்ப அழைத்து வர முயலும் போதெல்லாம் அவர்கள் மீது மணலை வாரி அடித்து, நெருங்கும் போது தகாத வார்த்தைகளைச் சொன்னான்.
நிர்மலாவோ மேகாவோ ஆல்வினை வகுப்பிற்கு அழைத்து வர முயன்றாலும் அவர்கள் மீதும் எச்சில் துப்பினான். அப்படிச் செய்யக் கூடாது எனச் சொல்வதற்கு ஏளனம் முகபாவம் காட்டினான். இதை மற்ற பிள்ளைகள் பார்த்து, சிலர் செய்ய ஆரம்பித்தனர். புகார்கள் குவிந்தது. பள்ளி மேலாசிரியர் என்னை அழைத்து இதைக் கையாளுவதற்கு முறையைக் கேட்க, மேகா மற்றும் அந்த வகுப்பு ஆசிரியைகளுடன் வர்க்ஷாப்பில் கலந்துரையாடி வழிகளை அமைத்தோம். வளரும் பருவத்தில் குழந்தைகள் ,கவனத்தை இழுக்க இதுபோன்ற நடத்தையைச் செய்ய முயல்வார்கள். அவை, ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை என புரிய வைத்ததும், பிறகு செய்ய மாட்டார்கள்.
பள்ளிக்கு வருவது அறிவு பெறுவதற்கு மட்டும் அல்ல. உணர்வுகளை மதிக்க, மற்றவர்களுடன் இருக்க, ஒழுக்கம், ஒத்துழைப்பைக் கற்றுக்கொள்வதும் அடங்கும். ஆசிரியை ஆல்வினைத் துப்பக்கூடாது, பிடிக்கவில்லை என்றால் எப்படிச் சொல்வது என்பதற்கு உதாரணங்களைத் தந்தார்கள். மூன்று வயது, இளம் துளிர் காலத்தில் கற்பதால் செய்து பழகுவார்கள், “ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது”!
சொல்லிப் புரிய வைப்பது கற்றலின் அங்கம். கடைப்பிடித்ததால் பிள்ளைகளிடம் நல் விளைவைக் கண்டார்கள்!
இதில் ஆல்வின் அடங்கவில்லை. தகாத வார்த்தைகளை உபயோகிப்பதும், அடித்து விட்டு ஓடுவதையும் வருத்தத்துடன் ஆசிரியர்கள் வெளிப்படித்தினார்.
மேலதிகாரிகளுடன் ஆலோசித்து ஆல்வினுடன் பள்ளி வளாகத்தில் ஸெஷன்களை ஆரம்பித்தேன். வண்ணங்கள் நிறைந்திருந்தால் சில நிமிடங்களுக்குக் கவனம் காட்டினான். கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தான். பொருட்களைத் தூக்கி எறிவதைக் குறும்பு என வகைப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு பழகிவிட்டதாலோ எனத் தோன்றியது. வீட்டில் கடைப்பிடிக்கும் வழிமுறையை அறிய மார்க், ஐவீயைச் சந்திக்க முடிவெடுத்தேன்.
அதே சமயத்தில் ஐவி காரியதரிசியாக இங்கேயே வேலைக்குச் சேர்ந்தாள். இது உதவும் என நம்பினேன்.
ஐவீயைச் சந்தித்ததும் மார்க்கையும் சந்திக்கப் பரிந்துரைத்தேன். சரி என்றாள். ஆனால் நேரம் குறிக்கும்போது ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட நாளன்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள்.
ஐவீயின் வளர்ப்பு முறைகளின் சிறுதுளியைப் பள்ளியில் பார்த்தேன். ஆல்வின் ஸெஷன்களிலிருந்து அவ்வப்போது ஐவீயிடம் ஓடிவிடுவான். உடனே பையிலிருந்து சாக்லேட் தருவாள். குழந்தையைப் பொருத்தவரை, இப்படிச் செய்வது தன் செய்கையைச் சரியென்று ஆமோதிப்பதாகும். ஆல்வின் உதைக்கும் போதும் பாவனை காட்டும் போதெல்லாம் ஐவீ கலகலவென்று சிரிப்பாள். தான் செய்வது டபுள் ஓகே என எடுத்துக் கொண்டதில் பழக்கமாகியது. பிரபாகர் கவனித்து எடுத்துச் சொன்னாலும் ஐவீ குழந்தையை ஸெஷனுக்கு அனுப்பவில்லை. ஐவீயை வேலைக்கு வைத்தோமே என்று அவர் வருத்தப்பட்டார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஆல்வினின் பெற்றோர்கள் என்னைச் சந்தித்தார்கள். ஆல்வின் செல்லக் குழந்தை என்றதாலேயே முழு சுதந்திரம் கொடுத்தார்களாம். கட்டுப்பாட்டை இந்த வயதில் ஆரம்பிக்கத் தேவை என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். குழந்தைகளைச் சுதந்திரமாக விடவேண்டியதை உறுதியாக நம்புகிறோம் என்றார்கள்.
ஆல்வினின் நலனுக்காக என்றதால், சில எளிதான குறிப்புகளைச் செய்ய ஒத்துழைப்பு உறுதி என்றார்கள். உடல்மொழியோ வேறு சொன்னது. மேற்கொண்டு ஸெஷன்கள் தேவை என்றதும், அவற்றை நான் ஆலோசிக்கும் மருத்துவமனையில் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார்கள்.
ஆல்வின் பெற்றோருடன் வந்தான். பிரத்யேகமாகக் குழந்தைகளின் பிரிவான சீ ஜீ சீ (CGC, Child Guidance Clinic) பிரிவுக்கு அழைத்துச் சென்றேன். பெற்றோரை உட்கார வைத்து ஆல்வினிடம் திரும்புவதற்குள் அவன் அங்கிருந்த பல பொருட்களைத் தாறுமாறாகப் போட்டிருந்தான். மார்க், ஐவீயை பார்த்து நகைக்க ஆல்வின் பலமாகச் சிரித்தான். இதையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
மார்க்கும் ஐவீயும் இந்த வயதில் செய்யக்கூடியது, கூடாத முறைகளைச் சொல்லித் தரவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆல்வினிடம் செய்யாதே எனப் புரியவைத்ததும், அமைதியாகச் செய்தான். இது சுதந்திரம் பறிக்கப்பட்டதாகச் சொல்லி, பெற்றோர் இருவரும் ஆல்வினை அழைத்து, அவன் மறுக்க தரதர என இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
அடுத்த இருமுறை ஸெஷனில் மௌனம் சாய்த்து வேலை இருப்பதாகச் சொல்லிச் சென்று விட்டார்கள். ஆல்வின் பள்ளியில் சொல்வது எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தான். ஐவீயிடம் மேகா பேச முயன்ற போதெல்லாம் கண்ணீர் பதிலாக வந்தது.
இரு வாரங்களுக்கு வெளியூர் செல்வதாகக் கூறினார்கள். பிறகு என்னுடன் ஸெஷனுக்கு வந்தபோது ஆல்வினை விட்டு விட்டுத் திரும்பி வருவதாகச் சொல்லி மார்க் சென்றான். அடுத்த நிமிடமே ஆல்வின் தத்தினதின் எனக் குதித்தான். சிறுநீர் கழிக்க அங்கேயே உட்கார்ந்தான். ஐவீ தள்ளி நின்று ஆயம்மாவை செய்கையால் சுத்தம் செய்யச் சொன்னாள். ஓடி வந்த ஆயம்மாவை நிறுத்தி ஐவீயைச் செய்யச் சொன்னேன். முறைத்து விட்டுச் செய்தாள். ஆயம்மாவுக்குத் தெரியும், குழந்தைக்குச் சரியான வழிமுறை சொல்லித்தராமல் பலத்தைத் தவறாக உபயோகிப்பவர்களிடம் இவ்வாறு செய்வேன் என்று.
மறு முறை வந்த மார்க், ஐவீ வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.
நான் பள்ளி மேல் அதிகாரியுடன் பேசி, என்னைவிட மேலும் அனுபவம் உள்ளவரை அணுகப் பரிந்துரை செய்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர் திறமை உள்ளவர். அவரிடம் விவரத்தைச் சொல்லி நேரத்தைக் குறித்துத் தந்தேன். அவர் மார்க், ஐவீயிடம் எடுத்துச் சொல்ல, அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இரு மாதங்களுக்குப் பின்பு அவருடனும் ஸெஷன்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பள்ளியிலிருந்து ஆல்வினை நீக்கி விட்டார்கள்.
அன்றிலிருந்து ஆல்வினைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டது, வகுப்பில் உட்காராமல் ஓடுவது, கல்லால் வகுப்புப் பலகையைக் கீறி விடுவது, சகமாணவரின் சட்டைகளைக் கிழித்து, கழிப்பறையில் வன்முறைச் சம்பவங்கள் செய்கிறான் என்று. பல பள்ளி சேர்ந்தும், இரண்டு-மூன்று மாதத்தில் வெளியேறி விடுவான். ஆல்வினைக் கௌன்ஸெலிங் செல்ல வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மறுத்து, நடத்தையைப் பற்றிக் கூறுவதைப் பெற்றோர் நிராகரித்ததால் ஒரு பள்ளியை விட்டு இன்னொன்று எனத் தாவுவது. மூன்றாவது வகுப்புடன் நின்றது.
பிறகு ஆல்வினைப் பற்றிய தகவல்கள் எதுவும் நல்ல செய்தி அல்ல. சண்டை, வன்முறையில் ஈடுபடுவதாக. மார்க் தொழில் ஆரம்பித்து அதில் காலம் ஓடியது.
ஆல்வினின் பள்ளி நாட்கள் ஒரு பக்கம். மார்க், ஐவீ ஆல்வினுக்கு எந்த விதிமுறைகளையும் கற்றுத் தராததில் இப்போது சூசனும் இன்னொரு ஆல்வின்!
ஆல்வின் துப்பாக்கி துணைக் கொண்டு வந்ததை நேரில் பார்க்க வருத்தமாக இருந்தது. இவ்வாறு எங்கள் உளவியல் புத்தகத்தில் படித்திருந்தேன், வளர்ப்பில் கண்டிப்பின் எந்த எல்லைக் கோடும் பெற்றோர் அளிக்காமல் இருந்தால் பிற்காலத்தில் வன்முறை, ரௌடித்தனத்தில் ஈடுபடுபவர்களாக அமைந்து விடக் கூடும் என்று. மேலும் படிக்காதவராக இருந்ததால், தன்நலக்காரர்கள் இவர்களைத் தவறான காரியங்களுக்கு உபயோகிக்கக் கூடும் என்று. இவை அனைத்தையும் ஆல்வினிடம் நான் நேர்முறையாகக் கண்டேன். பரிந்துரைகளை ஏற்ற மறுத்தார்கள்.
சூசனுக்கு இன்னொரு வாய்ப்பு தர முன் வந்தோம். இதைக் கேட்ட ஆல்வின் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டான், “அன்று மட்டும் யாரேனும் என்னைத் திருத்தி இருந்தால், இன்று என் வாழ்க்கையில் நடப்பதே வேறு!”. எனினும் ஆல்வின், வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சூசனை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்.
******************************************************************