ராஜராஜன் – சிற்பி
ராஜராஜன் வரலாற்றை நிறைவு செய்ய உள்ளோம்.
வீரத்தைக் காட்டி, ரத்தத்தைக் கொட்டி, வெற்றியை ஈட்டி, நாட்டை வளர்த்த ராஜராஜன், இந்திய வரலாற்றில் காலத்தில் அழியாது செய்த ஒரு மாபெரும் செயல் பற்றிப் பேசுவோம். அது, கலை, பக்தி, செல்வம், தொழில் நுட்பம், அனைத்தும் சேர்த்துச் செய்யப்பட்ட தஞ்சைப்பெரிய கோவில் எனும் அழியாத ஆலயம்.
1860-க்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யாரென்று கேட்டால், பள்ளி மாணவர்கள் ‘ஞே’ என்று விழிப்பார்கள். ஏன், ஆசிரியர்களே ‘ஞே’ என்று தான் விழித்திருப்பார்கள். கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளர் தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய முனைந்தார். அவர் பெரிய கோவிலின் பூர்வீகத்தை, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டினார். சரித்திரத்தின் முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!
முன்கதையொன்று சொல்வோம:.
பொன்னியின் செல்வன், சுந்தர சோழன் ஆண்ட காலத்தில் இலங்கையில் படைத்தலைவனாக இருந்தான். அப்பொழுது ஓரிரவு அவனுக்கு ஒரு தெய்வீக கனவு வந்தது. அதில் ஒரு மாபெரும் ஆலயத்தைக் கட்டுவதாக இருந்தது.
பிறகு, உத்தம சோழன் ஆட்சிக்கு வந்தவுடன், சில காலம் காஞ்சியில் தந்தையுடன் பொன்மாளிகையில் இருந்தான். காலை, மாலை இருவேளையும் கைலாசநாதர் ஆலயத்துக்குச் சென்று சிவனைத் தொழுவான். காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட அந்த கைலாசநாதர் கோவில் அவனை மிகவும் கவர்ந்தது. அதன் அமைப்பும், கட்டட நுணுக்கங்களும், சிற்பவேலைப்பாடுகளும், எழிலும் அவன் நெஞ்சைக் கொள்ளை கொண்டது. அங்கு அவன் பார்த்த விக்கிரமாதித்த சாளுக்கியனின் கல்வெட்டு ஒன்று அவனை உலுக்கியது.
“இந்த காஞ்சியும் இந்தக் கைலாசநாதர் கோவிலும், தெய்வத்தின் உறைவிடமாக திவ்யமாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு குண்டுமணியையும் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. காஞ்சி மக்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது” – இந்த விக்ரமாதித்யனின் நல்ல எண்ணங்கள் கைலாசநாதர் கோவிலிலேயே கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்ததைக் கண்டான். பல்லவனின் பரம வைரியாக இருந்தும், அவனையும் மயக்கிய அந்த தெய்வீகமான கைலாசநாதர் ஆலயம் பொன்னியின் செல்வனையும் மயக்கியது.
ஒரு சிவன் கோவிலுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் நிறைந்த அந்தக் கோவில் போல ஒன்றை தஞ்சையிலும் கட்ட வேண்டும் என்ற கனவு அவனுள் புதைந்தது.
பிறகு பல காரியங்கள் நடந்தேறின.
உத்தம சோழன் ஆட்சி முடிய, ராஜராஜன் அரசு முடி அணிந்து, எண் திசையும் வென்றபோது – கிடைத்தது பெரும் பொன்னும் பொருளும். அத்துடன் கிடைத்த போர்க்கைதிகளோ ஒரு நூராயிரம்।
வெற்றிகள் அனைத்தையும் அடைந்து – எதிரிகள் எவருமில்லை என்றான பிறகு, தனது நெடுங்கனவை நனவாக்கத் திட்டமிட்டான்.
கி பி: 1003;
மந்திராலோசனை.
அமைச்சர்கள், ராணிகள், படைத்தலைவர்கள், குந்தவி, வந்தியத்தேவன், செம்பியன் மாதேவி, மற்றும் சிற்பிகள் அனைவரும் அரச மண்டபத்தில் கூடியிருந்தனர். சோழ நாட்டின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன், மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய மூவரும் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.
ராஜராஜன், தனது பெரும் கோவிலின் எண்ணத்தைக் கூறி அது ஏழு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும் என்றான்.
தலைமைச் சிற்பி: “இதற்குத் தேவையான பொருள்?”
“அனைத்துக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்” என்றான் ராஜராஜன்.
“லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்”- சிற்பி.
“போர்க்கைதிகள் நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் கட்டிடத்தொழில் செய்வர்” என்றான் ராஜராஜன்.
‘கைதிகள் கட்டிடக் கலை செய்வாரா?” என்று அனைவரது முகத்திலும் சந்தேகம் பரவியது கண்டு ராஜராஜன் புன்னகை புரிந்தான்.
“அவர்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்வர். அது எனது பொறுப்பு “என்றான் ராஜராஜன்.
கைதிகளை அழைத்து சொன்னான் மன்னன்:
“உங்கள் அனைவருக்கும் ஒரு புனிதப் பயணத்தில் பங்கு பெறும் பாக்கியம் கிடைத்துள்ளது.
உலகத்திலேயே உயர்ந்த சிவாலாயத்தை வடித்துப் புனரமைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியிருக்கிறது.
கடினமான செயல் தான்.
ஏழு வருடங்கள் உங்கள் உழைப்பையும், எண்ணத்தையும், ஆற்றலையும் இந்தத் திருப்பணிக்குக் காணிக்கையாக்குங்கள்.
ஏழு வருட முடிவில் – உங்களுக்குப் பெரும் பொருள் தருகிறேன்.
நான் போர்களில் ஈட்டிய பெரும் பொருள் அனைத்தும் தருகிறேன்.
அதன் பிறகு நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்குச் சென்று வளமோடு வாழலாம்.
இது என் வாக்கு” என்றான்.
அனைவரும் ‘சக்கரவர்த்தி ராஜராஜன் வாழ்க! “ என்று ஆமோதித்து முழங்கினார்கள்.
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினான்.
பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னன் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தான். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.
முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது ஒரு கதை. எப்படி இந்தக் கதை!
கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டவை.
சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கோவில் தஞ்சை பெரிய கோவில். இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
கல்வெட்டு கூறுவது:
“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….”
தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் — தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.
அதன் பிறகு, 800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை. 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. தஞ்சை, 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை விஜயநகரின் ஆதிக்கம்… 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..
இப்படி காலத்தால் புரட்டிப்போடப்பட்ட தஞ்சை தரணியில் இன்றும் உயர்ந்து நிற்கிறது பெரிய கோவில்! அதை எழுதி, ராஜராஜன் புகழ் பாடி, சரித்திரத்தை நகர்த்துவோம்.
ஒரு புலிக்குப் பிறந்தது புலியாகத் தானே இருக்க முடியும். அதை விரைவில் காண்போம்.