திரை ரசனை வாழ்க்கை 18 – எஸ் வி வேணுகோபாலன் 

கார்(க்)கி  (சமூகத்திற்கான அதிர்ச்சி கேள்விகள்) 
Saipallavi movie update:

பல ஆண்டுகளுக்குமுன் குமுதத்தில் வாசித்த ஒரு சிறுகதை (எழுதியது யார் என்று மனத்தில் குறித்துக் கொள்ளாமல் போனேன்), சற்று மனநிலை பிறழ்ந்த சிறுமி அவள். கிராமத்துப் பெண். பருவமடைந்திருப்பாள், பாவம். எப்போதும் தாயின் பாதுகாப்புக் கவசம் உண்டு, அந்த ஏழைச் சிறுமிக்கு. ஆனாலும், அவளை நோட்டமிடும் ஒரு வாலிபன் அவள் குடிசைக்குப் புறத்தே தனித்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் நைச்சியமாகப் பேசி அடர்த்தியான செடி கொடிகள் மரங்கள் நிறைந்த சூழலுக்கு அழைத்துச் செல்வான். கள்ளம் கபடம் அறியாத அந்த பேதைப் பெண் அவன் தரும் தின்பண்டங்கள் ருசித்து குதியாட்டம் போட்டபடி செல்வாள்.  ஒதுக்குப்புற இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அத்துமீறத் தொடங்கும் ஒரு கட்டத்தில், அவன் திடீர் என்று வீறிட்டு அலறுவான், அந்தக் குழந்தை அவனிடம், மன்னிச்சுக்கப்பா….எங்கம்மா எப்பவும் சொல்லி இருக்காங்க, அதனால் தான் அப்படி செஞ்சேன்…எவனாவது உன் பாவாடை நாடாவைத் தொட்டான்னா உடனே இந்த மிளகாய்ப் பொடியை எடுத்துக் கண்ணில் தூவுன்னு அம்மா சொல்லியிருக்காங்க என்று அவள் சொல்லவும், அவன் தலைதெறிக்க ஓடுமிடத்தில் கதை முடியும்.

ஆனால், அந்தக் கடைசி இடம் வரும் வரையில் நெஞ்சு பதறிக் கொண்டிருக்கும். அந்தக் குழந்தைக்கு ஒன்றும் நடந்துவிடக் கூடாதே , யாரேனும் வந்து காப்பாற்றிவிடக் கூடாதா என்று கிடந்து அலறும் மனம். எத்தனை வக்கிரம் பிடித்த மாபாவி என்று அந்தக் கயவன் மீது அத்தனை கோபம் எழும்.  அந்த மிளகாய்ப் பொடியில் உறைந்து கிடக்கும் பெற்ற வயிற்றின் பரிதவிப்பு நெடு நாட்கள் ஆகியும் மறக்கவிடவில்லை கதையை. 

அது வெறும் கதை. ஆனால், நிஜத்தில் அதைக் காட்டிலும் பன்மடங்கு புரட்டிப்போடும் கொடுமைகள்…. பிஞ்சு மொக்குகளையே நாசப்படுத்தும் வெறியில் வயது வித்தியாசம் இன்றி நடந்துகொள்ளும் மிகக் கேவலமான செய்திகள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறோம்… வெளியே சொல்லப்பட்டவை ஐந்தில் ஒரு பங்கு கூட இராது. ஆபத்து வெளியே இருந்து மட்டுமல்ல, குடும்பத்திற்குள் நடக்கும் வன்முறைகள் பற்றி அண்மையில் கூட பொதுவுடைமை இயக்கத்தில் முக்கியமான மாநாடு நடத்தி மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கார்கி, ஒரு திரைப்படம் அல்ல. அதிர வைக்கும் ஓர் உண்மையான நிகழ்வை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை, பாலின வேறுபாடுகள், அவமதிப்புகள், அத்து மீறல்கள் பற்றிய நுட்பமான விவாதங்களை சமூகத்தில் கிளர்த்தும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அடுக்குமனை குடியிருப்பில் ஒரு சிறுமியைச் சிலர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடுமை காவல் துறையிடம் புகார் செய்யப்படுகிறது. ஏற்கெனவே சிக்கிய குற்றவாளிகளன்றி வேறொருவரும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற விசாரணையில் அருகமை ஆள் ஒருவர் சிக்குகிறார் என்கிற தலைப்புச் செய்தியில் தொடங்குகிறது படம். 

ஒரு பள்ளி ஆசிரியை, தேர்வு நடக்கும் அறையில் தனது வருங்காலக் கணவனின் அலைபேசி அழைப்பைப் பக்குவமாக விரைந்து பேசி முடித்து, விடைத்தாள்கள் எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்து எந்திர கதியில் மதிய உணவு எடுத்துக் கொள்ளும்போது அந்த அறையின் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடும் இந்தச் செய்தி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. அவள் வீடு திரும்பியும் திரும்பாத தந்தை, ஏன் அலைபேசி அழைப்பைக் கூட ஏற்பது இல்லை என்று அவர் வாட்ச்மேன் ஆக இருக்கும் அபார்ட்மெண்ட் தேடிப் போகும்போது காத்திருக்கிறது அதிர்ச்சி, பிடிபட்டிருப்பவர் அவர் தான் என்று.   

அந்த இரவு பேயிரவு. காவல் நிலையத்தைக் கண்டடைந்தாலும், அவளால் தந்தையைக் கண்டடைய முடிவதில்லை.  அவர் எங்கே என்று தனக்கே தெரியாது என்று சாதித்து, அவளைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அதிகாரி, உன் தந்தையை யாரும் காப்பாற்ற முடியாது, நீங்கள் குடும்பத்தோடு வேறிடத்திற்குப் பாதுகாப்பாக ஓடிவிடுங்கள் என்று மிரட்டியே சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால், அவள் விடாப்பிடியாகச் சுற்றிச் சுற்றி வந்து, அந்த காராகிருகத்தின் உள்ளே அவர் எங்கே அடைத்துவைக்கப்பட்டு இருக்கிறார் என்பதைப் பார்த்து விடுகிறாள்.

தீர்மானமாக நம்புகிறாள், அந்தக் கீழ்த்தரமான செய்கையைத் தன்னுடைய தந்தை செய்திருக்க மாட்டார் என்று. அவளது போராட்டம் தான் கதை. அவள் தந்தையை விடுவிக்க நடத்தும் போராட்டத்தில் உண்மையையும் கண்டடைந்து விடுகிறாள். அது தான் கார்கியின் மிக நுட்பமான திரைக்கதை. ஒரு பெண்ணாக அவள் நடத்தும் போராட்டம், ஒரு தனி மனுஷியின் போராட்டமாகத் தான் இருக்குமென்றாலும் விரிந்த தளத்தில் சமூகக் காரணிகளையும் அலசும் போராட்டமாக அமைந்து விடுவது தான் கார்கியை அண்மைக்காலத்தில் வித்தியாசமான பார்வை அனுபவம் வழங்கும் படமாகவும் நிறுத்துகிறது. 

சிறுமி சீரழிக்கப்பட்டது அவளது அடுக்குமனை வளாகத்தில் யாரும் அதிகம் பயன்படுத்தாத படிக்கட்டுகள் பக்கம் என்பதால், வாட்ச்மேன் இயல்பாக சிக்குகிறார். தவிரவும், இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவளை அவர் தான் சுமந்து சென்று அவளது வீட்டில் ஒப்படைக்கிறார், அப்போது தனது பணி நேரத்திற்கும் மேலான அரை மணி நேரம் கடந்திருப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் எங்கே இருந்தார், ஏன் இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என்கிற கேள்விகளுக்கு அவரிடம் காத்திரமான பதில்கள் இல்லை. இது திறந்து மூடும் வழக்கு, அவர் தான் அந்தக் குற்றத்தில் தேடப்பட்ட கடைசி குற்றவாளி என்று பப்ளிக் பிராசிகியூட்டர் இலகுவாக வாதங்களை முடித்துவிடுகிறார். 

தனது தந்தைக்காக வாதாடக் குடும்ப நண்பர் மறுத்துவிடுகிறார், பார் கவுன்சில் முடிவு அது. ஆனால், அனுபவங்கள் அற்ற இளம் வழக்கறிஞரான அவரது ஜுனியர் இந்த வழக்கை ஏற்று நடத்த முன் வருகிறார். இதுவும் கார்கியின் முக்கியமான இடம். அவர் எதையும் தடாலடியாக சாதித்து விடுவதில்லை. அவரிடம் மாய மந்திரங்கள் இருப்பதில்லை. சறுக்கி விழுந்து அடிபட்டு எழுந்து தனக்கு இருக்கும் திக்குவாய் பிரச்சனைக்காக இழிவுகள் மென்று தின்று மீண்டும் தொடர்ந்து முதல் கட்ட வெற்றியாக பெயிலில் வெளியே கொண்டு வந்துவிடுகிறார் நாயகியின் தந்தையை. கதை அங்கே முடிவதில்லை.  ஆனால், அடுத்த சில நிமிடங்களில் வேறு தினுசாகச் சென்று திரை விழுகிறது. கார்கியின் இன்னும் ஆக முக்கியமான இடம் அது. 

தந்தை சிறைப்பிடிக்கப்பட்டதும் வீட்டின் மீது கண்ணடி  மட்டுமல்ல கல்லடிகளும் வந்து விழுகிறது.  நாயகிக்கு அவளது வேலை பறிபோய்விடுகிறது. அந்தக் குடும்பத்தின் மீது அவமானச் சூறாவளி பல மைல் வேகத்தில் வந்து தாக்குகிறது. ஊடகக் காமிராக்கள் 24X 7 துரத்திக் கொண்டே இருக்கின்றன. வழக்கை அவர்கள் விவாத மேடைகளில் வேகமாக நடத்தி முடித்துத் தீர்ப்பும் வழங்கி விட முடிகிறது. ஒரு குடும்பத்தின் அப்பாவி உறுப்பினர்கள் மீது இவை ஏற்படுத்தும் தாக்கம் கார்கியின் மற்றுமொரு முக்கிய இடம். 

வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு திருநங்கை. சாடையாகப் பாலின இழிவை அவர் மீது இறைக்கும் பப்ளிக் பிராசிகியூட்டரை அவர் கண்டிக்கும் விதம் இன்னும் முக்கியமான இடம், அவர் சொல்கிறார், ‘எனக்கு விசாரிக்கத் தகுதி இல்லையா, ஒரு பெண்ணின் வலியும் எனக்குத் தெரியும், ஓர் ஆணின் திமிரும் எனக்குத் தெரியும்’ என்று!

தந்தை தவறு செய்திருக்க மாட்டார் என்று நாயகி நம்புவதற்கு முக்கியமான காரணம், தான் சிறுமியாக இருக்கையில் தன்னிடம் அத்து மீற நினைத்த டியூஷன் ஆசிரியரைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றியவர் அவர். தங்கள் அரவணைப்பு அவர். தனது வாழ்க்கையில் தான் நேர்கொண்ட அந்தப் பாலினத் தொல்லையின் நினைப்பில் அடுக்குமனை குடியிருப்பில் கொடுமைக்குள்ளான சிறுமியின் மீது அக்கறை கொண்டபடியே வழக்கை அணுகுகிறார் நாயகி.   தனது தந்தையை வெட்டிப்போடத் துடிக்கும் அந்தச் சிறுமியின் தந்தையை நேர்கொண்டு சந்தித்துப் பேசுமளவு நெஞ்சுரம் இருக்கிறது அவருக்கு. அதே நேரத்தில், ஓர் ஆண்மகவு இல்லையே என்று மனத்தில் நினைக்கும் தனது தாயையும் கேள்விக்கு உட்படுத்துகிறார் கார்கி.  ஊடக மனிதர்களையும் நேரடிப் பார்வையில் பதில் சொல்ல முடியாதபடி வளைத்துக் கேட்டு சங்கடப்படுத்துகிறார்.  இப்படி எத்தனையோ இடங்கள் முக்கியமானவை. 

சாய் பல்லவி அபாரமாக இந்தப் பாத்திரத்தைச் செய்திருக்கிறார். விவரிப்புக்கு அப்பாற்பட்டது அவரது நடிப்பு.  கடந்த ஆண்டுகளில் இத்தனை  நேர்த்தியான ஒரு கதாநாயகி வேடம் செய்யத்தக்கவரைப்  பார்த்ததில்லை என்று எழுதுகிறது தி இந்து. இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் அருமையாகச் செய்திருக்கும் காளி வெங்கட் தனக்கு இதுவரை கிடைக்காத வாய்ப்புகளை யோசிக்க வைக்கிறார். தந்தை பாத்திரத்தில் சிவாஜி, நண்பராக லிவிங்ஸ்டன் மிக பாந்தமான நடிப்பு. மற்றவர்களும் அத்தனை இயல்பான நடிப்பு.  மிக சீரியசான கதையில் கூட இயல்பான முறையில் நகைச்சுவைக் காட்சிகள்  வாழ்க்கையின் அபத்த தருணங்களை ஒட்டி அமைந்துவிடுவது குறிப்பிட வேண்டியது.

கௌதம் ராமச்சந்திரன் ஹரிஹரன் ராஜோடு சேர்ந்து எழுதியுள்ள திரைக்கதை மற்றும் அவரது இயக்கம் பாராட்டத் தக்கது, சில கேள்விகள் எழாமலில்லை. ஆனால், படம் அவற்றுக்கு அப்பால் நின்று பேசுகிறது. கோவிந்த் வசந்தா  பின்னணி இசை மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஸ்ரயந்தி, பிரேம்கிருஷ்ணா ஒளிப்பதிவு சிறப்பு. ஷபிக் முகமது அலி அவர்களது படத்தொகுப்பு பாராட்டத் தக்கது.  

சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி, பாலின சமத்துவக் கல்வியைப் பள்ளியில் தொடங்குவதில், வீட்டில் வளர்ப்பதில், குறிப்பாக ஆண் குழந்தைகளை வளர்ப்பதில், பொதுவெளியில் நியதி ஆக்குவதில் தான் விடை தேட முடியும். இந்தப் படம் ஒரு பெரிய சலனத்தை இந்த விஷயத்தில் ஏற்படுத்தி உள்ளது. அதனாலும் கார்கி தொடர்ந்து பேசப்படுவதாகிறது. 

 

 

7 responses to “திரை ரசனை வாழ்க்கை 18 – எஸ் வி வேணுகோபாலன் 

  1. பல வருடங்களுக்கு முன் படித்த ஒரு சிறுகதையை நினைவு கூர்ந்து அதன் தொடர்ச்சியாக கார்கி பட விமர்சனம் எழுதி .. சார் பல்லவியின் நடிப்பைப் பாராட்டி…
    சரளமான நடையில் எழுதிச் செல்லும் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..
    அப்படியே என்னுடைய வேண்டுகோளையும் முன்வைத்து விடுகிறேன். புதிய ஆசிரியன் இதழுக்கு உங்கள் கட்டுரையை எழுதத் தொடங்கலாமே.. தேதி 16 ஆகிவிட்டதே..

    Like

  2. விரிவான விமர்சனம். மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

    Like

  3. உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. சாய் பல்லவி பற்றி சொல்ல வேண்டுமா? எப்பவும் போல அபாரம் தான். சுருக்கமாக நச்சுனு அதே நேரம் கதையின் க்ளைமாக்ஸ் வெளிப்படுத்தாமல் நன்றாக உள்ளது.

    Like

  4. ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட சிறுகதையை எழுதியவர் அனுராதா ரமணன் சார்.

    இளவல் ஹரிஹரன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.