பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்
பொறுப்புத் துறப்பு:
தலைப்பில் உள்ள மதங்கள் பற்றி அறிய சற்றேனும் அக்கறை இல்லை யெனில் மேலே தொடர்வது மனதிற்கு ஊறு விளைவித்து நேரத்தை கொன்று விடும். கீழே உள்ள தகவல்கள் நான் கற்றறிந்த கடுகளவு ஞானத்தின் பிரதிபலிப்பே. எனது சொந்தக் கருத்து எதையும் திணிக்க வில்லை.
புத்தருக்கு அரச மரத்தடியில் ஞானம் கிடைத்தது. மஹாவீரருக்கு அசோக மரத்தடியில் ஞானம் கிடைத்தது.
நாம் பார்க்கில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிட்டாவிடினும், புத்தி சற்றேனும் தெளிவடையும் என்ற நம்பிக்கையில் அமர்வது வழக்கம். கண்களை மூடி வாய் பொத்தி அமர்ந்தாலும், காதுகளுக்கு ஷட்டர் இல்லாத காரணத்தால் சுற்றி நடப்பவை அனைத்தும் காதுகள் வாங்கி உடன் மனதிற்குள் தினித்து விடும்.
அன்றும் அப்படித்தான் நான் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில், (தூக்கத்தில் அல்ல)இருந்த பொழுது, என்னை கடந்து சென்ற இருவர் விஜய் TV யின் தமிழ்க் கடவுள் முருகன் தொடர் பற்றி பேசிச் சென்றனர். அதை வழக்கம் போல் காதுகள் வாங்கி உள்ளே அனுப்பியது. என் மனது ஒரே தாவலில் எங்கோ சென்றது. தமிழுக்கு கடவுள் முருகன் என்றால் மற்ற மொழிகளுக்கெலாம் தனிக் கடவுள்கள் உள்ளார்களா?
அல்லது மற்ற கடவுளருக்கு தனி மொழிகள் உள்ளனவா?
பண்டை மதங்களெனில் பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் வைதீகம் என்ற பிராமண மதம். இதில் எவையும் பண்டைத் தமிழனின் மதமாகாது.
மலையிலும் காடுகளிலும் வேட்டையாடித் திரிந்த தமிழன் தனக்கு மொழியாக தமிழை உருவாக்கி தன் கடவுளாக முருகனையும் திருமாலையும் வழி பட்டான்.
“ கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது மூத்த குடி மட்டுமல்ல, தமிழ் மொழியும்தான். அதெப்படி மண் தோன்றுவதற்கு முன்னரே குடியும் மொழியும் தோன்ற முடியும்.
(கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல் தோன்றா
முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..). முடியும்தானே.
குறிஞ்சிக்கு சீயோன் என்ற முருகன் என்றால், முல்லைக்கு மால் என்ற திருமால். முக்கண்ணன், ஆதிரையான் என்ற சிவனுக்கு பிரபஞ்சத்தை காக்கும் கடமையிருந்ததால் தமிழ் நாட்டின் பொறுப்பை தன் மகனுக்கும் மைத்துனருக்கும் கொடுத்து விட்டார் போலும்.
தொல்காப்பியம் முதலான சங்க கால நூல்களே நம் முன்னோரின் தெய்வ வழிபாட்டை நமக்கு கூறிச்சென்றுள்ளன.
அதற்கு முன்னர் நம் பாட்டன் என்ன கூறி வழி பட்டான், எப்படியெலாம் ஆடிப் பாடி வழி பட்டான் என நாம் அறியோம்.
ஆதிரையான், முக்கண்ணன் என்றழைக்கப்பட்ட சிவனின் மகனான சீயோன் என்ற முருகனும், கரியோன் என்றழைக்கப்பட்ட மாலும், தமிழரின் வழிபாட்டு தெய்வங்களாய் இருந்தனர்.
முக்கண்ணன்( சிவன்) உமையோடு வசித்த இடமோ கயிலாயம், எனவே தமிழருக்கு அவன் ஒரு எட்டாத தெய்வம்.
கி்மு 5-3 நூற்றாண்டுகளில் வடநாட்டில் தோன்றிய பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் வைதீக மதம் என்ற பிராமண மதங்களின் தொடற்பற்ற புராதான மதமாகவே தமிழர் மதம் இருந்தது.
சுமார் கி மு 5-3 நூற்றாண்டுகளில்தான் மெல்ல மெல்ல தேவ பாஷை என்றழைக்கப் பட்ட சமஸ்கிருத மொழி தமிழ் நாட்டை எட்டிப் பார்த்தது. இறைவனால் ஓதப்பட்டு காற்றில் கரைந்து செவி வழியாக தலைமுறைகள் கடந்து வந்த வேதம் நம்மை அடைந்தது. அதை கால் நடையாக கை பிடித்து அழைத்து வந்தவர்கள் உடன் அழைத்து வந்ததுதான் வைதீக மதம் என்றழைக்கப்பட்ட பிராமண மதம்.
புதிதாக வரும் எதையும் அணைத்துக் கொள்ளும் பக்குவம் நம் மரபணுவில் அன்றே ஊறியிருந்தது.
கடவுளை வணங்க தேவ பாஷையை சுவீகரித்துக் கொண்டோம்.
அதைக் கற்கவும் ஓதவும் உரிமையை ஒரு குறிப்பிட்டவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம்.
வேதத்தை இறைவனாகப் பார்க்கத் துவங்கினோம்.
மொழி தடையில்லை. படிக்கச் சொன்னால்தானே கவலை.
வேதம் அனைவரும் ஓதுவதற்கில்லை- மகிழ்வுடன் ஒத்துக் கொண்டோம். இறைவனை நெருங்கி வழி பட அனைவர்க்கும் அனுமதியில்லை என்ற கட்டுப்பாட்டை தலை மேற் கொண்டோம்.
தீண்டாமையை வேதமாகக் கொண்டோம்.
வேள்வியில் ஆடு, மாடு, குதிரை பலியிடுவதை பயத்துடன் வணங்கினோம்.
வேள்வித் தீயை சிவனாகப் பார்த்தோம்.
சிவத்தை கொண்டாடினோம். இந்திரனுக்கு விழா எடுத்தோம்.
முனிகளும், வேதியரும் புலால் உண்ணல் இறைவனை அடையும் வழி எனக் கொண்டோம்.
நால் வகை சாதிப்பிரிவு அனைவரின் நலத்திற்கானதுதானே என ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோம்.
சூரியன், இந்திரன், வர்ணன் ஆகியோர்கள வழி படத் துவங்கினோம்.
அதே சமயம் முருகன், மால், கொற்றவை வழிபாட்டையும் தொடர்ந்தோம்.
இறைப்பணியை வேதியர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
வேதியரை மற்ற பிரிவினர் பார்த்துக் கொண்டனர்.
ஒவ்வொரு பணிக்கும் ஒரு பிரிவு. ஒருவரோடு ஒருவர் பரஸ்பர அன்பு, சிநேகிதம்.
அதே சமயம் பண்டை வழிபாடும் தொடர்ந்தன.
ஒழுங்காகத்தானே வாழ்ந்து கொண்டிருந்தனர்.
பின்னர் எப்படி வட நாட்டிலிருந்து பௌத்தம், சமணம், ஆசீவகம் மதங்கள் உள்ளே நுழைந்தன?. பார்ப்போம்.
(தொடரும்)
Well written.waiting for further episodes
LikeLike