பிச்சைக்காரன் ஓடியபடியே துரத்திக்கொண்டு வந்தான்..
“எனக்கெதுக்கு இந்த காசு?,,” மேலே தூக்கிப்போடாத குறை. காசைப் பிடித்திருந்த கையை நீட்டினான்.
“உனக்கு பிச்சைன்னு போட்டாச்சு.. அதை எதுக்கு நான் திரும்ப வாங்கணும்..” அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் முன்னே வேகமாக நடந்தேன். பிச்சை போட்டதுக்கு 100% கேஷ் பேக்கா?
“என்னிக்குமே பிச்சை போடாத ஆளு.. இன்னிக்குன்னு தேடிப்பிடித்து போட்டீங்க..” மனைவி என் நடையுடன் ஈடு கொடுக்கமுடியாமல் பையனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு பின் தொடர்ந்தாள். பையன் கையிலிருந்த பாப்கார்ன் பாக்கெட்டிலிருந்து சோளப் பொரி சாலையின் மேடுபள்ளக் குலுங்கலுக்கேற்ப துள்ளி வெளியில் குதித்துக்கொண்டிருந்தது. அதற்கும் சேர்த்து அழுதுகொண்டே வந்தான்.
பிச்சைக்காரன் ஒரு கட்டத்துக்கு மேல் தொடர விரும்பாமல் காசைத் தூக்கி விட்டெறிந்தான். அது உருண்டு ஓடி சாக்கடைக்குள் விழுந்தது.
பத்து ரூபாய் காயின் சார். குறைந்தபட்சம் ஒரு டீ வாங்கிக் குடிக்கலாம். இல்லாவிட்டால் அதே டீக்கடையில் இரண்டு தவிட்டு பிஸ்கெட் வாங்கி தொண்டை அடைக்க முழுங்கலாம்.
அப்பேர்ப்பட்ட காசை தூக்கிப் போடறதுன்னா.. ? இந்த பத்து ரூவா காசு என்ன பாவம் பண்ணிச்சு.. ?
எல்லா நாணயங்களையும் தராசுல வெச்சுப் பார்க்கும்போது பத்துரூபாய்க் காசு வெயிட்டான பார்ட்டிதான். நாலு காலும் சரியில்லாமல், லொடக்கு, லொடக்குனு ஆடுகிற சேர், டேபிள் அடியில் வெச்சா என்னம்மா தாங்கும் தெரியுமா? ஆனா, அந்த (தலை)கனம் பிடித்த காசுல என்னதான் பிரச்சனை? யாருக்குமே பிடிக்கமாட்டேங்குதே…
என் மூஞ்சியைப் பாத்தா பாங்குல வேல பாக்குறவன்னு எப்படித்தான் பூக்காரிக்கு தெரிஞ்சுதோன்னு சத்தியமாத் தெரியாது..
எப்பவும் பாக்கி சில்லறையைக் கொடுக்கும் போது, பத்து ரூபாய் காசு அதில் இல்லாமல் இருக்காது. போன தடவை ஐம்பது ரூபாய்க்கு அஞ்சு பத்து ரூபாய் காயினை கையில் தூக்கிக் கொடுத்ததுமே, தென் திசை தாழ்ந்து வடதிசை உயர்ந்ததுன்னு அகத்தியர் புராணத்தில சொல்ற மாதிரி , என்னுடைய வலதுகை வெயிட் தாங்காம தாழ்ந்தே போச்சு..
அதைப் பார்த்ததும் பூக்காரம்மாவிற்கு வில்லத்தனமான சிரிப்பு வேற.. இருக்காதா பின்னே? ரெண்டு மாதத்திற்கு முன்னால்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் மாதிரி ஒரு பெரிய லெக்சர் அடித்து , பத்து ரூபாய் காசுகளை வாங்கித்தான் ஆகவேண்டுமென்று சண்டை போட்டு அவள் தலையில் கட்டியிருந்தேன்.
பதிலுக்கு பதில், அடிக்கு அடி என்று வஞ்சம் தீர்த்தாள். அவளிடமிருந்து காசுகளை வாங்கி பர்சிற்குள் வைத்தால், கங்காருவின் அடிமடி போல திறந்து கொண்டு , அதன் குட்டிகள் மாதிரி உள்ளிருந்து காசுகள் எட்டிப் பார்த்தன. பர்சை மடித்து பாண்டின் பின்பக்கம் வைத்தால், ஒரு பக்கம் வீங்கியது மாதிரி பிரமை. சில்லறைகளை மட்டும் எடுத்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டால், நடக்கும் போது, ஜல் ஜல் என்று சலங்கை ஒலி எழுப்பி ஏதோ மாட்டுவண்டி வருகிறமாதிரி ரசூல்குட்டி எபெக்ட் வேறு. முன்னால் நடந்து போகிறவர்கள் மாட்டுவண்டிக்கு ஒதுங்குவது போல் ஜெர்க்காகி ரியாக்சன் கொடுக்கும் அளவிற்கு காமெடி..
நான் பத்துரூபா காசுகளின் எதிரியுமல்ல.. காதலனுமில்லை.. ஆனால் நான் எதிரியல்ல என்கிற செய்தி மட்டும் சுற்றுவட்டாரத்தில் கன்னாபின்னாவென்று பரவி, பத்துரூபாய் காசுகள் என் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. அரசு வங்கியில் வேலை பார்க்கிறேன் என்பது இரண்டாவது வீக்னஸ்.
பக்கத்துவீட்டு மாமி, கை நிறைய பத்துரூபாய் காசுகளைக் கொடுத்துவிட்டு, ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொண்டு போனது ஒரு சாம்பிள்தான்.
எனது பில்டிங்கில் குடியிருக்கிறவர்கள், அயர்ன் செய்து தருகிற ராஜேந்திரன், வாட்ச்மேன் என்று பட்டியல் வெகு நீளம்.
“உங்களுக்கென்ன சார்.. பேங்குல கொடுத்து ஈசியா மாத்திக்கமுடியும். உங்களை விட்டா இதெல்லாம் கோயில் உண்டியல்லதான் போடமுடியும்” என்று செண்டிமெண்டாகப் பேசி என்னையே கோயில் உண்டியலாக மாற்றி, அவர்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டார்கள்.
இந்த சில்லறைத்தனமான பிரச்சனையிலிருந்து தப்பிக்க தீர்வுதான் என்ன?
போலி ஐடியின் பெயரில் நிதியமைச்சர், ரிசர்வ் பேங்க் கவர்னர் எல்லோருக்கும் டிவிட்டரில் சிலபல ஐடியாக்களைக் கீச்சினேன். பதிலே இல்லை.. கடிதம் எழுதினாலாவது ‘ உங்கள் யோசனை பரிசீலனையில் உள்ளது.. “ என்றாவது பதில் கடிதம் போடுவார்கள். கீச்சிற்கு பதில் கீச்செதுவும் இல்லை. கன்னாபின்னாவென்று ஏதாவது எழுதினால் மட்டும் , போலீஸ் படையுடன் கீசகவதம் செய்ய வந்துவிடுவார்கள்.
முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த இருபது பைசா பித்தளைக்காசு பார்த்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில்தான் புழக்கத்திலிருந்தன. அதற்கப்புறம், தனலட்சுமி, குபேரலட்சுமியின் படங்களில், அவர்களது கைகளிலிருந்து பெருகி ஓடும் பொற்காசுகளாக அவற்றை ஒட்டிவைத்த மோகத்தில் அவை காணாமலேயே போய்விட்டன. அவற்றை மொத்தமாக வாங்கி உருக்கியும் விட்டார்கள் என்பது மற்றொரு உருக்கமான செய்தி.
அதைப் போல, பத்துரூபாய் காசிலும் ஏதாவது ட்ரெண்டிங்காக ஏதாவது செய்தால்தான் என்ன? இருபது பைசா காசின் ஒருபக்கத்தில் தாமரைப் பூ இருந்தது எனது யோசனைக்கு மாபெரும் பின்னடைவாகப் போயிற்று. இருக்கிற அரசியல் குழப்பங்கள் போதாதா?
ஏன்ன செய்யலாம்.. என்னதான் செய்யமுடியும் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எதிர்த்த பிளாட் ஓனர் பிச்சுமணி கதவைத்தட்டினார்.
எதற்காக வந்திருக்கிறாரென்று தெரிந்திருந்தும், “என்ன விஷயம் சார்?” என்றேன்.
சாவதானமாக உள்ளே வந்து , சோபாவில் அமர்ந்து பில்டிங்கில் நடக்கும் தலைப்பு செய்திகளைப் படிக்க ஆரம்பித்தார்.
அவர் கடைசியில் எங்கு போய் முடிப்பார் என்று எனக்கு தெரியும்.
“எவ்வளவு காயின் கொண்டு வந்திருக்கீங்க..?” என்றேன் கடுப்புடன். முகத்தில் சிரிப்புடன்.
“அதையேங் கேக்குறீங்க.. உங்களை நாங்க நிறைய டிஸ்டர்ப் பண்றோம்..” என்றார் மன்னிப்பு கேட்கும் தொனியில். உண்மையில், இந்த மனிதர்தான் என்னைப் பற்றி பில்டிங் முழுக்க சொல்லி மாட்டிவிட்டவர். யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். பிச்சுமணி மட்டும் நோ..
“பரவாயில்லை… சொல்லுங்க..” என்றேன்.
“அதையே வாங்கமாட்டேங்கறாங்க.. இப்போ புதுசா இது வேற.. “ என்றபடி கையை நீட்டினார்.
பளபளவென்று புதிய 20 ரூபா நாணயங்கள் என்னைப் பார்த்து இளித்தன.
இனி நான் ஓவர்டைம்ல ஒர்க்பண்ணனும் போலிருக்கே.. தலை சுற்றியது.
வாசலில் நிற்கவைத்து, கதவை அவரது முகத்தோடு வைத்து சாத்தலாம் போலிருந்தது.
ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். இப்போ பிச்சுமணியை பிச்சுப் பிச்சு போடப் போகிறேன்.. இனி எவனும் இதுமாதிரி வரக்கூடாது.
முதலில் தூண்டிலைப் போடுவோம்…
“கரெட்டுதான் சார். இருபது ரூபா காயினை எவன் வாங்குவான்..” என்றேன்.
“சரியா சொன்னீங்க.. பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியமாட்டேங்குது. சார்..” எனது தூண்டிலில் மீன் சரியாக மாட்டியது.
“எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை.. அப்படியே கொடுங்க சார். இதுக்கு பதிலா பத்து ரூபா காயினா கொடுக்கிறேன்..” என்றபடி ரூமிற்குள் புகுந்தேன்.
பிச்சுமணி தலை தெறிக்க வெளியில் ஓடினார்.
# # #