
பக்கக்குறி வைக்க மறந்து
படித்த பக்கங்களையே படித்தல்
சில பக்கங்களுக்குள் மனம்
சிக்கிக் கொள்வதால் தான்
அத்தகைய பக்கங்கள்
எத்தகையதாய் இருக்கலாம்
நெடுங்கதையோ சிறுகதையோ
நிகழ்வுகள் நினைவூட்டி விடும்.
புரியா எழுத்தெனில், தூங்கி விழுந்து
புத்தகமும் எங்கோ விழுந்திருக்கும்.
தலைமுறைகளின் தடயங்கள்
தேக்கி வைக்கப்பட்ட மரபணு போல்
பக்கங்களில் பரவிக் கிடக்கும்
சொற்பின்னல்களுக்குள் சிக்கி
காமவயப்பட்டது போல் உறவாடிக்
களிக்கும் சுகம் தந்து
பக்கங்கள் நகராமல் நிற்க
படிக்கும் மனம் கிளைத்து விரிந்து
மேய்க்கும் சிறுவனை
ஏய்த்துத் திரியும் மாடு போல்
எதிர்பாரா விடுதலைக் கிளர்ச்சியில்
எங்கெங்கோ திளைத்துத் திரிவதை
வெயிலாடி மகிழும் பிள்ளையை
நிழலமர்ந்து ரசிக்கும் அன்னை போல்
ஒட்டக் குடித்து முடித்த பின்னும்
முட்டி முட்டிக் காம்பு சுவைக்கும் கன்று போல்
படித்த பக்கங்களையே படிக்க உதவும்
மறந்து போன பக்கக் குறிக்கு
நன்றி சொல்வது தானே
நல்ல வாசகப் பண்பு…