‘அம்மா பங்கஜம் குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா தாகமாயிருக்கு’ என்ற பார்வதியின் குரலுக்கு ‘வேறு வேலையே இல்லை, பத்து நிமிஷம் உட்காரக் கூடாதே’ என்று காலையிலிருந்து சும்மாவே இருந்த பங்கஜம் அலுத்துக்கொண்டே தண்ணீரை எடுத்து வந்து லொட்டென்று டம்ளரை வைக்க பாதித் தண்ணீர் கீழே சிந்தியது. பார்வதி பாவம் பார்த்து நடக்க வேண்டும்.
பங்கஜத்தின் கணவன் சுந்தரின் பெரியம்மாவிற்கு குழந்தைகள் இல்லை. கணவர் விட்டுப் போன பின் தன் தங்கையும் இறந்து விட்டதால் அவளுடைய மகன் சுந்தரைப் பார்த்துக் கொள்ள அவனைத் தன் சொந்த வீட்டிற்கு வரவழைத்து விட்டாள். அவனும் இவளையேத் தன் தாய் போல பார்த்தான். சிறிது நாளில் அவனுக்குக் கல்யாணமும் செய்து வைத்தாள். பங்கஜம் கல்யாணம் ஆகி வந்த புதிதில் பெரியம்மாவை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். அதனால் தன் வீட்டை சுந்தரின் பெயருக்கு மாற்றி விட்டாள். ஒரு நாள் மின்சாரக் கட்டணம் கட்டும்போதுதான் பங்கஜத்திற்கு வீடு தன் கணவர் சுந்தர் பெயரில் இருப்பது தெரிய வந்தது. அவ்ளோதான் பெரியம்மாவை பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்டாள். வேளா வேளைக்கு சாப்பாடு போடுவதில்லை, கூப்பிட்ட குரலுக்கு வருவதில்லை, அலட்சியம்தான். எப்போதாவது கிடைக்கும் பழைய சோறு தான். அதுவும் சிறிதளவுதான்.
ஒரு நாள் பங்கஜம் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் போன போது அங்கே ஒரு சாமியார் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். ‘நமது முன்னோர்களை வருடத்தில் ஒரு நாளாவது கும்பிட வேண்டும், எல்லாவிதமான பதார்த்தங்களும் செய்து படையல் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களுக்கும் மரியாதை செய்து சாப்பாடு போட்டு குளிர வைக்க வேண்டும், பெரியவர்களது ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் வேண்டும்’ என்று முன்னோர்களின் பெருமையைச் சொன்னார். இதைக் கேட்ட பங்கஜத்தின் மனதில் ஒரு உறுதி உண்டாயிற்று. நாமும் இனி இதைக் கடைப்பிடிக்க வேண்டும். உடனே இதை அமுல் படுத்த வேண்டும். வீட்டிற்கு வந்து சுந்தரிடம் சொன்ன போது அவனும் உடனே ஒத்துக் கொண்டான். அவனுக்கும் தெரியும் பெரியம்மாவிற்கு சரியான சாப்பாடு கிடைப்பதில்லை, பங்கஜத்திடம் சண்டை போட்டும் பயனில்லை. அதனால் இந்த பூஜையில் அவளுக்கும் நல்ல சாப்பாடாவது கிடைக்குமே என்ற நப்பாசைதான்.
ஆயிற்று அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது. சமையல் தடபுடலாக நடக்க ஆரம்பித்தது. பெரியம்மாவிற்கு வீட்டில் ஏதோ விசேஷம் என்று தெரிந்தது. சமையல் வாசனை பின் ரூமிலிருந்த பெரியம்மாவின் மூக்கை எட்டியது. காலடி நடமாட்டத்தால் ஆள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது தெரிந்தது. அவளுக்கு மனதில் ஓர் உற்சாகம் பீரிட்டது. நேற்று பழைய சாதம் மிகவும் கொஞ்சமாக இருந்ததால் இன்று பசி அதிகமாகவே இருக்கிறது. இந்த வாசனைகள் வேறு பசியை இன்னும் தூக்குகின்றன. ஆகா வெல்ல தண்ணீர், சுக்கு வாசனை, ஓ பாயசம் போலிருக்கிறது. எண்ணைக் காயும் வாசம் அப்பளாம் வடை சுடுகிற மாதிரி இருக்கிறது. ஆகா தேங்காய் அரைத்து விடும் வாசம். அரைத்து விட்ட சாம்பார். அவளுக்கு சமையல் நன்றாகத் தெரியுமாதலால் வாசனையை வைத்தே அந்த பதார்த்தத்தைக் கண்டு பிடுத்து விடுகிறாள். இன்னும் கொஞ்சம் நாழி எல்லாம் சாப்பிடலாம். இத்தனை செய்வதால் பங்கஜம் நிச்சயம் கொஞ்சமாவது தருவாள் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. வாத்தியார் மந்திரம் ஓதுவதும் காதில் விழுகிறது. கற்பூர வாசனை ஆரத்தி நடக்கிறது. பூஜை முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம் நேரம்தான். கரண்டிகளின் சப்தம். இங்கே வரவில்லை. ஒரு வேளை சாமிமார்கள் முதலில் சாப்பிடுகிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டாள். இன்னும் நேரம் கடந்து விட்டது. இன்னமும் பங்கஜத்தைக் காணவில்லை. அட விருந்தினர்கள் சாப்பிட வேண்டாமா! அப்புறம் தானே வீட்டில் உள்ளவர்கள். வயிரே பொறுத்துக் கொள். பாயசம் வடையும் தருகிறேன். மணி என்ன என்று தெரியவில்லை. ஆனால் நேரம் கடந்து போகிறதே! இப்போது பங்கஜம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இதற்குப் பிறகு எனக்குத் தருவாள். இது என்ன இருட்டி விட்டது. சப்தம் ஒன்றும் கேட்கவில்லை. பங்கஜம் மறந்து விட்டாளா! சுந்தருக்குமா என் ஞாபகம் இல்லை. இல்லை பங்கஜம் ஏதாவது சொல்லியிருப்பாள் நான் சாப்பிட்டாகி விட்டது என்று. இப்போது என்ன செய்வது. கால்களால் நடக்க முடியாததால் கீழே உட்கார்ந்து மெல்லத் தவழ்ந்து வெளியில் வந்து பார்த்தாள். ஓரத்தில் எல்லோரும் சாப்பிட்ட வாழை இலைகள் கிடந்தன.
பெரியம்மா மெதுவாக சப்தம் போடாமல் அதிலிருந்து பதார்த்தங்களை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்!