பொன்னியின் செல்வன் – ஒரு பார்வை   – எஸ். கௌரிசங்கர்

பொன்னியின் செல்வன் – எனக்கு அறிமுகம்:

சித்திரக்கதை: பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - புது வெள்ளம் (Ponniyin selvan art work)மாதவிப் பந்தல்: புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!Ponniyin Selvan Shelfபொன்னியின் செல்வன், மணியனின் ஓவியங்களுடன் (ஐந்து பாகங்கள்) [Ponniyin Selvan with Maniam Drawings (Parts 5)] - Kalki • BookLikes

அது 1968 ம் வருஷம்.  நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் ‘கல்கி’ வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வாரம் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியானது. “ஆயிரம் ஆயிரம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடராக கல்கியில் வெளியாகிறது” என்பதுதான் அந்த அறிவிப்பு. எங்கள் வீட்டில் என் மூத்த சகோதரர் ஒரு புத்தகப் பிரியர். நிறைய படிப்பார். நூலகத்திலிருந்து வாங்கி வந்து நாவல்களும் மற்ற பலவகையான புத்தகங்களும் படிப்பது அவர் வழக்கம். என் இரு மூத்த சகோதரிகளும் நிறைய தமிழ் புத்தகங்கள் படிப்பார்கள். என் மூத்தவர் பலமுறை பொன்னியின் செல்வனைப் பற்றித் தன் சகோதரிகளுடன் விவாதிப்பதை நான் கேட்டிருக்கிறேன். கல்கியின் எழுத்துத் திறமை, பாத்திரப் படைப்பு, கதை சொல்லும் விதம், கதையின் முடிவு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பேசிக் கொள்வார்கள். பொன்னியின் செல்வனை எப்படியாவது படித்து விட வேண்டும் என்கிற ஆசையை என் மனத்தில் தூண்டி விட்டவர்கள் அவர்கள்தான். அதனால் கல்கியில் இந்த புதிய அறிவிப்பு வந்தவுடன் நான் பரவசமானேன்.

கல்கியில் முதல் பாகம் (புது வெள்ளம்) முதல் அத்தியாயத்தில் “ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்….” என்று ஆரம்பித்ததைப் படித்துவிட்டு இதுவரை இல்லாத ஒரு புது உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். வினுவின் வண்ணப் படங்களும் வீர நாராயண ஏரி வர்ணனையும் ஆடிப்பெருக்கும் வந்தியத்தேவன் அறிமுகமும் – கல்கியே எழுதியது போல – எங்கோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் என்னைக் கொண்டு சென்றன. சித்திரத் தொடர்கதைகளும், வாண்டுமாமா கதைகளும் படித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு புதிய வகை எழுத்துலகு அறிமுகமானது. அன்று முதல் கல்கி வெளிவரும் வியாழக் கிழமைகளில் வாசலிலேயே காத்திருந்து பத்திரிகை வந்தவுடன் எடுத்துக் கொண்டு ஓடி ஒளிந்து, அந்த வார அத்தியாயங்களை படித்து முடித்த பின்னால்தான் குளியல், சாப்பாடு, பள்ளிக்குக் கிளம்புவது வழக்கமாயிற்று. அதற்காக பலமுறை அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

இரண்டாம் பாகம் பாதி வெளிவந்த நிலையில், என் பள்ளித் தோழன் ஒருவன் மூன்றாம் பாகம் தன் வீட்டில் இருப்பதாகச் சொல்லி, கொண்டு வந்து கொடுத்தான். இரண்டு நாளில் படித்து முடித்து திருப்பிக் கொடுத்து விட்டேன். இனி கதையை வாராவாரம் படித்துக் கொண்டு வர பொறுமையில்லாமல் போனது. ஒருநாள் எங்கள் பள்ளியில் இருந்த நூலகத்திற்குப் போய், அங்கிருந்த ஆசிரியரிடம், “பொன்னியின் செல்வன்” நான்காம் பாகம் வேண்டுமென்றேன். அவர் என்னை ஆச்சர்யத்துடன் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “நீ அதெல்லாம் படிக்க முடியாது. சின்னப் பசங்க புத்தகம் தரேன். கொண்டு போய் படி” என்றார். நான் உடனே, “சார்! நான் ஏற்கனவே மூன்று பாகம் படித்து முடித்து விட்டேன்” என்றேன். மீண்டும் ஆச்சரியப்பட்ட அவர், “சரி! நான்காம் பாகம் தரேன். ஒரு வாரத்தில் பத்திரமாய் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லி புத்தகத்தைக் கொடுத்தார். மூன்று நாளில் படித்துவிட்டு திருப்பிக் கொடுத்து விட்டு, ”ஐந்தாம் பாகம் வேண்டும்” என்றேன். “ஏய்! நீ ஸ்கூல் பாடமே படிப்பதில்லையா?சரி, தரேன். சீக்கிரம் திருப்பி விடு” என்று புன்னகையோடு சொன்னார். அதையும் ஐந்து நாளில் படித்து முடித்து விட்டு திருப்பிக் கொடுத்து விட்டேன். அவருக்குப் பெரிய ஆச்சரியமும் சந்தோஷமும். “சாண்டில்யன் நாவல் இருக்குமா?” என்று கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “அது இப்போ இந்த வயசிலே வேண்டாம். காலேஜ் போனவுடன் படி” என்று சொல்லி முதுகில் தட்டித் திருப்பி அனுப்பி வைத்தார்.

தீவிரமான நல்ல தமிழ் எழுத்துக்கு நான் அறிமுகமானது கல்கியுடந்தான். அவரும்  என்னைப் போல மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதால் சொந்த ஊர் அபிமானமும் சேர்ந்து கொண்டது. என் பதின்மூன்றாம் வயதில் ஆரம்பித்து இன்று வரை சுமார் நாற்பது முறை முழு நாவலையும் படித்துவிட்டேன். இன்னும் அந்த தாகம் குறையவில்லை. இப்பொழுதும், படிப்பதற்கு வேறு புத்தகம் இல்லையென்றால், பொன்னியின் செல்வனை எடுத்து வைத்துக் கொண்டு எனக்குப் பிடித்த அத்தியாயங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். அலுக்கவேயில்லை. என்னைப் போலவே பொன்னியின் செல்வனின் மீது காதல் கொண்டு அதை திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் ஏராளம். ஒரு காலத்தில் எல்லோர் வீடுகளிலும், புத்தக அலமாரி ஒன்று இருந்தால் அதில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இல்லாமல் இருக்காது. அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை வாராவாரம் பிரித்தெடுத்து பின்னர் அதை “பைண்ட்” செய்து வைத்திருப்பார்கள். என்னிடம் இருக்கும் பொ.செ. அப்படித்தான். இப்போது பல்வேறு பதிப்பாளர்களும் பலவித அளவுகளில் பொ.செ. புத்தகத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், பழைய வார இதழ்களில் இருந்த மணியன், பின்னால் அவரைப் பின்பற்றி வினு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடன் கூடிய அந்தப் புத்தகங்களே படிக்கப் பிடிக்கிறது.

பொன்னியின் செல்வன்-வாசகர் காதல்:

பொன்னியின் செல்வன் இப்போதும் புத்தகக் கண்காட்சிகளில் மிக அதிகமாக விற்கும் தமிழ் நாவல். இன்று எழுபது வருடங்கள் ஆகியும் அதன் வீச்சு குறையவேயில்லை. சித்திரத் தொடர்கதை,  இயங்கும் நிழலுருவ தொடர் (Animation serial) என்று பல்வேறு வடிவங்களையும் கூட பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த நாவல். இப்போது ஒரு முழு நீளத் திரைப்படமாக (இரண்டு பாகங்களாக) வெளிவர இருக்கும் நிலையில், கதையைப் பற்றி அறிந்து கொள்ள பொ.செ. புத்தக விற்பனை இன்னும் சூடு பிடித்திருப்பதாகத் தகவல். பொன்னியின் செல்வன் இப்படி தமிழ் வாசகர்களைக் கவர்ந்து கட்டிப் போட்டிருப்பதற்கு என்ன காரணம்? எனக்குத் தோன்றிய சில காரணங்கள்:

  1. கல்கிதான் தமிழில் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர். அவருக்கு முன்னால் தமிழில் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொ.செ. நாவலும் “பார்த்திபன் கனவு”,”சிவகாமியின் சபதம்” இரண்டையும் அடுத்து கல்கியின் மூன்றாவது சரித்திர நாவல்தான். ஆனாலும், மற்ற இரண்டையும் விட பொ.செ. புகழ் பெற்றதற்குக் காரணம், சோழ வரலாற்றின் மீது தமிழருக்கு இருந்த பெருமையும் பற்றுதலும்தான் என்பது என் முடிவு.
  2. இரண்டாவதாக, கல்கியின் பாத்திரப் படைப்பு. சோழப் பேரரசின் நாயகனாக, நாவலுக்குப் பெயர் கொடுத்தவனாக, பின்னாளில் “இராஜராஜ சோழனாக” பெயர் பெறப் போகும் அருள்மொழியை விடுத்து, யாரும் அறியாத வாணர் குல வீரனான வந்தியத்தேவனை கதாநாயகனாக அவர் படைத்த விதம் ஆச்சர்யப்பட வைத்தது. உண்மையில் பொ.செ. நாவல் வந்திராவிட்டால் வந்தியத்தேவன் என்றொரு இளவரசன் சரித்திரத்தில் இருந்ததாக தெரிய வந்திருக்குமா என்பது சந்தேகமே. மேலும் கதாநாயகன் வீரனாக இருந்தாலும் மற்ற சாதாரண மனிதரைப் போல அவசரக் குடுக்கையாகவும், எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படாதவனாகவும் சித்தரித்தது அனைவரையும் கவர்ந்தது. அடுத்து, குந்தவை, நந்தினி பாத்திரங்கள். அழகிலும் குணத்திலும் இருவரையும் வேறுபடுத்திக் காட்டிய விதம், நந்தினியின் சூழ்ச்சிகள், அதை நிறைவேற்ற அவள் செய்த செயல்கள் போன்றவை கல்கியின் அற்புத எழுத்தோவியங்கள். வானதி, அநிருத்தர், பழுவேட்டரையர், சுந்தர சோழர், செம்பியன் மாதேவி போன்ற சரித்திரத்தில் கண்டுள்ள பாத்திரங்களோடு, ஆழ்வார்கடியான், பூங்குழலி, மணிமேகலை, மந்தாகினி, கந்தமாறன் போன்ற கற்பனைப் பாத்திரங்களும் கதைக்கு வலுவூட்டும் மறக்க முடியாத பாத்திரங்கள். ஈழத்து மந்தாகினியை சிங்கள நாச்சியாராக ஆக்கி, தஞ்சையில் உள்ள சிதிலமடைந்த “சிங்காச்சியார் கோவில்” தெய்வமாக்கியது அவரது படைப்பின் உச்ச கட்டம்.
  3. மூன்றாவது கல்கியின் கதை சொல்லும் விதம். ஒரு குழந்தையை உட்கார வைத்து கதை சொல்வது போல எளிய நடையில் அவர் கதை சொல்லிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இன்றைக்கு திரைப்படங்களில் அதிகம் பேசப்படுகிற “திரைக் கதை” (Screen play) அமைக்கும் வித்தையை அன்றே நாவலில் செய்து காட்டியவர் கல்கி. கதையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு இன்னொரு இடத்திற்குத் தாவி, அங்கிருந்து கதையைத் தொடர்ந்து கொண்டு சென்று, மீண்டும் அதை முதலில் சொல்லிய இடத்தோட சேர்க்கும் கலை அவருக்கே கை வந்த கலை.
  4. நான்காவது கல்கியின் கற்பனைத் திறன். பொ.செ. ஆங்கில நாவல்கள் போல ஒரே மூச்சில் முழுவதுமாக எழுதப்பட்ட நாவல் அல்ல. சுமார் ஐந்து வருடங்கள், வாராவாரம் அத்தியாயம் அத்தியாயமாக எழுதப்பட்ட கதை. அப்படி எழுதிய கதையில் முதல் பாகம் ஒன்பதாம் அத்தியாயத்தில் ஒரு வரியில் கந்தமாறன் தங்கையின் பெயர் ”மணிமேகலை” என்று சொல்லியிருப்பார். அந்தப் பாத்திரம் சுமார் மூன்று வருடம் கழித்து நான்காம் பாகத்தில் வந்துதான் நேரில் தோன்றுவாள். அதே போல, இரண்டாம் பாகத்தில் சிறையில் இருக்கும் ”பைத்தியக்காரன்” என்றொரு பாத்திரத்தை அறிமுகப் படுத்திவிட்டு, பின்னர் ஐந்தாம் பாகத்தில்தான் அவன் பெயர் கருத்திருமன் என்று காட்டி அவனைக் கதையின் ஒரு முக்கிய மனிதனாக ஆக்குவார் கல்கி. ஆகவே, ஐந்து வருடத் தொடரில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தையும் முன்கூட்டியே நிச்சயித்துவிட்டு, கதைப் போக்கை முழுவதுமாகத் தீர்மானித்து விட்டே கதையை எழுதத் தொடங்கியிருக்கிறார் என்பது கல்கியின் அபார கற்பனைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
  5. ஐந்தாவது கல்கியின் விரசமில்லாத எளிய தமிழ் நடை. எழுத்தில் கதை நடந்த காலத்துக்குப் பொருத்தமான சொற்களை மட்டுமே அவர் பயன்படுத்தினார் (நாரீமணி, அம்மணி, பிராயம் போன்றவை). மற்ற நாவல்களைப் போலவே பொன்னியின் செல்வன் நாவலிலும் எத்தனையோ பெண் பாத்திரங்கள் உண்டு. அவர்களின் அழகை அவர் எழுத்தில் வர்ணித்த விதம் கொஞ்சமும் விரசமில்லாதது. “கல்கி பெண்களை அவர்களது கழுத்துக்குக் கீழே வர்ணித்ததே இல்லை” என்று சொல்லும் விதமாக விரசமும் சிருங்கார ரசமும் ததும்பும் எழுத்துக்களை அவர் எழுதியதே இல்லை.

பொன்னியின் செல்வன்-சரித்திரச் சான்றுகள்:

திரு. நீலகண்ட சாஸ்திரியார், திரு. சதாசிவ பண்டாரத்தார் ஆகிய ஆசிரியர்களின் பிற்கால சோழர்களின் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளை அடியொற்றியே கல்கி தன் கதையைப் படைத்தார் என்று அறியப்படுகிறது. அவரே எழுதியது போல, “வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்” என்ற திருவாலங்காட்டு செப்பேடுகளின் குறிப்பை ஒட்டி, ஆதித்த கரிகாலன் துர்மரணம் அடைந்ததும், அருள்மொழி வர்மன் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசப் பதவியை தன் சிற்றப்பனுக்கு தியாகம் செய்தான் என்பதும்தான் பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படை. அதை ஒட்டியே கல்கி சரித்திர பாத்திரங்களையும் தன் கற்பனைப் பாத்திரங்களையும் படைத்தார் என்பது தெளிவு. கரிகாலன் மரணம் யாரால் நிகழ்ந்தது என்பதை சொல்லாமலே விட்டு நாவலின் பின்னுரையில் அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டுமே சொல்லிவிட்டு மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டுவிட்டார் கல்கி. அதனால் பின்னால் வந்த  எழுத்தாளர்களான விக்கிரமன் (நந்தி புரத்து நாயகி), பாலகுமாரன் (உடையார்), காலச்சக்கரம் நரசிம்மன் போன்றோர் தத்தம் வழியிலே அந்த இரகசியத்துக்கு முடிவைச் சொல்லி எழுதியுள்ளனர். கல்கியே பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து சோழர் வரலாற்றை வைத்து இன்னொரு பெரிய நாவல் எழுதியிருந்தால் நமக்கு அந்த விடை கிடைத்திருக்கலாம். அப்படி நிகழாமல் போனது நமது துரதிருஷ்டமே.

பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கதை வரலாற்று சான்றுகளின்படி முழுவதும் சரியானதா, முடிவு பொருத்தமானதா என்று சில கேள்விகளும் சிலரால் எழுப்பப்பட்டிருக்கின்றன.   நியாயமாக தனக்கு வரவேண்டிய அரசாட்சிக்கு ஆதித்த கரிகாலன் தடையாய் இருந்ததால், மதுராந்தக உத்தமச் சோழன் ஆதித்த கரிகாலனை சதி செய்து கொன்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக, அதை மறுத்து உத்தமச் சோழன் குற்றமற்றவன் என்று இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. இராஜராஜன் தான் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில், ஆதித்தனின் கொலைக்கு காரணமானவர்களாக இருந்த சோமன், ரவிதாசன், அவன் தம்பி பரமேஸ்வரன், அவர்களுக்கு உதவி செய்த மலையூரான் என்ற ரேவதாச கிரமவித்தன் போன்றோரைக் கைது செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு கடத்தினான் என்ற செய்தியை உடையார்குடி அனந்தீஸ்வரம் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்தச் செய்தியை கல்கியும் பொன்னியின் செல்வன் முடிவுரையில் குறித்திருக்கிறார். மேலும் நாவலில் இவர்கள் பெயரையே, சோமன் சாம்பவன், ரவிதாசன், பரமேஸ்வரன் என்ற தேவராளன், ரேவதாச கிரமவித்தன் என்று குறிப்பிட்டு அவர்களை வீரபாண்டியனின் ஆபத்துதவி வீரர்கள்களாகக் காட்டியிருக்கிறார். ஆனால், அப்படி சதி செய்தவர்கள், சேரநாட்டு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படவில்லை என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. ”கிரமம்” என்பது வேதபாடப் பயிற்சியின் ஒரு நிலை என்றும் அதில் பயின்று தேர்ந்தவர்கள் ”கிரமவித்தன்” என்று அழைக்கப் படுவார்கள் என்றும் அறிகிறோம்.  அப்படியென்றால் ரேவதாசனும் வேதம் பயின்ற ஒரு அந்தணன் என்றே கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில், படகோட்டி முருகைய்யன் மனைவி ராக்கம்மா ரேவதாசனின் மகள் என்றும் அவளும் சதியில் ஈடுபட்டவள் என்றும் சொல்லியிருப்பார் கல்கி. அந்தணர் ஒருவரின் மகள் படகோட்டி ஒருவரை மணந்து கொள்வதென்பது (அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) நடக்க இயலாததாகத் தோன்றுகிறது. ஆகவே, கல்கி தன் கதையில் சதிகாரர்களின் உண்மை நிலையை சரிவர கூறவில்லை என்று கொள்ளவும் இடமிருக்கிறது.

பொன்னியின் செல்வன் –திரைப்படம்/நாடகம்:

பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களின் அன்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடந்தன.  திரு. எம்.ஜிஆர் முதலில் அதை முயற்சித்து பின்னர் கைவிட்டார். இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்களும் முன்பு இருமுறை முயற்சித்ததாகச் சொல்லி இருக்கிறார். ஜெமினியின் வெற்றிப் படமான ”வஞ்சிக் கோட்டை வாலிபன்” திரைப்படத்திலும் பத்மினி, வைஜயந்திமாலா பாத்திரங்களை “குந்தவை, நந்தினி” போன்றே     எஸ். எஸ். வாசன் அமைத்தார் என்று கூட சொல்வதுண்டு. கல்கியின் “பார்த்திபன் கனவு” நாவல் திரைப் படமாக்கப்பட்டு 1960ல் வெளிவந்தது. பெரிய கலைஞர்கள், சிறந்த வசனம், நல்ல இசை எல்லாம் நிறைந்திருந்திருந்தும் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதனால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சிகள் பல ஆரம்பக் கட்டத்திலேயே நின்று போயின. ஆனாலும், பல்லாண்டுகளாக கல்கி வாசகர்கள் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் திரைக்கதை எப்படி அமைய வேண்டும், யார் யார் நடிக்கவேண்டும், கதை நிகழ்ச்சிகளை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவரவர் கற்பனையில் தாமாகவே தங்கள் மனத்திரையில் படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ’எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ்’ நிறுவனத்தினருக்காக, ”மாஜிக் லாண்ட்ர்ன்” (Magic Lantern) நாடகக் குழுவினர் பொன்னியின் செல்வனை பிரமாண்டமான முறையில் மேடையேற்றினார்கள். வேறு சில நாடகக் குழுக்களும் பொன்னியின் செல்வனை தங்கள் வழியில் மேடை நாடகமாக இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், பொன்னியின் செல்வன் கதை நாடகமாக/திரைப்படமாக கொண்டுவர ஏற்ற நாவல் இல்லை என்பதுதான் என் கருத்து. பொன்னியின் செல்வன் முழுக் கதையையும் மேடையிலோ அல்லது (ஒன்று அல்லது இரண்டு பாகமாக) திரைப்படங்களிலோ சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. சரித்திரக் கதைகளில் பெரும் பங்கு வகிப்பது வீரமும் காதலும்தான்.  பொன்னியின் செல்வனில் காதல் நிறைய உண்டு. ஆனால் படையெடுப்பு, போர் என்பது எதுவும் கிடையாது. சிறு கத்திச் சண்டைகள்தான் உண்டு. கதையில் சொல்லப்படும் விஜயாலயன் நடத்திய போர்கள், இராஜாதித்தன் வீர மரணம், ஆதித்த கரிகாலன் ஈடுபட்ட போர்கள் எல்லாம் கதை நடக்கும் காலத்திற்கு முற்பட்டு நடந்த போர்கள். நாவலைப் பெரும்பாலும், வாணர் குல வீரன் வந்தியத்தேவனின் சோழ, ஈழ நாட்டுப் பயண வரலாறு போலவே கல்கி அமைத்திருக்கிறார். உண்மையில், கல்கியின் ’சிவகாமியின் சபதம்’ திரைப்படமாகத் திரையில் கொண்டு வர ஏற்ற கதை. அந்தக் கதை, காதல், வீரம், படையெடுப்பு, போர், சிற்பக்கலை, ஆன்மீகம், இசை, நாட்டியம், அரசியல் சூழ்ச்சிகள், காதல் தோல்வி என்று ஒரு திரைப் படத்திற்குத் தேவையான எல்லா சிறப்பு அம்சங்களும் ஒன்றாக அமைந்த ஒரு முழுக்கதை. பொன்னியின் செல்வன் இன்றைய காலத்தில் தொலைக் காட்சிகளில் வரும் ”மெகா” தொடர்களுக்கு ஏற்ற கதை என்று சொல்லலாம். கதையை சுருக்காமல் முழுவதையும் அந்த வகை நெடுந்தொடரிலே சொல்லிவிட முடியும்.  தொலைக் காட்சித் தொடராக பொன்னியின் செல்வனைக் கொண்டு வரவும் சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அவையும் முழுமை பெறவில்லை.  நாடக, தொலைக்காட்சி நடிகரும் இயக்குனருமான திரு. பாம்பே கண்ணன் அவர்கள், பெரும் முயற்சி செய்து பொன்னியின் செல்வன் முழு நாவலையும் பல்வேறு கலைஞர்களின் குரல்களில் ஒரு ஒலிப்புத்தகமாக (Audio book) வெளிக் கொணர்ந்தார். அதைத் தொடர்ந்து, நாவலை ஒரு வலைத் தொடராக (Web serial) கொண்டு வரவும் அவர் முயற்சித்தார். நான் அந்த வலைத் தொடருக்கு திரைக்கதை, உரையாடல்களை எழுதியிருந்தேன். ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டு முன்னோட்டம் இடப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி முழுமை பெறாமல் கைவிடப்பட்டது. இப்போது பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் திரைக்கு கொண்டு வரப் போகிறார். நாவலின் எல்லா கதா பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் எல்லா வாசகர்களின் எதிர்பார்ப்புக்கும் திருப்திக்கும் ஏற்ப திரையில் கொண்டு வருவது மிகமிகக் கடினம்தான். அதனால் வரவிருக்கும் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் – தமிழ் வாசகர் நெஞ்சில்:

திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், நாவல் வாசகர்களின் மனத்திரையில் எப்போதும் காட்சிகளாக திரையிடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.  வாசகர்கள் அவரவர் விருப்பத்திற்கும் கற்பனைக்கும் ஏற்ப, வந்தியத் தேவனையும் குந்தவையையும் அருள்மொழியையும் வானதியையும் ஆதித்த கரிகாலனையும் நந்தினியையும் ஆழ்வார்கடியானையும் சேந்தன் அமுதனையும் அநிருத்தரையும் பழுவேட்டரையரையும் தாங்களே சிருஷ்டித்து தங்கள் நெஞ்சங்களில் உலவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அமரர் கல்கி, வாசகர் உள்ளங்களில் என்றும் நிலைத்து நின்று தன் பாத்திரங்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவே பொன்னியின் செல்வனின் எழுபது ஆண்டு கால  வெற்றிப் பயணத்தின் வரலாறு.

 

கொசுறு:

சென்ற மாதம் அட்டையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் பற்றிய டீஸர் வெளியிட்டோம். இப்போது முதல் பாடல் வந்திருக்கிறது. 
முதல் முறையாகக் கேட்டபோது பாட்டு பிடிக்கவில்லை. மூன்று நான்கு முறை கேட்ட பிறகு பாடல் படு தூள்! அதுதான் ரஹ்மான் ஸ்டைல் ! 

பொன்னி நதி’ பாடல் தமிழ் வரிகள்

ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன

மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ

பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்

வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி

சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா

கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே…


 

 

One response to “பொன்னியின் செல்வன் – ஒரு பார்வை   – எஸ். கௌரிசங்கர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.