பேராசிரியர் வ. வே. சு அவர்கள்
வழங்கிய
விநாயகர் நான்மணிமாலை
தொடருரையின் நிறைவு நாளன்று
(20-07-2022) அப்பெருமகனாருக்கு
நன்றி பாராட்டி எழுதிய
பாடல்கள் :
துரை.தனபாலன் அவர்களின் கவிதை:
வவேசு எனும் வற்றா மேகம்
வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
என்றே நான்மணி எடுப்புடன் கோர்த்து
பொன்னால் செய்த மாலையை மிஞ்ச
பண்ணால் செய்த மாலை ஆக்கி
மின்னார் சொற்சிலம் பாடும் பாரதி
மீட்டிய நான்மணி மாலையைப் போற்றி
ஒன்றா இரண்டா ஒருநூ றாயிரம்
உன்னத மான சான்றுகள் காட்டி
வண்ணத் தமிழின் வளந்தனை ஊட்டிய
வவே சுஎனும் வற்றா மேகம்
இத்தனை நாளும் பொழிந்ததில் நனைந்தோம்
இன்பத் தமிழின் பொலிவினில் திளைந்தோம்!
அத்தன் அவரை அன்புடன் போற்றுவோம்
ஆண்டுகள் நூறு வாழ்ந்திட வாழ்த்துவோம்!
சாய் கணேசன் அவர்களின் நான் மணிக் கண்ணி
வெண்பா
வாரம் புதனன்று வாவேசு நல்லுரைக்க
பார்புகழ் பாடல்கள் பாடிய பாரதி
நான்மறை போற்றும்வி நாயகன்மேல் சூட்டினான்
நான்மணி மாலை தொடுத்து.
கட்டளைக் கலித்துறை
தொட்ட விடயம் துலங்கும் இடர்தீர் விநாயகர்கண்
பட்ட உடனே பயங்கள் விலகும் மனதினிலே
பட்டம் விருது பதவிகள் பெற்றுப் பயனடைவாய்
எட்டை புரத்தோன் எழுமாலை சொல்லிட நாவினாலே.
விருத்தம்
நாவே இனித்திடும் பாரதியின்
நான்மணி மாலை நவில்கயிலே
ஊவே சாதான் உரமிட்ட
உன்னதத் தமிழில தன்பொருள்சொல்
வாவே சூவின் தொடருரையில்
வந்திடும் புதிதாய்ப் பலசொற்கள்
பாவே பாடி நானுமதைப்
பயன்படுத் தியதென் பாக்கியமே.
அகவல்
பாக்கியம் மனிதப் பிறவியில் சான்றோர்
வாக்கினைக் கேட்டல் அதனின் நன்றாம்!
பாரதம் ஏறிய பாரதப் புலவன்
பாரதி பாடிய பைந்தமிழ் நூலாம்
காக்கும் கணபதி நான்மணி மாலை
கேட்கும் வாய்ப்போ அதைவிடப் பெரிதே!
எல்லா வாரமும் நாள்புதன் மாலை
எங்கள் வீட்டினுள் விருந்தாய் வந்தே
எப்பவும் வையகம் அன்பை ஊற்றென
எமக்குரை செய்த ஏந்தலே! உமக்கு
எப்படிச் சொல்வேன்? எத்தனை நன்றி!
என்சிற் றரிவிற் கெட்டிய விதத்தில்
கவிதை பாடிநான் வணங்குகயிலே
குவிகத்தாரும் சேர்ந்திடு வாரே!