”சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
பீடிகையோடு ஆரம்பித்தார் கணேசன்..
எதைப் பற்றி என்று புரியாமல் குழம்பிய வரதராஜன்..
“சொல்லுங்க..”
கணேசன் சற்று தயக்கத்துடன்..
“வந்து.. உங்க மகன் விக்கியைப் பத்தித் தான்.. அடிக்கடி பார்க்கறதுனால சொல்றேன்.. மறுபடியும் கேட்டுக்கறேன்.. நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது”
வரதராஜன் பொறுமை இழந்தார்..
“தயவு செய்து விஷயம் என்னன்னு சொல்லுங்க”
சிறிய மௌனத்திற்கு பிறகு கணேசன் தொடர்ந்தார்..
“விக்கி பைக் ஓட்டறதை பத்தித் தான்.. கண்டபடி வேகமா ஓட்டறான்.. அதுவும் டிராபிக் நிறைஞ்ச தெருவுல பாம்பு மாதிரி வளைஞ்சு வளைஞ்சு ஓட்டறான்”
”… ….”
“அவன் பைக் ஓட்டறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் ஸ்கிட் ஆனாலும்.. நினைச்சாலே பகீர்னு இருக்கு.. சார்.. விக்கி உங்களுக்கு ஒரே வாரிசு.. அவன் பேருல நீங்க எவ்வளவு உசிரா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்..”
“… …..”
“கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க.. பைக் ஓட்டறது தப்பில்லை.. ஆனா நிதானமா ஓட்டச் சொல்லுங்க..”
வரதராஜன் எதுவும் பேசாமல் தலை குனிந்தார்..
வரதராஜனின் மௌனம் கணேசனை சங்கடப் படுத்தியது.. ஒரு வேளை தான் இதைப் பற்றி பேசியிருக்கக் கூடாதோ.. அது வரதராஜனுக்குப் பிடிக்கவில்லையோ என்று அவர் மனதில் சஞ்சலம்..
“நான் ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா என்னை மன்னிக்கணும்..”
ஆரம்பித்த கணேசனின் கைகளைப் பற்றிக் கொண்டார் வரதராஜன்..
”இல்லை.. நீங்க சொன்னதுல தப்பு எதுவும் இல்லை.. என் பேருல இருக்கிற அபிமானத்துல.. உண்மையான அக்கறையோட தான் சொல்லியிருக்கீங்க.. உங்களுக்குத் தெரியுமா.. விக்கி கிட்ட இதைப் பத்தி நிறைய பேசிட்டேன்.. அவனோட அந்த வேகத்துனால ஏற்படக் கூடிய விபரீதத்தைப் பத்தியும் எடுத்துச் சொல்லிட்டேன்.. அப்படி ஒரு விபரீதம் நடந்தா அதைத் தாங்கிக்கிற சக்தி எனக்கோ அவன் அம்மாவுக்கோ இல்லைன்னும் பல தடவை சொல்லிட்டேன்..”
“இவ்வளவு சொல்லியுமா கேட்க மாட்டேங்கறான்?”
“ஹும்.. இள ரத்தம்.. பயமறியாது.. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. நான் பயங்கர கண்ட்ரோல்ல இருக்கேன்னு சொல்லிட்டுப் போயிருவான்.. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை.. ஓரளவுக்குத் தான் சொல்ல முடியும்.. ரொம்ப கண்டிச்சா விபரீதமா ஏதாவது முடிவு எடுத்துருவானோன்னு பயமா இருக்கு.. அவன் ஒவ்வொரு முறை பைக்குல வெளில போகும் போதும் நானும் அவம்மாவும் வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு தான் இருப்போம்.. அவம்மா இல்லாத தெய்வத்தையெல்லாம் வேண்டிப்பா.. அவன் ஒழுங்க வீடு வந்து சேர்ந்த அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதி”
கொஞ்சம் விட்டால் வரதராஜன் அழுது விடுவார் போலிருந்தது..
கணேசனுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. விடை பெற்று கிளம்பி விட்டார்..
ஒரு வாரம் நகர்ந்தது..
“விக்கிக்கு விபத்து”
வரதராஜனின் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதைக் கேட்டு பதட்டத்துடன் வரதராஜன் வீட்டுக்கு கணேசன் விரைந்தார்..
காலில் கிரெப் பேண்டேஜுடன் வலி தாளாமல் முனகியபடி விக்கி..
வரதராஜன் கணேசனை தனியாக அழைத்துச் சென்றார்..
“வழக்கம் போல வேகமாப் போயிருக்கான்.. நாம பயந்த மாதிரியே ஸ்கிட் ஆகி விழுந்து காலுல அடி.. நல்ல வேளை பிராக்ச்சர் இல்லை.. ஸ்ப்ரெய்ன் தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. பத்து நாள் ரெஸ்ட் எடுத்தாப் போதுமாம்.. ஹும்.. இன்னும் நாங்க என்னலாம் அனுபவிக்கணுமோ?”
கணேசன் ஆதரவாக அவர் தோளில் கை வைத்து..
“கவலைப் படாதீங்க.. நடந்த விபத்து நல்லதுக்குன்னு நினைச்சுக்குங்க”
“என்ன சொல்றீங்க?”
“இந்த விபத்துக்கு அப்புறம் விக்கி மனசுல நிச்சயமா ஒரு வித பயம் வந்திருக்கும்.. அதி வேகமாப் போனா விழுந்துருவோங்கற எண்ணம் அவன் அடி மனசுல பதிஞ்சிருக்கும்.. அதனால கவலைப் படாதீங்க.. இனிமே அவன் அதி வேகமா பைக் ஓட்ட மாட்டான்”
இதைக் கேட்டு வரதராஜனுக்கு ஆறுதலாக இருந்தது..
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்..
மகளைப் பார்க்க மும்பை சென்றிருந்த கணேசன் அன்று தான் திரும்பியிருந்தார்..
மாலை சூப்பர் மார்கெட்டில் வரதராஜனை சந்தித்தார்..
“என்ன சார்.. விக்கி எப்படி இருக்கான்?”
வரதராஜன் முகத்தில் மறுபடியும் வாட்டம்..
“என்னத்த சொல்ல..”
“ஏன்.. விபத்துக்கு அப்புறம் அவன் மனநிலை மாறலையா? இப்ப அவன் நிதானமாத் தானே பைக் ஓட்டறான்?”
“நீங்க வேற.. விபத்து ஏற்பட்டு காலுல பேண்டேஜோட பத்து நாள் ரெஸ்டுல இருந்தானே.. அப்ப விடாம கார், பைக் ரேஸ் வீடியோவா மொபைல்ல பார்த்துப் பார்த்து.. அவன் மனசுல இன்னும் வெறி ஏறிப் போச்சு.. இப்ப அவன் சொல்லச் சொல்லக் கேட்காம முன்னை விட வேகமா பைக் ஓட்டறான்..”
இதைச் சொல்லும் போது வரதராஜனின் கண்கள் பனித்திருந்தன..
“சைக்கியாட்ரிக் கௌன்சலிங் பண்ணினா இவன் மனசுல இருக்கிற வேகம் தணிய வாய்ப்பிருக்குன்னு யாரோ சிபாரிசு பண்ண.. அதையும் முயற்சி பண்ணினேன்.. ஆனா விக்கி அதுக்கு ஒத்துழைக்கலை.. நான் என்ன மன நோயாளியா.. நான் நல்லாத் தான் இருக்கேன்.. தேவையில்லாம டென்ஷன் ஆகாதேன்னு என்னை அடக்கிட்டான்”
இதற்குப் பிறகு விக்கி பைக் ஓட்டுவதை இரண்டு மூன்று முறை கணேசன் பார்த்தார்.. வரதராஜன் சொன்னது போல் வேகம் கூடித் தான் இருந்தது.. வளைந்து வளைந்து போகும் சாகசமும் ஏறியிருந்தது.. செய்வதறியாது கணேசன் பெருமூச்சு விட்டார்..
விக்கியைப் பற்றிய சிந்தனையும் வரதராஜனின் இயலாமைத் தவிப்பும் அவர் மனதில் சுற்றி சுற்றி வந்தன..
மனைவி குழந்தையுடன் வெளிநாட்டிலிருந்து மகன் வரவே அடுத்த சில நாட்கள் கணேசனின் மனதிலிருந்து விக்கியும் வரதராஜனும் தற்காலிகமாக வெளியேறியிருந்தனர்..
மகன் ஊருக்குக் கிளம்பிய பின் மாம்பலத்தில் இருக்கும் வயதான அத்தையைப் பார்க்கக் கிளம்பினார் கணேசன்.. அந்த நேரத்தில் ஓலா,, யூபர் என்று எதுவும் சிக்காமல்.. வெளி ஆட்டோவும் கண்ணில் படாமல் பஸ் நிறுத்தம் சென்று காத்திருந்தார்..
அப்போது அவர் முன் பைக் ஒன்று வந்து நின்றது..
விக்கி…
“அங்கிள்.. எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேம்பா”
“இந்த வெயில்ல எங்க கிளம்பிட்டீங்க?”
“மாம்பலத்துக்கு.. என் அத்தையைப் பார்க்க.. ஆட்டோ எதுவும் கிடைக்கலை.. அதான் பஸ்ஸுக்கு..”
“அங்கிள்.. வண்டில ஏறுங்க.. நான் ராயப்பேட்டை தான் போறேன்.. போற வழில உங்களை டிராப் பண்ணிடறேன்..”
இதைக் கேட்டு கணேசன் மிரண்டு விட்டார்..
“ஐயையோ.. வேண்டாம்பா.. நான் பஸ்ஸுலயே போயிக்கறேன்”
“ஏன்?”
“வந்து.. வேண்டாம்னா விடேன்.. நான் முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கு”
“கிண்டல் பண்ணாதீங்க அங்கிள்.. இப்ப நீங்க பைக்குல ஏறரீங்களா இல்லை உங்களை வலுக்கட்டாயமா தூக்கி பைக்குல உட்கார வெக்கவா?”
விக்கி பைக்கை விட்டு இறங்க கணேசன் பதறினார்..
”இவன் கலாட்டா பண்ணினா சுற்றியிருக்கிறவங்க பார்த்து மானமே போயிடுமே..”
இஷ்ட தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் விக்கியின் பைக்கில் ஏறினார் கணேசன்..
“பார்த்துப் போப்பா..”
சொல்ல நினைத்தார்.. ஆனால் பயத்தில் குரல் எழவில்லை..
பைக் கிளம்பியது..
புயல் காற்று மாதிரியான அந்த வேகத்தைப் பார்க்காமல் இருந்தால் பயம் சற்று குறையும் என்று கண்களை இறுக்க மூடிக் கொண்டார்..
ஆனால் புயல் காற்றுக்கு பதிலாக தென்றல் வீசி ஆனந்தமாக மிதப்பது போல் அவருக்குப் பட்டது..
துணிந்து கண்களைத் திறந்தார்..
மிதமான வேகத்தில் பைக் ஓடிக் கொண்டிருந்தது.. அதுவும் பாம்புக்கு போட்டியாக இல்லாமல்..
கணேசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஆனால் எதுவும் கேட்கவில்லை..
மாம்பலத்தில் அவர் காட்டின இடத்தில் விக்கி வண்டியை நிறுத்த இறங்கிக் கொண்டார்..
“ரொம்ப தேங்ஸ்பா”
“அங்கிள்.. எங்கிட்டயே தேங்ஸ் சொல்லுவீங்களா?”
“இல்லைப்பா.. எனக்காக உன் வேகத்தையெல்லாம் கட்டுப் படுத்திக்கிட்டு மிதமான வேகத்துல பைக் ஓட்டிட்டு வந்தியே.. அதுக்குத் தான் தேங்ஸ்”
இதைக் கேட்டவுடன் விக்கி லேசாக தலை குனிந்தான்..
சிறிது மௌனம்..
பிறகு நிமிர்ந்து..
“அந்த சம்பவத்துக்கு அப்புறம் நான் இப்படித் தான் நிதானமா பைக் ஓட்டறேன்”
கணேசனுக்குப் புரியவில்லை..
“எந்த சம்பவம்?”
”ஒரு மாசம் முன்னால.. அஷோக் பில்லர் பக்கத்துல.. நான் வழக்கமான என் வேகத்துல பைக் ஓட்டிட்டிருந்தேன்.. கொஞ்சம் டிராபிக்கும் இருந்தது.. எனக்கு முன்னால ஒருத்தன் மெதுவாப் போறானேன்னு பொறுமை இல்லாம கடுப்போட பைக்கை இடது பக்கமா சட்டுன்னு ஒடிச்சு ஓவர் டேக் பண்ண முயற்சி பண்ணினேன்.. நான் திடீர்னு பைக்கை இடது பக்கமா ஒடிச்ச உடனே பின்னால டிவிஎஸ் பிப்டில வந்திட்டிருந்த ஒரு வயசானவர் இதை எதிர்பார்க்காம தடுமாறி பைக்கோட விழுந்துட்டார்..”
”ஐயையோ”
”உடனே கூட்டம் கூடிப் போச்சு.. ஒரு பக்கம் அந்த பெரியவரை எழுப்பி பக்கதுல இருந்த புட் பாத்துல உட்கார வெச்சு தண்ணி குடிக்க வெச்சாங்க.. இன்னொரு பக்கம் என்னை மடக்கிப் பிடிச்சு பைக்குலேர்ந்து இழுத்து தர்ம அடி கொடுத்தாங்க.. அதைப் பார்த்த அந்தப் பெரியவர் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு அவங்களைக் கையெத்துக் கும்பிட்டு தயவு செய்து அவனை அடிக்காதீங்க.. விட்டிருங்கன்னு கெஞ்சினார்.. அவர் பேச்சை மதிச்சு அவங்க என்னை விடுவிச்ச உடனே அந்த வயசானவர் என்னை அவர் பக்கத்துல வரச் சொல்லி சைகை காட்டினார்.. தயக்கத்தோட பக்கத்துல போன நான்.. “ஸாரி”ன்னு என்னையறியாம சொன்னேன்.. அதுக்கு அவர்.. சே சே.. ஸாரிலாம் எதுக்குப்பா.. நீ என்ன வேணும்னா பண்ணினே.. ஆனா ஒரு விஷயம்.. உன்னை மாதிரி இளைஞர்களெல்லாம் ரொம்ப நல்லா பைக் ஓட்டறீங்க.. சொல்லப் போனா எக்ஸ்பர்ட்.. எந்த வேகத்துல எப்படி போனாலும் முழு கண்ட்ட்ரோல் உங்க கிட்ட இருக்கு.. ரொம்ப பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்.. ஆனா என்னை மாதிரி வயசானவங்க அப்படி இல்லை.. லேசான அதிர்வு வந்தாலே தடுமாறிப் போயிருவோம்.. இப்ப எனக்கு ஆன மாதிரி வண்டியோட சாஞ்சுருவோம்..”
“உண்மை தானே?”
“என்ன உண்மை.. எனக்கு வந்த கோபத்துக்கு அப்படி தடுமாறுவீங்கன்னா எதுக்கு வண்டி ஓட்டறீங்க.. கேபுலயோ ஆட்டோவுலயோ இல்லை பஸ்ஸுலயோ போக வேண்டியது தானேன்னு கத்த நினைசேன்.. அப்ப அவர் சொன்னது என்னை பாதிச்சது மட்டுமில்லை.. என் சிந்தனையையே பக்குவப் படுத்திருத்து”
“அப்படி என்னப்பா சொன்னார்?”
“தம்பி.. நீ வேகமா வண்டி ஓட்டறதை நான் தப்புன்னு சொல்லலை.. ஆனா அடுத்த தடவை நீ பைக்கை எடுக்கும் போது.. என் இடத்துல உன் அப்பாவை நினைச்சுப் பாரு.. அவருக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டா.. அது உன்னால இருக்க வேண்டாம்பா.. உன்னை மாதிரி மத்த இளைஞர்கள்னால ஏற்படலாம்.. ஏன்.. உயிர் சேதம் கூட ஏற்படலாம்.. ஆனா நீ கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டி வயசானவங்க மேல கருணை காட்டினா.. aந்த செயல் கண்டிப்பா உங்கப்பா மேலயும் மத்தவங்களை கருணை காட்ட வெக்கும்.. இதை அவர் சொன்ன உடனே எனக்கு உரைக்கலை.. ஆனா அடுத்த நாள் நான் வண்டியை எடுக்கும் போது அப்பாவும் வெளில போக தன் டி.வி.எஸ். பிப்டியை எடுத்தார்.. அப்பத் தான் அந்த வயசானவர் சொன்னது என் மனசுல மின்னல் மாதிரி தாக்கித்து.. எடுத்த உடனேயே அறுபதை தாண்டற நான்.. அன்னிக்கு என்னையறியாம இருபதுல கிளம்பினேன்.. நாற்பது நாற்பத்தஞ்சைத் தாண்டாம வண்டி ஓட்டினேன்.. மொதல்ல கடுப்பா இருந்தது.. ஆனா வேகம் எடுக்கணும்னு நான் நினைக்கும் போதெல்லாம் டிவிஎஸ் பிப்டில எங்கப்பா என் கண் முன்னால வந்து நின்னார்.. உடனே மனசுல ஒரு பதட்டம்.. தன்னால வேகம் கட்டுப்பட்டுப் போச்சு.. அதுலேர்ந்து இப்படித் தான்.. சரி அங்கிள்.. எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்.. எனக்கு வேலை முடிஞ்சா போன் பண்ணறேன்.. திரும்பி வரும்போது உங்களை பிக் அப் பண்ணிட்டுப் போறேன்”
நிதான வேகத்தோடு அவன் பைக் கிளம்பிச் சென்றது..
வரதராஜனின் நிம்மதியான முகத்தை உடனே பார்க்க வேண்டும் என்று கணேசனுக்குத் தோன்றியது..