பாரதியார் தமிழ் மற்றும் ஆங்கிலமல்லாத அவரறிந்த பிற மொழிகளில் கட்டுரை அல்லது கவிதைகள்எழுதியுள்ளாரா? சந்திரசேகரன் பாஸ்டன்
நானறிந்தவரை சமஸ்கிருதத்தில் ஓரிரு கீர்த்தனை வடிவப் பாடல்களை பாரதி எழுதியுள்ளார் . உஜ்ஜயினி நித்யகல்யாணி ; பூலோக குமாரி ஹே அம்ருதநாரி போன்றவை. அவற்றை பேராசிரியர் எஸ் . ராமநாதன் இசையமைத்துப் பாடியுள்ளார். மற்றபடி அவரது படைப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளன.
2. தமிழ் உலகின் மிகப் பழைய மொழி என்று சொல்வதற்கு புறச் சான்று இல்லை என்கிறார்களே! இதை யார்எப்படி நிறுவ முடியும் ? சந்திர மோகன் சென்னை
பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளை கருத்துப்படி புறச் சான்றுகள் ,ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படவேண்டும் தற்போது நிகழ்ந்துவரும் கீழடி அகழ்வாய்வுகள் போன்றவை இதற்குத் துணைசெய்யும் என நம்பலாம் . இப்போதுள்ள சான்றுகள் தமிழ் இந்தியாவின் மொழிகளுக்குள் மிகப் பழையது என நிரூபிக்கப் போதுமானது . ஆனால் உலக அளவில் இக்கருத்தை நிறுவ இன்னும் பல புராதன கல்வெட்டுகள் . அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் என பல தகவல்களை சேகரிக்க வேண்டும் .
.3. . நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் ஐயா, ஐயனார், ஐயப்பன், ஔவை போன்ற சொற்களை, அய்யா, அய்யனார், அய்யப்பன், அவ்வை என்று குறிப்பிடுகின்றனரே! இதில் எது சரி? (அன்னபூரணி , சென்னை)
ஐ , ஒள என்ற எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதே சரியானது. . அவற்றைப் பயன் படுத்தாவிடின் 12 உயிரெழுத்துகளில் இரண்டினை இழந்துவிடுவோம் .
4. இந்தியாவின் தேசிய விலங்கு “புலி” ஏப்ரல் 1973 முதல் , அதற்கு முன்பு சிங்கம். ஏன் இந்த மாற்றம்வந்தது? (சுரேஷ் ராஜகோபால், சென்னை)
முதல் காரணம் ஆசிய சிங்கம் எனப்படும் (Asiatic Lion ) இந்தியாவில் “கிர் காடுகளில் “ மட்டுமே வாழ்ந்து வருகின்றது. “புலி” இனம் இந்திய முழுவதிலும் மொத்தம் 16 மாநிலங்களில் காணப்படுகின்றது. எதோ ஒரு மாநிலத்தில் மட்டுமே காணப்படும் விலங்கைவிட நாட்டின் பல மாநிலங்களில் காணப்படும் விலங்குதானே தேசிய விலங்காய் இருக்கமுடியும் !
இரண்டாவது காரணம் , 1973-ல் தான் புலிகளை பாதுகாக்க ப்ரொஜெக்ட் டைகர் ( Project Tiger ) என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
5. . “மேஜிக்கல் ரியலிசம்” என்ற வார்த்தை இப்போது பிரபலமாகியுள்ளது. பாரதியின் குயில் பாட்டில் குயிலை மற்ற மிருகங்களும் பாரதி என்கிற மனிதனும் காதலிப்பதாக வருகிறதே, இதுவல்லவோ தமிழின் முதல்மேஜிக்கல் ரியலிசக் காவியம்? (ராய செல்லப்பா நியூ ஜெர்ஸி)
இது நிசசயமாக மேஜிக்கல் ரியலிசம்” தான். ஆனால் தமிழில் நாட்டார் வழக்குகளில் பஞ்சசதந்திரக் கதைகள் பண்டைக்காலம் தொட்டு இருக்கின்றன என அறிகிறோம்.
நமது புராணங்களில் மிருகங்கள் பேசுவதும், கால இடைவெளிகளைக் கடந்து செல்கின்ற கதாபாத்திரங்கள் இருப்பதும் நாமறிந்ததுதானே !
தமிழின் தலைக்காப்பியமான சிலம்பில் இல்லாத மாய யதார்த்தமா ?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த வித்வான் தாண்டவராய முதலியார் மகாராஷ்டிரத்தில் வழங்கும் பஞ்சதந்திரக் கதையை மொழிமாற்றம் செய்து 1826-ல் பதிப்பித்தார்.
எனவே மாய யதார்த்த அணுகுமுறை தமிழில் பண்டைக்காலம் தொட்டே இருப்பதை அறியலாம்.
ஆனால் குயில் பாட்டு போன்ற ஓசை நலமும், கருத்துச் செறிவும் , கற்பனைப் பொலிவும் கொண்ட இதுதான் தமிழின் முதல் மேஜிக்கல் ரியலிசக் காவியம் என்று நிச்சயம் சொல்லலாம். காலத்தால் மட்டுமன்றி தகுதியாலும் இதுவே முதல். என்றும் முதல் .
6. ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான குண்டலகேசி. குண்டலகேசி் என்றால் அதன் பொருள் என்ன? (ஹரிஹரன், அமெரிக்கா)
குண்டலகேசி என்பது ஒரு புத்த சமயக் காப்பியம் . காப்பியத் தலைவியின் பெயர் குண்டலகேசி . அவள் முதலில் சமண மதத்தில் இருந்து, பிறகு வாதிலே ,கவுதம புத்தரின் சீடரான ,சாரிபுத்தர் என்ற பிக்குவிடம் தோற்று புத்த மதத்தைத் தழுவுகிறாள் .அவள் இயற்பெயர் பத்திரை. அவள் சமண மதத்தில் இருக்கும் போது அவளது கேசம் மழிக்கப்பட்டது .அது மறுபடியும் வளரும் போது சுருண்டு வளர்ந்ததால் அவளுக்கு குண்டலகேசி எனும் பெயர் வந்தது. அதுவே காப்பியப் பெயரும் ஆனது .
7. தொல்காப்பியம் படிக்கும் ஆர்வத்தில், நச்சினார்க்கினியர், இளம்பூரணார் ஆகியோரின் உரைநூல்களைப் படித்துப் பார்த்தேன். அவர்களின் உரையைப் புரிந்து கொள்ளவே வேறு உரைநூல்கள் தேட வேண்டியதாகி விட்டது. எந்த ஆசிரியர்களின் உரைநூல்கள் எளிமையாகவும், முழுமையாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்களேன். (துரை. தனபாலன் , சென்னை)
முதலில், தொல்காப்பியம் படிக்க முயற்சி செய்யும் தங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன் . கொஞ்சமும் தளராமல் தொடர்ந்து படியுங்கள் . பயிற்சி பலன்தரும். முதல் ஐந்து பக்கங்கள் கடினமாக இருக்கும். பிறகு தொடர்ந்து படிக்கும் போது எளிதாகிவிடும். தமிழ் அகராதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் சரி வரவில்லை என்றால் பேராசிரியர் முனைவர் சி .இலக்குவனாரின் “தொல்காப்பிய விளக்கம் “ நூலை வாங்கிப் படியுங்கள்.
8. அருணகிரியின் கந்தர் அனுபூதி யில் வரும் , குறியைக் குறியாது குறித்தருளும் பாடலின் விளக்கம் வேண்டும் ( தென்காசி கணேசன் , சென்னை)
குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)
கந்தர் அனுபூதியின் மிக அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் தொடக்கத்திலேயே மூன்று “குறி “ வருகின்றது முதல் குறி , இறைவனைக் குறிக்கிறது. இரண்டாவது அதனைப் புரிந்து கொள்ளாது ,குறியாது இருக்கின்ற நம்மைக் குறிப்பது . மூன்றாவது அக்குறிப்பைக் குறிப்பால் அறிவுறுத்தும் நெறியை நிகழ்த்தும் தனிவேலைக் குறிக்கிறது . அது நிகழ்ந்த உடன் செறிவாகிய ஆணவம் அற்றுப் போகிறது; உலகப் புற வாழ்க்கையில் ஈடுபடும் சிந்தையும் அற்று வீழ்கிறது . தேடித் தேடித் திரிந்த அறிவும் இற்று வீழ்கிறது; அறியாமையும் வீழ்ந்து படுகிறது.
அவனை அறிந்த அறிவு தவிர வேறேதும் இல்லாத நிலை ஏற்படுகிறது “அவனருளாலே அவன் தாள் வணங்கி “ எனும் நுட்பம் புரிகின்றது. அதுதான் செல்வம்; அதுதான் இனிமை; அதுதான் சுகம். இதைத்தான் கந்தர் அனுபூதியில் “ எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்று அருணகிரியார் பாடுகின்றார் .
9. இந்திய கணித வரலாற்றில் ஆரியபட்டர், பாஸ்கரர், வராக மீகிரர் போன்ற வட இந்தியர்களும், மாதவன் என்ற கேரள அறிஞரும் வெகுவாக சுட்டப்படுகிறார்கள். ஆனால் தமிழ் கணித இயலாளர்கள் அவர்களைப் பற்றி சிறப்பான செய்தி எதையும் நான் அறிந்ததில்லை. தமிழர்கள் கணிதத்தில் நல்ல பங்களிப்பு செய்யவில்லையா? ராமானுஜன் போன்ற சமீபத்திய கணித மேதைகளை இதில் எடுத்துக் கொள்ள வேண்டாம் (பானுமதி, சென்னை)
சங்ககாலம் கணித அறிவு கொண்டவர்களை பற்றிப் பேசுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற பாடலை வடித்த பூங்குன்றனார், கணியன் எனக் குறிப்பிடப்படுகிறார் . தமிழில் கணியன் என்பது கணிதத்தில் பெரும் சிறப்புப் பெற்றவரைக் குறிப்பதாகும் .”கணிமேதை” என்றும் அவரைக் குறிப்பிடுவார்கள்; பல்லவர் காலத்தில் காஞ்சியில் இருந்த கடிகையில் பல கணித மேதைகள் இருந்தார்கள் என்பதை தொல்லியல் ஆய்வாளர் பேரா நாகசாமி குறிப்பிட்டுள்ளார் .ஆனால் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழர்கள் கணிதத்தில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளனர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் , குறிப்பிடப்படும் பெயர்களை எவரும் ஆவணப்படுத்தவில்லை.
ஆர்யபட்டா பிறந்த இடம் பாடலிபுத்ரா , வராஹமிஹிரர் பிறந்த இடம் உஜ்ஜைன் ஆனால் பாஸ்கரா பிறந்த இடம் கர்நாடகாவைச் சேர்ந்த விஜயபுரி எனவே அவர் வட இந்தியர் அல்லர், எனினும் இதுபோன்ற எல்லைகளுக்கு அவர்கள் உட்படாதவர்கள் . அவர்கள் அகண்ட பாரதத்தின் அற்புதத் தவப்புதல்வர்கள்.
10. விதியை மதியால் வெல்லலாம், விதி வலியது, எல்லாம் விதிப்படி தான் நடக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு இதை விளக்க முடியுமா ? (ரேவதி ராமச்சந்திரன், ஜோத்பூர்)
இதில் முரண் ஏதுமில்லை.விதி என்பது விதிக்கப்பட்டது, அது எதைச் சார்ந்து விதிக்கப்படுகிறது என்று புரிந்து கொண்டால் இந்த சொற்றொடரின் பொருள் விளங்கிவிடும்.
கர்மா அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் விதியைத் தீர்மானிக்கிறது கர்மா மூன்று வகைப்படும். சஞ்சித கர்மம் என்பது நாம் சேமித்து வைத்துள்ள வினைப்பயன்கள் ; பிராரப்தம் என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வினைகள் ; இவற்றின் வழி நடக்கும் விதியை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மூன்றாவதாக உள்ள இனி வர இருக்கின்ற “ஆகாமிய “ கர்மாவை நாம் நல்வினைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம் . இதுதான் விதியை மதியால் வெல்வது. ஆக , வந்த விதியை வெல்லமுடியாது .ஆனால் வரப்போகும் விதியை மதியால் வெல்லலாம்.
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய வவேசு ஐயா, வணக்கம். எனது கேள்விக்கும், ஏனைய கேள்விகளுக்கும் இனிய முறையில், எளிதாக, தெளிவாக விளங்கும் வண்ணம் தாங்கள் அளித்த பதில்கள் அனைத்துமே அருமை. குறிப்பாக, விதியை வெல்வது குறித்த கேள்வி, பன்னெடுங் காலமாகப் பலருக்கும் உள்ள குழப்பம். அதற்கும் அரியதொரு பதிலை அழகாகச் சொன்ன தங்கள் ஆழ்ந்த மதியைப் போற்றுகிறேன். மிக்க நன்றி.
LikeLike
பானுமதி அம்மாவின் கேள்விக்கு, பாலனிடமும் ஒரு பதில் உண்டு. கணிதத்தில் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் 1-9 எண்களும், பாழ், சுழியம் எனப்படும் 0 உம் தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடையாகும். இவற்றைத் தமிழ் வணிகர்களிடம் கற்ற அரேபிய வணிகர்கள் மூலம் மேலை நாட்டவர் அறிந்ததனால், அவற்றிற்கு அரபிக் எண்கள் (Arabic numerals) என்று பேர் வந்து, அதுவே நிலைத்து விட்டது.
க முதல் ய வரை உள்ள தமிழ் எண்களுக்கும், 1 முதல் 9 வரை உள்ள எண்களுக்கும் உள்ள ஒற்றுமையே இதற்குச் சான்றாகும்.
LikeLike
முதல் முறையாகத் தொல்காப்பியம் படிக்கிறவர்களுக்குத் தமிழண்ணலின் உரை மிகவும் பயன்படும். எனக்குப் பயன்பட்டது. இலவச மின்புத்தகமாகவே வாசிக்கலாம். Visit: thamizhannal.org.
LikeLike