1927 முதல் நடக்கும் நாடுகளுக்கு இடையேயான செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் இதுவரை நடைபெறவில்லை. இந்த முறையும் ரஷ்யாவில் தான் நடப்பதாக இருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரால் அங்கு நடத்த முடியவில்லை. பிறகு சர்வதேச அரங்கில் ஏலத்தின் மூலம் மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 186 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியை மூன்று மாதத்திற்குள் நடத்த தயாராக வேண்டும். டெல்லி அல்லது சென்னை என்ற போட்டியில் இறுதியில் சென்னைக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதத்திற்குள் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு நிர்வாகிகள் அனைவருக்கும் தங்குவதற்கும் மற்ற வசதிகளுக்கும், பிற ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது ஒரு குழு விளையாட்டு. நாடுகளுக்கு இடையேயான போட்டி.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இதில் பொதுப் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என்று உண்டு பொது பிரிவில் ஆண்களும் பெண்களும் ஒரே குழுவிற்கு விளையாடலாம். போட்டியை நடத்தும் நாடு மட்டும் இரண்டு குழுக்களை அனுப்பலாம். மொத்தம் பங்கு கொள்ளும் டீம் எண்ணிக்கை ஒற்றைப்படையில் வந்தால் மேலும் ஒரு குழுவை ஹோஸ்ட் நாடு அனுப்பலாம். பாகிஸ்தான் சென்னைக்கு வந்துவிட்டு பிறகு அரசியல் காரணங்களுக்காக திருப்பிச் சென்று விட்டது
அதனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு குழுவை இரண்டு பிரிவிலும் அனுப்ப வாய்ப்பு கிட்டியது.
பொது பிரிவில் மூன்று இந்திய அணி. மகளிர் பிரிவில் மூன்று இந்திய அணி. மற்றும் ஒரு குழுவிற்கு நாலு பேர் வீதம் மொத்தம் 24 இந்திய வீரர்கள் பங்கு பெற்றார்கள்.
ஒரு குழுவில் உள்ள நான்கு வீரர்களும் வேறொரு நாட்டு நான்கு வீரர்களுடன் விளையாடுவார்கள் .
ஒரு வீரர் டிரா செய்தால் அரை புள்ளி எடுப்பார் 0.5 வெற்றி பெற்றால் ஒரு புள்ளி கிடைக்கும்.
நான்கு பேருடைய வெற்றி பெற்ற புள்ளிகள் மொத்தமாக இரண்டுக்கு மேல் சென்றால் அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு குழுவிற்கு( team point) ஒரு புள்ளி கிடைக்கும்.
இரு நாடுகளும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்தால் , டிரா செய்ததாக கருதி இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்படும். மொத்தம் 11 சுற்றுகள்.
தினம்
ஒரு ஆட்டம் தான். இது தவிர குழுவுக்காக விளையாடும்போது அணியின் சிறந்த வீரர் பொதுவாக முதல் போர்டில் விளையாடுவார்.
11 சுற்றுகளில் முதல் போர்டு,
இரண்டாவது போர்டு, மூன்றாவது போர்டில் அதிகமாக புள்ளிகளை பெற்ற வீரர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் .
இந்திய சதுரங்க செஸ் அமைப்பின் டைரக்டர் பரத்சிங் சவுகான் என்பவர். இவர் முன்னாள் தொலைபேசித் துறை ஊழியர் .
துறை சார்ந்த அகில இந்திய போட்டிகளில் இவரோடு நான் தமிழ்நாடு சார்பாக விளையாடி இருக்கிறேன். இவர் எனது நண்பர் .இவர் மூலம் (hall 1&hall 2) இரண்டு அரங்குகளிலும் ஏழாவது சுற்று நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது .
பல வெளிநாட்டு வீரர்களையும் சந்தித்து உரையாடினேன். உரையாடியதிலிருந்து கிடைத்த சில செய்திகள்,
உக்ரைன் குழு மேனேஜரோடு பேசிய பொழுது எப்படி வந்தீர்கள் என்று கேட்டேன் .
சில வினாடிகள் மௌனத்திற்குப் பிறகு அவர் சொன்னார் சிப்பாய்களுக்கு இடையே சண்டை செஸ் போர்டில் மட்டும்தான் இருக்கவேண்டும். நாடுகளுக்கிடையே போர் இல்லாமல் இருந்தால் நல்லது என்றார்.
ஆப்பிரிக்க நாட்டு பெண் செஸ் விளையாடிவிட்டு கவிதை படிப்பாராம், எழுதுவாராம்.
அதைப்பற்றி விரிவாக பேசி விளையாடுவதற்கு முன்னால் அவருடைய கவனத்தை சிதறடிப்பது நல்லதல்ல என்பதால் அதற்கு மேல் நான் கேட்கவில்லை.
அமெரிக்க வீரர் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். ஏன் என்று கேட்டதற்கு உங்களுடைய அழகான உபசரிப்பில் மயங்கி அதிகமாக உணவு சாப்பிட்டு விட்டேன் என்று சிரித்தார்.
ஸ்டார் அட்ராக்சன் செடர் ரான்டா என்ற பாலஸ்தீனிய எட்டு வயது பெண் குட்டி தான் .
இவள் ஐந்து வயதாக இருக்கும் பொழுது இஸ்ரேல் தாக்குதலில் சேதம் அடைந்த பகுதியில் இருந்த பொழுது மிகவும் பயந்து போய் இருந்தாராம். இவருடைய பயத்தை போக்க இவருடைய தந்தை சதுரங்கம் கற்றுத் தந்திருக்கிறார். இன்று அவள் எட்டு வயதில் அந்த நாட்டின் குழுவில் ஒரு வீரர் .
நெதர்லாந்து நாட்டுப் பெண் வீரருக்கு எங்கு பார்த்தாலும் இந்தியாவில் மக்கள் தென்படுகிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
காஜா நாட்டிலிருந்து ஏர்போர்ட் இல்லாததால் அந்த அணி வர முடியவில்லை.
எல்லா வீரர்களிடமும் எங்கள் வரவேற்பில் உங்களை மிகவும் கவர்ந்தது எங்கள் உணவா?
என்று கேட்டதற்கு இல்லை இல்லை சிறப்பான உணவுகளை எல்லா நாடுகளிலும் கொடுப்பார்கள். ஆனால் உங்களது உபசரிப்பில் ஒரு நெருக்கமும் , அன்பும் ஏதோ ஒரு மகிழ்ச்சியும் எங்களை திக்கு முக்காட செய்கிறது என்றார்கள்.
இனி இந்திய வீரர்கள் பற்றி… பிரக்யானந்தாவின் அக்கா வைசாலி மொபைல் போனில் அதிகமாக நேரம் செலவழித்ததால் அவரது கவனத்தை திசைதிருப்ப செஸ் விளையாட ஏற்பாடு செய்தார் அவருடைய தந்தை .(அவர் ஒரு வங்கி ஊழியர்) அக்கா விளையாடுவதை பார்த்து தம்பியும்( youngest grand master ) ஆர்வம் ஏற்பட்டு விளையாட இன்று இருவரும் இந்திய அணிக்கு விளையாடுகிறார்கள். பிரக்யானந்தா மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்து விட்டார்.
இந்தியாவில் முதல் கிராண்ட் மாஸ்டர M.ஆருன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமை நமக்கு.
அடுத்து இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். உலக அரங்கில் தரப்புள்ளிகள் தரவரிசை பட்டியலில் 33 ஆயிரத்துக்கு மேல் இந்தியர்கள். இன்றைய இந்திய வீரர்களின் வயது 25க்கும் கீழே. இந்தியாவிற்கு விளையாடிய 24 பேரில் 13 பேர் தென்னிந்தியர்கள். அடுத்து உலக அரங்கில் இன்றுவரை ஒரு பெண் சாம்பியனாக வராதது ஒரு குறை தான்.
ஆனால் போலந்தை சேர்ந்த ஜுடின் போல்கர்(retired) 2700 புள்ளிகளுக்கு மேல் பெற்று அவர் காலத்து அனைத்து ஆண் சேம்பியன் களையும் தோற்கடித்திருக்கிறார் . விஸ்வநாதன் ஆனந்த் உட்பட .
அவருடைய பாட்டி இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சித்திரவதை முகாமில் போலந்தில் அடைக்கப்பட்டிருந்தார் . அங்கிருந்து தப்பி பிறகு அவருடைய பெண்ணையும் காப்பாற்றி அவர் மூலம் பெற்ற பிறந்த குழந்தைதான் போல்கர்.
இந்தியாவின் ஹரிகா துரோணவலி நிறைமாத கர்ப்பிணி. அதோடு குழுவிற்காக விளையாடி பதக்கமும் பெற்றுள்ளார்.
சிறப்பான நிறைவு விழா.
சர்வதேச அரங்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் சென்னை பிரபலமாகிவிட்டது. இதன் மூலம் முதலீடுகளும் வரலாம் என்று கருதப்படுகிறது.
இந்த அருமையான வாய்ப்பை தந்த மத்திய அரசிற்கும் சிறப்பாக நடத்திய மாநில அரசிற்கும் உண்மையிலேயே பாராட்டுகள்.
எதிர்காலத்தில் செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஒரு சிறப்பான இடம் காத்திருக்கிறது.
தனிநபர் போட்டிகளில் உலக சாம்பியனாக விளங்கும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வந்திருந்தார் .
ஆனால் நார்வேயில் நான்கு நல்ல விளையாட்டு வீரர்கள் அடங்கிய ஒரு குழு இல்லாததால் நார்வே நாடு எந்தப் பதக்கமும் பெற முடியவில்லை. ஆனாலும் கார்ல்சனை சந்திக்க எல்லோரும் மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள். அவருக்குத் தனி விஐபி பாதையில் தான் காவலர்கள் உதவியுடன் அழைத்துச் சென்றார்கள்.
இந்திய சதுரங்க வீரர்களுக்கு, பிரியர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வு.
பொதுப்பிரிவில்
முதலிடம்.
1. உஸ்பெகிஸ்தான்
2.ஆர்மேனியா
3.இந்தியா
பெண்கள் பிரிவு
1 உக்ரைன்
2.உஸ்பெகிஸ்தான்
3.இந்தியா.
இது தவிர சிறந்த தனிநபர் விளையாட்டுக்கான பதக்கங்களையும் சேர்த்து 9 பதக்கங்களை வென்றது இந்தியா.
பெண்கள் பிரிவில் முதல்முறையாக நமக்கு பதக்கம் கிடைத்திருக்கிறது.
சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு.
அதில் சிப்பாய் ,குதிரை,யானை, ஒட்டகம்,ராஜா,ராணி உண்டு.
பிக்ஷப்புக்கும் இந்த விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
ஒட்டகத்தின் கான் காயின் உச்சியில் சிலுவை போல வைத்து பிஷப்பாக்கி விட்டதாக ஒரு செய்தி உண்டு.
எது எப்படியோ செஸ்ஸில் அரசாளப்போவது இந்தியாதான்.
சிறப்பான கட்டுரை. ஒரு பிழை: ‘இந்தியாவில் முதல் கிராண்ட் மாஸ்டர M.ஆருன்’ என்று கூறியுள்ளார். அது தவறு. அவர் ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ தான் , கிராண்ட் மாஸ்டர் அல்ல.
LikeLike