வானம்செம்மை நிறம் பூண்டு அதையும் மாற்றிக் கொண்டது. தயங்குவது போல் நடித்து மெல்லக் காலடிகள் வைத்து இருள் தேவதை வானில் நுழைந்தாள். அவளின் கம்பீர யௌவனத்தைக் கலைக்கக் கூடாதென்று சில விண்மீன்கள் தமக்குள் முணுக் முணுக்கென்று பேசியபடியே எட்டிப்பார்த்தன. ஆர்வம் தாளாது மற்ற வான்பூக்களும் தாங்களும் இந்த இரகசியப் பேச்சில் சிறிது சிறிதாக இணைந்து கொண்டன. வைர ஊசிகளென மின்னிய அவற்றை அவள் உடல் முழுதும் ஏற்றுக் கொண்டாள். அவளின் கருமை படரப் படர அவைகளின் ஒளிச்சிதறல்கள் நீலம் இறைக்கும் பூக்களாய் மிளிர்ந்தன. கண்ணிற்கு எட்டும் திசையெங்கும், அவள் மேனியில் நகைகளென, சிற்பச் செதுக்கல்களென, எழில் சிற்பங்களென, உருவ நிழல்களெனக் காட்சிகள் சொல்லித் தீர்வதில்லை.
அவைகளை வான் நதியில் அங்குள்ளோர் மிதக்கவிட்ட தீப ஒளித் துணுக்குகள் என்று கூட நான் நினைத்தேன். கடல் நின்ற குமரியின் மூக்குத்தி கடலின் அலைகளில் பயணித்து வானின் பரந்த விரிப்பில் சிறிதும், பெரிதுமாய் மின்ன, அவள் மாட்சிமையைப் போற்றிப் பாடிய மென்குரல் கவிதைகளை காற்று அள்ளி எடுத்து வந்து என் காதுகளில் பாடியது.
‘ஆகாயக் கனவுகளே, வானதியின் சொல்லோ, அல்ல
இரவு விசும்பின் முகவரிகளோ நீங்கள்?
உறவின் விதிர்ப்புகளால் மனிதம் தவிக்கிறது
சிறிதும் பெரிதுமாய் சுமந்து அலைகிறது
அரிதைப் பெறுவதற்கு ஆயிரம் யோசிக்கிறது
பிறந்த காலையிலும் கவலை
மயக்கும் மாலையிலும் தவிப்பு
இரவின் மடிகளிலும் பதைப்பு
இயல்பாய் இருக்க மறந்து ‘
சாம்பல் நிறக் குன்றுகளின் அந்தப் புறத்தில் ஒடும் நதியின் ஓசைகளை நானறிவேன். தொடர் குன்றின் ஒரு எல்லையிலிருந்து ஒரு சிணுங்கலென அவள் வெளிப்படுவதை நான் கேட்டதாகச் சொல்லி விட்டு, இரவின் பகுப்புகள், அதிகாலை நோக்கி விரைவதை அவளால் தடுக்க முடியுமா எனத்தான் கேட்டேன்.
சிறு பாறைகளை அணுகி அடித்து அவள் சிரித்தாள்.
அவன் பரவத் தொடங்கினான் என் மீது..
அல்லது மாற்றாக ஒளி தன்னை முற்றாக இருளிடம் ஒப்படைப்பதையாவது? தன்னைத் தானே உமிழ்வதும், விழுங்குவதுமான இந்த விளையாட்டில், நீ தோன்றித் தோன்றி, நானென்று நானென்று, நம்பி ஏமாறுவதற்கு ஏற்ற நியதிகள் உன்னால் விலக்க முடியாத விலங்குகள் என்றாவது பதில் சொன்னாலென்ன?
“எங்கே உன் கவனம்?” என்றான். உன்னைத்தான் கேட்கிறேன்.
கருமையிலிருந்து சாம்பல் பூக்கத் தொடங்கிவிட்டது இப்போதே. பொல்லென்று வெளுக்கையில் சாயங்கள் மாற்றி விளையாடும், உன் காலின் கீழ் .
‘நல்லது’ என நான் சொன்ன போது அவளும் நகைப்பொலியுடன் நடந்தாள்
“எதற்கு என்ன பதில்?” என அவன் கேட்டான்.
எனக்கு அவன் கேள்வியே ஒரு பொருட்டல்ல என நான் நினைப்பதை அவள் இரகசிய ஒலிக் குறிப்பில் உணர்த்தினாள்.
அவன் பார்வை மிகச் சுத்தமாகக் கேள்விக் குறியைக் காட்டியது. மற்றவர்கள், பயந்து அகல்வது என் கண்களின் மேல் நடந்தல்லவா என்று என்னுள் எண்ணம் கிளைத்தது. ஆனால், சலசலக்கும் நதியின் ஓசையில் அது அடங்கி அடங்கி எழுகிறது.
கைகளை இறுகப் பற்றி அவன் வாழ்த்து சொல்கையில் கூழாங்கற்களின் மீது ஏறி விளையாடும் நதியின் குரலில் நான் சிரித்தேன். முதலை வந்த நதியின் நிழல் ஒரு கோடென அவன் முகத்தில் வந்து போனது.
“நம்மைப் பிரிப்பதற்கான சதி இது.” என்றான்.
சுலபமாக மாற்றல் கொடுத்திருக்கலாமே என்ற என் எண்ணத்தின் வெளிச்ச மொழியாக அவள் கரையோர அலைகளில் வெள்ளி ஜரிகை வந்தது.
“உன் மௌனத்தின் அர்த்தம் எனக்கும் புரியும்.”
‘எனக்கு மூச்சு முட்டுகிறது, கொஞ்சம் இறங்கேன்’ என்று சொல்ல நினைக்கையில் அவள் புரண்டு படுத்து நெளிவது காட்சியில் விரிந்தது.
“என்ன தீர்மானித்திருக்கிறாய்? “.
அவள் ஆழ் சுழலின் அமைதி என்பது போல் நான் இருந்தேன்.
“எனக்குத் தெரியும், என்னை விட்டு நீ போகமாட்டாய். “
அவள் மீது ஓடும் நீர்த்துளி ஒவ்வொன்றும் புதியது என நான் அறிவேன்.
“நாளைக்கு ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போகலாம். திருமணப் பதிவிற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பிக்கலாம்.”
அவள் மேனியில் மிதக்கும் தீபங்களென என் கண்கள் மின்னியது.
“பதில் சொல்” என அவன் என் தோளை உலுக்கிய போது ஆழ் பாறையில் மோதும் தோணியென சுழன்றது என் உடல்.
திருமணத்திற்குத் தேவையென்ன என்ற என் கேள்வியில் அவன் ஆயுதமற்ற கோழையைப் போல் பரிதவித்தான்.
அவள் வட்டச் சுழல்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நானே மேரேஜ் என்கிறேன். உனக்குக் கேவலமாக இருக்கிறதா?”
அவள் கரையோரத்துத் தவளைகள் பாடும் கொக்கரிப்பினைக் கேட்டேன். பின்னர் சொன்னேன். ‘வானம் கரைத்த நீலமென நாம் பார்த்த ஆற்றின் பெருக்கை நினைவில் கொள். எக்காலத்திலும் நான் மனைவி என்றாவதில்லை எனச் சொன்னேன், நீயும் ஒத்துக்கொண்டாய்.’
“பிதற்றல்; உன் நதி வந்து சாட்சி சொல்லுமா என்ன?” என்றான்.
அவள் தன் மீது கலக்கும் மாசுகளைப் பார்த்திருந்தாள்; ஆனாலும் ஓடினாள்.
‘நான் ப்ரமோஷனை ஒத்துக் கொண்டு போகப் போகிறேன்’ என்றேன் நிதானமாக.
அவள் மெதுவே சிறு பாய்ச்சலென முன்னேகினாள்.
“கம் அகெய்ன். என்ன ஒரு துணிச்சல்? எனக்குக் கிடைக்காததை நீ பெற்றுவிட்ட ஆணவமா? என்னை நாளைக்கு ஆஃபீஸில் மதிப்பார்களா?”
‘என் ப்ரமோஷனுக்கும், உன் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? அப்படியே இருந்தாலும், எனக்குக் கிடைத்தது, உனக்குக் கிடைக்கவில்லை என்பதை மாற்றமுடியுமா என்ன?’
இந்த என் கேள்விக்கு அவள் அலைக்கரங்கள் தாளம் கொட்டுவதைக் கேட்டேன்.
நதியற்ற ஊர்களில் கூட நான் நதியைக் கேட்பதுண்டு. ஒரு கரையிலிருந்து மறு கரைமரம் நோக்கி சிறகுகள் அசைத்து புள்ளினங்கள் பறப்பதை நான் வகுப்பறைகளிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். எல்லா வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழாசிரியர் நடத்திய செங்கால் நாரையின் கால்களில் நான் தென்திசைக் குமரிக்கடலின் நீர் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘சத்தி முத்தி வாவியுள் தங்கி’ என்று படிக்கையில் குளிர் பொய்கைக் கரைகளில், சிறகு உதறும் நீர்த்துளிகளில் நனைந்தேன். ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’ என்ற தொடருடன் இசைச் சங்கிலியின் நீர் பாய நெடு மனம் பணியக் கேட்டேன். நான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்னுள்ளே இருந்த ஆற்றுடன்.
ஆய்வக வகுப்புகளில் மல்லாத்தி அறையப்பட்ட தவளைகளை அறுத்து பகுக்கும் போதே அவை நின்ற ஏரிகளை, குளங்களை, கிணறுகளை, ஆறுகளைச் சேர்த்தே எண்ணுவேன்.
ஆற்று நீர் ஏத்தங்களை, மதகின் கதவுகளைத் தட்டும் நீர்க்கரங்களை, அவை திறக்கையில் பாய்ந்து வரும் ஓசைகளைக் கேட்டுக்கொண்டேதான் இயற்பியலில், அதிர்வுகள் பற்றிப் படித்தேன்.
என்னுள் தங்கியவளை சக களத்தி எனச் சொல்லலாமோ என வியந்தேன். ஈரமற்ற, குட்டைகள் கூட இடம் பெறாத இந்த மனிதனுடன் கூடி வாழ நான் தேர்ந்தெடுத்ததே கூட நான் கேட்டுக் கொண்டேயிருந்த நதியின் மொழியால்தான்.
நாங்கள் பழகத் தொடங்கிய போது அவனுக்கு மழையின் ஈரம் மிகப் பிடித்திருந்தது. சூல் கொண்ட மேகங்கள் கனிந்து பொழியும் பொழுதை அவன் கணித்து கவிதைக் கணங்களில் இருப்பான். ஆனால், அவை இன்று கணிதக் கணங்களாய் மாறியுள்ளது தான் புதிராக இருக்கிறது.
“உனக்கு அறிவு போதாது.”
நான் மெதுவாகச் சிரித்தேன்.
அவள் காதோடு கேட்கும் ஒரு பாடலைப் பாடினாள்.
“மண்ணில் காலூன்றாமல் விண்ணில் எழ முடியாது.”
‘உள்ளிழுக்கும் புதை மணலுக்கும் இது பொருந்துமா?’ என்றேன்.
தன் மேனியில் அவள் அனுமதிக்கும் நிழற் சித்திரங்களை, மாறி வரும் கோலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“தர்க்கங்கள் வாழ்வாவதில்லை.”
‘இருக்கலாம்; எனக்கு நான் உண்மையாக இருப்பது முக்கியம்’ என்றேன்.
“சொல், ஏன் நான் முக்கியமில்லை?”
ஓடும் மீன் ஓட உறு மீனும் வரப்போவதில்லை என அறிந்தவள் போல் அவள் கொக்கினைப் பார்த்தாள்.
‘எனக்கு எதுவுமே முக்கியமில்லை; மனிதர்கள் எனக்கு சலிப்பைத் தருகிறார்கள்.’ என்றேன்.
“வாழும் அனைவரும் முட்டாள்கள், நீ மட்டும் தான் விலக்கு.”
நீர்க்களிம்பேறிய அந்தப் பாறையை இடமும், புறமும், மேலும் கீழுமாக அவள் சுற்றிச் சென்றாள்.
‘ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன். நான் விலக்கு என்பதை மட்டும்.’
“அதில் என்ன பெருமை இருக்கிறது?”
‘ஒன்றுமில்லை; சற்று விடுதலை அதிகமாகக் கிடைக்கும்.’
“தான்தோன்றியாய் வாழும் பெண்களுக்கு சமூக மதிப்பீடு என்ன என்று தெரியுமா? எத்தனை இழிவு தெரியுமா?”
நீர்க்களிம்புப் பாறையை அவள் மழைக்கரங்களைக் கொண்டு ஓங்கி அடித்தாள்.
‘அது என்னை பாதிக்காது’ என்றேன்.
“உன் அம்மாவைப் போல் தான் நீ இருப்பாய். உன் அப்பா குமைந்து குமைந்து செத்ததுபோல் நான் சாக மாட்டேன்.”
வாலைச் சுழற்றி ஓங்கி நீரிலடித்து கரை ஒதுங்கும் முதலையைப் பார்த்தேன்.
நானாவது நதியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; ஆனால், அம்மா கேட்டது கடலல்லவா? அவளைப் பித்து என்று சொன்னவர்களைப் பார்த்து வலம்புரிச் சங்கில் அவள் கடலின் சீற்றத்தை அல்லவா ஊதினாள்?
‘என் அப்பா, அம்மாவின் கணவன் மட்டுமே; நீ எனக்கு அது கூட இல்லை’ என்றேன்.
பூவும், இளந்தளிரும், சருகுமாகச் சுமந்து கொண்டு அவள் ஓடினாள்.
“அதற்குத்தான் பதிவுத் திருமணம் செய்யலாம் என்கிறேன்.”
‘நான் பந்தங்களில் சிக்காதவள். மூலைகள் இல்லாத வட்டம்; கோட்டுக்குள் ஆடாத ஆட்டம்.’
மலையில் தொடங்கி மேடு பள்ளமெனப் பயணித்து அருவியாய் வீழ்ந்து, ஆறாய் நடந்து, வரும் போக்கில் எந்தத் துணையாறையும் ஏற்று நான்ஒரு நதி.
காற்றின் இசையை ஏற்று அவள் சப்தமிட்டாள்.
“நதி கூட கடலில் கலக்கிறது.”
‘அத்தனை அனுபவங்களுக்குப் பிறகு அது நடந்தால் நடக்கட்டும்; இல்லை வற்றிப் போய்விடட்டும்.’
நான் கணங்களில் வாழ்பவள் என்று அவள் சொல்வது எனக்குக் கேட்டது.
“வெறும் வாய்ப்பேச்சு.”
இல்லை, உள்ளே குமைந்து பொங்கியவள்; அவன் தலை மீதிருந்தோ, பாதத் திறப்பிலிருந்தோ வெளிப்பட்டு ஓடுவாள். அவளை நீ அறியவே முடியாது. நீ அணை கட்டுவாய், தேக்குவாய்; அவள் கட்டுடைப்பாள், தன் வழி ஏகுவாள். மரணமும் அவளது சிரிப்பே. வட்டக் காலத்தின் சுழற்சி அவள். எங்கும் ஓடும் நதி. அவளை அணுகி கேட்டுப் பார். புரிந்த பிறகு சொல்.