மூலக்கதை : ப்ரான்க் ஸ்டாக்டன் தமிழில் : கமலா முரளி
[ ஒரு கதவுக்குப் பின்னே கொலைப்பசியுடன் காத்திருக்கும் புலி. மற்றொரு கதவுக்குப் பின்னாலோ மனம் மயக்கும் அழகி ]
முன்னொரு காலத்தில் , விசித்திர குணங்கள் கொண்ட, மிருகத்தனம் பொருந்திய மன்னன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு மிகச் சிறந்த மனவுறுதியும், பிடிவாதமும் கொண்டு இருந்தானோ அந்த அளவுக்கு கடுமையான , மோசமான கற்பனையும் கொடுரமும் நிறைந்தவன் அவன்.
ஒவ்வொரு நாளும் அவன் தர்பாரில் நியாய ஆலோசனை நடக்கும்.அவனும் அவனுமே அந்த ஆலோசனையில் பங்கு பெறுவர் ! ‘அவனாகிய’, ‘அவர்கள்’ எடுக்கும் முடிவுகள் உடனடியாக அமல் படுத்தப்படும். ஏனெனில், அவன் தானே மாட்சிமை பொருந்திய, சகல அதிகாரங்களும் கொண்ட மன்னன் !
ஒரு சில மக்கள் மன்னனின் செயல்கள் விசித்திரமாக, கொடுரமாக இருக்கிறதே எனச் சொல்வதுண்டு ! அவர்களும் மிக மிக மென்மையாகத் தான் சொல்லுவர் ! அவர்கள் சொல்வது எவர் காதுகளுக்கும் கேட்காது.
குறிப்பாக பொது மைதான அரங்க நிகழ்வு குறித்து இந்த மன்னனின் கருத்து அலாதியானது. பிற நாடுகளில், பொது மைதானத்தில் வீர விளையாட்டுகள் நடைபெறும். மக்கள் கண்டு மகிழ்வர். மதயானைகளுடனும், சிறுத்தை, சிங்கம், புலி போன்ற மிருகங்களுடனும், வீரமிகு இளைஞர்கள் சண்டை செய்வதும் முக்கிய நாட்களில் நடக்கும்.
ஆனால், இந்நாட்டிலோ, இந்த மன்னன், இந்த பொது மைதான அரங்கைக் கூட விசித்திரமாகத் தான் உபயோகித்தான். குற்றவாளிகளைத் தண்டிக்கும், நிரபராதிகளை கௌரவிக்கும் வினோத நிகழ்ச்சி !
ஒருவன் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. அந்தக் குற்றம் மன்னனின் தனிக் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்றால்,தனி அறிவிப்பு வெளியிடப்படும் – நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்குமான அறிவிப்பு. எந்த நாளில் குற்றம் சாட்டப்பட்டவன் விசாரிக்கப்படுவான் என்பது பற்றிய அறிவிப்பு ! அந்நாளில் நாட்டு மக்கள் அனைவரும் அரங்கில் கூட வேண்டும் என்பதும் அறிவிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட நாளில் மைதானத்தில் திரள் திரளாக மக்கள் கூடுவர். குடிமக்கள் நிறைந்த அரங்கத்தில்,மந்திரிமார் புடை சூழ மன்னவன் நுழைந்து, மக்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்வுற்று, ஓங்கி நிற்கும் தன் சிம்மாசனத்தில் அமர்வான். மந்திரிகளும் அரசவையைச் சார்ந்தவர்களும் தத்தம் இருக்கையில் அமர்வர்.
மன்னனின் சமிஞ்ஞை கிடைத்ததும், குற்றம் சாட்டப்பட்ட மனிதன் அரங்கத்துள் வருவான். மன்னவனின் சிம்மாசனத்தின் எதிர்புறத்தில் இரண்டு கதவுகள் இருக்கும்.அடுத்தடுத்து அமைந்திருக்கும் இரு கதவங்களும் ஒரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே மாதிரியாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவன் அந்த இரு கதவுகளுக்கு அருகே சென்று, ஏதேனும் ஒரு கதவைத் தேர்ந்தெடுத்து திறக்க வேண்டும். அவன் விருப்பம் தான் ! இரண்டில் எதை வேண்டுமானாலும் திறக்கலாம்.எந்தக் கதவைத் திறக்கலாம் என்பதற்கு யாரும் அவனுக்கு உதவ மாட்டார்கள்.
அந்த இரு கதவுகளின் ஒன்றின் பின்னால் ஆக்ரோஷமான கொலைவெறியுடன் கூடிய புலி இருக்கும். அந்தக் கதவை அவன் திறந்து விட்டால், புலி சீறிப் பாய்ந்து, அவனைச் சின்னா பின்னமாக்கி, அடித்துக் கிழித்து எறியும். அது அவன் செய்த குற்றத்துக்குத் தண்டனையாகக் கருதப்படும். இரும்பு மணிகளின் சத்தத்துடன், சோகக் கதறல்களுடனும் ஒரு கோரமான நிகழ்வைக் கண்டதனால், நெஞ்சை அடைக்கும் பீதியுடன் மக்கள் தலையைக் குனிந்தபடி வெளியேறுவர்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டால், அங்கே அவன் வயதுக்கும் தகுதிக்கும் ஏற்ற பெண்ணொருத்தி காத்திருப்பாள். மன்னவன் கைகளைத் தட்ட உடனடியாக மதகுரு அங்கே வந்துவிடுவார். அம்மனிதனுக்கும் அப்பெண்ணுக்கும் உடனடி விவாகம் அங்கே ! அப்போதே ! பொது அரங்கில் ! எல்லோர் முன்னிலையில் ! இன்னிசை முழங்கும், மக்கள் கூட்டம் உற்சாகமாய் குரல் கொடுத்து, மணமக்கள் வரும் பாதையில் மலர் தூவுவர்.
அம்மனிதன் முன்பே மணமுடித்தவனா ? அவன் குடும்பம் என்ன ? வேரு யாரையாவது மணமுடிக்க விரும்புகிறானா ? – இந்தக் கேள்விகளைப் பற்றி ஆணையிட்ட மன்னனுக்குக் கவலையில்லை.
சிறை பிடிக்கப்பட்டவன் குற்றமுள்ளவன் என்றால், தண்டனையாக, புலியின் பிடியில் அகப்பட்டுச் சாக வேண்டும். நிரபராதி என்றால், அதற்குப் பரிசாகத் திருமணம். இதுவே மன்னனின் விசித்திரமான குருரமான நீதி வழங்கும் முறை !
மன்னன் இந்த நீதி வழங்குதலை மிக நியாயமானது எனக் கருதினான். இதில் எந்த பாரபட்சமும் இல்லை ! தெளிவான தீர்ப்பு ! எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது பரம ரகசியம் ! ராஜ ரகசியம் !
குற்றம் சாட்டப்பட்டவனுக்கு எந்தக் கதவைத் திறக்க வேண்டும் என்பதற்கு எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. உறுதியான கதவுகள் மற்றும் இரும்புத்திரைகள் கொண்ட அந்த கதவுகளுக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறியவே முடியாது.
சுதந்திரமாக,சுயாதீனமாக அவன் எடுக்கும் முடிவின் படி அவனாகவே ஒரு கதவைத் திறக்கிறான்.
“ஆரணங்கோ … ஆக்ரோஷப் புலியோ… அதை அவன் விதி முடிவு செய்யும்.
மக்களும் இந்த தீர்ப்பு வழங்கும் முறையை சற்று ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது – கதவு திறக்கும் வரை ! கோரமான கொலையா அல்லது கோலாகலமான கல்யாணமா ? யாருக்கும் தெரியாது !
அந்தக் காட்டுமிராண்டி ராஜாவுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். தந்தையைப் போலவே துடிப்புள்ள, அதீத கற்பனையுள்ள , மிருக வெறித்தனம் உள்ள பெண். தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தான் மன்னன். அவளோ, தன் தந்தையின் சொற்படி நடப்பதில்லை. முக்கியமாக, தன் மனம் விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள் ! மன்னனின் விருப்பத்துக்கு மாறாக ! அவள் காதலனை, அவர்கள் காதலை மன்னன் ஏற்கவில்லை.
அந்த இளைஞன் மன்னனின் அடிமைகளில் ஒருவன். வீரமும் அழகும் பொருந்தியவன். அடிமை மீது இளவரசிக்கு ஆழமான காதல் !
அவர்களது காதல், சில மாதங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி கடந்தது. ஆயினும், மன்னன் அனைத்து விவரங்களையும் அறிந்தவுடன், அந்தக் கட்டழகனைச் சிறையில் தள்ளிவிட்டான். பொது மைதான அரங்கத்தில் ‘தீர்ப்பு வழங்கும் நாள்’ அறிவிக்கப்பட்டது.
எல்லா வழக்குகளையும் விட, இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.- மன்னனுக்கும் , மக்களுக்கும் !- இதுவரை எந்த அடிமையும் இளவரசியைக் காதலித்ததில்லையே !
மிக மிக ஆக்ரோஷமான புலியைத் தேடி வர ஆட்கள் அனுப்பப்பட்டனர். அது போலவே, கட்டிளங்காளைகேற்ற வனப்பு மிகுந்த அழகியும் தேர்ந்தேடுக்கப்பட்டாள். அந்தச் சிறந்த ஆணழகனைப் புலி அடிக்காவிட்டால், அவன் மணக்க வேண்டிய பெண் பேரழகியாக இருக்க வேண்டுமே ! அலசி ஆராய்ந்து ஒரு பேரழகியும் தெரிவு செய்யப்பட்டாள்.
அவனது குற்றம் என்ன என்று நாடே அறிந்திருந்தது. இளவரசியின் மீது காதல் ! தன் காதலை அந்த இளைஞன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தான். ஆனால், மன்னன் அதைக் குற்றமாகக் கருதினான். பொதுத் தீர்ப்பாக அரங்கத்தில் நடக்கும் நிகழ்வின் நடுநிலைத்தன்மை பற்றி மன்னனுக்கு மாறாத நம்பிக்கை ! பிரியம் ! பெருமை ! மேலும், அந்த இளைஞன் புலியால் கொல்லப்படுவான் அல்லது வேறொரு அழகியைத் திருமணம் செய்து கொள்வான். இரு வழிகளிலும், அவன் இளவரசி வாழ்வில் இருந்து வெளியேற வேண்டியது தான்.
நிர்ணயித்த நாளும் வந்தது. அரங்கில் வரலாறு காணாத கூட்டம் இடிபாடுகள், நெரிசல்கள். உள்ளே வர இயலாமல், அரங்கின் வெளியேயும் மக்கள் வெள்ளம், என்ன நடக்கிறது என்பதை அறிய முண்டியடுத்துக் கொண்டு… ! மன்னனும் அரங்கத்துக்குள் வந்தாயிற்று. அரசவைப் பரிவாரங்கள் இருக்கைகளில் அமர்ந்தாயிற்று. மன்னனின் உத்தரவு கிடைத்ததும், இளவரசியின் காதலன், அரங்கத்துக்குள் வந்தான்.
அடிமையா ? இல்லவே இல்லை . ஆணழகன். இளமையும் வீரமும் பொருந்திய கட்டழகன் ! என்ன துர்ப்பாக்கியம் ! இந்த அரங்கத்தில் நிற்கிறானே ! சில நொடிகளில் அவன் வாழ்வு முடிந்திடுமோ? மைதானத்தில் அவன் நடந்த அழகில் அரங்கமே சொக்கியது.
மன்னனின் சிம்மாசனத்துக்கு எதிரில் வந்து வணக்கத்தைச் சொன்ன அவன் கண்கள், அவன் முழுக்கவனம், மன்னன் அருகில் இருந்த இளவரசியின் மீது இருந்தது.
பல வாரங்களாக இளவரசி வேறெந்த நினைவுமின்றி, இந்த பொது அரங்க தீர்ப்பு நாளைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தாள். யோசித்து, யோசித்து, இதுவரை இந்நாட்டில் யாரும் செய்யாத ஒன்றை இளவரசி செய்திருந்தாள்.
ஆம் ! பரம ரகசியத்தை … ராஜ ரகசியத்தை அவள் தெரிந்து கொண்டுவிட்டாள். அவளுக்குத் தெரியும், அந்த இரு கதவுகளில் எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது ! ‘இளவரசி என்ற அதிகாரமும், அவள் தந்த பொன்னும் அவளுக்கு அந்த ரகசியத்தைத் தந்துவிட்டது.
எந்தக் கதவின் பின்னால் ஓர் ஆரணங்கு இருக்கிறாள் என்ற ரகசியம் மட்டுமல்ல, அந்த அழகி யார் என்ற உண்மை கூட இளவரசிக்குத் தெரியும். அரண்மனையின் அழகிகளில் அவளும் ஒருத்தி ! இளவரசிக்கு அவள் மேல் வெறுப்பு இருந்தது.
தனது காதலனாகிய அந்தக் கட்டழகு இளைஞனை, அந்த அழகி அடிக்கடி பார்க்கிறாள், ஏன், தன் காதலனின் கண்கள் கூட அந்த அழகியை நோக்குகிறதோ என அவள் சில வேளைகளில் நினைத்துண்டு .
ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறாள். ஒன்றுமில்லா விஷயமாகவும் இருக்கலாம். “பற்றிக்” கொள்ளும் விஷயமாகவும் இருக்கலாமே ? யாருக்குத் தெரியும் ? இன்று அவள் தான் ஒரு கதவின் பின்னால் நிற்கிறாள்.
அரங்கில், அந்தக் கட்டழகன், இளவரசியின் காதலன், இளவரசியை நோக்க, அவனது மின்னல் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்தது. “ அவளுக்குத் தெரிந்துவிட்டது—கனவுகளின் ரகசியம்” என்பதை உணர்ந்தான்.
காதலர்களுக்கே உரித்தான ப்ரத்யேக ஊரறியா கண் ஜாடை !
“எது ?”
நேரம் கடத்த முடியாது. உடனடியாகப் பதில் வேண்டும்.
அந்த அரை நொடி வேளையில், இளவரசியின் கை சற்றே உயர்ந்து, வலது திசைப் பக்கம் வளைந்ததை, பரபரப்பான, திகிலான சூழலில், மதி மயங்கிய அனைவரும் கவனிக்கவேயில்லை ! அவள் காதலனுக்கு மட்டும் அவள் ‘பதில்’ புரிந்தது.
தனது நடையில் எந்தவித தயக்கமுமின்றி, இளைஞன் கம்பீரமாக நடந்து, வலது பக்கத்துக் கதவைத் திறந்தான்.
கதையின் திருப்பம் – முடிவு என்ன ? – ஆக்ரோஷமான புலியா – ஆரணங்கா ?
_ இதைப் பற்றிச் சிந்திப்பதும் ஒரு முடிவு எடுப்பதும் மிகக் கடினம் தான் . மனித மனத்தின் இயல்புகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வது கடினம் அல்லவா ?
_ சிந்தித்துப் பாருங்களேன் !
மன்னனின் மகள் ! விசித்திரமான, குரூர எண்ணங்கள் உள்ள மன்னனின் மகள் ! அதே குணங்கள் அவளுக்கும் உண்டு !
அவள் மனதிலோ அந்த ஆரணங்கைப் பற்றிய வெறுப்பு ! தனக்குக் கிடைக்காத தன் காதலன், இன்னொருத்தியுடன், அதுவும் இந்த அழகியை மணமுடிப்பதை இளவரசி மனம் ஏற்குமா ?
புலியின் கதவு திறக்கப்பட்டு, புலியும் காதலனும் மைதானத்தில் புரண்டு, புரண்டு, புலி அந்த ஆணழகனைப் பிய்த்து எறிவதை மனக்கண்ணில் பார்த்து, பார்த்து, முகத்தை மூடிக்கொண்டு, “ இல்லை, இல்லை”, “கொடுரம்” என இளவரசி பலமுறை “ஐயகோ” என அழுதிருக்கிறாள். தாங்க முடியாத் துயரம் அல்லவா அது ! தன் அன்புக் காதலன் மடிவதை மனம் தாங்குமா ? அவனது காதல் ”குற்றம் ” எனக் கருதப் படுமோ ? மன்னனாகிய தந்தை எக்களிப்பாரோ ?
அந்த ஆரணங்கு இருக்கும் கதவைத் திறந்தால், தன் காதலன் மகிழ்வுறுவானோ ! மதகுரு திருமணத்தை நடத்தி வைக்க, மக்கள் உற்சாகமாகக் கூச்சலிட, தான் மட்டும் இலவு காத்த கிளியாக அமர நேருமோ?
_ இதையெல்லாம் நினைத்து தவித்துப் போயிருக்கிறாள் இளவரசி.
அந்தப் பொது அரங்கில், தன் காதலன் “ரகசிய சம்பாஷணையில்”, கண் அசைவில், “எந்தக் கதவு ?” எனத் தன்னைக் கேட்பான் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதற்கு என்ன பதில் கூற வேண்டுமெனவும் அவள் முடிவும் செய்து வைத்திருந்தாள்.
குழப்பமின்றி, தயக்கமின்றி அரை நொடியில் தன் பதிலைத் தந்துவிட்டாள். காதலனும் அவள் சொன்னக் கதவைத் திறப்பதற்கு எந்த வித சலனமும் இன்றிச் செல்கின்றான்….
வாசகர்களே ! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ! அந்தக் கட்டழகன் கதவைத் திறந்ததும், வெளியே வந்தது…
“ஆரணங்கா ? ஆக்ரோஷப்புலியா ?”